தமிழிசையும் இசைத்தமிழும்

அரிமளம் சு. பத்மநாபன்

காவ்யா

சென்னை _ 24

பக்: 336 | ரூ. 220

தமிழ் அறிஞர், இசை அறிஞர் அரிமளம்

சு. பத்மநாபன் அவர்கள் ஒரு தமிழிசை இயக்கமாக வலம் வருபவர்; தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் பற்றிய நூல்களை எழுதியும், சுவாமிகள் நாடகங்களைத் தேடித் தொகுத்தும் அரிய தொண்டு செய்துவருபவர்; ஆய்வுலகில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத் திகழ்பவர்; இப்போது ‘தமிழிசையும் இசைத்தமிழும்’ என்னும் நூலினைப் படைத்து மேலும் புகழுக்கு ஆளாகி உள்ளார்.

இசை பற்றிய, இசை இலக்கியம் பற்றிய, இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசைவளம் பற்றிய, தமிழ்இசை வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், இசை அறிஞர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக, இந்நூல் அமைந்துள்ளது. ஒரு தமிழ் இசைக் களஞ்சியமாகவே நூல் காட்சிதருகிறது.

“தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே இசை நூல்கள் பலவும் தமிழில் படைக்கப் பட்டிருந்தமைக்கான சான்றுகள் தொல்காப் பியத்திலும், சிலப்பதிகாரத்திலும் அதன் உரை களிலும் பிற தமிழ் நூல்களிலும் பரந்துபட்டுக் காணப்படுகின்றது.”

“பண்டைக் காலத் தமிழர்களின் இசை வாழ்க்கை, பணிகள், இசைக்கருவிகள், இசைக் கலைஞர்கள், இசைப்பாடல்கள் பற்றிய ஏராளமான குறிப்புகள் சங்க இலக்கியத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.’’

முதல் ஆறுகட்டுரைகளும் பழந்தமிழ் இசை வளத்தை எடுத்துச்சொல்வனவாகவும், தமிழ் இசையே இன்றைய இந்திய இசைக்கு அடிப் படையாக விளங்குகிறது என்பதை உறுதி செய்வன வாகவும் உள்ளன.

வள்ளலார் இசைத்தமிழுக்கு அளித்த வாழ்வுபற்றி ஒரு கட்டுரை விரிவாகப் பேசுகிறது. அது 1011 இசைப் பாடல்களை வள்ளலார் எழுதியுள்ளார் என்ற அரிய தகவலையும் தருகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்கள் பங்களிப்பைச் செய்த இசை வாணர்களைப் பட்டியலிட்டுப் பாராட்டுகிறது ஒரு கட்டுரை. பாரதியார், பாரதிதாசன் இருவரது இசைப் பாடல் நலன்களை இரு கட்டுரைகள் எடுத்துச் சொல்கின்றன.

சங்கரதாஸ் சுவாமிகள் பற்றிய மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சுவாமிகள் படைத்த வள்ளி, ஒடுக்கப்பட்ட பெண்ணின் உரிமைக்குரலாக வெளிப்படுகிறாள் என்பதைச் சான்றுகளுடன் விளக்குகிறார் ஆசிரியர். புதிய பார்வை இது, நாம் வாழும் காலத்துக்கு ஏற்ப, பெண்ணியம் பற்றிய சிந்தனைகளோடு வள்ளியின் செயல்கள் பொருத்திப் பார்க்கப் படுகின்றன. தமிழ்நாடெங்கும் இசைவெள்ள மாகப் பெருக்கெடுத்தோடிய சுவாமிகளின் நாடக இசைநலன்களைச் சிறப்பாகப் பேசுகிறது ஒரு கட்டுரை. தமிழ் நாடகத் தலைமகனாகச் சங்கரதாஸ் சுவாமிகள் திகழ்வதை எடுத்துச் சொல்கிறது இன்னொரு கட்டுரை.

இசைத்தமிழ்ப் புதையலை 1892 இல்

உ.வே.சா. சிலப்பதிகாரம் பதிப்பின் மூலம் வெளிக்கொணர்ந்தார். தொடர்ந்து பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களையும் பிற பழந்தமிழ் இலக்கியங்களையும் ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் உரைகளுடனும் பதிப்பித்தார். இவற்றின் மூலம் மிகத்தொன்மையான இசைத்தமிழ் வரலாறும், இலக்கணங்களும் மீட்டுருவாக்கம் பெற வழி ஏற்பட்டது.

மதுரை மாரியப்ப சுவாமிகள் தமிழிசைத் தொண்டு ஒரு கட்டுரையின் பொருளாகி உள்ளது. தமிழ் இசை இயக்கம் தோன்றி வளரும் முன்பே, தனிமனிதராக, தமிழ் இசை வாணராகப் பெரும் சாதனை புரிந்துள்ளா£ர் மாரியப்ப சுவாமிகள். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக சபையின் ‘ராஜபார்ட்’டாக விளங்கிய மாரியப்பன், தனக்கு ஏற்பட்ட கசப்பான வாழ்க்கை அனுபவங்களால் மனம் வெறுத்து, திருச்செந்தூர் முருகனின் முன்பாகத் தன் நாவை அறுத்துக் கொண்டார். மாரியப்பனின் நிலை அறிந்த சங்கரதாஸ் சுவாமிகள், திருச்செந்தூர் சென்று தன்னுடைய மாணவனுக்காக முருகனிடம் வேண்டினார். மாரியப்பன் மீண்டும் பாடும் சக்தியைப் பெற்று மாரியப்ப சுவாமிகள் ஆனார். தமிழ்ப்பாடல்களை மட்டுமே மேடைகளில் பாடித் தமிழிசை உலகில் நீங்கா இடம்பெற்றுள்ள மாரியப்பசுவாமிகள் இசை அமைப்பாளர், நாடக நடிகர், பாடலாசிரியர், எனும் பல பரிமாணங்களைப் பெற்றிருந்தவர். தமிழகத்தில் வீறு கொண்டெழுந்த தமிழ் இசை இயக்கத்தில் பங்குகொண்ட கவியோகி சுத்தானந்த பாரதி அவர்களின் பங்களிப்பையும் பறைசாற்றுகிறது ஒரு கட்டுரை.

பன்மொழிப் புலமை பெற்ற கவியோகி, தமிழிசை நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். டி.கே.பட்டம்மாள் போன்ற பிரபல இசைக்கலைஞர்களால் பாடப்பட்டு நாட்டு மக்களால் போற்றப்பட்ட பாமாலைகள் அவருடையவை. இசைத்தமிழ் தழைக்கப் பாடுபட்டவர் கவியோகி சுத்தானந்த பாரதியார்.

இசைத்தமிழ் ஆய்வுகளை மேற்கொண்டு தமிழிசை வளர்ச்சிக்குப் பாடுபட்ட, வழிகாட்டிய அறிஞர்கள் பலர். அவர்களுள் அண்ணா மலைப் பல்கலைக்கழக அறிஞர் வெள்ளைவாரணர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் ஆகிய இருவரது புகழ்மிக்க வரலாற்றை விளக்குவனவாக இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

வெள்ளைவாரணனார் தமிழிசைச் சங்கத்தின் உயரிய விருதான “இசைப்பேரறிஞர்” பட்டம் பெற்றுச் சிறந்தவர். இவர் இசைத்தமிழ், பன்னிரு திருமுறை வரலாறு ஆகிய இரு நூல்களை எழுதித் தமிழிசை ஆய்வுலகில் பெருந்தொண்டு செய்துள்ளார்.

“உலகின் இசைக்கருவிகளில் மிகவும் தொன்மை யானது தமிழரின் யாழ் ஆகும்.’’

“உலக இசைவரலாற்றிற்கு முதல் தாளவியல் தமிழ்த்தாளவியலே’’

“சிலப்பதிகார உரையில் குறிப்பிடப்படும் ‘ஆளத்தியே’ இன்றைய ஆலாபனையாகும்.’’

இசைத்தமிழுக்குப் புதுவையின் கொடை பற்றி ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது.

புதுவை மாநிலப் பகுதியாகிய காரைக்காலில் தோன்றிய காரைக்கால் அம்மையார், தமிழிசை மறு மலர்ச்சியின் தொடக்கமாக விளங்குவது பெரும் சிறப்பு.

கீர்த்தனைகள் காலம், தமிழிசையின் இரண்டாம் மறுமலர்ச்சிக்காலம். அதிலும் புதுவையின் பங்களிப்பு பெரிது.‘இராமநாடகக் கீர்த்தனைகள்’ எழுதிய அருணாசலக் கவிராயரைப் புதுவை ஆனந்தரங்கப்பிள்ளை ஆதரித்துப் போற்றினார். அதுமட்டுமா? தமிழ்நாட்டின் இசைவரலாற்றில் பெரும் புரட்சியைச் செய்த கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தனார் நாடகத்தை அச்சிடத் துணைநின்றவர் காரைக்கால் பகுதி பிரெஞ்சு ஆட்சியாளர் ஒருவர்.

புதுவையில் வாழ்ந்த இசை அறிந்த தமிழ் அறிஞர் இரா. திருமுருகன் ‘சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம்’ என்னும் இசைத்தமிழ் இலக்கண நூலை எழுதி வரலாறு படைத்துள்ளார். இரா.திருமுருகன் குறிப்பிடும் போது. “தமிழிசை வேறு: இசைத்தமிழ் வேறு ; தமிழிசை என்பது தமிழர் கண்ட இசை; இசைத்தமிழ் என்பது தமிழ்மொழியின் ஒரு பிரிவுக்குப் பெயர். இது இசைப்பதற்காகவே இயற்றப்பட்ட தமிழ்ப்பாடல்களின் பெயர்.”

நாட்டுப்புற இசை, தாலாட்டு, கும்மி, கோலாட்டம் முதலான அதன் வடிவங்கள், ஒயில், கரகம், காவடி போன்ற ஆட்டங்களில் இடம்பெறும் பாடல்கள், வில்லுப்பாட்டு, நையாண்டி மேளம், நாடகப் பாடல்கள், திரை இசை எனத் தமிழ்நாட்டு மக்கள் இசை பற்றிய கட்டுரை விரிவாகப் பேசுகிறது.

தெருக்கூத்து தமிழக நாட்டுப்புறக் கலைகளின் ஒரு சிறந்த கலை வடிவமாகத் திகழ்ந்து வருகிறது. (பக்கம் - 301) என்று அடுத்தகட்டுரையில் குறிப்பிடும் ஆசிரியர் தெருக்கூத்தின் இசைக் கூறுகளைப் பட்டியல் இடுகிறார். கூத்தில் இடம்பெறும் பாடல் வகைகள் இசைக்கருவிகள் முதலானவை சிறப்பாக விளக்கப்படுகின்றன.

நாடகத்தமிழ் பற்றியும், தமிழ்நாடக இசைபற்றியும் பேசுவதாக ஒரு கட்டுரை அமைந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் இருந்து தொடங்கும் இசைநாடக மரபை விரிவாகப் பேசுகிறது. சோழர்காலம், கீர்த்தனை நாடகங்கள், இசைநாடகத்தின் பொற்காலம் முதலானவைகளும் விளக்கப்படுகின்றன.

“தமிழிசை அன்பர்களுக்குக் காவடிச் சிந்து என்ற பெயரைக் கேட்டதும் காதினிக்கும்; கருத்தைக் கவரும்; மதி மயக்கும்” எனத் தொடங்கும் காவடிச் சிந்து பற்றிய கட்டுரை நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாக அமைந்துள்ளது. காவடி வகைகள், சிந்துப் பாடல்வகைகள், அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துப்பாடல்கள் பற்றி சுவைபடக் கட்டுரை அமைந்துள்ளது.

நூலில் ஆசிரியர் வெளியிடும் பல அரிய தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. தேடித் தொகுத்தளித்த ஆசிரியரின் கடின உழைப்பை நாம் உணர முடிகிறது. தமிழ் இசை ஆய்வுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள நூலாசிரியர் செய்யும் தவத்துக்குச் சான்றாக இந்நூல் திகழ்கிறது. காவ்யா தனக்கே உரிய முத்திரையோடு நூலை வெளியிட்டுள்ளது.

புத்தகத்துடன் இனிப்புக் கொடுத்து மகளிர் தினவாழ்த்து!

முத்துநிலவன்

திருச்சிமாவட்ட பி.எஸ்.என்.எல் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாகப் பெண்ஊழியர் ஒவ்வொருவர்க்கும் இனிப்புடன் புத்கங்களை வழங்கி மகளிர்தின வாழ்த்துகளுடன் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பி.எஸ்.என்.எல் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பாளர் மு.மல்லிகா, மாவட்ட நிர்வாகிகள் மேகலை, ஏ. தேவகி, மணிமேகலை மற்றும் சீதாலெட்சுமி, தேவகி, கிருஷ்ணவேணி, தனம், ஆகியோருடன் பி.எஸ்.என்.எல்.இ.யூ. மாநில இணைப் பொருளாளர் அஸ்லாம்பாட்சா, மாவட்டச்செயலர் சந்திரசேகரன், மாவட்டப் பொருளாளர் சுப்பிரமணியன், மற்றும் பி.எஸ்.என்.எல்.இ.யூ முன்னணி ஊழியர்கள் சண்முகம், மோகன், தியாகராஜன் முதலான இருபதுக்கும் மேற்பட்டோர் இணைந்து, திருச்சி நகரம் முழுவதிலும் உள்ள பி.எஸ்.என்.எல். பெண்ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டவர்களை நேரில் சந்தித்து, புத்தகம் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியின்போது, ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘நமக்கான குடும்பம்’, உ.வாசுகி எழுதிய ‘பெண்ணியம் பேசலாம் வாங்க’, ச.மாடசாமி எழுதிய ‘தமிழர் திருமணம்’ மற்றும் ‘மனசே டென்ஷன் ப்ளீஸ்’, ‘வீரமங்கைவேலுநாச்சியார்’, ‘அன்னைதெரசா’, ‘எதுநல்லபள்ளி’ உள்ளிட்ட புத்தகங்கள் ஒவ்வொரு பெண் ஊழியர்க்கு ஒவ்வொன்று வீதம் வழங்கப்பட்டன. புத்தகங்களை ஊழியர்கள் ஆவலுடன் பெற்றுக் கொண்டதுடன் பி.எஸ்.என்.எல் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் இந்தப் புதுமையான வாழ்த்துக்கு நன்றிகூறினார்கள்.

பி.எஸ்.என்.எல் முதன்மைப் பொதுமேலாளர்

திரு.ராஜூ மற்றும் துணைப் பொது மேலாளர்கள் திருமதிஃப்ளோரா, திருமதிஜெயந்தி முதலான உயர் அதிகாரிகளுக்கும் புத்தகம் வழங்கப்பட்டது. அதிகாரிகளும் ஊழியர்களும் இந்த நூல்களை மலிவுப்பதிப்பாக வெளியிட்ட பாரதிபுத்தகாலயத்தின் இதரவெளியீடுகள் பற்றியும் ஆர்வத்துடன் விசாரித்துத் தெரிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-வில்லியனூர் பழநி