மனிதனின் கண்டுபிடிப்புகளில் உண்டியலும் கூட ஓர் அரிய கண்டுபிடிப்பே. உண்டியலை முதன் முதலில் கண்டுபிடித்த அல்லது வடிவமைத்த பொறியாளர் யார் எனத் தெரியவில்லை. எந்தகாலத்தில் என்பதுகூடக் அறுதியிட்டுக் கூறுவது கடினம். ஆனால் உலகம் முழுக்க உண்டியல் பயன்பாடு நடைமுறையில் இருந்து வருகிறது. ஐரோப்பாவில் உண்டியலை ‘பைக்’ (Pygg)என்று அழைத்தனர். உண்டியல் என்றதும் நமக்கு ஞாபகத்திற்கு வருவது கோயில் உண்டியல்கள்தான். உண்டியல் உருவான காலத்தில் பணப்புழக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே துவக்ககால உண்டியல்கள் தானிய உண்டியல்களாகவே இருந்திருக்க வேண்டும். அரியலூரில் உள்ள ஒரு கோயிலில் இன்றும் தானிய உண்டியலைக் காண முடியும்.

ஈரோடு புத்தகக் கண்காட்சிகளில் புத்தக உண்டியலை அறிமுகப்படுத்தியது மக்கள் சிந்தனைப் பேரவையாகத் தான் இருக்க முடியும்.

புத்தகத் திருவிழாவில் உண்டியல் வாங்கிச் சென்ற குழந்தைகளைத் தேடிச் சென்று அவர்களோடு கலந்துரையாடி இக்கட்டுரையை எழுதிவிடத்துணிந்தேன். குழந்தைகளிடம் சென்று உரையாடியபோதுதான் புத்தக உண்டியல் விசயம் கட்டுரையோடு நில்லாது புத்தகமாக வடிவெடுக்கும் எனத் தெரிந்தது. இது கட்டுரைக்கான நேரம், கட்டுரையோடு நிறுத்திக்கொள்கிறேன்.

erode_students

தற்போது ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பகுதிகள் உடல் உழைப்பை நம்பியிருக்கும் மக்களைக் கொண்டவை. தாங்கள் உண்டியலில் சேர்த்து வைத்துள்ள பணத்தின் மதிப்பு தோராயமாக 250 முதல் 450 ரூபாய் வரை இருக்கலாம் என அக்குழந்தைகள் கூறினர். பணத்தை சேமித்து புத்தகத் திருவிழாவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இச்சிறுவர்கள், தாங்கள் சேமித்து வைத்துள்ள பணத்தில் 50 விழுக்காட்டை வீட்டுக்குக் கொடுத்துவிட்டு மீதிப் பணத்தில் மட்டுமே புத்தகங்கள் வாங்க முடியும் என்கின்றனர். என்ன மாதிரியான புத்தகங்களை வாங்கப் போகிறோம் என்றும் தெளிவு அவர்களுக்கு இல்லை. இருந்த போதும் அரசுப் பொதுத் தேர்வுகளை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள் தாங்கள் பாடம் சார்ந்த புத்தகங்களை வாங்கவுள்ளதாகக் கூறினார்கள். பொது வாசிப்புக்கான புத்தகங்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் மாணவர்கள் கூட இன்ன புத்தகம் இன்னார் எழுதிய புத்தகத்தைத்தான் வாங்கப் போகிறோம் என்று தெளிவில்லை. ஆனால் சென்ற ஆண்டு இம்மாணவர்கள் வாங்கிய புத்தகங்களைக் காட்டிலும் கூடுதலான புத்தகங்களை வாங்கப் போகிறார்கள்.

புத்தக உண்டியலின் பயன்பாடு குறித்து இச்சிறுவர்கள் கூறும் செய்திகள் சிலது ஆச்சரியமாகவும் சிலது அதிர்ச்சியாகவும் உள்ளது. புத்தகத் திருவிழாவிற்கு சேர்த்து வரும் இச்சிறுவாட்டுப் பணத்தில், பெற்றோர்கள் செலவுக்கு இல்லையென்று கேட்கும் போதெல்லாம் எடுத்துக் கொடுத்து விடுவார்களாம். பெற்றோர்களும் சம்பளம் வந்தவுடன் அதனைக் கொடுத்து உண்டியலில் போடச் சொல்வார்களாம். குடிப்பழக்கம் உள்ள தந்தைமார்கள், பிள்ளைகளிடம் கேட்டு பணம் எடுப்பதில்லை. அவர்களுக்குத் தெரியாமலேயே  எடுத்துக் கொள்கிறார்களாம். படித்து விட்டு வேலையின்றி இருக்கும் அண்ணன் தனது புத்தக உண்டியலில் இருந்து அவ்வப்போது காசை எடுத்துக்கொண்டு சினிமாவுக்குப் போய்விடுகிறான் என்று சிறுவன் புகார் தெரிவித்தான். இம் மாணவர்களே கூட பள்ளிகளில் ஏற்படும் சில்லரைச் செலவுகளுக்கு உண்டியலில் இருந்து எடுத்துச் சென்றுவிட்டு மீண்டும் போட்டு வைத்து விடுவார்களாம்.

புத்தக உண்டியலுக்கு எப்படிப் பணம் சேர்க்கிறார்கள் என்ற தகவல்கள் கூட மிகவும் சுவாரசியமாக உள்ளது. கடைக்குப்போய் வரும்போது மீதமாகும் சில்லரை. பள்ளிகள் திறந்து சில நாட்கள் கழித்தே இலவச பஸ் பாஸ் கிடைத்து ஒரு வாரம் 10 நாட்களுக்கு பாஸ் கிடைத்ததை வீட்டுக்கு தெரிவிக்காமல் அதில் கிடைக்கும் பணம். பள்ளி செல்லும் போது திண்பண்டம் வாங்கக் கிடைக்கும் காசு. ஊர்த் திருவிழா, தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது உறவினர்கள் தரும் காசுகள். பிறந்த நாளின் போது கிடைக்கும் தொகை. புதியதாக நோட்டு, பேனா, பென்சில் வாங்க நேரும் போது அதில் கிடைக்கும் மீதம். நல்ல நடனம் / பாட்டு / கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பள்ளி ஆண்டு விழாவில் ஆடினால் பார்வையாளர்கள் பணம் தருவார்களாம்; அதையும் கூட அப்படியே உண்டியலில் சேர்த்து வருகின்றனர்.

உண்டியல் வாங்காமல் புத்தகத்திருவிழாவிற்கு இந்தச் சிறுவர்கள் சென்ற போது ஐந்து ரூபாய் முதல் அதிக பட்சம் 20 ரூபாய் வரைதான் புத்தகம் வாங்கினார்களாம். இம்முறை 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை புத்தகம் வாங்குவோம் என்று பெருமை பொங்கக் கூறினார்கள். தங்கள் குடும்ப நிலைகளை நன்கு கருத்தில் கொண்டுள்ளதால் உண்டியல் பணத்தில் பாதியை வீட்டின் இதர செலவுகளுக்கு எடுத்துக் கொள்வார்கள் என்பது குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை. சென்ற ஆண்டு பாரதியின் பாடல்கள், விக்கிரமாதித்தியன் கதைகள், காமடி கதைகள், ஷிவிஷி ஜோக்ஸ், பரமார்த்தகுரு கதைகள், அப்பாஜி கதைகள் போன்ற புத்தகங்களை வாங்கி வந்த மாணவர்கள், இந்த ஆண்டு பொதுத் தேர்விற்கான வழிகாட்டிப் புத்தகங்கள், ஆங்கில இலக்கணம், விடுதலைப் போராட்ட வீரர்கள் வாழ்க்கை வரலாறு, ராஜராணிக் கதைகள், பொது அறிவு நூல்கள், போன்ற நூல்களை வாங்கத் திட்டமிட்டு வருகின்றனர்.

சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு உண்டியல் தன்னிடம் இன்மையால் நல்ல புத்தகங்களை வாங்க முடியவில்லையாம். சென்ற ஆண்டு உண்டியல் மூலம் காசு சேர்த்து எடுத்துச் சென்றேன். “சென்ற ஆண்டு பார்த்து வைத்த புத்தகத்தை எந்தக் கடையிலும் காணவில்லை” என ஒரு சிறுவன் வருத்தப்பட்டான். உண்டியல் மிகவும் லேசானதாக இருந்தமையால் புத்தகத் திருவிழாவிற்குச் சென்று திரும்பும் போது ஜன்னல் காற்றில் பறந்துவிட்டது. கொஞ்சம் கெட்டியாக இருந்தால் பரவாயில்லை என்று ஒரு மாணவன் கூறினான். புத்தகம் வாங்குவதற்கென்றே தனியாகப் பணம் கொடுக்க முடியாத சமூகப் பின்னணியில் வாழும் மக்களின் குழந்தைகளுக்கு இத்திட்டம் மிகவும் பலனளித்துள்ளது. புத்தக உண்டியலுக்காகவே பணம் கொடுக்கும் பெற்றோர் சிலரே. அதேபோல் உண்டியல் பணம் முழுவதையும் புத்தகத் திருவிழாவில் செலவழிக்கத் தயாராக இருப்போரும் வெகுசிலரே.

உண்டியலில் காசு போடும் துவாரம் இன்னும் சிறியதாக இருக்க வேண்டும். ஹேர் பின்னை வைத்து காசை எடுக்க முடியாதவாறு உண்டியல் அமைக்கப் பட்டிருத்தல் நல்லது. கூடுதல் பலன் தரும். இடையில் பணத்தை எடுக்க முடியாமல் போகும் என்கின்றனர் மாணவர்கள் “ஓட்டை பெருசா இருந்தா ஆட்டயப் போட்டறாங்க சார்” என்று ஒரு மாணவன் சிரித்துக் கொண்டே குறிப்பிட்டான். “ஓட்டை பெரிசா இருக்கறதால தான் சார் அவங்களும் எடுத்துக் குடுக்கச் சொல்லி கேக்கிறாங்க” என்றாள் ஒரு மாணவி. அந்தக் குழந்தைகளையும் பெற்றோர்களையும் பார்க்கும் போது அவசரத்துக்காக உண்டியல் பணத்தைக் கேட்டுப் பெறுதல்; சொல்லிவிட்டு எடுத்தல்; எடுத்த பணத்தை மீண்டும் உண்டியலில் இட்டு நிரப்புதல்; பெற்றோர் ஊருக்குப் போன சமயம் பள்ளிச் செலவுக்கும் பள்ளிக்குச் செல்ல பஸ்க்கும் பயன்படுதல் என்ற பயனுள்ள செலவுகளுக்குப் பயன்படுத்துவதால் அது தொடரட்டும். உண்டியல் வாய் பெரிதாக இருப்பது நல்லது என்று நமக்குப்படுகிறது.

ஒருசில குழந்தைகள் வீட்டில் ஆசையாய் சேர்த்து வைப்பதை குவார்ட்டருக்கு காலி செய்வதையும் இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு எடுத்துக் கொண்டு சென்றுவிடுவதையும் தடுக்க ஒரு பைசாக்கூட எடுக்க முடியாது என்ற நிலையுள்ள உண்டியல்களை இம்மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. புத்தகத் திருவிழாவில் இருந்து வாங்கிச் சென்ற கையோடு 10 முதல் 20 ரூபாய் வரை சேமித்ததோடு மூலையில் ஓரமாய் உருண்டு கிடக்கும் உண்டியல்களும் சிலது இங்கே உண்டு. ஒரு மாணவன் வாங்கி வந்த உண்டியலை அவனது தாயார் பழனிக்குப் போக காசு சேர்க்க வேண்டும் என்று வாங்கி வைத்துக்கொண்டதும் உண்டு. அந்த உண்டியல்தான் அந்தக் குடியிருப்புப் பகுதியில் மிகவும் பணக்கார உண்டியல். உண்டியல் நிரம்பி வழிந்து கொண்டுள்ளது. எப்பொழுது பழனிக்குப் போகப் போகிறார்ளோ தெரியவில்லை. ஆனால் அந்த உண்டியல் புத்தகத் திருவிழாவில் ஒரு புத்தகம் வாங்கப் பயன்படப் போவதில்லை.

சென்ற ஆண்டு உண்டியல் இல்லாமையால் மிகக் குறைவான புத்தகங்களையே இச்சிறுவர்கள் வாங்கினர் எனப் பார்தோம். வாங்கிய புத்தகங்களில் ஒரு சில மாணவர்கள் மட்டுமே உடனுக்கு உடன் அப்புத்தகங் களைப் படித்து முடித்துள்ளனர். சிலர் பாதிக்குப் பாதி படித்துள்ளனர். பாரதியார் பாடல்கள் தொகுப்பு வாங்கிய மாணவன் அதில் கூறப்பட்டுள்ள ராகங்கள் தெரியாமையால் அவற்றைப் பாடி பயிற்சி பெற முடியவில்லை என வருந்தினான். பாட்டு வகுப்புகளுக்கு சென்று பயிலும் சூழல் அம்மாணவர்களுக்கு இல்லை. அரசுப் பள்ளிக்கு சென்று வருவதே பெரிய விசயம். புத்தகத் திருவிழாவிற்கு இதுவரை செல்லாத குழந்தைகளும் அவர்களோடு இருந்தார்கள். எங்கள் பள்ளியில் 11,12 வகுப்பு மாணவர்களைத்தான் அழைத்துச் செல்வார்கள் எனவே ஒன்பதாம் வகுப்பு மாணவியாகிய  நான் கலந்து கொள்ள முடியவிலலை என்றாள் ஒரு மாணவி.

10 பத்தாம் வகுப்புத் தேறி 11 ஆம் வகுப்பில் அடியெடுத்துள்ள அதே பள்ளி மாணவி” சார் இந்த வருசம் நா லெவன்த். இந்த வருசம் நானும் போவேன்” என்றாள் மகிழ்ச்சியாக. மற்றொரு மாணவி “சார் எங்க ஸ்கூல்ல காசு இருக்கிற வங்க மட்டும் கண்காட்சிக்கு வாங்கன்னு கூட்டிக்கிட்டு போனாங்க. அதனால நாம் போக முடியல” என்று சொல்லி வருந்தினாள், வேறொரு மாணவி” எங்க ஸ்கூல் மிடில் ஸ்கூல்; அதனால கூட்டீட்டுப் போகல” என்றாள். நெஞ்சு கனத்தது. இதற்கெல்லாம் எளிய தீர்வுகள் உண்டு. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற சொற்களுக்கு அதிகப் பொருள் செறிவு உண்டு.

புத்தகத் திருவிழாவிற்குச் சென்று இருந்தும் ஏன் உண்டியல் வாங்கவில்லை என்று ஒரு மாணவியைப் பார்த்துக் கேட்டேன். நான் கொண்டு போன பணத்துக்கு முழுதும் புத்தகம் வாங்கிவிட்டேன். கடைசியாகத்தான் உண்டியல் இருப்பது தெரிந்தது அதனால் வாங்க முடியலை சார்”. என்றாள் அம்மாணவி “எங்களை அழைத்துச் சென்ற ஆசிரியர் உண்டியல் இருப்பதைப் பற்றிச் சொல்லவேயில்லை” என்று குறைபட்டாள் மற்றொரு மாணவி. உழைக்கும் மக்கள் புத்தகத் திருவிழாவிற்கு அழைத்துச் செல்வதில்லை. அவர்களின் அன்றாடப் பாடே பெரும்பாடு. பள்ளிகள் இக்குழந்தை களை அழைத்துச் சென்றால் தான் உண்டு. தொண்டு நிறுவனங்களோ, வாலிபர், மாணவர் அமைப்புகளில் இருந்து மாலை நேரப் பயிலகம் நடத்துவோரோ அழைத்துச் சென்றால் மாற்று வழியுண்டு. அவை எத்தனை இடங்களில் செயல்படுகின்றன என்பதை நாம் நன்கு அறிவோம்.

புத்தகத் திருவிழாவிற்காக காசு சேர்த்து வரும் சிறுவர்களில் தினமும் ஏதேனும் ஒரு சிறுதொகையை உண்டியலில் கண்டிப்பாகப் போட்டு வரும் பழக்கம் உள்ளவர்களும் உண்டு. வாரம் இரு முறையேனும் காசு போட்டுவிட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படும் குழந்தைகளும் உண்டு. ஐந்து ரூபாய் காசுக்கு குறையாமல் உண்டியலில போடும் பழக்கம் யாருக்கேனும் உண்டா என்று இறுதியாக ஒரு கேள்வி கேட்டேன் “அப்படி முடிவெடுத்தால் எங்களில் ஒருவர் கூட உண்டியலில் காசு போட முடியாது” என்றனர். இக்கேள்வி ஒரு நடுத்தர வர்க்க மனநிலையோடு சார்ந்தது. இக்குழந்தைகளிடம் கேட்டிருக்கக்கூடாது என்று மனசாட்சி உறுத்தியது. சென்ற ஆண்டு புத்தகத் திருவிழாவில் - உண்டியல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இச்சிறுவர்களைப் போன்றே நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தரவர்க்கம், பணக்கார மாணவ-மாணவியர் புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்து உண்டியல்களை வாங்கிச் சென்றிருப்பர். அந்தச் சிறுவர்களிடம் உரையாடினால் புத்தக உண்டியலின் வேறு பரிணாமங்கள் வெளிவரலாம்.

மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பினர் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு பெரும் முயற்சி எடுத்து பரந்த அளவில் விளம்பரம் செய்கின்றனர்; புத்தகத் திருவிழா பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ஒரு மாணவி புத்தகத்திருவிழாவிற்கு ஏன் செல்லவில்லை என்ற கேள்விக்கு எனக்கு அது நடப்பதே தெரியாது என்றாள். பல கிராமப்புறப் பள்ளிகளுக்கு இன்னும் இச்செய்தி எட்டவில்லையென அங்கிருந்த பலரும் கூறினர். ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள், புத்தக உண்டியல் அறிமுகம் உன்னதமான ஏற்பாடே. அடித்தட்டு மாணவர்களுக்கு இம்முயற்சியின் பலன் சென்று சேர இன்னும் சளைக்காமல் உழைக்க வேண்டியுள்ளது. புத்தக உண்டியல்கள் ஏழை எளிய சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தைக் கண்டிப்பாக மேம்படுத்தும் என்பதிலும், அதன் மூலம் அவர்கள் வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயரும் என்பதிலும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 20 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கிச் சென்ற ஒரு சிறுமி 200 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கத் தயார் நிலையில் இருப்பது எவ்வளவு பெரிய செய்தி.

இத்தனை ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு புத்தக உண்டியல் இலவசம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்யலாம் என்று ஒரு கருத்தை அச்சிறுவர்கள் முன்வைத்தனர். அதில் ஒரு சிறுமி “ சார், அந்த திட்டமெல்லாம் எங்களைப் போன்ற ஏற்கனவே உண்டியல் வாங்கி வந்து பணம் சேர்த்துக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர்களுக்குத்தான் பொருந்தும். இந்த உண்டியல் வந்த பிறகுதான் 100 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்க முடியும் என்ற நிலைக்கு வந்துள்ளோம். நாங்கள் சென்ற ஆண்டு இருந்த நிலையில், இந்தாண்டு புத்தகத் திருவிழாவிற்கு வரும் சிறுவர்களுக்கு உண்டியல் எப்படிக் கிடைக்கும்” என்றாள்.

இச்சிறுவர்கள் கடந்த ஆண்டில் 20 ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருந்தால் அதுவே ரொம்பப் பெரிய தொகை. இந்த உழைப்பாளி மக்களின் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர், பள்ளி செல்லவும் அதுசார்ந்த அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டுமே பணம் கொடுப்பார்களாம். பொது வாசிப்புக்கென்று 10 ரூபாய்க்குக்கூட புத்தகம் வாங்க காசு கிடைக்காது என அம்மாணவர்கள் தெரிவித்தனர். ஒரே ஒரு சிறுமி மட்டும் எழுந்து எங்கள் வீட்டில் அவ்வப்போது கதைப் புத்தகம் வாங்குவதற்கென்று 10 ரூபாய் கிடைக்கும் என்றாள். இத்தகைய சூழலில் புத்தகக் கண்காட்சிக்கு வரும் ஏழைச் சிறுமிகளுக்கு எப்படி இலவச உண்டியல் கிடைக்கும் என்ற அச்சிறுமியின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

- நா.மணி

(புத்தகம் பேசுது ஆகஸ்ட் 2010 இதழில் வெளியானது)