முதல் பிரவேசம்

தறிகளோடு கழிந்த ஒன்றரை வருட இரவுகளில் ஒரு நாள் அந்தத் தறிகளுக்குள்ளாக இருந்தே ஓரு கதையை எழுதினேன். தறிச்சத்தம் அலறத் தள்ளி நின்று அவ்வப்பொழுது எட்டிப்பார்த்து கண்காணிக்கும் மேஸ்திரிக்கு பாய்ண்ட் எழுதுகிற பேடாக காட்டியே இரண்டு இரவுகளில் அந்தக்கதை முடிந்திருந்தது. விருப்பமே இல்லாமல் அனுப்பிய அந்தக் கதை அடுத்த மாதமே புதியகாற்று இதழில் வெளியாகியிருந்த பொழுதுதான் முதல் முறையாக நான் ஓட்டிய எட்டுத் தறிகளையும் கொஞ்சம் நேசத்தோடு அணுகினேன்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் திசைமாறிப் பறக்கும் பறவைகள் கொஞ்சுவதை முதன் முதலாகப் பார்த்த ஒரு பிற்பகலில்தான் நிறம் மாறும் வானத்தின் குழந்தை முகம் பிடிபட்டது. பாட்டியின் கதை கேட்டு வளரும் அதிர்ஷ்டம் இல்லாதிருந்தாலும் ஜீசஸின் கதைகளைச் சொல்லவும் தோத்திரப் பாடல்கள் சொல்லிக் கொடுக்கவும் அருகாமையில் ரோஸி ஆண்ட்டி இருந்தது பேரதிர்ஷ்டம்தான். தெரிந்த ஒன்றிலிருந்து தெரியாத ஓர் உலகின் அத்தனை முடிச்சுகளிலும் ஓடி விளையாட சொல்லிக் கொடுத்தவள் அவளாகத்தான் இருக்க முடியும். என்னை முதலில் கதை சொல்லச் சொல்லிக் கேட்டவளுக்கு நான் சொன்ன கதைகளின் அத்தனை ராஜா ராணிகளையும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கலாம்; ஆனால் தேவதைக் கதைகளின் அத்தனை தேவதைகளும் அவள் மட்டும்தான் என்பதை ஒருநாளும் அவளுக்கு நானும் சொல்லியிருக்கவில்லை அவளாகவும் கேட்டிருக்கவில்லை. அப்படிச் சொல்ல நினைத்து முடியாமல் போன ஒரு தேவதையைப் பற்றித்தான் பதினெட்டு வயதில் ஒரு கணக்கு நோட்டுத் தாளில் அவளுக்கே சொல்வதாக ஒரு கதை எழுதினேன். எத்தனை முறை ரோஸி என்கிற பெயர் வந்ததெனக் கணக்கிட்டால் நீங்கள் மொத்த வார்த்தையில் ஒரு 30 வார்த்தைகளை மட்டும் கழித்துச் சொல்லலாம். கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது.

அதற்கும் முன்பாகவே என்னுடைய கவிதைகள் நண்பர்களுக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்திருந்தது. ஏனெனில் அவை அவர்களின் தோழிகளுக்காகவும் காதலிகளுக்காவும் எழுதப்பட்டவை. எல்லாக் கவிதைகளும் யாரோவொருவரின் காதலுக்காக எழுதப்படுவதும் வாசிக்கப்படுவதும் அற்புதமான விசயமன்றி வேறென்ன? யார் யாரின் நேசத்திற்கோ எழுதப்பட்ட என் கவிதைகள் எனக்காக எழுத முயற்சிக்கையில் புள்ளிகளாகக் கூட வெளிப்பட்டிருக்கவில்லை. அப்படி வெளிப்படுத்தப்பட முடியாத நேசத்தினை வெவ்வேறு மாயக்கிளிகளின் உடலில் அடைத்து கடல்களைக் கடந்து மலைகளைக் கடந்து பறக்கவிட்டேன்...ஆலிஸின் பேசும் முயலிடமிருந்து கொஞ்சமும், ஆயிரத்து ஓரு இரவுகளையும் கதை சொல்லிக் கடந்த முகம் தெரியாத அந்த இளவரசியிடமிருந்து கொஞ்சத்தையும், கரிசல் காட்டின் முகம் சுருங்கின கிழவிகளின் எச்சில் தெறிக்கும் சொற்களிலிருந்து கொஞ்சத்தையும் இரவல் வாங்கின கிளிகள் அவற்றைக் கதைகளாய் சொல்லத் துவங்கின. துவக்கத்தில் நான் கதைகளைக் கடக்க விரும்பினேன், கனவின் பெருங்கயிறு பிடித்தும், வற்றாத மாய நதியின் வலுமிக்கதொரு ஓடமாகவும் கடந்து கொண்டிருந்தவனிடம் வெவ்வேறு நிலங்களின் கன்னிமார்கள் சொல்லப் படாத தங்களின் கதைகளைச் சொல்ல பொட்டல் காடுகளின் எல்லா இரவுகளிலும் பாடிக்கொண்டிருந்தனர். ஈரம் வற்றிய அவர்களின் தொண்டைக் குழிகளுக்குள் கதைகள் நிரம்பிக் கிடந்த சூட்சுமம் புரிந்த தினத்தில் கதைகள் என்னைக் கடந்து போனது புரிந்தது, ஒரு குழந்தையின் புன்னகையைப் போல், விருப்பத்திற்குரியதொரு பெண்ணின் முத்தத்தினைப் போல் அற்புதமானதாய்.

படித்துத் தெரிந்து கொண்டதை விடவும் மிகுதியானவையாய் இருப்பது கேட்டுத் தெரிந்து கொண்டதுதான், கேட்க முடிந்த ஓராயிரம் கதைகளை எந்தக் காலத்திலும் எவராலும் எழுத முடிந்திருப்பதில்லை என்பதற்கு நானும் விதிவிலக்கானவனில்லை. கண்களை விடவும் காதுகள்தான் எப்பொழுதும் பெரும் தோழனாய் இருக்கின்றன. முதல் கதை எழுதின தினத்தில் நான் தனிமையில் இருந்திருக்கவில்லை. சோகத்திலோ, சந்தோசத்திலோ , அல்லது குறைந்த பட்சம் கதை எழுத வேண்டுமென்கிற உணர்வுகூட இல்லாத கனமொன்றில் எழுதியதுதான். அந்தக் கதையின் கதையை முன்பாகவே சொல்லியிருந்தேன், என்னவென்று அது நான் மட்டுமே வாசித்த கதை. நான் வாசிக்கக் கொடுத்த முதல் கதை இன்னும் சுவாரஸ்யமானது. பூக்களை நேசிக்கும் ஒரு கிழவியைப் பற்றின கதை. அதுபற்றிப் பூரிப்பு கொள்ளமுடியாது நிச்சயமாய். பின் வயிற்றுக்காகவும் வாழ்க்கைக்காகவும் தேடிச் சோறு நிதம் தின்றதில் பார்த்தவையும் கேட்டவையும் உடன் எல்லாவற்றி லிருந்தும் தப்பிக்க எத்தனித்த வாசிப்பிலிருந்தும் வசப்பட்டிருந்தது புதியதொரு உலகம். ஏதோவொரு இடத்தில் அடைந்திருக்க முடியாதபடி செய்தன புத்தகங்கள், வாசித்த சொற்கள் கேட்ட கதைகள் அவ்வளவும் எப்பொழுதும் என்னைச் சுற்றிக் கொண்டிருந்தன, பிரியத்திற்குரிய ஆவிகளைப் போல். மாஸ்கோவின் வீதிகளும் , பீட்டர்ஸ்பெர்க்கின் பனி மூடிய வீதிகளும், சைபீரிய மர்மங்களும் ஒரு புறம் மயக்கிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் மதினிமார்கள் புதியதாக இன்னொரு கொழுந்தன் வந்துவிட்டான் என்கிற பூரிப்பில் என்னையும் சொந்தக்காரனாக்கிக் கொண்டார்கள். கரிசல் நிலத்தின் வாசனை நான் புரட்டும் ஒவ்வொரு பக்கத்திலும் நிரம்பிக் கிடந்தது. எஸ்தர் சித்தி பஞ்சம் பிழைக்க வந்த வழியில் என்னையும் கடந்து போனாள், நான் அவளுக்காக அழுததையோ அல்லது அவளை உடன் வைத்துக் கொள்ள முடியாத வருத்தத்தில் மதுவருந்த நேர்ந்ததையோ தெரிந்து கொள்ளாமல்.

வாசித்த காகிதங்களில் எழுத்துக்களை இடம் மாற்றி எல்லா வார்த்தைகளையும் வேறொன்றாக்கி விளையாடுவதும் , சொற்களை வெட்டி எடுத்து வெற்றுக் காகிதங்களில் கோர்த்தும் மாயச் சொற்களை உருவாக்க முடிந்தது என்னால்...”ஒன்னும் ஒன்னும் சேர்த்தால் பெரிய ஒன்னு ” என பஷீரின் அந்தப் பெரிய ஒன்னைப் போலவே ÔஅÕ வும் ÔஅÕ வும் சேர்ந்தால் ஒரு பெரிய ÔஅÕ என எனக்கு வந்த யோசனையில் கோடி ÔயாÕ க்களை சேர்த்து விட்டால் நிச்சயமாக ஒரு யானைக்கு உயிர் கொடுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. காகித மடிப்புகளாகவே இருந்தது நான் பார்க்க நேர்ந்த அத்தனைப் பேரின் வாழ்வும், சிறிதும் பெரிதுமாய் அவர்கள் எப்பொழுதும் சொல்ல நினைத்து முடியாமல் போன சொற்களை அழுதும் சிரித்தும் கொட்டியதில் எப்பொழுதும் நிரம்பிக் கிடக்கும் அவர்களின் வாழ்க்கைப் புத்தகங்கள். ஒரு புன்னகைக்குள் நூறாயிரம் கவிதைகளையும், ஒரு விசும்பலில் கோடிக் கதைகளையும் மனிதனால் சொல்ல முடிந்திருப்பது பேரதிசயமான ஒன்று. கிழவிகளின் ஒவ்வொரு சுருக்கத்தினுள்ளும் ஒரு தலைமுறை வாழ்க்கை கிடப்பதை வைகை அணையின் தொலைந்துபோன சில கிராமத்துக் கிழவிகளிடம் பார்த்திருக்கிறேன், அப்படியான கிழவியருத்தி வெப்பம் மிகுந்த ஆந்திரதேசத்தில் முறுக்குப் போடும் தன் மகனுடன் இருப்பவள். வருடத்திற்கு ஒரு முறை ஊர் வரும் அவளின் கால்களும் கண்களும் தொலைந்த ஊரைத் தேடி ஓடுகிற பரபரப்பில் இருந்த அதிசயத்தைக் கண்டு காரணம் கேட்டேன். அவள் ஒவ்வொரு சதுர அடியிலும் நடந்த நிகழ்வுகளை நினைவுகளின் எல்லா ரேகைகளிலிருந்தும் எடுத்துச் சொல்லப் பிரயத்தனப் பட்டாள். உண்மையில் அவள் எனக்காக சொல்லியிருக்க வில்லை, அங்கு நினைவுகளை விட்டுச் சென்றிருக்கும் ஒவ்வொருவருக்காகவும் சொல்லியிருக்கிறாள் என்பது ஊருக்குக் கிளம்பி பேருந்து ஏறுகையில் முந்தானையால் துடைத்துக் கொண்ட அவளின் கண்ணீரைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள முடிந்தது.

தறிகளோடு கழிந்த ஒன்றரை வருட இரவுகளில் ஒரு நாள் அந்தத் தறிகளுக்குள்ளாக இருந்தே ஓரு கதையை எழுதினேன். தறிச்சத்தம் அலற தள்ளி நின்று அவ்வப்பொழுது எட்டிப்பார்த்து கண்காணிக்கும் மேஸ்திரிக்கு பாய்ண்ட் எழுதுகிற பேடாக காட்டியே இரண்டு இரவுகளில் அந்தக்கதை முடிந்திருந்தது. விருப்பமே இல்லாமல் அனுப்பிய அந்தக் கதை அடுத்த மாதமே புதியகாற்று இதழில் வெளியாகியிருந்த பொழுதுதான் முதல் முறையாக நான் ஓட்டிய எட்டுத் தறிகளையும் கொஞ்சம் நேசத்தோடு அணுகினேன். புத்தகங்களைத் தேடிப்போவதும், புத்தகங்கள் வாசிப்பவர்களைத் தேடிப்போவதும் விருப்பத்திற்குரிய ஒன்றாய் மாறின பொழுது நண்பர்கள் உறவுகள் அவ்வளவு பேரும் எழுத்தை நேசிப்பவர்களாக மட்டுமே இருந்தார்கள். அடிக்கடி நான் இடம் மாற ஒவ்வொரு வேலையும் இன்னொரு வேலைக்குத் தூக்கிப் போட்டது. ஒரு கதை சொல்லியான தொழிலாளியைச் சொல்லி வைத்தாற்போல் எந்த முதலாளிக்கும் பிடித்திருக்கவில்லை, நானே முதலாளியாவதற்கும் வாய்ப்பில்லாததால் மாதம் ஒரு பெரு முதலாளியைப் பார்க்க வேண்டிய பெரும்பேறு பெற்றவனானேன். என்றாலும் என் புத்தகங்களையும் காகிதங்களையும் நான் எந்த கனத்திலும் பிரிந்திருக்கவில்லை. புத்தகங்களைப் பிரிகிற கனங்களில் வாழ்வை எதிர்நோக்கின பெரும் பயம் ஒன்று அச்சுறுத்திக் கொண்டிருந்தது. ஏனெனில் எழுத்தைத் தவிர எதுவும் எனக்கு அடையாளமாய் இருந்திருக்கவில்லை. இந்த அடையாளம் வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான சிக்கல்களைத் தந்திருந்த பொழுதும் வருத்தங்களைத் தந்திருக்கவில்லை.

இதோ, சில தினங்களுக்கு முன் கொடைக்கானல் மலைகளின் பின்புறத்தில் ஏதேதோ எஸ்டேட்களில் சுற்றிவிட்டு ஊர் போன தினத்தில் ஒவ்வொரு எஸ்டேட் களின் பின்னாலும் மறைந்து கிடக்கும் ஓராயிரம் கதைகளை அம்மா சொல்லத் துவங்கியது கேட்டு வியப்பாகத்தான் இருந்தது. யார் யாரின் கதைகளையோ சொல்லிக் கொண்டிருக்கும் நான் இவள் கதையை எப்பொழுது சொல்லப் போகிறேன் என்கிற ஏக்கம் வந்தது. இரண்டு மாநிலங்களை நடந்தே பிழைப்பிற்காக கடந்திருக்கும் அவளிடம் கிடக்கின்றன ஆயிரக்கணக் கானவர்களின் கதைகள். எனக்கோ இம்மாநகரின் தூசிபடிந்த ஆச்சர்யங்களும் பிரம்மாண்டமும் அவற்றுக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் நிர்வாணங்களும் புரிந்து கொள்ள முடியாத கதைகளாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒரே சமயத்தில் இப்படி வெவ்வேறான நிலங்களின் மீதான நினைவுகளை அள்ளிக் கொண்டு வருவதில் நான் எந்த நிலத்தவன் என்கிற தவிப்பும் எந்த நிலத்தின் கதையை சொல்லப் போகிறோம் என்கிற மலைப்பும் வந்து சேர்ந்து விடுகிறது. சொல்ல நினைக்கிற எல்லாவற்றையும் சொல்லியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. ஆனால் சொல்லத் தவறுகிற காகிதங்களில் வெளிப்படப்போகும் சில தலைமுறை மனிதர்களைப் பற்றி இங்கு யார் சொல்லப் போகிறார்கள், அல்லது எப்பொழுதும் சொல்லப்படாமலே போய்விடுவார்களோ என்கிற பதட்டமும்தான் எழுதுகிற எல்லாப் படைப்பையும் முதல் படைப்பாக எண்ணச் சொல்கிறது. கரிசல் காடுகளையும், பெருநகரத் தனிமையையும் நானேதான் அனுபவிக்கிறேன் என்றால் நானே ஏன் எழுதக்கூடாது. இதுவரைக்குமான எனது எழுத்தில் நிச்சயமாக ஒன்றுமில்லை, ஏனெனில் நான் எழுதுகிறேன் என்பதை சொல்வதற்காகவே எழுதியதாகத்தான் அவற்றைப் பார்க்க முடிகிறது. அதையும் தாண்டி என் கதைகளிலும் கவிதைகளிலும் சில புதிய இடங்களைத் தொட முயற்சித்திருப்பதாக நண்பர்கள் சொல்வதும் தெரியும்தான், ஆனால் என் மாயக்கிளிகள் கொண்டு வந்து சேர்த்திருக்கும் கதைகளை இன்னும் நான் வீரியத்துடன் சொல்லத் துவங்கியிருக்க வில்லை. இப்பொழுதுதான் ÔÔகல்மண்டபமாக” ஒன்று வந்திருக்கிறது. இனி சொல்ல வேண்டியதில் நிதானம் வேண்டுகிறவனாய் இப்பொழுது இன்னும் அதிகமாக மனிதர்களை கவனிக்கத் துவங்கியுள்ளேன்... சக மனிதர்களின் வாழ்க்கை சொல்ல முடியாததையா சரித்திரங்களும் புத்தகங்களும் சொல்லிவிடப்போகின்றன. மனிதர்கள், யாராலும் வாசிக்கப்படாத புத்தகங்களாய் விரியும் அற்புதங்கள்.