வரலாற்று பேராசிரியர் வித்வான் முனைவர் ந.சுப்ரமண்யன் அவர்களுக்கு கடந்த ஜூன் 27-ல் வயது 95. உடுமலைப்பேட்டையில் அவரது மகன் சுந்தரேசனுடன் வசித்து வருகிறார். வரலாற்றுத் துறையில் மட்டுமல்லாது இந்திய, ஐரோப்பிய இலக்கியங்களிலம், குறிப்பாகத் தமிழ், ஆங்கில இலக்கியங்களிலும் இரண்டறக் கலந்திருக்கிறார். ஆழ்ந்த புலமையும், நீண்ட அனுபவமும் மிக்கவர். வரலாற்று ஆய்வு மட்டுமல்லாது சிறுகதை, கவிதை, நாடகம் உள்பட தமிழிலும், ஆங்கிலத்திலும் 142 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவரது பேச்சு இலக்கிய நயம் மிக்கதாக இருக்கிறது. செந்தமிழில் வார்த்தைகள் வந்துவிழுகின்றன.

மகாகவி பாரதியார் பற்றி ஆங்கிலத்தில் `சைக்கோ பயாகிராபி ஆப் சுப்ரமண்ய பாரதி’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதியிருக்கிறீர்கள். உளவியல் கோணத்தல் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருப்பது புதுமையான முயற்சி. அது பற்றி...

ஒரு கவிஞரைப் பற்றி அறிய வேண்டுமானால் அந்தக் கவிஞர் ஏன் இப்படி எழுதி இருக்கிறார் என்று வெளிக்காரணங்களை பார்த்தால் மட்டும் போதாது. அதற்கான உள்காரணத்தையும் தேட வேண்டும்.

வார்த்தைகளை மட்டும் பார்க்கக் கூடாது, உள் உந்துதலையும் (Motivation) பார்க்க வேண்டும். அதைத் தான் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டு, நம் வாழ்க்கையில் கிடைக்காதது கனவாக வருகிறது என்று கூறினார்.

ஓர் ஓவியர், கவிஞர், சிற்பி தன் படைப்பின் மூலம் தான் இழந்ததை பெற்றுவிட்டதாகத் திருப்தி அடைகிறான். தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வது தான் (Self Deception). அது. அது ஒரு நம்பிக்கை.

தாயின் அன்பு கிடைக்காதவன் வாழ்க்கையைப் பற்றித் தவறான கருத்தோடுதான் பார்ப்பான். பாரதி சிறு வயதில் தாயை இழந்தவன். தந்தையின் கட்டுப்பாட்டில் வளர்ந்தவன். அவன் தாயை எங்கே தேட முடியும் என்று தாயின் இடத்துக்கு நாட்டை மாற்றினான். தாய் அன்பு கிடைக்காத போது வாழ்க்கை வன்யமாகிறது? அந்த இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது. இயற்கை மலை, பாலைவனம், நீர்நிலைகள், நிலம் இவைதான் நாடா? பூகோள அமைப்புத் தான் நாடா? மக்கள் தானே நாடு? எந்தையர் வாழ்ந்த நாடு என்று சொல்லும் போது அவர்கள் வசதி படைத்தவர்களா, ஏழைகளா? பொதுவாக அது தெரியாது. அறிவு என்பதைப் பூட்டி வைத்துவிட்டுப் பாசம் என்பதை மையப்படுத்தி வெளிப்படுத்துகிறார். பாசத்தை யாவரும் ஏற்றுக் கொள்வார்கள். அதனால் தான் பாரதியை யாவரும் ஏற்றுக் கொண்டார்கள். உள்மனம் முழுவதும் எப்படி வேலை செய்கிறது என்று அதில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன்.

உங்களது வரலாற்று நூல் குறித்து...

உலகப் புகழ்பெற்ற வரலாற்றுப் பெருமகன் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் என்னை ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். அப்போது எங்கள் வீட்டில் மேஜை, நாற்காலி கூட இல்லை. எங்கள் வீட்டுத் தூணில் சாய்ந்து அமர்ந்தபடி, காகிதத்தைத் தொடையில் வைத்து இரவு 10 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை எழுதினேன். இப்படியாக மூன்று நாட்கள் இரவில் 64 பக்கம் கொண்ட அந்த௧ கட்டுரையை எழுதி முடித்து, நீலகண்ட சாஸ்திரியாரிடம் காட்டினேன். பொதுவாக யார் எழுதியதாக இருந்தாலும் கூர்மையாக விமர்சனம் செய்யும் அவர் இக்கட்டுரையைப் படித்துவிட்டுக் கருத்திலும், எழுத்திலும் தவறு ஏதும் சொல்லவில்லை. அவரது முகவுரையுடன் அதை அச்சிட்டார்.

நான் எழுதிய அந்த கைநூலை ஆங்கில அறிஞர் டெர்ரட்டுக்கு அனுப்பி வைத்தேன். அவர் மனு ஸ்மிருதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். அவர் படித்துவிட்டு எதுவும் சொல்லவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து அவர் ஒரு கடிதம் அனுப்பினார். பல ஆயிரம் பக்கங்கள் படித்திருப்பேன். ஆனால் இந்த 64 பக்கம் தான் என்னைக் கவர்ந்திருக்கிறது. இந்து வாழ்வியல் குறித்து பன்னாட்டு மாநாடு லண்டன் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் நீங்கள் உரையாற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. நானும் அங்குச் சென்று அந்த மாநாட்டில் பங்கேற்றேன். இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த 30 பேர், ஜெர்மானியர் இருவர், பிரெஞ்சுக்காரர்கள் இருவர், பாகிஸ்தானியர் ஒருவர், அமெரிக்கர்கள் 10 பேர், கனடியர்கள் இருவர், வங்கத்தைச் சேர்ந்த ஆந்திரே பெக்கேல் என்ற சமூகவியலாளர் மற்றும் நான் உள்பட இரு இந்தியர்கள் கலந்து கொண்டோம். கேம்பிரிட்ஜ் வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் பியர் தலைமையில் அந்த மாநாடு நடந்தது. இதில் நான் உரையாற்றினேன். இந்து முக்காலி (Hindu Tripod) என்ற தலைப்பிலான அந்த ஆங்கிலக் கட்டுரையைத் திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். எனக்கே திருப்தி கொடுக்கும் படைப்புத் தான் அது.

இந்தியர்கள் தங்களைப் பற்றிச் சொல்லாத, உலகத்தோடு ஒட்டாமல் வாழும் அவர்களால் சொல்ல முடியாத, ஒரு கருத்தை இந்நூலில்எழுதியிருப்பதாக டெர்ரட் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்க் கலைக் களஞ்சியம் (Encyclopedia) நூல் ம.ப.பெரியசாமித் தூரன் ஆசிரியராக இருந்து பதிப்பிக்கப்பட்டது. அதன் முதல் இரு தொகுதிகளுக்கு நான் துணை ஆசிரியராக வேலை செய்திருக்கிறேன்.

படிக்கும் பழக்கம் குறித்து?

பள்ளியில் படித்த காலத்தில் பாடநூல்களைத் தவிர பாக்கி எத்துணை நூல்கள் உண்டோ அத்துணை நூல்களையும் படிப்பேன். பாடநூல்கள் படிக்க 2 மணி நேரம் தான். இதைத்தாண்டிப் பல தொகுதிகள் கொண்ட பல நூல்களை சுமார் 200, 300 நூல்களை இன்டர்மீடியட் படிக்கும்போது படித்திருக்கிறேன். எனக்குக் கற்பித்த ஆசிரியர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் பேராசிரியர் பாஸ்கரன் அவர்கள். அவர் வரலாற்றுப் பேராசிரியர். அவரது வகுப்பில் அவர் அதுவரை யாரும் சொல்லாத கருத்தை, அதுவரை யாரும் சொல்லாத மொழி வளமையுடன் விளக்குவார். எங்கள் வரலாற்று வகுப்பில் மொத்தம் 6 மாணவர்கள் இருப்போம். அதில் நான் ஒருவன் தான் அவர் கற்பித்ததைப் புரிந்து கொண்டேன். அந்த அளவுக்கு அவரது ஆங்கிலம் மிகக் கடினமானதாக இருக்கும்.

மனித சக்திக்கு ஓர் எல்லை உண்டு, ஆனால் காலத்துக்கு எங்கே தொடக்கம்? எங்கே முடிவு? புரிந்து கொள்ள முடியாததை நாமே உருவாக்கிவிட்டு அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்கிறோம். மனிதன் படைத்தது தான் கடவுள். மனிதனின் கற்பனை தான் கடவுள். இதில் இருந்து நமக்கு அறியாமை இருக்கிறது. அதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது தெரிகிறது. அறிந்து கொள்ள வேண்டியது, அறியாமை இருக்கிறது என்பதைத் தான். கல்வி மிகுந்து போகப் போக அடக்கம் வரும். அடக்கம் குறையக் குறைய இறுமாப்பு அதிகரிக்கும். நமக்கு விசயம் தெரியத் தெரிய அறியாமை அதிகம் இருக்கிறது என்பது தெரியும். படிக்கப் படிக்க என்ன தெரிகிறது? பயில்தொறும் நூல் நயம் போலப் படிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்பது தெரிகிறது.

கல்வி கற்கும் சூழல் தங்கள் காலத்துக்கும், தற்காலத்துக்கும் இடையே எத்தகைய மாற்றம் அடைந்துள்ளது?

தற்போதைய கல்வி பயிலும் வழல் படிப்படியாகத் தாழ்ந்து வருகிறது. கடந்த 75 - 80 ஆண்டுகளில் முற்றிலும் மாறிவிட்டது. ஒரு கட்டத்தில் மாணவர்கள் மத்தியில் பேசுவதில்லை என்று முடிவு செய்தேன். பிற்பாடு இருபதாண்டு காலத்தில் ஆசிரியர் களிடமும் பேசுவதில்லை என்று தீர்மானித்து விட்டேன். ஏன், ஆசிரியர்களே, மாணவர்களிடத்தில் தேவையில்லாத புத்தகங்களைப் படிக்க வேண்டாம், பாடநூல்களை மட்டும் படியுங்கள் என்று சொன்னார்

கள். பிறகு அதுவும் வேண்டாம், நோட்ஸ் மட்டும் படியுங்கள் என்றனர். பிற்பாடு அதுவும் வேண்டாம், நான் கொடுக்கும் குறிப்புகளை மட்டும் படித்தால் போதும் என்றனர். இன்றிருக்கும் நிலையில் வள்ளுவரை மேற்கோள் காட்டினாலும், சேக்ஸ்பியரை மேற்கோள் காட்டினாலும் அவர்களுக்குப் புரியாது.

இலக்கியம் மனித வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு உதவி இருக்கிறது? அதன் அனுபவத்தை இளைஞர்கள் எப்படிப் பார்க்க வேண்டும்?

கிரேக்க இலக்கியங்கள், ஹோமர் வர்ஜில் காலத்தில் தோன்றியதைப் பின்பற்றி ஐரோப்பிய இலக்கியங்கள் உருவாயின. அவை வாழ்க்கையோடு தொடர்பு கொண்டவை. வாழ்க்கையின் பிரதிபிம்பமாகத் திகழ்ந்தன. அந்த இலக்கியங்களைப் படித்தால் நம்முடைய வாழ்க்கை தெரியும். நடைமுறை யதார்த்தத்தை (Pragmatism) பிரதிபலிப்பவையாக அவை இருக்கின்றன. அதே சமயம் இந்திய இலக்கியங்கள் யதார்த்த வாழ்க்கைக்குத் தொடர்பில்லா தவையாக உயர்ந்த குறிக்கோள்களை, முன்மாதிரிகளை (Idealism) காட்சிப்படுத்துவதாக இருந்தன. அதுவும் இந்தியாவில் கல்வி, இலக்கியம் ஓர் உயர்குலத்தாருக்கு மட்டும்தான் உரியவையாக இருந்தன. அவை சமுதாயத்தில் இருந்து விலகியே தங்களுக்குத் தாங்களே படைத்துக் கொள்பவையாகத் தான் இருந்தன. இதிலும் மதச்சார்பு இலக்கியங்கள், மதச்சார்பற்ற இலக்கியங்கள் என இரு பிரிவுகள் இருந்தன. மதச்சார்பு இலக்கியங்கள் பிராமணர்களுடையவையாகவும், மதச்சார்பற்ற இலக்கியங்கள் பிராமணர் அல்லாதவர்களுடையவையாகவும் இருந்தன. வால்மீகி, வியாசர், வள்ளுவர், கம்பர், காக்கை பாடினியார் போன்றோர் மதச்சார்பற்ற இலக்கியம் படைத்தவர்கள்.

பிரிட்டிசார் ஆட்சி வரும் வரையிலும் வாழ்க்கைக்குத் தொடர்பில்லாமல் தான் இந்திய இலக்கியங்கள் இருந்தன. அவர்கள் வருகைக்குப் பிறகு தான் அவர்கள் தாக்கம் காரணமாக வாழ்க்கையோடு தொடர்புள்ள இலக்கியங்கள் உருவாகத் தொடங்கின. ஓவியம், சிற்பம் போன்றவை லட்சியத்தன்மை கொண்டவையாக இருந்தன. அழகு என்பது உண்மையான உலகத்தில் நமக்குத் தெரியும். ஆனால் சமயராதியாக அதற்கு ஒரு பொருள் வைத்துக் கொண்டு தான் இங்கு பேசுகிறார்கள்.

அங்கு எல்லா வகையிலும் சுதந்திரம் உண்டு. இங்கு சுதந்திரம் இல்லை. மெக்காலே செய்த உதவி அது தான். மேல்நாட்டுக் கருத்துகளை ஆங்கிலம் மூலம் தான் சொல்ல முடியும். உலகம் முழுவதும் பரவிய மொழி ஆங்கிலம். எல்லா மொழிகளின் கருத்துகளையும் உள்வாங்க முடியும். ஆனால் தனித்தமிழ் என்று என்றைக்குப் பேசினார்களோ, அதன் மூலம் தமிழை வளராமல் தடுத்து விட்டனர். இந்தி மொழி கூட எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறது.

மனிதனால் படைக்கப்பட்ட மிகச்சிறந்த படைப்பிலக்கியம் 17 தொகுதிகள் கொண்ட என்சைக் ளோபீடியா பிரிட்டானிகா எனப்படும் கலைக்களஞ்சியம். அதன் 14ஆவது பதிப்பில் E=mc2 என்ற சார்பியல் கோட்பாடு பற்றிப் பேரறிஞர் ஐன்ஸ்டீனிடம் பொருள் விளக்கம் எழுதித் தரும்படி கேட்டனர். அவர் எழுதிக் கொடுத்தது பொருள் புரிந்து கொள்ள முடியாதபடி இருந்தது எனக் கலைகளஞ்சிய ஆசிரியர் குழுவினர் கருதினர். எனவே அதை சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் என்ற ஆங்கிலப் பௌதிகவியலாளரிடம் சார்பியல் பற்றி விளக்கம் எழுதித்தரும்படி கேட்டனர். அவர் எழுதிக் கொடுத்தது புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அதை ஐன்ஸ்டீனுக்கு அனுப்பி வைத்து, அவர் எழுதியதைப் பிரசுரிக்க முடியாது. ஜேம்ஸ் ஜீன்ஸ் எழுதியதைப் பிரசுரிக்கப் போவதாகத் தெரிவித்தனர். ஜேம்ஸ் ஜீன்ஸ் எழுதிக் கொடுத்ததைப் படித்துவிட்டு உண்மையில் சார்பியல் பற்றி இதைப் படித்துத் தௌ¤வாகப் புரிந்து கொண்டேன் என்று ஐன்ஸ்டீனும் சொன்னாராம். கருத்தைச் சொல்வதற்குச் சரியான கருவி ஆங்கிலம்.

ரஷ்ய இலக்கியங்களை பற்றி?

டால்ஸ்டாய் படைப்புகள் உலகின் ஒரு கோடிக்குப் போனது. அதைத்தான் ‘நம்பிக்கை’ என்று காந்தி பின்பற்றினார். இம்சை செய்யாமல் உலகில் இருக்க முடியுமா? “எது தப்பி உயிர் வாழ்கிறதோ, அது தான் நிலைக்கும்” என்பது தான் வாழ்க்கை பற்றி டார்வின் கூறியது தால்ஸ்த்யோவ்ஸ்கி படைத்தவை கசப்பான உலகத்தின் மற்றொரு கோடிக்குப் போனது. அதே சமயம் புஷ்கின் போன்ற சில கவிஞர்கள் நடுநிலையோடு இலக்கியம் படைத்தார்கள். ருஷ்யர்கள், பிரெஞ்சுக்காரர்களைப் போல உணர்ச்சிவசப்படுபவர்கள்.

அறிவைப் பயன்படுத்தியிருந்தால் கள்ளுண்ணாமையை வள்ளுவர் பேசியிருப்பாரா? இயலாதது, மனித சக்திக்குப் புறம்பானதைப் பேசுவதால் என்ன பயன்? அறிவுக்கும், அனுபவத்துக்கும் உரியது விஞ்ஞானம்.

ஆங்கிலம் போதித்தால் விஞ்ஞானம் வளரும் என்று மெக்காலே நினைத்தார். ஆனால் அதில் தான் அவர் ஏமாந்துபோனார். ஐரோப்பிய நாடுகளில் நடந்ததுபோல் இங்கு நடக்கவில்லை. மேலிருந்து கீழ் நோக்கிப் போகும் என்று நினைத்தார். அதுபோல் இங்கும் நடக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் நடக்கவில்லை. ஏனென்றால் இந்துச் சமுதாயம் சாதி, வர்ணங்கள் என்று பிளவுபட்டு இருப்பதால் பல தடைகள் உள்ளன. எனவே மேலே கொடுத்தால் அது அங்கேயே தடைபட்டு நின்று விடுகிறது. எனவே ஆங்கிலம் கற்றவர்கள் அத்தோடு நின்று கொண்டனர். தமிழ் கற்றவர்கள் இங்கேயே நின்று கொண்டனர். அதனால் தான் பல்கலைக்கழகங்கள் தொடங்கிப் பல துறைகளிலும் கடந்த 50 ஆண்டுகளாக வளர்ச்சியின்றித் தேங்கிக் கிடக்கின்றது.

இன்றைக்கும் இந்திய அரசின் நிதியமைச்சகம் என்ன நினைக்கிறது? பொருளாதார நிலையில் மேலே இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட்டால் அது தானாகவே அடிநிலை வரை போகும் என்று திட்டமிடுகின்றனர். நகரங்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் அவை கிராமங்களைச் சென்று சேரும் என்று நினைக்கின்றனர். ஆனால் நகரங்களுக்குச் செய்தால் அவை அங்கேயே தான் நிற்கும். இன்னும் 7 லட்சம் கிராமங்களில் பெரும்பான்மை மக்கள் சாப்பாட்டுக்கும், துணிக்கும் இல்லாமல் இருக்கின்றனர். இது ஆள்வோருக்கு எங்கே தெரிகிறது?

நான் மதுரையில் இருந்தபோது கிராமங்களில் 50 மையங்களில் வாழும் மக்கள் நிலை பற்றிச் சமூகப் பொருளாதார நிலை பற்றி ஆய்வு செய்தேன். அந்த ஆய்வை மேற்கொண்டபோது இந்த நாட்டிலா நான் இருக்கிறேன் என்று அதிர்ச்சி அடைந்தேன். குடிசையில் இருக்க இடம் இல்லாமல் குப்பைத் தொட்டியில் படுத்து உறங்கியவர்களைப் பார்த்தேன். 10 வயதுப் பையன் ஒருவன் துணி இல்லாமல் இருந்தான். ஏன் துணி இல்லை என்று அவனிடம் கேட்டேன். என் துணியைத் தான் நீ போட்டிருக்கிறாயே என்றுஅவன் சொன்னான். அவன் அப்படிச் சொல்லி வாழ்க்கையின் பெரிய உண்மையை எனக்கு உணர்த்தினான். நான் அணிந்திருந்த கோட்டைப் பார்த்து, ‘எங்கே திருடினாய்?’ என்று கேட்டான். சற்று சிந்தித்து விட்டு ஆம் திருடித்தான் போட்டிருக்கிறேன். உன்னிடம் இருந்து தான் திருடினேன் என்று சொன்னேன். இந்தியச் சமுதாயம் பற்றி எனக்குத் தெரியும். மத்திய ஆட்சியாளர்களுக்குத் தெரியுமா?

அவர்களுக்குக் கல்வி இல்லை, பொருளாதார வசதி எதுவும் இல்லை, அடுத்த கிராமத்திற்குப் போவதற்கு அந்த மக்களுக்குச் சாலை இல்லை. நோயாளிகளைத் துணியில் கட்டி மூட்டையாகக் கொண்டு போகும் நிலை தான் பல கிராமங்களில் உள்ளது. மருத்துவர்கள் கிராமங்களுக்குப் போகத் தயாரில்லை.

டில்லி, மும்பை, கல்கத்தா, சென்னை மட்டும் முன்னேறினால் போதுமா? இந்த நிலையில் நாடு முன்னேறுகிறது என்றால் வசதி படைத்த டாடா, பிர்லா போன்ற சிலருக்காகத்தான் ஆட்சி நடக்கிறது. கல்வி கற்றவர்களுக்கு இதைக் கேட்கத் துணிவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்குப் பிரச்சனையே புரியவில்லை. இதைப் புரிந்து கொண்டால் இங்கு பிரெஞ்சுப் புரட்சி வெடிக்கும்.

சென்ற ஆயிரம் ஆண்டுகளில் வெளிநாட்டுத் தாக்குதல் இல்லாமல் தப்பிப் பிழைத்த ஒரே நாடு இங்கிலாந்து தான். ஆங்கிலேயர்களுக்கு மட்டும்தான் வரலாற்று உணர்வு உண்டு. இந்தியாவில் வரலாற்று உணர்வு (Sense of History) வளரவே இல்லை. எனவே தான் அதிக அளவுக்கு வெளிநாடுகள் படையெடுத்த, ஊடுருவிய நாடு இந்தியா. இந்தியாவின் பாரம்பரியக் கொள்கைதான் இதற்குக் காரணம். இதுவரை ஒற்றுமை இல்லாமல் தான் இந்த நாடு வாழ்ந்து வந்திருக்கிறது. யான், எனது என்ற செருக்கு இருக்கிறது. சட்டப்படி வற்புறுத்தித் தான் ஒருமைப்பாடு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டிசார் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பின்பற்றியதாகச் சொல்கிறார்கள். ஆனால் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாகப் பிளவுபட்டு இருக்கும் சமுதாயம்தான் இது. மார்க்சியக் கருத்துகள் இவர்களின் பாரம்பரியத்துக்கு விரோதமாக இருக்கின்றன. நான் ஒரு லிபரல்வாதி. இங்குச் செங்குத்தான (Vertical Division) பிளவுதான் இருக்கிறது. கிடைமட்டப் (Horizontal Division) பிளவாக இல்லை. இங்குச் சமத்துவம் என்பதோ, லிபர்ட்டி என்பதோ இல்லை. பிரிட்டீசாரை வெளியேற்றிய பிறகு பழைய கருத்தை நோக்கிப் பின்நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறோம். வெளியே பேசும் போது நிறையப் பேசுவார்கள். ஆனால் உள்ளே பழைய சிந்தனைதான் இருக்கிறது. மேலே உடுத்தும் உடையில் நாகரிகமாக இருப்பார்கள். ஆனால் மனத்திற்கு உள்ளே வேற்றுமையை பார்ப்பார்கள்.

காந்தியும், திலகரும் இரு கண்களாக நின்று காங்கிரசைப் பழமைவாதிகளின் இயக்கமாக மாற்றி விட்டார்கள். 1947இல் அரசியல் சுதந்திரம் வாங்கியதாகச் சொல்வது ஒரு திருப்பம்தான். அதைத் தொடர்ந்து இங்குச் சமுதாயப் புரட்சி எதுவும் நடைபெற்று விடவில்லை. நவீனக் கல்வி, தொழில்நுட்ப மேம்பாடு தொடர்ந்து விடக் கூடாது, மூடநம்பிக்கை இருக்கவேண்டும் என்பது தான் ஆள்வோரின் நிலை. இந்திய சுபாவத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சமூகத்தோடு வந்து சேர்ந்தவர்கள் இங்குள்ளவர்களைப் போலவே மாறிவிடுவார்கள். இங்கே வர்க்கம் குறித்த சொல்லாடல் மிகச் சிக்கலானதாகவே இருக்கிறது. தங்கள் வாழ்க்கையையும், கருத்துகளையும் சேர்த்துப் பார்க்கும் நிலையில் மக்கள் இல்லை.

ஆங்கிலேயர்கள், ஐரோப்பியர்கள் இல்லாத போது அவர்களைப் பற்றி நம்மவர் அவனைப் பேசுவார்கள். ஆனால் நேரில் பார்த்துவிட்டால் கூடிக் குலாவுவார்கள். நான் ஒரு சமயம் டில்லியில் இருந்தபோது ஐரிஷ் நாட்டுத் தூதரக அதிகாரி ஒருவர் வந்தார். அவரை வரவேற்க டில்லி அரசின் உள்துறைச் செயலாளரே நேரில் வந்தார். அந்த ஐரிஷ்காரரிடம் பணிந்து,தாழ்ந்து பேசியதைப் பார்க்க எனக்கு வியப்பாக இருந்தது.

உள்ளொன்றும், புறமொன்றும் பேசும் சமுதாயம் இது. நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தில் ஒரு கதவு இருக்கிறது. இது எல்லா வகையிலும் சாத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கத் தூதராக இருந்த கால்பிரைத் என்பார் இந்தியாவைப் பற்றிச் ‘செயல்பட்டுக் கொண்டிருக்கும் முழுக் குழப்பம்’ (Functioning Chaos) என்று வர்ணித்தார். நமக்கு ஏழெட்டு உருவம் இருக்கிறது. சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் பற்றி ஐரோப்பியர்கள் பயன்படுத்தும் அர்த்தத்தில் நாம் புரிந்து கொள்ளவில்லை. விஞ்ஞானமற்ற முறையில் எதைச் சொன்னாலும் இங்கு ஏற்றுக் கொள்வார்கள்.

வரலாற்றாளர்கள் சமூகம் முன்னும் பின்னும் எப்படிப் போகும் என்று ஊடுருவிப் பார்க்கக் கூடியவர்கள். பகுத்துணரும் அறிவு அடிப்படையில் உற்று நோக்கும் போது இந்தியாவில் மாற்றம் எதுவும் நடந்து விடாது என்றே புலப்படுகிறது. புலியைப் பிடிக்க மீன் பிடிக்கும் வலை பயன்படுமா?

தத்துவார்த்தத் துறையில் சங்கரர் தான் சிறந்தவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிரபஞ்சம் பற்றிய சூட்சும உணர்வை அறிவுப்பூர்வமாகச் சொல்லி இருக்கிறார்.

இந்து மதம் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடும். இங்கு தோன்றிய புத்த மதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டது. சீனா, ஜப்பான், இலங்கை நாடுகளுக்குப் போய்விட்டது. சோம்பேறி வர்க்கம் என்ற பதப் பிரயோகப்படி இந்தியாவில் பெரும்பான்மையான பிராமணர்களைச் சொல்லலாம் என்று ஓர் அறிஞர் கூறியிருக்கிறார். அது இன்றைக்கும் பொருந்தும். அந்தத் தன்மை மாறவேயில்லை. மனிதர்கள் மாறியிருக்கின்றனர். வர்ணாசிரமம் என்ற மனுவின் ஏற்பாட்டைச் சொல்வதானால் அதை அவர் உருவாக்கவில்லை. அன்றைய சமூகநிலை ஏற்பாட்டை அவர் விளக்கிக் கூறினார்.

மனுவும், திருவள்ளுவரும் ஏறத்தாழ ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். மனு சிறிது முன்னால் இருந்திருக்கக் கூடும். வள்ளுவரிடம் கிறிஸ்துவத்தின் தாக்கம் இருக்கிறது. சென்னையில் செயின்ட் தாமஸ் வந்திருந்த காலம் வள்ளுவர் வாழ்ந்த காலமாக இருக்கக்கூடும். அதேபோல் வள்ளுவரின் கருத்துக்கள் மனுவின் கருத்துகளுக்கு எதிர்மறையாக வெளிப்பட்டிருக்கிறது. பெற்ற தாயின் பசியைக் கண்டால் கூடச் சான்றோர்கள் பழிக்கும் செயலைச் செய்யக் கூடாது என்று வள்ளுவர் கூறுகிறார். ஆனால் பெற்ற தாய் பசியுடன் இருந்தால் எத்தகைய செயலைச் செய்தாவது பசியைப் போக்க வேண்டும் என்கிறார் மனு.

இங்கு தனி ஒரு மனிதன் என்பதில்லை. தனி மனிதன் ஒரு குடும்பத்திலும், அந்தக் குடும்பம் ஓர் உப சாதியிலும், அந்த உப சாதி பிரதான சாதியுடனும் கடைசியில் மதத்துடனும் தொடர்புற்று ஓர் இணைப்பாக உருப் பெற்றிருக்கிறது. எனவே இங்கு மாறுதலைக் கொண்டு வருவதானால் வற்புறுத்தித் தான் கொண்டு வர முடியும். அதுவாக மாறும் என்று எதிர்பார்த்தால் அது நடக்காது. அதே சமயம் இன்றைக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் மாற்றத்தை அனுமதிக்க மாட்டார்கள். அனுபவத்தின் வாயிலாக இதைப் புரிந்து கொள்ளலாம்.

எந்த நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அதற்கு நான் எவ்வளவு பொறுŠபாளி, புற உலகம் எவ்வளவு பொறுப்பாளி என்று பார்க்க வேண்டும். நாம் பொறுப்பாளி என்றால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கைக்குத் தர்க்கம் (Logic) கிடையாது. இயற்கைக்குத் தர்க்கமும் கிடையாது, தா௱மீகமும் (Morality) கிடையாது. நாம் மாற்றம் வேண்டும் என விரும்பினால் அதற்கு முயற்சி செய்ய வேண்டும். முயற்சி என்றால் வலி, துன்பம் இருக்கும். அது கூடாது என்றால் அப்போது சோம்பேறி வர்க்கம் என்று தான் பொருள். மாற்றம் நிகழ்வதற்குத் தொடக்கக் கல்வியில் வேரடி நிலையில் மாற்றம் வேண்டும். இங்குக் கல்வி முறை அழுகிப் போய் இருக்கிறது. இதை எப்படி நியாயமானதாக மாற்றுவது என்று முயற்சி செய்ய வேண்டும்; சிந்தித்தாக வேண்டும். இங்கு சமுதாய அறிவியல் கருவிகள் மாற்றத்துக்கு விரோதமாக இருக்கின்றன. வரலாறு, இலக்கியம் ஆகிய இவற்றைப் பிரித்து விட்டு விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றை மட்டும் ஏன் படிக்கிறார்கள்? ஏனென்றால் பணம் முக்கியம்! முழுமை நிறைந்த ஆரோக்கியமான வாழ்க்கை நிலையைப் பற்றி யாரும் கேள்வி கேட்கவே தயாராகயில்லை.

இளைய தலைமுறையினர் நீங்கள் படைத்துள்ள புத்தங்களில் எவற்றை முக்கியவத்தும் கொடுத்துப் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

56 சிறுகதைகள் தொகுப்பு, தமிழில் 14 ஆயிரம் வரிகள் கொண்ட கவிதைகள், ஆங்கிலத்தில் 4 ஆயிரம் வரிகள் கொண்ட கவிதைகள், ஒளவையார், சாக்ரடீஸ், தர்ம தேவதை நாடகத் தொகுப்பு ஆகியவற்றைப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அத்துடன் சங்க கால அரசியல் (Sangam Polity), இந்து முக்காலி, தமிழகச் சமூக, பண்பாட்டு வரலாறு குறித்து மூன்று தொகுப்புகள் ஆகியவற்றையும் படிக்க வேண்டும். பிரெஞ்சுப் புரட்சி பற்றி ---- என்பார் எழுதிய நூலை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளேன். அவையும் குறிப்பிடத்தக்கப் புத்தகம் ஆகும்.