குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்காக சிந்திப்பது ஒரு சடங்காகி விட்டபோதிலும், இவைகளைப் பற்றி யோசிக்கவும், மேலும் கற்றுக் கொள்ளவும், அடுத்து செயல்படவும் இந்த மாதிரியான நாட்களே காரணமாகின்றன. இந்த ஆண்டு குழந்தைகள் தின நேர்காணலுக்காக அருணா ரத்தினம் அவர்களை புத்தகம் பேசுது இதழுக்காக சந்தித்தோம். குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தலும், குழந்தை இலக்கியங்களை பற்றிய அறிதலும், இதைப் பற்றி மாற்று செயல்பாடுகளைப் பற்றி அருணா ரத்தினம் பேசும்போது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

அருணா ரத்தினம் ஒரு குக்கிராமத்தில் பிறந்து தமிழ்மொழி வழியில் கல்விக் கற்று, சுய சிந்தனையாளராக வளர்ந்து, பள்ளிக்கூட ஆசிரியராக பணியாற்றி இன்று படிப்படியாக உயர்ந்து ஐக்கிய நாடுகளின் துணை அமைப்பு ஒன்றில் பணியாற்றுகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் பணியாற்றியவர். மேலும், காஞ்ச அய்லய்யா எழுதி இவர் மொழிபெயர்த்து துளிகா வெளியீடாக வந்துள்ள ‘பானை செய்வோம் பயிர் செய்வோம்’ என்ற புத்தகம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பணியிட வாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் சுய விமர்சனத்தோடு வாழ்ந்து வரும் இவரை நேர்காணல் முடித்தவுடன் ‘உங்க படம் வேண்டும்’ என்று கேட்டபோது ‘படமெல்லாம் வேண்டாம். கருத்துதான் முக்கியம். அதனாலே குழந்தைகள் நிறைய இருக்குற மாதிரி படம் போட்டுக்குங்க’ என்றார்.

தொடர்ச்சியாக பயணங்களிலும், வேலைகளிலும் ஈடுபட்டிருக்கும் அருணா ரத்தினம் புத்தகம் பேசுது இதழுக்காக கொடுத்த நேர்காணலின் சில பகுதிகள்.......

சந்திப்பு: முத்தையா வெள்ளையன்

குழந்தைகள் இலக்கியத்தின் போக்குகள் எப்படி உள்ளது?

 குழந்தை இலக்கியத்தைப் பொறுத்தவரைக்கும் மேலைநாடுகளிலிருந்து வருகிறவையெல்லாம் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான். தமிழைப் பொறுத்தவரைக்கும் பழைய சிந்தனை மரபுகளிலிருந்து இன்னும் விடுபடவே இல்லை. அதாவது கதைகளில் கட்டாயமாக ஒரு நீதியோ அல்லது பாடமோ இருக்கணும்னு நினைக்கிறாங்க. இதனால் குழந்தைகளுக்கு மொழியின் நயத்தை தெரிந்து கொள்வதோ அல்லது சந்தோஷத்திற்காக படிப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. ஒரு பக்கம் நம்முடைய மொழி செம்மொழி என்றும் இரண்டாயிரம் வருஷம் வரலாறு கொண்டது என்றும் பேசிக்கிட்டு இருக்கோம் இன்னொரு பக்கம் மொழியின் நயம், மொழியின் உயிர்ப்பைப் புரிந்து கொள்ளாமல் படிக்கிற வழக்கம் தொடர்கிறது. பொது புத்தியில் இன்று நன்றாக பேசுபவர்கள் யாரென்று கேட்டால் விசுவின் அரட்டை அரங்கில் பேசுபவர்கள்தான் என்று சொல்றாங்க. இந்த எண்ணம்தான் இன்று ஒரு தலைமுறையை உருவாக்கியிருக்கிறது.

ரௌத்திரம் பழகுன்னு பாரதியார் எழுதினார். இந்த வார்த்தையைப் படிக்கும்போது பாரதியார் மிக கவனமாக இந்த இரண்டு வார்த்தையைப் பயன்படுத்தினார் என்பது தெரியும். இங்கு ரௌத்திரம் என்பதை வெறும் ஆத்திச்சூடிக்காக பயன்படுத்தலை. ரௌத்திரம் என்பது சிறுமை கண்டு எழுகிற கோபம். இந்தக் கோபத்தை எல்லா இடத்திலும் காட்ட முடியாது. ஆனால் இதைப் பழகிக் கொள்ள வேண்டும். தமிழ் மட்டுமே தெரிகின்ற குழந்தைகளாலும், இளைஞர்களாலும் கூட இதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம் மொழியின் வளம் மற்றும் மொழியின் உயிர்ப்பு இல்லாமல்தான் மொழி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இங்கு தமிழ் மொழியைப் பற்றி வெட்டிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறாங்க. திருக்குறளில் சில பிரச்சனைகள் இருக்கிறது என்று 21-ஆம் நூற்றாண்டில் சொன்னால் தமிழுக்கே எதிரி என்று சொல்லி விடுவாங்க. அடுத்ததாக புத்தகத்தில் படம் இருந்தால்தான் குழந்தைகள் பார்க்கிறாங்க. படிக்கிறாங்க. தொலைக்காட்சியின் ஆதிக்கம் உள்ளதால் புத்தகத்தில் உள்ள படங்கள் வண்ணங்களாக இருந்தால்தான் குழந்தைகளை கவருவதாக உள்ளது. அதேநேரம் இங்கு பதிப்பாளர்களின் நிலைமையும் மோசமாக இருக்கிறது. அவர்களால் பலவித வண்ணங்களை உபயோகித்து புத்தகம் போட முடியவில்லை. 70, 80 -களில் குழந்தைப் புத்தகங்களை பிரசுரிக்க பலவிதமான மானியங்கள் கிடைத்தன. இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் அதைப் பயன்படுத்தி புத்தகங்களை குறைந்த விலைக்கு கொண்டுவர முடியவில்லை.

பொதுவாக வாசிப்பை பொறுத்தவரைக்கும் சீரியஸாக இருக்கும் விஷயங்கள்தான் புத்தகத்தில் இருக்கணும்னு சொல்றாங்க. உதாரணமாக ஸ்வீடன் மிகப்பெரிய நாடு என்றாலும் மக்கள் தொகை குறைவு. ஆனால் வெவ்வேறு விதமான புவியியல் தன்மை கொண்டது. அதனால் வாழ்க்கை முறையும் ஒரே மாதிரி இருக்காது. வடக்கு ஸ்வீடன்காரர்கள், தெற்கு ஸ்வீடனில் வசிப்பவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள். ஏனெனில் வடக்குப் பகுதியில் குளிரும், அடர்த்தியான காடுகளும் அதிகம். தினசரி வாழ்க்கை என்பதே சவாலான விஷயம்தான். தெற்கு ஸ்வீடன் அதிகமாக வளர்ச்சிப் பெற்ற பகுதி. `எமெல்’ என்ற கதைபாத்திரம் பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டு பல்வேறு கதைகளில் ஒருவித சாகசத் தன்மையோடு வடக்கு, தெற்கு ஸ்வீடன் பிரச்சனைகளை பேசும். ஸ்வீடனில் `எமெல்’ என்று சொன்னவுடனே இரண்டு, மூன்று தலைமுறையினருக்கு இதன் உள் அர்த்தம் புரியும். இதெல்லாம் தமிழ் குழந்தை இலக்கியத்தில் கிடையாது. அங்கு என் வயதையத்த மனிதர்களும் பனிரெண்டு வயது குழந்தையுடன் `எமெலை’ வைத்து உரையாட முடியும். இந்த மாதிரித் தன்மையெல்லாம் நமக்கு இல்லை.

அமெரிக்க ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் `சூஸ்’ன்னு ஒருத்தர் தொடர்ந்து குழந்தைகளுக்காக எழுதிக் கொண்டிருந்தார். இவருடைய பதிப்பாளர் ஒவ்வொரு புத்தகம் எழுதும்போதும் முக்கியமான வார்த்தைகள் என்று ஆயிரமோ, இரண்டாயிரமோ வார்த்தைகளைக் கொடுத்துப் பயன்படுத்தச் சொல்வாராம். `சூஸ்’ஸேடா கதைகளில் ஒரு ஆரம்பம், ஒரு பிரச்சனை பிறகு ஒரு முடிவு என்றெல்லாம் இருக்காது. இவரோட கதைகள் ரொம்ப ஜாலியா இருக்கும். உதாரணமாக ஒரு கதையில் பூனை ஒரு தொப்பி போட்டிருக்கும். அந்தத் தொப்பி போட்ட பூனைக்கு சிலவகை உணவுகள் பிடிக்காது. ஆனால் பிடிக்காத உணவைதான் எல்லாரும் அந்தப் பூனைக்கு கொடுப்பாங்க. இதை எப்படி சமாளிக்கிறது என்பதுதான் கதையாக இருக்கும்.

அவருடைய புத்தகத்தின் அழகே வார்த்தைகளெல்லாம் ஒலிநயத்துடன் இருக்கும். அதை வாய்விட்டு படிக்கும்போது ஒருவிதமான இசைத் தன்மையுடன் ஏற்றம், இறக்கம் கொண்டிருக்கும். இவர் எழுதின எல்லா புத்தகங்களும் இரண்டு, மூன்று வயசு குழந்தைகளுக்கு அப்பா, அம்மா படிச்சு காட்டுகிற மாதிரி இருக்கும். மேலும் இவருடைய புத்தகங்கள் எல்லாம் ஒரே மாதிரி சைஸில் இருக்காது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதாவது அதன் உள்ளடக்கத்தை பொறுத்துதான் புத்தகத்தின் வடிவம் இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பாராம். நாற்பது ஐம்பது வருஷமாக அமெரிக்காவில் எத்தனையோ பேர் படித்து இருப்பார்கள். முன்னே பின்னே தெரியாதவர்கள் கூட இந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி நகைச்சுவையாகப் பேசி சிரித்துக் கொள்வார்கள். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இங்கு வரவே இல்லை.

மெட்ரிக்குலேசன் போன்ற ஆங்கில கல்விமுறை வந்தாலும் இதுபோன்ற நல்ல விஷயங்களை கூட அவர்கள் இறக்குமதி பண்ணவில்லை. இன்னமும் க்ஷீணீவீஸீ க்ஷீணீவீஸீ ரீஷீ ணீஷ்ணீஹ் தான் சொல்லி கொடுக்கிறாங்க. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள், ஆங்கில இலக்கியத்தில் செய்ததுதான் இன்றைக்கும் ஆங்கிலக் கல்வியில் இருக்கிறது. புதிய விஷயங்கள் வரவே இல்லை. இப்போது மும்பையில் நிறைய பேர் ஆங்கிலத்தில் எழுதுறாங்க. அதெல்லாம் இங்கே வரவில்லை. இவர்கள் எழுதறது க்ஷீணீவீஸீ க்ஷீணீவீஸீ ரீஷீ ணீஷ்ணீஹ்க் எதிராக பருவ மழை மற்றும் அதன் வாசனையைப் பற்றி எழுதியிருக்காங்க. ஆனால் தர்மபுரியில் இருக்கிற டீச்சர் க்ஷீணீவீஸீ க்ஷீணீவீஸீ ரீஷீ ணீஷ்ணீஹ் தான் சொல்லிக் கொடுக்கிறாங்க. தர்மபுரி வறட்சியான பிரதேசம் வேறு. இலக்கியம் என்றாலே கதை, கவிதை, கட்டுரை என்று இல்லாமல் க்ஷீலீஹ்னீமீs முக்கியம்னு நான் நினைக்கிறேன். இது ஆசிரியர்களுக்கே தெரிவதில்லை.

உதாரணமா சாவு பற்றி குழந்தைகளுக்கு ஒருவிதமான கவர்ச்சியும் பயமும் உண்டு. ஆனால் சாவைப் பற்றி நாம் எழுதுவதில்லை. நேற்று வரைக்கும் ஒருத்தர் பேசிக் கொண்டிருந்தார். இன்றைக்கு பேச மாட்டேங்கிறார். கை கால் ஆடமாட்டேங்கிறது. அது என்னது? என்பதைத் தெரிந்துக் கொள்ளும் ஆவல் இருக்குது. அந்த ஆவலை நல்லவிதமாகப் பயன்படுத்த முடியும். அதற்கெல்லாம் இங்கே வாய்ப்பில்லை. ஆங்கிலத்தையே ஏன் திருப்பித் திருப்பி சொல்றேன்னா நமக்கு ஆங்கிலம், தமிழ் என்ற இரண்டு மொழிகள்தான் புழக்கத்தில் இருக்குது. ஹிந்தி நாம படிக்கிறதில்லை. ஆங்கிலத்தில் மற்ற மொழியிலிருந்து வந்த மொழிபெயர்ப்புகளும், ஆங்கிலத்திலேயே எழுதக்கூடிய எழுத்துக்களும் வருகின்றன. ஆங்கிலத்திலே சாவு பற்றி எழுத்தெல்லாம் பழைய திணீவீக்ஷீஹ் tணீறீமீs-ல் வந்ததுதான். பின்னால் 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் வந்த கதைகளில் சாவை பற்றிக் குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது என்பதுதான் உள்ளது. இதற்கு பின்னால் உள்ள காரணம் சாவு பற்றிய நமக்கு இருக்கும் பயத்தை நாம் குழந்தைகளுக்கு மாற்றி விடுகிறோம். அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் சாவு என்பது சகஜமாக இருக்குது.

இங்கு ஜாதி கலவரம் நடக்குது. ஜாதிப் பெயரை சொல்லி கூப்பிடுறாங்க. இதெல்லாம் ஏன் என்று குழந்தைகள் யாரிடமும் பேச முடியாது. இந்த உண்மைச் சூழலைப் பற்றி இலக்கியமும் பொறுப்புடன் பேச வேண்டும். இலக்கியம் என்பது கற்பனை மற்றும் கற்பனையை தூண்டுவது தான். இந்த மாதிரி நிகழ்ச்சிகள் எனக்கு மட்டும் நடக்கவில்லை. எல்லாக் குழந்தைகளுக்கும் நடக்குது. என்னோட அப்பா செத்துப் போயிட்டார், அம்மா செத்துப் போயிட்டாங்க, பக்கத்து வீட்டு மாமாவை சுட்டுக் கொன்னுட்டாங்க போன்ற சூழ்நிலைகளில் வளருகின்ற குழந்தைகளுக்கு சாவு பற்றி படிக்கும் போது எனக்கு மட்டும் நிகழலை. இது மாதிரி பல இடங்களில் நடந்திருக்குன்னு தெரிஞ்சுக்குவாங்க. இந்த பிறழ்வுகளால் ஏற்படும் உணர்ச்சி கொந்தளிப்புகளுக்கு இந்தப் புத்தகங்கள் வடிகாலாக அமையும். மேலும் இந்த மாதிரி ஏற்படும் உணர்ச்சிகளை எப்படி கையாளுவது என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியும். அதே நேரம் பெற்றோர்களும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும்போது பின்னாளில் உளவியல் ரீதியாக பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. இதற்கு நாம எதுவுமே செய்யலை.

இங்குள்ள குழந்தைகளின் உளவியல் என்னவாக இருக்கிறது?

உண்மையிலே இது சிக்கலான கேள்வி. குழந்தைகள் உளவியல்ன்னு ஒன்றை ஒட்டுமொத்தமாக சொல்ல முடியாது. மனித வளர்ச்சியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பெரும்பாலும் எந்த மொழியில் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் குழந்தை பாடல்களில் சில வரிகள் திரும்பத் திரும்ப வரும். குழந்தைகளிடம் நீங்கள் கதை சொன்னால் மறுநாளும் அதே கதையை திரும்பச் சொல்லச் சொல்வார்கள். அந்தக் கதையில் நீங்கள் ஒரு வரியை மறந்துவிட்டால் குழந்தை அந்த வரியை திரும்ப கேட்கும். ஏனெனில் ஒரு குழந்தை முதலில் ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு இன்பம் அளிப்பதாக உள்ள வார்த்தைகளை கண்டுபிடித்து விடுவாங்க. அதனால்தான் திரும்பத் திரும்ப அதே கதையை அதே பாட்டைக் கேட்கிறாங்க.

குழந்தைகள் பொதுவாக ஒழுங்கு ஒன்றை இயல்பா எதிர்பார்க்கிறாங்க. குழந்தைகளுக்கு கதை சொல்லும்போது நீங்கள் மாற்றி சொல்லிவிட்டால் அந்த ஒழுங்கு கலைந்து விடும். அதனாலே கதை ஒரு ஒழுங்கில் சென்றால்தான் அந்த சந்தோஷத்தை குழந்தைகளால் உணர முடியும். எட்டு வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு ஒரே கேரக்டர் மறுபடி மறுபடி பல கதைகளில் வருகிற மாதிரி இருக்கும். உதாரணத்திற்கு சுட்டி விகடனில் வந்த மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் மாயா டீச்சர் நம்முடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாங்களா என்று ஒரு திகிலோடு படிப்பதை பார்க்க முடிந்தது. சுவீடனில் `எமில்’ என்ற வார்த்தையை பார்த்தவுடன் அந்தப் புத்தகத்தை கொடு என்று சுவீடன் குழந்தை கேட்கும். இதுபோன்ற ஆர்வத்தை தூண்டக்கூடிய குழந்தைப் புத்தகங்கள் நம்மிடமில்லை. பொதுவாக பெரியவர்கள் அசிங்கம் என்று கருதுகிற விஷயங்களில் குழந்தைகளுக்கு ஆர்வம் உண்டு. பசங்க என்ற திரைப் படத்தில் குழந்தைகள் ஒன்னுக்கு அடிக்கிறதைப் பார்த்து விழுந்து விழுந்து அனுபவித்து சிரித்தார்கள். ஏன்னா அது அவர்களை பாதித்த விஷயம்தான். ஒன்னுக்கு வந்தா அடக்கறது, எந்திரிச்சு நின்னு டீச்சர்கிட்ட கேட்கும்போது இப்ப போகாதே, அப்புறம் போன்னு சொல்றது, எங்க போறதுன்னு தவிக்கிறது இந்த விஷயங்களைப் பற்றி கதைகளோ, ஒரு நகைச்சுவை சித்திரமோ நம்மிடம் இல்லை. அப்படி எழுதி இருந்தாலும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் அசிங்க அசிங்கமா எழுதியிருக்கான்னு எழுத்தாளரை திட்டுவாங்க.

மத்தியதர வர்க்க குடும்பத்தின் அன்றாட செயல்பாடுகள் அவர்களுடைய குழந்தைகளின் பள்ளி நேர அட்டவணையைப் பொறுத்துதான் நடக்கிறது. நான் என்னுடைய உறவுக்காரர்களின் திருமணத்துக்கு போகணுமா வேண்டாமா என்பது குழந்தைக்கு பரீட்சை இருக்குதா இல்லையாங்கிறது பொறுத்துதான். என்னாலே டி.வி. யை சத்தமா வைக்கணும்னா குழந்தைக்கு வீட்டுப்பாடம் முடிஞ்ச பிறகுதான். இது குழந்தைகள் மீது உள்ள அக்கறை இல்லை. நான் ஸ்கூலுக்கு பணம் கட்டுகிறேன். அந்த ஸ்கூல் கொடுக்கிற வேலையை நன்றாக செய்யணும் என்ற காரணம்தான். உண்மையிலே அந்தப் பையன் படிப்பிலே கவனம் இருக்கணும். டி.வி. யில் பார்க்கிற ஒரு நிகழ்ச்சியை சரியா இல்லையான்னு சொல்லத் தெரியணும். இந்தச் சூழலைப் பார்க்கிற போது குழந்தை உளவியல் பற்றி பேசுறது ஒன்னும் பிரயோஜனமில்லை. பெற்றோர்களை முதலில் இதைப் பற்றி சிந்திக்க வைக்கிறதுதான் சரியா இருக்கும்.

கே: குழந்தை இலக்கிய வெளியீடுகள் எப்படி உள்ளன?

ப: கேரளாவில் எல்லா பதிப்பாளர்களும் ஏதோ ஒரு வகையில் குழந்தைகளுக்கான புத்தகத்தை வெளியிடுகிறார்கள். அங்கு அரசாங்கத்தின் சார்பில் சிலீவீறீபீக்ஷீமீஸீ’s லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ ஷிஷீநீவீமீtஹ் இருக்கிறது. ழிணீtவீஷீஸீணீறீ ஙிஷீஷீளீ ஜிக்ஷீust ஷீயீ மிஸீபீவீணீ வில் வேலை செய்தவர்களை கூட்டி வந்து இங்கு வேலைக்கு அமர்த்தி இருக்கிறார்கள். மேலும் இவர்கள் தனியார் பதிப்பகங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தும்பி என்கிற குழந்தைகளுக்கான இதழ் ஒன்று கொண்டு வருகிறார்கள். இந்த மாதிரியான ஆதரவு மிக முக்கியம். இதழ் விற்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். இதனால் ஒரு முன்னேற்றம் இருக்கிறது. நமக்கு தமிழ் வளர்ச்சிதுறை அல்லது தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களிலிருந்து குழந்தைகளின் இலக்கியத்துக்கு எந்த ஆதரவும் இல்லை. இதைப் பற்றி யோசிப்பதற்கான ஒரு தளமோ, இடமோ, வாய்ப்போ இல்லை.

கேரளா சில்ட்ரன்ஸ் லிட்ரேச்சர் சொசைட்டியால் கேரளாவின் கல்விமுறையை மாற்றுகிறார்களா என்பது வேறு விஷயம். ஆனாலும் இவர்கள் வெளியிடுகிற புத்தகத்தைக் காட்டிலும் டி.சி. புக்ஸ் வெளியிடுகிற புத்தகம் நன்றாக இருந்தால், டி.சி. புக்ஸைதான் வாங்குவார்கள். இப்படி ஒரு சுதந்திரமான முடிவை அவர்கள் எடுக்க முடியும். இங்கு உள்ள பதிப்பாளர்களுக்கு வசதியோ வாய்ப்புகளோ இல்லை. குழந்தைகள் இலக்கியத்திற்கு நிறைய யோசிக்கணும். சில முதலீடுகள் செய்யணும். அந்த முதலீடுகளை உடனே திரும்ப எடுக்க முடியாது. இந்த இடத்தில்தான் அரசின் ஆதரவு வேண்டும். இந்த முயற்சிகளைத் தமிழ் வளர்ச்சித் துறையில் செய்யலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக இதுவும் அரசு துறைகளில் உள்ள மற்ற துறைகள் மாதிரிதான் செயல்படுகிறது.

இங்கு குழந்தைகளுக்காக எழுத எல்லோரும் ஆசைபடுகிறார்கள். ஆனால் இவர்களாலும் வழக்கமான முறைகளில்தான் எழுதப்படுகிறது. குழந்தைகளுக்காக எழுதும்போது மிகவும் நிதானமாக எழுத வேண்டியிருக்கிறது. எல்லாமே வேகமா செய்யணும்னு நினைக்கிறாங்க. பதிப்பாளர் ஒரு புத்தகம் போட்டால் இரண்டு, மூன்று வருஷத்துக்கு தொடர்ந்து மார்க்கெட்டில் இருக்கணும். இப்படி இருக்க வேண்டுமென்றால் பதிப்பாளர்களிடமும், விற்பனையாளர்களிடமும் புத்தகங்களை வைத்துக் கொள்ள வசதி வேண்டும். இதற்கெல்லாம் இங்கு வழியில்லாமல் இருக்கிறோம். ஒரு புத்தகம் வந்தால் அதைப் பற்றி டி.வி. யிலோ, பத்திரிகை யிலோ வருவதில்லை. இப்படி பல தளங்களில் தடைகள்தான் அதிகமாக இருக்கு. இதற்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து கூடி பேசுறதெல்லாம் கிடையாது.

யூமா வாசுகி நிறைய மொழிபெயர்ப்பு செய்கிறார். ஆனால் அந்த மொழி பெயர்ப்புகள் படங்களுடன் வருவதில்லை. குழந்தை இலக் கியத்தில் மொழி பெயர்ப்புகளில் படங்கள் இல்லாமல் இருந்தால் குழந்தைகளால் காட்சிப்படுத்தி பார்க்க முடியாது. ஷிஸீஷீஷ் என்ற வார்த்தைக்கும் விமிஷிஜி என்ற வார்த்தைக்கும் தமிழில் ஒரே வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறோம். sஸீஷீஷ் குவிந்திருக்கிறது என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு குழந்தையால் கற்பனை செய்து கொள்ள முடியாது. இதற்கு படங்கள் தேவை. படங்களோட சில புத்தகங்கள் வருது. அதில் சில வெளியீடுகள் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் வெளியான புத்தகங்களை தமிழில் கொண்டு வருகிறார்கள். அந்த மொழிபெயர்ப்பு உயர்சாதி தன்மையில் இருக்கிறது.

சில தனியார் பதிப்பகங்கள் குழந்தைகளுக்கு புத்தகம் போடுகிறார்கள். பெரிய சைஸில் நல்ல படங்களுடன் 16, 32 பக்கங்களில் ஆங்கிலத்திலும், தமிழிலும் வருகிறது. சென்னைப் புத்தகக் காட்சிகளில் பார்க்கும்போது பெற்றோர்களே ஆங்கில புத்தகங்களை வாங்கச் சொல்லி குழந்தைகளை வற்புறுத்துகிறார்கள். இப்படி எல்லா விதத்திலும் சிக்கல் இருக்கும்போது குழந்தை இலக்கியம் தமிழில் எப்படி வளரும்னு தெரியலை.

அடுத்ததாக குழந்தைகள் புத்தகம் விற்கணுமா முதலில் பெற்றோர்களை ஒத்துக்கொள்ளச் செய்ய வேண்டியிருக்கு. நேரடியாக குழந்தைகளை அணுக முடியலை. குழந்தைகளுக்கு இந்த மாதிரியான புத்தகங்கள் இருக்கு என்று தெரியாமலே இருக்கிறது. அப்படி தெரிந்து இருக்கிற குழந்தைகள் சென்னையில்தான் இருக்கிறாங்க. இவங்களுக்கு தமிழைப் பற்றி கவலை இல்லை. இந்த தமிழ், ஆங்கில பிரிவினையால் மிகவும் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். இதனால் நீண்டகால விளைவு என்னவாக இருக்கும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது. தமிழில் சினிமா என்பது மற்ற மொழிகளைவிட பெரிய தொழிற்சாலையாக உள்ளது. என்றாலும் இங்கும் குழந்தைகளுக்கான சினிமா கிடையாது. குழந்தைகளைப் பற்றிய சினிமாதான் இங்கு உள்ளது. குழந்தைகளின் உளவியல் பற்றியோ, அவர்களின் அபிப்பிராயங்களைப் பற்றியோ விருப்பு வெறுப்பு பற்றியோ சமூக மட்டத்திலே கூட கவலைப்படுவதில்லை.

நீங்கள் பள்ளி ஆசிரியர். குழந்தைகளைப் பற்றிய உங்கள் அறிதல்கள் என்ன?

 இயல்பாகவே சென்னை பெசன்ட் நகர் பணக்கார ஏரியா. இங்க இருக்கிற ஆல்கட் ஸ்கூல் கட்டணம் ஏதுவுமில்லாத தமிழ் மீடியம் ஸ்கூல். ஆனால், அந்தப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் உயர்தர மேல்சாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சமூகசேவைத் தொண்டர்களாக, அங்கே படிப்பு சொல்லிக் கொடுப்பது ஒரு தர்ம காரியம் என்ற அடிப்படையில் இங்கு வேலை செய்தார்கள். அந்தப் பள்ளியில் குழந்தைகளுடைய வாழ்க்கைக் கும், ஆசிரியர்களின் வாழ்க்கைக் கும் வித்தியாசங்கள் இருந்தன. உதாரணத்திற்கு 1-ஆம் வகுப்பில் ஒரு டீச்சர் இருந்தாங்க. அவுங்க பாப்பாத்தி. சைவ உணவுதான் சாப்பிடுவாங்க.

ஒருநாள் வகுப்பில் சம்பங்கி என்ற வார்த்தையை சொல்லி பூ படம் வரையறாங்க. அங்க இருக்கிற நிறைய குழந்தைங்க சம்பங்கின்னா மீன் டீச்சருன்னு சொல்றாங்க. ஒரு பையன் எழுந்து வந்து மீனை படம் வரைஞ்சு காட்டுறான். டீச்சர், சம்பங்கி மீனை பொறிச்சு திங்கமுடியாது, கொழம்பு வச்சுதான் சாப்பிட முடியும்ன்னு ஒரு பொண்ணு சொல்லுது. அந்த மீனை வைச்சுக்க முடியாது. பொடியா போயிடும் டீச்சர்ன்னு இன்னொரு பொண்ணு சொல்லுது. குழந்தைகள் சம்பங்கி மீனைப் பற்றி இவ்வளவு விஷயம் சொல்றாங்க. ஆனால் அந்த டீச்சருக்கு சம்பங்கின்னா பூ என்றுதான் தெரிகிறது. மறுபடி மறுபடியும் அந்த டீச்சர் பூவைப் பற்றியே சொல்றாங்களே தவிர குழந்தைகள் சொல்கிற தகவல்களை கண்டு கொள்ளவே இல்லை. சம்பங்கி என்ற வார்த்தைக்கு இந்த மாதிரி பல்வேறு அர்த்தங்கள் உள்ளன என்பதை அங்கீகரிக்கவே மாட்டேங்கிறாங்க.

பள்ளிக்கூடங்களில் படிக்கிற குழந்தைகளுக்கு தொடர்ந்து இந்த மாதிரி சிக்கல்கள் இருந்து கொண்டே இருக்கிறது. அதாவது ஆசிரியர்கள் மொழியை வெளிப்படுத்துவதிலும் குழந்தைகளின் புரிதலுக்கும் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்குது. வர்க்கமும், ஜாதியும் எப்போதும் பிரச்சனையாக குழந்தைகளிடம் வந்து கொண்டே இருக்கும். உதாரணமாக இந்தக் குழந்தைகள் ஸ்கூல் விட்டு ரோட்டை கிராஸ் பண்ணுவதற்கு பையெல்லாம் தூக்கிக்கிட்டு நிற்கும் போது அந்த நேரத்தில் நிறைய கார்கள் பக்கத்தில் இருக்கும் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்கிற குழந்தைகளை கூட்டிக்கொண்டு வர செல்லும். இந்த கார் சும்மாதானே போகுது. எங்களை ஏன் ஏத்திக்க மாட்டாங்கிறாங்க டீச்சர்ன்னு கேப்பாங்க.

இன்னொன்று இந்த ஸ்கூலில் மொழி பிரச்சனையாக உள்ளது. அந்த குழந்தைகளுக்குக் மெட்ராஸ் பாஷைதான் பேசுவார்கள். 1-ஆம் கிளாஸ் படிக்கும் பையன் டிபன் பாக்ஸை எடுத்து வந்து டீச்சர் மீனு கொண்டு வந்திருக்கேன், துண்றீங்களான்னு ஆசையாக கேட்பான். உடனே டீச்சர் துண்றீங்களான்னு கேக்கக் கூடாது சாப்பிடுறீங்களான்னு கேக்கணும்னு சொல்வாங்க. அந்தக் குழந்தைக்கு ஐந்து வருஷமா தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா போன்றவர்களிடம் பேசிய மொழியில் ஆசையோடு டீச்சரிடம் கேட்கும்போது, அப்படியெல்லாம் கேட்கக் கூடாதுன்னு சொன்னவுடன் அதற்குப் பிறகு வாயே திறக்க மாட்டாங்க. உண்மையிலே அந்த டீச்சர் இப்படி சொல்லாவிட்டாலும் கூட இரண்டாம் வகுப்பு படிக்கும் போது சாப்பிடுறீங்களான்னுதான் அந்தக் குழந்தைக் கேட்கும். ஏனெனில் குழந்தைகள் தொடர்ந்து கற்றுக் கொண்டு இருக்கிறாங்க. இந்த விஷயத்தை வீட்டில் தாத்தா பாட்டியிடம் பேசுகிற மாதிரி டீச்சரிடமோ அல்லது வேறு ஒரு ஆண்ட்டியிடமோ பேசக்கூடாது என்று தெரியும் (ஷிஷீநீவீணீறீ மிஸீtமீறீமீவீரீமீஸீநீமீ). அதை உண்டாக்குறேன் என்று சொல்லிவிட்டு குழந்தைகளின் வெளிப்படுத்தும் ஆர்வத்தை அழிக்கிறாங்க. இதனால் கேள்வி கேட்பது, தெரிஞ்ச விஷயங்களை பகிர்ந்து கொள்வது, ஆசிரியர்களோடு உரையாடுவது போன்றவைகள் நடக்காமல் போய்விடுகிறது.

அடுத்ததாக ஒரு நம்பகமற்ற தன்மையும் உருவாகிறது. அதாவது பள்ளிக்கூடத்தில் நடக்கிற விஷயத்திற்கும், நிஜ வாழ்க்கையில் நடக்கிற விஷயத்திற்கும் சம்பந்தமில்லை என்று குழந்தைகள் உணருவதை காணமுடியும். அதை இந்தத் தொனியில், இதே மொழியில் சொல்லமாட்டார்கள். அவர்களிடம் நீங்கள் தொடர்ந்து உரையாடினால் இதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த இடைவெளியை நிரப்ப இலக்கியம் பயன்படும். ஆனால் இதற்கு வழியில்லாமல் இருக்கும்போது உணர்வுரீதியாகவும், அறிவுரீதியாகவும் ஒரு இசைவின்மை குழந்தைகளிடம் தொடர்கிறது.

ஏன் மார்க் குறைவா இருக்கேன்னு சாதாரணமா கேட்டாலே குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது அல்லது அதற்கு முயற்சி செய்வது இதனால்தான். நகரமயமாக்கலின் விளைவுகள் புறநகர் பகுதிகளை அதிகமாக பாதிக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் கிராமத்தில் உள்ள நன்மைகளும், நகரத்திற்கு உள்ள வசதிகளும் இல்லை. மேலும் மனித தன்மையே இல்லாத நெருக்கடிகளும் இருக்கிறது. குழந்தைகளுக்கு அடையாளம் என்பது பிரச்சனையாகவே உள்ளது. கலை என்கிற நயமான பகுதி அவர்களுடைய வாழ்வில் இல்லாமலே போகிறது. நடுத்தரவர்க்க குழந்தைகளின் நிலமையும் மோசம். நான் கிராமத்திலேதான் படித்தேன். பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மாலை ஆறு மணிக்குள்ளே கிராமத்திலே பெண் குழந்தையாக இருந்தாக்கூட எங்கு வேண்டுமானாலும் சுற்றலாம். அக்கிரஹாரத்தில் இருக்கிற குழந்தையும் சேரியில இருக்கிற குழந்தையும் சேர்ந்து வாய்க்கால் கரையில் அல்லது சீசனுக்கு தகுந்தமாதிரி விளையாடுவோம். இப்போ அந்த மாதிரி விளையாட்டுக்கள் இல்லை. நம்மை சுற்றி என்ன இருக்கு? ஊரில் என்ன அமைப்பு இருக்கு? என்று எதுவுமே இப்போது உள்ள குழந்தைகளுக்குத் தெரியாது. மெட்ரிக்குலேசன் குழந்தைகள் நிலை இன்னும் மோசம். பேருந்தில் சென்று வருவதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. வீட்டுக்கு வந்தவுடனே வீட்டுப் பாடம் செய்யணும். எங்க தலைமுறையில இருந்த மாதிரி நெருக்கமான தொடர்புகள்கூட இவர்களுக்கு இல்லை.

கே: பள்ளியில் கற்றல் முறை என்னவாக இருக்கிறது?

ப: ஆரம்ப பள்ளியை தமிழ் வழியில் கற்று, கல்லூரியில் ஆங்கில வழியில் கற்றவர்களில் நாங்கதான். கடைசி தலைமுறையாக இருக்கும். எங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் ஆங்கிலம் அல்லது தமிழ் என்று தனித்தனியாக இருக்கிறாங்க. எங்களைப் போன்றவர்களால் தமிழையும், ஆங்கிலத்தையும் அனுபவிக்க முடிகிறது. எங்களுக்கு குழந்தைகள் இலக்கியம் என்று இல்லாவிட்டாலும் கூட தமிழ் நன்றாக சொல்லிக் கொடுத்தார்கள். அப்போ டி.வி. கிடையாது. கதைகளை கேட்டோம். பேசினோம். நிறைய பத்திரிகைகள் படித்தோம். இதனால் தமிழ் எங்களுக்கு நல்ல அடித்தளமாக இருந்ததால் ஆங்கிலத்திற்கு மாற முடிந்தது. பள்ளிக்கூடத்தில் படிக்கிற தமிழ் இறுக்கமாக இருக்கு. வெளியே பேசுகிற தமிழ் குடும்பத்தில் புழங்குகிற மொழி எல்லாம் வேறு ஒன்றாக இருக்கிறது. இதனால் இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரியும் என்கிற நம்பிக்கை குழந்தைகளுக்கு வரவில்லை. இந்த நம்பிக்கை வராதபோது சமூகத்தில் அந்தக் குழந்தை எப்படி ஓர் அங்கமாக இருக்க முடியும்? சுய நம்பிக்கை உள்ளவர்களின் தேடலை பள்ளி பூர்த்தி செய்யாததால் வெளியில் தேட ஆரம்பிக்கிறார்கள். பள்ளிக்கல்வி மற்றும் உரிமைகள் என்று பேசினாலும் அதனுடைய மறுபக்கமாக பள்ளிக்கூடங்களால் வரும் சேதாரங்களை யோசிக்காமலே இருக்கோம். மரபுரீதியான பள்ளிகளை எப்படி மாற்றணும்னு யோசனை கூட சமூகத்தில் இல்லை.

இப்போது அரசு பள்ளிகளில் கிஙிலி-ன்னு ஒரு திட்டத்தை அமல்படுத்தினாங்க. இதற்கு எதிர்ப்பு வந்தபோதுதான், இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தத் திட்டத்தின்படி பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு ஒரு ஒழுங்கில்லாமல் இருக்கிறது. அவர்கள் பாட்டுக்கு கத்திக்கொண்டே இருக்கிறார்கள். அனுமதி பெறாமலே கழிப்பறைக்கு போகிறார்கள். டீச்சர் இதை முடிச்சிட்டேன், அதை பாருங்க, இதைப் பாருங்க என்று சொல்றாங்க. நாங்க வருகிறபோது எழுந்து நிற்பது இல்லை. அவர்கள் ஏதோ ஒரு வேலையில் மும்முரமாக இருக்காங்க - என்று ஆசிரியர்களின் குற்றசாட்டாக இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை ஆழ்ந்து யோசித்தால் பெரியவர்களின் மனக்குறைதான் தெரிகிறது. இந்தக் கல்விமுறை குழந்தைகளின் இயல்புகளோடு பொருந்திப் போகிறது என்ற சிறப்பை இந்த ஆசிரியர்கள் கவனிப்பதே கிடையாது. மேலும் இந்தக் குற்றச்சாட்டு அதிகாரத்தின் தேடலாகத்தான் இருக்கிறது. குழந்தைகள் விரும்பும் பள்ளி எது? சமுதாய அளவில் நல்ல பள்ளி எது? குழந்தையை ஆதரிக்கும் பள்ளி எது? என்பது பற்றியெல்லாம் சிந்தனைகள் இல்லை. பெற்றோர்களிடம் பொதுவாக நல்ல பள்ளி எது என்று கேட்டால் ஏதாவது ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளிகளைத்தான் சொல்வாங்க. அரசு பள்ளிகளை சொல்லுதே இல்லை. ஆனால் அரசு பள்ளிகளில் தொடர்ந்து ஏதோ ஒரு சலனம் இருந்து கொண்டே இருக்கிறது. அந்தச் சலனம் ஆசிரியர்களிடமும், அமைப்பு முறைகளிலும் இருக்கிறது. அந்தச் சலனம் அரசு துறையிலிருந்து சமுதாயத்திற்கு வரவேயில்லை.

அரசு பள்ளிகளில் டீச்சர் வருவதே இல்லை என்பது மாதிரி மொன்னைத்தனமான விஷயங்கள்தான் சொல்றாங்க. அரசின் ஆரம்ப பள்ளிகளில் மட்டும் கிட்டதட்ட இரண்டு லட்சம் ஆசிரியர்கள் இருக்கிறாங்க. இந்த இரண்டு லட்சம் ஆசிரியர்களில் இரண்டாயிரம் பேர் வராமல் இருந்திருக்கலாம். அரசுப்பள்ளிக் குழந்தைங்க சட்டை பட்டனைக்கூட சரியாக போடமாட்டேங்கிறாங்கனு பெற்றோர்கள் சொல்றாங்க. இதே பெற்றோர்கள் மெட்ரிக்குலேசனுக்கு குழந்தைகளை அனுப்பினால் அதே சட்டைக்கு பட்டனை தைத்துதான் அனுப்புவாங்க. இது பெற்றோர்களின் வேலைதானே தவிர ஆசிரியர்கள் வேலை அல்ல. பெற்றோர்கள் எல்லா வேலையையும் செய்து விட்டு, அதனுடைய பலனை பள்ளிக்கு கொடுத்து விடுவாங்க. அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் எவ்வளவோ வேலை செய்தாலும் பெற்றோர்களின் வேலையையும் ஆசிரியர்களே செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறாங்க. குழந்தைகளுக்காக செய்யணும் என்கிற பொறுப்பும் பெற்றோர்களுக்கு இல்லை. சமுதாய அளவில் இவ்வகை மழுங்கின சிந்தனைகள் இருக்கும்போது இயல்பாகவே குழந்தைகள் இலக்கியம், கலைகள் எல்லாவற்றையும் பாதிக்கிறது.

இரவுப் பள்ளிகளில் நீங்கள் வேலை செய்தது உண்டா?

இல்லை. நான் வேலை செய்யவில்லை. இரவுப் பள்ளியின் கருத்தாக்கம் உண்மையிலே பிரச்சனை யானது. மாலை நேரங்களில் டியூஷன் என்ற ஒன்று வசதியான குழந்தைகளுக்கு இருக்கிறது. வசதியில்லாத குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. அதனாலே மக்கள் கல்வி இயக்கம் என்ற பெயரில் இரவுப் பள்ளிகளுக்கு மாற்றாக செய்தோம். அதற்காக பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியரின் அனுமதியோடு பள்ளி வளாகத்தில், அந்த ஊரில் படித்த இளைஞர்களை சேவை மனப்பான்மை முறையில் பாடல்கள், கதைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் பாடங்களைத் திரும்ப கற்பித்தார்கள். பள்ளிகளில் பாடம் மட்டுமே சொல்லிக் கொடுப்பது என்பது இன்று வழக்கமாகிவிட்டது. விளையாட்டு, பாடல், நடனம் ஆகிய எல்லாம் செய்வதில்லை. இதனால் சில நன்மைகளும் நடக்காமல் இருந்தது.

இன்னொரு பக்கம் பள்ளிக்கூடம் என்பது மக்களிடமிருந்து அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது பள்ளிக்கூடத்தைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் வந்துவிட்டது. ஆசிரியர்கள் அரசாங்க ஊழியர்களாகி விட்டனர். ஒரு ஊரின் அமைப்பு தெரியாமலே அந்த ஊரின் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்ற முடியும். அந்த ஆசிரியரிடம் படிக்கும் குழந்தைகளின் வீடு தெரியாமல்கூட இருக்கலாம். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நேராக பள்ளிக்கூடம் சென்று வேலை நேரம் முடிந்தவுடன் பேருந்தில் திரும்பி விடலாம். இப்படியான சூழல்தான் இன்று நிலவுகிறது.

சனி, ஞாயிறு போன்ற லீவு நாட்களில் பள்ளிக்கூடத்திலே காது குத்துறாங்கன்னு ஆசிரியர்கள் திட்டுறாங்க. பல கிராமங்களில் பள்ளிக்கூடம்தான் கான்கிரீட் கட்டிடமாக இருக்கும். அந்த ஊர் மக்களுக்கு, இது நம்ம பள்ளிக்கூடம், நம்ம பசங்க படிக்கிற பள்ளிக்கூடம்னு ஒரு உணர்வு இருந்துச்சு. இதே பள்ளிக்கூடத்துக்கு காம்பவுண்ட் சுவர் கட்டி ஒரு நிறுவனமாக மாற்றியவுடன் அந்த நெருக்கம் உடைந்துவிட்டது. அந்த நெருக்கத்தை திரும்ப உருவாக்க மாலை நாலு மணிக்கு மேலே பள்ளிக்கூடத்தைப் பூட்டக்கூடாது. குழந்தைகளுக்குத் தேவைப்படுகிற நேரத்தில் பள்ளிக்கூடம் திறந்திருக்கணும் என்று நினைத்தோம். அறிவியல் இயக்கத்தின் சார்பில் பல அறிவியல் செயல்பாடுகளும் நடத்தினோம். பள்ளி கல்வித்துறைக்கு இதில் பெரிய ஆர்வம் இல்லை என்றாலும் எங்களைத் தடுக்கவில்லை. அதே நேரம் பள்ளிக்கு எதுவும் சேதாரம் நடக்காம நடந்துக்கங்கன்னு சொன்னாங்க. பள்ளிக்கூட சாவியை அந்த ஊர் இளைஞர்கள் வைச்சுருப்பாங்க. ஒன்பது மணிக்கு மேலே ஏதாவது மோசமான செயல்கள் நடந்தால் என்ன செய்வது என்று ஆசிரியர்களுக்கு ஒரு பயம் இருந்துச்சு. இன்றைக்கும் ஒருசில இடங்களில் இது மாதிரி சம்பவங்கள் நடக்கிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு இன்னமும் ஆசிரியர்கள் மத்தியிலும், பள்ளி கல்வி இயக்கத்திற்கும் மரியாதை இருப்பதால் ஓரளவுக்கு ஒத்துழைப்பு கிடைத்தது. இது நன்றாக நடந்துச் கொண்டிருந்த நேரத்தில் நான் அங்கிருந்து வந்து விட்டேன். இதை ஒரு பெரிய இயக்கமாக கொண்டு போவதில் சில தடைகள் இருக்கிறது. இது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மட்டுமே செய்கிற வேலை இல்லை. இந்த அனுபவம் எனக்கு மிக முக்கியமானது. கிராம பள்ளிகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் ஒரு தாழ்வு மனப்பான்மையில் இருப்பதை தெரிந்து கொண்டோம். கிராமப் பள்ளிகளில் நகர பள்ளிகள் மாதிரி வசதி வாய்ப்புகள் கிடையாது. இதனால் ஏற்படுகிற இயலாமையை எளிமையாக உடைக்க முடியும். ஆனால் பெரும்பாலும் கிராம பள்ளி ஆசிரியர்களுக்கு பஞ்சாயத்து அலுவலகமே தெரியாது. அந்த ஆசிரியர்கள் பக்கத்து பெரிய ஊரில்தான் இருப்பார்கள். ஏனெனில் அவர்களுடைய குழந்தை மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்க வேண்டும். அந்த ஊரிலிருந்து அலுவலகம் செல்வது மாதிரிதான் பள்ளிக்கூடம் போவார்கள். ஜிமீணீநீலீவீஸீரீ வீs ஸீஷீt ணீ ழீஷீதீ வீs ணீ ஸ்ஷீநீணீtவீஷீஸீணீறீ-ன்னு ஆங்கிலத்தில் ஒரு பழமொழியே இருக்குது.

ஆசிரியர் தொழில் வேலையை மீறி ஓர் அர்ப்பணிப்பு தேவைப்படுகிற தொழில். நீங்க ஒரு ஆசிரியர் என்றால் வீட்டுக்கு வந்தாலும் அந்த தன்மை மாறாது. இருபத்தி நான்கு மணிநேரமும் அதே மனப்பான்மையோடுதான் இருப்பாங்க. இப்போது அப்படியெல்லாம் இல்லை. நான் பள்ளியில் படிக்கும்போது எங்க ஆசிரியரிடம் பஞ்சாயத்து தலைவர் வந்து ஒரு கடிதத்தை கொடுத்து படித்துக் காண்பிக்கச் சொல்லுவாங்க. ஊரில் யாருக்காவது கடிதம் வந்தால் அவர்கள் உடனே பள்ளிக்கூடத்திற்கு வந்து ஆசிரியரிடம் கேட்டுச் செல்வாங்க. இப்பொழுது இந்த வேலையெல்லாம் ஆசிரியர்களுக்கு இல்லை. முன்பை விட சம்பளம் அதிகமாக இருந்தாலும் 9 tஷீ 5 வேலைமாதிரிதான் இன்று ஆசிரியர்கள் பார்க்கிறார்கள். இதனால் வேலையில் ஒரு திருப்தி இல்லாமலே இருக்கிறாங்க. அர்ப்பணிப்பு என்பதை எல்லாரும் பழைய விஷயமாக பார்க்கிறாங்க. உண்மையில் என்னைப் பொறுத்தவரைக்கும் அர்ப்பணிப்புதான் வேலையில் திருப்தியை கொடுக்குது. இந்தச் சூழலில்தான் குழந்தைகளுக்கும் நெருடல் ஏற்படுகிறது. கிராமத்தில் ஏணி தோணி வாத்தியார்ன்னு ஒரு சொலவடை உண்டு. இது அவமானமான சொல் இல்லை. எத்தனை குழந்தைகளை ஏற்றி விட்ட ஏணி என்றுதான் நாம் பார்க்க வேண்டும்.

குழந்தைகளிடம் ஆசிரியர் ஏற்ற பாத்திரத்தின் பங்கு என்ன?

 ஆல்காட் பள்ளியில் என்னிடம் படித்த மாணவன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்துவிட்டு எங்கே டீச்சர் போகணும், கொண்டு விடுறேன்னு கேட்டான். இந்த அக்டோபர் 2-ஆம் தேதி அன்று நான்கு ஐந்து பசங்க என் வீட்டுக்கு வந்து நாள் முழுவதும் என் கூட இருந்தாங்க. இதெல்லாம் ஏன் நடக்குதுன்னா ஆசிரியர் நடந்து கொள்ளுகிற முறைதான்.

அந்தப் பள்ளிக்கூடத்தில் நான் வேலை செய்து ஆறு ஏழு வருஷமாச்சு. எனக்கு இந்த மாதிரி அறிவு வந்ததெல்லாம் இந்தப் பள்ளிக்கூடத்திற்குப் போன பின்புதான். இந்த தொழில் உள்ள சமூக முக்கியத்துவத்தை பி.எட்., எம்.எட்., படிப்பதினால் மட்டுமே உணரமுடியாது.

என்னைப் பார்த்து நீங்க பிராமினா டீச்சர்? ஏன் பாப்பாத்தி மாறி நடந்துக்க மாட்டேங்குறீங்க? நகையெல்லாம் போட மாட்டீங்களா? ஒரு செயின் கூடவாப் போடக்கூடாது என்று அந்தக் குழந்தைகள் கேட்கும் போது அதிகப் பிரசிங்கின்னு நாம் நினைக்கக்கூடாது. இயல்பாகவே உள்ள இந்த சந்தேகத்தை நிராகரித்தால் அவர்களோடு உரையாடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும். அந்த உரையாடல்தான் பின்னாளில் முக்கியமானவைகளாகவும் அவர்கள் யோசிப்பதற்கும் உதவும்.

அந்த ஸ்கூல்ல படிக்கிற பசங்க நிறையபேர் ஸ்கூல் முடிச்சு வேலை செய்றவங்க. கார் கழுவும்போது பார்ப்பனர்களாக இருந்தால் கார் சாவியை தொட்டுக் கொடுக்காமல் தூக்கிப் போடுவாங்க. அவர்கள் பயன்படுத்துகிற பக்கெட், துணிகளை வீட்டின் ஓரமாக வைக்கச் சொல்வாங்க. வீட்டுக்குள் விட மாட்டாங்க. இது ஏன் டீச்சர்னு கேட்பாங்க. பார்ப்பனர்கள் எல்லாருமே பணக்காரங்களாக இருக்கிறாங்க. அப்போ எங்களுக்கும் அவுங்களுக்கும் ஏதோ வித்தியாசம் இருக்கு. அந்த வித்தியாசம் உடல் ரீதியானதா, மூளை ரீதியானதா அல்லது வேறு எதுவுமா? போன்ற கேள்விகள் அவர்களுக்கு தோன்றிக் கொண்டே இருப்பதை உணர முடிந்தது.

அன்றைக்கும் இன்றைக்கும் பெண்கல்வி எப்படி உள்ளது?

பெண் கல்விக்கு அதிகம் உதவி செய்தது பள்ளிக்கூடங்கள் அல்ல. பெண்களுக்கு சைக்கிள் கொடுத்ததுதான் முக்கிய காரணம். பெரியார் இறப்பதற்கு ஒரு வருடம் முன்னால் அவரும் கி. வீரமணியும் ஈரோடு பக்கத்தில் காரில் பயணம் செய்தார்களாம். அப்போது சாலை ஓரத்தில் பஞ்சு மில்லுக்கு வேலைக்கு போகிற பெண் தொழிலாளிகள் சைக்கிளில் போய்க்கொண்டு இருந்தார்களாம். இதைப் பார்த்த பெரியார் வீரமணியிடம், இதைப்பாரு இது என்னோட வாழ்க்கையின் சாதனை. திராவிடர் கழகம் ஆரம்பிச்ச புதுசுல பெண்களுக்கு சைக்கிள் கற்றுக் கொடுப்பதை ஓர் இயக்கமாக செய்தோம். இந்த பெண்களுக்கான சைக்கிளை தயார் பண்ணியதே எங்களாலதான். நீ என்னோட வயசுலே, என்னோட நிலமையிலே இருக்கும்போது, இந்த மாதிரி ஏதாவது செய்து காட்டமுடியுமான்னு யோசிச்சுக்கன்னு சொன்னாராம்.

வரலாற்று ரீதியாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெண்கள் பொருளாதார ரீதியாக நன்றாக இருக்கிறாங்க. பெண் குழந்தைகள் படிக்கும்போது இடையில் நிறுத்துவது, வயசுக்கு வந்தவுடனே நிறுத்துவது என்பதெல்லாம் இந்தப் பகுதியில் மிகக் குறைவு. உயர்நிலைப்பள்ளி ஊரிலிருந்து தொலைவில் இருந்தால் தினசரி போய் வருவது மிக சிரமம். சாலை வசதி, சைக்கிள், பஸ்பாஸ் போன்றவைகளை அரசாங்கம் கொடுக்க ஆரம்பித்தபோதே பெண்களுக்கான பெரும்பாலானத் தடைகள் நீங்கிவிட்டது. இன்றைக்கும் ஒரு சில ஜாதிகளில் பொண்ணு வயசுக்கு வந்துட்டா பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்துறதும் இருக்குது. பெண் ஆசிரியர்கள், கிராம செவிலியர்கள், அரசு அலுவலகங்களில் நிறைய பெண்கள், பெண் போலீஸ் என்று வர ஆரம்பித்தவுடனே ஒரு ரோல்மாடல் பெண் குழந்தைகளுக்கு கிடைத்தது. இந்த மறைமுக உந்துதல் பெண்கள் கல்வி கற்பதற்கு உதவி புரிந்தது.

பெண் கல்விக்கு பொறுப்பு கல்விதுறைதான்னு நினைக்கிறோம். உண்மையிலேயே விளிம்புநிலை சமூகத்தினருக்குக் கல்வித்துறை மட்டுமே பொறுப்பு எடுக்க முடியாது. தலித் மாணவர்களுக்கோ பழங்குடி மாணவர்களுக்கோ கல்வி என்பது இன்னமும் தடையாகத்தான் இருக்குது. இவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்குது. அரசாங்கம்தான் எல்லாமே செய்யுதே என்று நாம் ஒதுங்குகிறோம்.

சமூக ரீதியாக இதில் பொறுப்பில்லாம இருக்கிறதால பெரிய முன்னேற்றம் இல்லாமல்தான் இருக்குது. சாதாரணமாக பத்தாம் வகுப்பு வரைக்கும் இட ஒதுக்கீடு எல்லாம் இல்லை. எல்லாருக்கும் ஒரே மாதிரியான கல்விதான் இருக்குது. அவர்களுக்கென்று தனி கவனிப்பெல்லாம் இல்லையே. பிராமண குழந்தைகளுக்கு சமூகத்திலும், குடும்பத்திலும் இருக்கும் சலுகைகள் தலித் மற்றும் பழங்குடி குழந்தைகளுக்கு இல்ல. +1ல் முதல் குரூப்பில் சேருவதில் தலித் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று சமீபத்தில் வந்த புள்ளி விபரம் சொல்கிறது. இதற்கு முன் பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்கும் போது குழந்தைகளுக்கு தெளிவு இல்லை. பஞ்சாயத்து பள்ளிக்கூட ஆசிரியர்களை பொறுத்தவரைக்கும் அவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு இருக்கேன்னு சொல்கிறாங்க. குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் கவனமாக படிக்கிறாங்களா? ஸ்கூலுக்கு போகலைன்னா வேலைக்கு அனுப்பிடுவாங்க அல்லது நண்பர்களை பார்க்கலாம் என்ற ஏதாவது காரணங்களைத் தவிர, அவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய கனவு இருக்காது. ஆனால் அவர்களின் கனவை ஜெயிக்க உந்துதல் தேவை என்பது ஆண் கல்விக்கும், பெண் கல்விக்கும் பொருந்தும்.

பெண்கள் மட்டுமில்லை. அதிகாரம் இல்லாத எந்த பிரிவினருக்கும் உந்துதல் தேவை. உதாரணமாக நான் படிக்கும் போது, ‘அருணா பொண்ணு நல்லா படிச்சு கலக்டராகணும்னு’ ஒருத்தர் சொல்வார். நம்ம ஊர்ல ஆஸ்பத்திரி இல்லை. நீ படிச்சு டாக்டராகி எங்களுக்கெல்லாம் வைத்தியம் பார்க்கணும்னு ஒரு அம்மா சொன்னாங்க. இதை என்னிடம் சொன்ன அதே அம்மா அவுங்க பேத்திகிட்ட சொல்ல மாட்டாங்க. ஏன்னா இது ஐயர் வீட்டு பொண்ணு. மணியக்காரர் பொண்ணு. மணியக்காரர் படிக்க வைக்கிறாரோ இல்லையோ இந்தப் பொண்ணு படிச்சிடும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. எங்கப்பா எங்களோட படிப்பை நிறுத்தி இருந்தாகூட ‘என்ன இது பொண்ணு படிப்பை நிறுத்திட்டீங்களான்னு’ ஊர்ல எல்லாரும் கேப்பாங்க. ஒரு சமூக நிர்ப்பந்தத்திற்காக அன்று படிக்க வைச்சாங்க. அதே சமூக நிர்ப்பந்தம் இன்றைக்கு இருக்கும் குழந்தைகளுக்கு இல்லை. இதுதான் குழந்தைகளுக்கு மிகவும் சிரமமான சூழலாக இருக்குது. பெரும்பாலும் உந்துதல் என்பது பள்ளியில் இல்லை. பள்ளிக்கு செல்வதற்கும், படிப்பதற்கும் சமூக உந்துதல் கண்டிப்பாக தேவை.

கற்பித்தலைப் பற்றி உங்கள் அறிதல் என்ன?

 கற்பித்தல் என்பது பள்ளிகளில் மட்டும் இல்லை. குழந்தைகள் தங்கள் இயல்போடு கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் குழந்தைகள் பள்ளிக்கு போகவில்லை என்றாலும் எப்படி வேண்டுமானாலும் கற்றுக் கொள்வாங்க. பள்ளிக்கூடம் செல்வதால் உள்ள சாதகமான விஷயம் என்பது நான் கற்றுக் கொள்கிற விஷயங்களை அறிவுப்பூர்வமாக எனக்கு பயன்படுகிற விதத்தில் ஆக்கப்பூர்வமாக கட்டமைச்சுக்கணும் என்பதுதான் பள்ளியின் வேலை. கிராமங்களில் இருக்கும் நிறைய பசங்களுக்கு வீட்டில் கனெக்ஷன் இல்லை என்றாலும் கரண்ட் இழுக்கத் தெரியும். கேபிள்காரனுக்குத் தெரியாமல் கேபிள் இழுக்கவும் தெரியும். ஆனால் அந்த கனெக்ஷன் நிரந்தரமாக இருக்காது. இந்த மாதிரி விஷயங்களில் உள்ள அறிவியலை பள்ளிக்கூடம் சொல்லிக் கொடுக்கணும்.

எந்த புது விஷயமாக இருந்தாலும் நான் எப்படி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை பள்ளிக்கூடம் சொல்லித்தர வேண்டும். நேரு இந்தியாவின் பிரதமராக இருந்தார் என்று கரடுதட்டிப் போன மாதிரி சொல்லிக் கொடுக்கிறதை விட்டுட்டு யாரெல்லாம் இந்திய பிரதமர்களாக இருந்தார்கள். அவர்களில் சிறந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க சொல்லிக் கொடுப்பதுதான் பள்ளிக்கூடத்தின் வேலை. கடந்த பத்து வருடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப, பொருளாதார மாற்றங்களால் பல புதிய வேலைகள் உருவாகியுள்ளன. இந்தச் சூழலில் வேலைக்காக கல்வியை எப்படி கொடுக்க முடியும்? ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது இல்லாத வேலை பத்தாம் வகுப்பு முடிக்கும் போது வரும் வேலையை வைத்து ஒரு கல்வியாளர் வேலைக்கான கல்வியைக் கொடுக்க முடியாது.

அப்படியானால் என்ன கல்வி கொடுக்க முடியும் என்றால் பொதுவாக நாங்கள் எப்படி கற்றுக் கொள்ள வேண்டும் (லிமீணீக்ஷீஸீவீஸீரீ tஷீ லிமீணீக்ஷீஸீ). இந்த மாதிரியான சூழலில் நான் எப்படி வாழ வேண்டும்? எனக்கும் அடுத்த நிலத்துக்காரனுக்கும் சண்டை வந்தால் நிலத்தை எப்படி அளக்கணும். எங்கே போய் சர்வே நம்பர் எடுக்கணும்னு தெரிஞ்சிக்கணும். கம்யூட்டர் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் கம்யூட்டர் கருவியைப் பற்றிதான் கற்றுக்கொள்ள வேண்டுமேயழிய, மைக்ரோசாப்ட்டை எப்படி பயன்படுத்துவது என்று கற்றுக்கொள்ளக் கூடாது. நாம் எப்போது நன்றாக கற்றுக் கொள்கிறோம் என்றால் நம்மை விட பெரியவர்களிடமும் விஷயம் தெரிஞ்சவர்களிடமும் மிஸீயீஷீக்ஷீனீணீறீ ஆக கற்றுக் கொள்கிறோம். இந்த மாதிரிதான் சைக்கிளும், நீச்சலும் கற்றுக் கொள்கிறோம். இதுதான் நிலைத்து நிற்கும். தாய் மொழியை இப்படித்தான் கற்றுக் கொள்கிறோம்.

ஒரு குழந்தை பள்ளிக்கூடம் போவதற்கு முன்பாகவே நாளைக்கு அப்பா வருவாரா? என்று கேட்கிறது. நாளை என்பது எதிர்கால வினையாகும். நாளை என்பது பெரிய அரூபமான கருத்து. இதைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறது. இப்போது ழிசிதி- ஐ எடுத்துக்கிட்டால் இதனுடைய ழிணீtவீஷீஸீணீறீ நீuக்ஷீவீநீuறீனீத்தில் இயல்பான கல்விதான் நல்ல கல்வின்னு சொல்றாங்க. இந்தக் கல்விதான் நீடித்து நிற்கக்கூடியது. ருஷ்ய உளவியலாளர் வைகாட்ஸி என்பவர் சொல்லும்போது, நம்மைவிட விஷயம் தெரிந்தவர்களோடு சேர்ந்து கற்றுக்கொள்ளும் போது நம்முடைய கற்றல் நீடித்து ஆழமாக பதியும். அதனால் பள்ளிச்சூழல் இப்படித்தான் அமையணும் என்கிறார். கிஙிலி திட்டத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு வரைக்கும் ஒரு வகுப்பறையில் இருப்பார்கள். நான்காம் வகுப்பு படிக்கும் பையன் ஒன்றாம் வகுப்பு பையனுக்கு சொல்லிக் கொடுப்பான். அடுத்தவங் களுக்கு சொல்லி கொடுக்கும் போது கற்றல் இன்னும் தெளிவாகும் என்பதுதான் இதன் சாராம்சம். இது புரியாமல் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று தனித்தனியாக வைப்பது ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வியாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு இயல்பான கல்வி இல்லை. முப்பது பேருக்கு ஒரே வகுப்பில் சொல்லிக் கொடுப்பதைவிட ஐந்து நபர்கள் கொண்ட குழுவாக படிப்பதும் உரையாடுவதும் ஆழமாகவும் விரிவாகவும் இருக்கும். இந்தக் குழுமுறை தொடரக்கூடாது. அப்படி தொடர்ந்தால் தலைவன், தொண்டன் என்ற அமைப்பு உருவாகிவிடும்.

ஒவ்வொரு செயல்பாடுகளுக்குத் தகுந்த மாதிரி குழு உறுப்பினர்கள் மாறி செயல்படும்போது சாதி, பால் ஆகிய வேறுபாடுகள் இல்லாமல் போகும். சாதாரணமாக ஒரு வகுப்பில் முதல் பெஞ்சில் இருப்பவன் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை இருப்பான். கடைசிப் பெஞ்சில் இருப்பவனும் அப்படியே. அப்படி இல்லாமல் சில செயல்பாடுகளில் ஆசிரியரோடு இருப்பது, தனியாக செயல்படுவது, குழுவாக செயல்படுவது என்பதில் சாதி பார்த்து உட்கார வைக்க முடியாது. ஆண் குழந்தைகள் இந்தப் பக்கம், பெண் குழந்தைகள் அந்தப் பக்கம் என்று உட்கார வைக்க முடியாது. இதனால் அசட்டு பிசட்டா நடக்கிற, காதல் போன்றவைகள் வராது. பெண் குழந்தைகளை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு ஆண் குழந்தைகள் வந்து விடுவார்கள்....இந்தக் கற்றல் முறை முக்கியமானது. வெளியே நான் அக்கிரஹாரத்தில் இருக்கேன். அவர் சேரியில் இருக்கார்னு தெரியும். ஆனால் பள்ளிக்கூடத்தில் இந்த இரண்டு பேரும் சேர்ந்து குழுவாக செயல்படணும். தமிழ் நாட்டில் சிறுகுழு கல்வி வேண்டுமென்று இப்போது சொல்றாங்க. ஒரு பாடத்தை பல பாகங்களாகப் பிரிச்சு குழுவாக செயல்படுவாங்க. இதனால் கலந்துரையாடல் அதிகமாகும்போது மூளையின் கற்றல் அதிகமாகும். அதாவது இரண்டு பேர் சேர்ந்து ஒரு கேள்வியை உருவாக்கி வகுப்பு முழுவதும் உள்ள மாணவர்களிடம் பதிலைப் பெற்று, அதைக் கேட்டு எழுதும்போது, ஒரு கேள்விக்கு பலவித செயல்பாடுகள் நடக்கிறது.

மாண்டிச்சேரி கற்பிக்கும் முறையில் ஐந்து புலன்களையும் பயன்படுத்திதான் ஒன்றை அறிமுகப்படுத்துவார்கள். அந்த அறிமுகத்தை திரும்பப் பயன்படுத்தும்போது ஐந்து புலன்களையும் பயன்படுத்த வேண்டும். மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை உட்கார வைத்துதான் சொல்லிக் கொடுப்பாங்க. அங்கே எந்தச் செயல்பாடுகளும் இல்லை. அரசு பள்ளி மாணவர்கள் சமூகத்தில் இயல்பாக பழகுவாங்க. என்ன டீச்சர் இது சரியான்னு கேட்பாங்க. மெட்ரிகுலேசன் படிக்கிற குழந்தைகள் டீச்சர் சொல்லிட்டா சரியா இருக்கும்னு நினைப்பாங்க. டீச்சர் சொன்னது சரியா இருக்குமா என்ற ஐயப்பாடே இல்லாமல் இருக்கிற போது கற்றல் என்பதே நிகழாது. கேள்விகளின் தொடர்ச்சிகள்தான் முதிர்ந்த கல்வியின் அடையாளம். இதை அரசுப்பள்ளிகள் மூலம் ஏதோ காரணங்களால் கொடுக்கிறாங்க. அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதுதான் சமூக நம்பிக்கை இருக்கிறது. அவர்கள்தான் சரியான திசையில் பயணிக்கிறாங்க. அவர்களுக்குத்தான் கேள்விகளும், விவாதங்களும் இருக்கிறது. மெட்ரிகுலேசன், சிபிஎஸ்இ, இங்கிலீஸ் மீடியம் ஸ்கூலில் ஆசிரியர்கள் சொல்வதை கேட்டுவிட்டு அதன்படியே செஞ்சுகிட்டு இருப்பாங்க. விவாதங்களோ, கேள்விகளோ இருக்காது. மனித இயல்புகளும், குழந்தை இயல்புகளும் ஒட்டி அமைகிற கற்றல் சூழல்களில்தான் நல்ல கல்வி அமையும். இருபத்தி இரண்டாம் நூற்றாண்டில் மனித மூளையைப் பற்றியும், உளவியலைப் பற்றியும் நிறைய விஷயங்கள் தெரிய ஆரம்பிச்சிருக்கு. இதையும் உள்ளடக்கி மாற்றங்களைக் கொண்டுவந்தால் மிஸீtமீறீமீரீமீஸீt ஜீறீணீஸீஸீவீஸீரீ, மிஸீtமீறீமீரீமீஸீt ஷிஷீநீவீமீtஹ்க்கு ஒரு அடையாளம்.

 தமிழ்வழி கல்வியில் அறிவியல் கல்வி சரியான முறையில் உள்ளதா?

 தமிழ்வழிக் கல்வியில் கணக்கும், அறிவியலும் இன்னமும் பிரச்சனைகளாகத்தான் இருக்கிறது. முக்கியமான டெக்னிக்கல் வார்த்தைகளை ஆங்கிலத்தில்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. தமிழில் வார்த்தைகள் இருந்தாலும் அது பழகு தமிழாக இல்லை. தாய் மொழியில் தொடர்புகள் இல்லாதபோது பரவலான புரிதலாக இருக்காது. பரவலான புரிதல் மூலம்தான் நிபுணத்துவம் ஏற்படும்.

விஞ்ஞானம் பற்றிய புரிதல் அமெரிக்க சமுதாயத்தில் அதிகமாக இருக்கிறது. அதனால் நிபுணத்துவம் ஆரம்பிக்கும்போதே ஓர் உயர்ந்த தளத்திலிருந்து ஆரம்பிக்கிறது. நமக்கு பொதுவான அறிதல் குறைவாக இருப்பதால் அதை நோக்கி பயணிக்க வேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது. அதை அடையும்போது 65 வயது ஆகிவிடுகிறது. அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் நோபல் பரிசுக்கான வேலையெல்லாம் செய்ய முடியவில்லை. ஆகவே தமிழ் வளர்ச்சியும், மொழி வளர்ச்சியும், கல்வி வளர்ச்சியும், சமுதாய வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்ட விஷயம். அதனால்தான் மொழி என்பது முக்கியம். மொழி முக்கியம் என்கிற போது குழந்தைகள் இலக்கியம் என்பதற்கு திரும்பி வரவேண்டியிருக்கு. தமிழில் உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களைப் பற்றியும் இயல்பாக பேசுகிற சூழல் உருவாகணும். ஆனால் அந்தச் சூழல் எப்போது வரும் என்பது மிகப் பெரிய சந்தேகம். அன்றைக்கு எஸ்.எப்.ஐ. திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் வகுப்புகள் எடுப்பார்கள். இதில் குறைந்தபட்சம் ஆண்களுக்காவது வாய்ப்புகள் இருந்தன. இப்போது அதுவும் இல்லை.

கலைகள் மூலமாக குழந்தைகளை பயிற்றுவிக்க முடியுமா?

 கிழக்கு ஆசியாவில் மரபு ரீதியாக உள்ள நடனங்கள், பாட்டுகளை சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் பள்ளிக்கூட ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். இதில் மரபுரீதியாக பயிற்சிப் பெற்றவர்கள் தான் சொல்லிக் கொடுப்பார்கள். இவை கம்போடியா, தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளில் நடக்கின்றன. கேரளாவில் களறி சண்டையை பள்ளிக்கூடங்களில் அதற்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் உருமி, ஜண்டை மேளம் அடிக்க முடியும். ஜாதி வித்தியாசமில்லாமல் கற்றுக் கொள்ளமுடியும். ஆனால் அதற்கான உடல்வளமும், ஆர்வமும் முக்கியம்.

பறையை இங்கு சாதி சம்பந்தமாகத்தான் பார்க்கிறார்கள். அதை தமிழ் கலைன்னு பார்க்கலை. பரத நாட்டியத்தையும் பார்க்கலை. கலாச்சேத்திராவுக்கு காசு கொடுக்க முடிஞ்சாதான் பரதநாட்டியம் கத்துக்க முடியும். ஒரு மாசத்திற்கு 50,000 கட்டி படிக்க முடிகிற ரிதிமி ஸ்கூலில்தான் பறையைக் கற்றுக்கொள்ள முடியும். மக்கள் கலையாக இருந்ததை உயர்குடி கலையாக மாறிடுச்சு. இந்த தலைகீழ் மாற்றங்கள் குழந்தைகளுக்கு மன நெருக்கடிக்கு உள்ளவாதும், கலைநயத்தோடு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. பள்ளிக்கு வெளியிலும் வாய்ப்புகள் இல்லை. கணக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு நுண்கலைகள் முக்கியம். பாடல்கள், நடனம், விளையாட்டு, உடல்வளம் எல்லாமே பாடத்திட்டத்தில் கொண்டு வரணும். மூளையைப் பயன்படுத்துவதுதான் படிப்பு என்று குறுகலாக வந்ததற்கு பார்ப்பனீயம்தான் முக்கிய காரணம். இதை உடைத்து கொண்டு வரணும்.

இந்த மாதிரி விஷயங்களை பள்ளிதான் ஒருங்கிணைக்க முடியும்னு இப்போ கருத்து உருவாயிடுச்சு. ஆனால் இதில் ஆசிரியர்களைச் சேர்க்கவில்லை. அதனால் பள்ளி என்கிற தளம் அரசுக்கானது என்று சொல்ல முடியாது. அது மக்களுக்கானது. மேலும் குழந்தைகளின் எல்லாவிதமான வளர்ச்சியின் இடமாக அமைய வேண்டும். கோவிலுக்குள் இருந்த கலைகள் சமூகத்திற்கு வந்துள்ளன. சமூகத்தில் உள்ள கலைகள் இப்போது பள்ளிக்கு வரவேண்டும். இந்த பரிணாம வளர்ச்சி நடைபெறவில்லை என்றால் குழந்தைகளுக்கு வெறும் மூளை வளர்ச்சி மட்டும்தான் இருக்கும்.

குழந்தைகளின் இசைவுத்தன்மைகளுக்கு ஏற்ப கற்பித்தலும் இலக்கியத்திற்கும் ரெம்பத்தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்குது என்பது மட்டும் நிச்சயம்.

Pin It