மரண தண்டனையை இரத்து செய்து உச்ச நீதிமன்றம்  பிறப்பித்த ஆணையை எதிர்த்து இந்திய அரசு  முன் வைத்த  சீராய்வு மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தனது  2014 சனவரி 21 நாளிட்ட ஆணையை உறுதிசெய்திருக்கிறது.

 மரண தண்டனைக்கு எதிரான  மக்கள் இயக்கங்களுக்கும்  கருத்துப் போராட்டங்களுக்கும் கிடைத்த சிறப்பான வெற்றி இது.

வீரப்பன் கூட்டாளிகள்  என்ற குற்றச்சாட்டில்  பாலாறு வெடிகுண்டு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன், ஞானப்பிரகாசம், பஞ்சாபின் புல்லார், உள்ளிட்ட பதினைந்து பேர்க்கு 21.1.2014 அன்று மரண தண்டனை இரத்து செய்யப்பட்டு  வாழ்நாள் சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டது அது இத்தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 தனது இந்த சீராய்வு மனு அடிப்படையான அரசமைப்புச் சட்ட சிக்கல்கள் குறித்து விவாதிப்பதால் இம் மனுவை திறந்த நீதிமன்றத்தில்  விவாதிக்க வேண்டுமென்று இந்திய அரசு கோரியிருந்தது.  மேலும்  அரசமைப்புச் சட்டக் கூறு  32 ன் மீது  இது தொடர்பான வாதம் மையம் கொண்டுள்ளதால்  இதனை 5 நீதிபதிகள் கொண்ட பெரிய ஆயத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரியிருந்தது.

இதனை  ஆய்வு செய்த தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் நீதிபதிகள் இரஞ்சன் கோகோய், சிவ கீர்த்திசிங் ஆகியோர் கொண்ட அமர்வு  மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளையுமே நிராகரித்தது.  எல்லா சீராய்வு மனுக்களையும் போலவே இந்த மனுவையும் நீதிபதிகள் அறையில் விவாதித்து  இத்தீர்ப்பை வழங்கியது.

21.01.2014 அன்று தூக்குத் தண்டனையை இரத்து செய்து அளிக்கப்பட்ட  15 வழக்குகளைவிட இத் தீர்ப்பை பின்பற்றி 18.2.2014 அன்று இராசீவ் காந்தி கொலை வழக்கில்  பேரறிவாளன், முருகன் , சாந்தன், ஆகிய மூன்று தமிழர்  மரணதண்டனை இரத்து செய்யப்பட்டதை தான் மிகுந்தப் பதட்டத்தோடு இந்திய அரசு காரணமாகக் காட்டியது.

குடியரசுத் தலைவரின் முடிவின் மீது தீர்ப்புச் சொல்ல உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் ஏதும் இல்லை என்றும், அதிலும் கருணை மனுவை  ஆய்வு செய்வதற்கு குடியரசுத்தலைவர் கால தாமதம் செய்ததை காரணமாகக் கூறுவது அவரது நிர்வாக அதிகாரத்தில் தலையிடும் செயல் என்றும்  இந்திய அரசு வாதிட்டது.

 அரசமைப்புச் சட்டக் கூறு 72 - ன் படி  கருணை மனு மீது  முடிவு செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது என்றாலும் அதனை விசாரித்துத் தீர்ப்பளிக்கக் கூடாது என்று கூறுவது சட்டத்தின் இறுதி நிலைக் காவலர்  உச்ச நீதிமன்றம் தான் என்ற அரசமைப்புச்சட்ட நிலையை  குலைத்துவிடும் என்று நீதிபதி சதாசிவம் அமர்வு உறுதிபடக் கூறியது.

இது குறித்து  பிட்டில்  - எதிர் - பெர்வாக் என்ற வழக்கில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின்  உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி  மாரூராம் - எதிர்- இந்திய ஒன்றிய அரசு  (1981 1, SCC,107) என்ற வழக்கிலும்  எப்புரு சுதாகர் - எதிர் - ஆந்திரப் பிரதேச அரசு (2006, AIR, 3385) என்ற வழக்கிலும் உச்ச நீதிமனறம் அளித்தத் தீர்ப்புகளை நீதிபதி சதாசிவம் அமர்வு எடுத்துக்காட்டியது.

 “கருணை வழங்குவது என்பது குடியரசுத்தலைவர் அல்லது ஆளுநரின் தனிப்பட்ட கருணைச் செயல் அல்ல. அது அவரது அலுவல் காரணமான அரசமைப்புச் சட்டக் கடமையாகும். விருப்பதிகாரம் என்பதற்காக அவர் தன் மனம் போன போக்கில் செயல்பட முடியாது. அரசமைப்புச் சட்ட நிபந்தனைகளின்படியே கருணை மனுவின் மீது  அவர் செயல்பட வேண்டும் அவர் அரசமைப்புச் சட்ட நெறிகளின் படிதான்  செயல்பட்டிருக்கிறாரா என்பதை ஆய்வு செய்யும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு’’ என இத் தீர்ப்புகள் கூறுகின்றன.

இதனை எடுத்துக் காட்டி 21.01.2014 அன்று  அளித்தத் தீர்ப்பில்  நீதிபதி சதாசிவம் அமர்வு  ஆணையிட்டிருந்தது.  இச் சீராய்வில் அதனையே உறுதி செய்தது. 

குடியரசுத்தலைவர் கருணை மனு மீது முடிவெடுப்பதில்  தவறிழைத்திருப்பதாக உச்சநீதி மன்றம் கருதினால் அக்காரணங்களை எடுத்துக் காட்டி மீண்டும் குடியரசுத்தலைவருக்கு திருப்பி அனுப்பலாமே தவிர அவரது கருணை மனு நிராகரிப்பு ஆணையை  தானே இரத்து செய்துவிட உச்ச நீதிம்னறத்திற்கு அதிகாரமில்லை என்று  இந்திய அரசு வாதிட்டது.

இதனை  சதாசிவம் அமர்வு மிகுந்த கோபத்தோடும்  உறுதியான  எதிர் வாதத்தோடும்  எதிர்கொண்டது.  “அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உயிர் வாழும் உரிமைதான் ஆக அடிப்படையான, மிகவும் உயர்வான உரிமையாகும்.  இதனை நீதிமன்றமோ, நிர்வாக அமைப்போ, சட்ட நெறிகளுக்கு எதிராக  பறிக்க முயல்வதாக ஒரு குடிமகன் கருதுவாரேயானால் அதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு உரிமை வழங்கும் கூறு 32 தான்  அரசமைப்புச் சட்டத்தின்  உயிரான பகுதியாகும் என  அரசமைப்பை வரைந்ததில் முதன்மை பாத்திரம் வகித்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்  கூறியதை நினைவுபடுத்துகிறோம்’’ என்று கூறியது.

மினர்வா மில் வழக்கில் (1980- 2SCC, 625,) அரசமைப்புச் சட்டக்கூறு  32ன் முதன்மைத் தன்மையை  உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருப்பதை எடுத்துக் காட்டி  சதாசிவம் அமர்வு இது குறித்த தமது முடிவை விரிவாகவும் அழுத்தமாகவும் கூறுகிறது.

அரசமைப்புச்சட்டக் கூறு 72 கருணை மனுவை  குடியரசுத்தலைவர் ஆய்வு செய்ய எந்தக்கால வரம்பும்  விதிக்கவில்லை என்று கூறி இந்திய அரசு சீராய்வு மனுவில் எதிர்ப்பு தெரிவித்தது.

இதுவரை இந்தியாவில் குடியரசுத்தலைவர்கள் கருணை மனுக்களை ஆய்வு செய்வதற்கு எடுத்துக் கொண்டகால வரம்புகளை மிக விரிவாக சதாசிவம் அமர்வு  ஆராய்ந்து கூறியது.

1980 க்கும் முன்னால் கருணை மனுக்கள் மீது  முடிவு செய்ய குடியரசுத்தலைவர் 15 நாட்களிலிருந்து அதிகம் போனால் 11 மாதங்கள் வரையிலுமே காலம் எடுத்துக் கொண்டார்.  1980 லிருந்து 88 வரையிலான ஆண்டுகளில்  இந்த கால அவகாசம் அதிக அளவு  நான்கு ஆண்டுவரை இருந்துள்ளது.

இந்த கால அவகாசம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வந்த  வழக்குகளில் ஒவ்வொரு ஆயமும்  வெவ்வேறு வகை முடிவுகளுக்கு வந்தது.  வைத்தீசுவரன் வழக்கில்  நீதிபதி சின்னப்ப ரெட்டி கருணை மனு மீது முடிவெடுப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தீர்ப்பு வழங்கினார்.  கேகர் சிங் வழக்கில்  உச்ச நீதிமன்றம்  இதற்கு கால அவகாச  வரம்பிட முடியாது என்றாலும் கருணை மனு  பெறப்பட்ட  மூன்று மாதங் களுக்குள் முடிசெய்வது நல்லது என பரிந்துரை செய்தது.

இச்சூழலில் இச்சிக்கல் குறித்து முடிவு செய்ய  ஐந்து நீதிபதிகள் கொண்ட  அரசமைப்புச்சட்ட ஆயம் அமைக்கப்பட்டு  திரிவேணி பென் - எதிர் - குஜராத் மாநில அரசு என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கியது. குடியரசுத் தலைவர்  கருணை மனு மீது முடிவு செய்வதற்கு வரம்பற்றக் காலம் எடுத்துக் கொள்ள முடியாது என இத் தீர்ப்பு தெளிவுபடுத்தியது.

 “கருணை மனுமீது  முடிவு செய்ய  காலம் எடுத்துக் கொண்டதற்கு என்னக் காரணம் என்று உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவரைக் கேள்வி கேட்க முடியாதுதான். என்றாலும் இந்த காலதாமதத்திற்கு  ஞாயமான, பொருத்தமான காரணம் இல்லை என்றால் குடியரசுத் தலைவரின் முடிவை உச்ச நீதிமன்றம் இரத்து செய்யலாம்.” என்று கூறியது.

நான்கு தமிழர் வழக்கு, புல்லார் வழக்கு ,  உள்ளிட பதினைந்து வழக்குகளிலும்  பத்திலிருந்து பன்னிரெண்டு ஆண்டுகள் வரை காலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு  ஞாயமான, பொருத்தமான காரணம் எதுவும் முன்வைக்கப்படவில்லை. ஞாயமான, பொருத்தமான காரணமில்லாத காலதாமதம் மரண தண்டனையை இரத்து செய்வதற்கு ஒரு முக்கியமான அடிப்படை என ஆணையிட்ட திரிவேணி பென்  தீர்ப்பு 5 நீதிபதிகள் ஆயத் தால் வழங்கப் பட்டதாகும்.

எனவே, பதினைந்து வழக்குகளில்  மரண தண்டனையை வாழ் நாள் தண்டனையாக குறைத்து வழங்கிய தீர்ப்பு குறித்து  மீளாய்வு  செய்ய 5 நீதிபதிகள் அமர்வு மீண்டும் அமைக்க வேண்டிய தேவை இல்லை என்று கூறி  சதாசிவம் அமர்வு இந்திய அரசின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதே  முடிவு மூன்று தமிழர்  வழக்கிலும் வந்தே தீரும்.

 தமிழக அரசு  இராசீவ் காந்தி வழக்கில் தண்டனைப் பெற்றுள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்து ஆணையிட்டதை இரத்து செய்வதற்கான ஒரு உத்தியாகவே மரண தண்டனையை இரத்து செய்த  உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது  சீராய்வு மனுவை இந்திய அரசு முன்வைத்தது.  இது இபோது தள்ளுபடியாகியிருக்கிறது.

அடுத்து ஏழு தமிழர் விடுதலைக்கு எதிரான  தடை நொறுங்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.