உழவர் போராளி கஜேந்திர சிங்குக்கு வீரவணக்கம்!

இந்திய அரசின் நிலப்பறிப்புச் சட்டத்தை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் 22.04.2015 அன்று தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கஜேந்திர சிங், இந்திய அரசின் உழவர் பகைப் போக்கிற்கு எதிராக முழக்கம் எழுப்பியவாறே தூக் கிட்டு சாவைத் தழுவினார்.

கான்குன் மாநகரில், 2003 செப்டம்பர் 10 அன்று உலக வர்த்தகக் கழக (WTO) மாநாட்டு மண்டபத்திற்கு எதிரில் நடைபெற்ற உழவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது, அமெரிக்க வல்லரசின் கைப்பாவையாக உலக வர்த்தகக் கழகம் செயல்பட்டு, மூன்றாம் உலக நாடு களின் வேளாண்மையை அழிப்பதைக் கண்டித்து, தென்கொரிய உழவர்கள் தலைவர் லீ கியான் ஹீ கழுத் தில் கத்தியால் குத்திக் கொண்டு உயிரீகம் செய்தார்.

தில்லியில் தனது கழுத்தில்தானே தூக்கிட்டு ஆர்ப் பாட்டத்தின் ஊடே, தன்னுயிர் ஈந்த இராசஸ்தான் உழவர் கஜேந்திர சிங்கின் ஈகம் இதற்கு இணையானது.

லீயின் மரணம், அன்று உலகத் தலைவர்களால்கூட மதிக்கப்பட்டது. உலக வர்த்தகக் கழக மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாட்டுத் தலைவர்கள்கூட, மெழுகுவர்த்தி ஏந்தி லீயின் மரணத்திற்கு வீரவணக்கம் செலுத்தினர்.

ஆனால், உழவர் கோரிக்கைகளை முழக்கமாக எழுப்பியவாறே தில்லியில் உயிரீகம் செய்த கஜேந்திர சிங்கின் மரணம், இந்திய அரசியல் தலைவர்களால் மதிக்கப்படவில்லை. இது ஏதோ, பாதிக்கப்பட்ட விவசாயிகள் செய்து கொள்ளும் தற்கொலைகளில் ஒன்று என்பதுபோல், நாடாளுமன்றத்திலும், ஊடகத் திலும் விவாதிக்கப்படுகிறது.

மோடி அரசு, அவசரச் சட்டமாக மீண்டும் பிறப் பித்துள்ள “நிலம் கையகப்படுத்தல் சட்டம்’’ நாடெங் கிலும் உழவர்களை, தொகை தொகையாக நிலத்தி லிருந்து வெளியேற்றிவிடும் என்பதை உணர்ந்து, எல்லா இடங்களிலும் இச்சட்டத்திற்கு எதிராக உழவர்கள் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தில்லியில் ஆம் ஆத்மி கட்சி 22.04.2015 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி யது.

அதில் பங்கேற்பதற்காக தில்லி வந்திருந்த இராசஸ் தான் மாநிலம் தவுசா நகரைச் சேர்ந்த உழவர் கஜேந் திர சிங், இந்திய அரசின் நிலப்பறிப் புச் சட்டத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியவாறே அருகி லிருந்த வேப்பமரத்தில் ஏறி, தனது முண்டாசுத் துணியால் அம்மரக் கிளையில் தானே தூக்கிட்டு மரண மடைந்தார். தூக்கிட்டுக் கொள் ளும்போது, அவர் வீசியெ றிந்த துண்டுத் தாளில், அவர் இந்தி மொழியில் எழுதி வைத்தி ருந்த செய்தி கவனிக்கத் தக்கது.

“எனக்கு மூன்று பிள்ளைகள். கடந்த மாதம் பருவம் தவறிப் பெய்த மழை மற்றும் சூறாவளியால் எனது பயிர்கள் அழிந்துவிட்டன. இதனால் என் தந்தை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். எனக்கு இனிமேல் வாழ்க்கையில் எதுவுமே இல்லை.

ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் ராஜஸ்தான்’’என்று அதில் அவர் எழுதியிருந்தார்.

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட உழவர்தான் கஜேந் திர சிங் என்பதை, இக்கடிதம் எடுத் துக்காட்டினாலும் அவர் கடிதத் தின் கடைசி வரிகளில் உள்ள முழக் கங்கள் அவர் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான உழவர்களின் சார்பில் அவர்களது பேராளராக நின்று, உயிரீகம் செய்திருக்கிறார் என்பது புரியும்.

வெறும் தற்கொலையென்றால், அதற்கு ராஜஸ்தானிலிருந்து புறப் பட்டு தில்லிக்கு வர வேண்டிய தேவையில்லை. உழவர் பேரணியில் பங்கேற்க வேண்டிய அவசிய மில்லை. விவரமாக எழுதத் தெரி யாத ஆனால், பொது நலனில் பொறுப்புள்ள ஓர் உழவனின் குரல் இது என்ற உண்மையை புரிந்து கொள்வதற்கு மாறாக, பொது இடத்தில் நடைபெற்ற இந்தத் தற் கொலைக்கு யார் பொறுப்பு என்ப தாக திட்டமிட்ட முறையில் திசை திருப்பும் விவாதங்கள் நடந்து வரு கின்றன.

இந்தியாவில் இலட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட உழவர்களின் உயிருக்கும் மதிப்பு இல்லை. இக்கொடுமையை சுட்டிக் காட்டுவதற்காக செய்யப்படும் உயிரீகத்திற்கும் மரியாதையில்லை.

2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 39,553 உழவர்கள் வேளாண் கடன் காரணமாக, உரிய விலை கிடைக் காததன் காரணமாக, வறட்சியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று அரசின் புள்ளி விவரமே கூறுகிறது. சட்டீஸ் கர், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்கள் உழவர் தற்கொலை களை பதிவு செய்வதைக் கைவிட்ட நிலையிலும், மீதமுள்ள மாநிலங் களில் பதிவு செய்யப்பட்ட தற் கொலை எண்ணிக்கை மட்டுமே இது!

மராட்டியத்தின் மராத்வாடா மண்டலத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களுக்குள் மட்டும், 200 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் கணக்கிட் டால், இப்போதும் உழவர் தற் கொலைகள் தீவிரமாகத் தொடர் வது புரியும். உழவர் தற்கொலைகள் அதிகம் நிகழாத கேரளம், தமிழ் நாடு ஆகிய மாநிலங்களிலும் அண் மைக் காலமாக இத்துயர நிகழ்வுகள் அதிகம் நடந்து வருகின்றன.

இந்தியாவை எந்தக் கட்சி ஆண்டாலும், மாநிலங்களில் எந்தக் கட்சி ஆண்டாலும் தொடர்ச்சி யாக வேளாண்மை புறக்கணிக்கப் பட்டே வருகிறது. வேளாண்மை என்பது இலாபகரமானத் தொழி லாகவோ, மகிழ்ச்சியான வாழ்முறை யாகவோ இல்லை.

கஜேந்திர சிங் மரணம் குறித்து, நாடாளுமன்றத்தில் 23.04.2015 அன்று பிரதமர் மோடி பேசியது அனைத்தும் கேவலமான பொய் யுரையாகும். உழவர்களின் நிலை குறித்து, கவலை தெரிவிப்பதாக மோடி பசப்பியது சகிக்க முடியாத பாசாங்கு ஆகும்.

இந்தியாவில் இருப்பதைவிட, அதிக நாட்கள் வெளிநாட்டுப் பயணங்களில்தான் மோடி காலத் தைக் கழிக்கிறார். தனது வெளி நாட்டுப் பயணத்தின்போதும், இந்தியாவில் தங்கியிருக்கிற போ தும், வெளிநாட்டு மற்றும் இந்தியப் பெருமுதலாளிகளைக் கூவிக்கூவி அவர் அழைக்கும் “இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா)’’ கூச்சலில்,தவறியும்கூட வேளாண்மை பற்றி ஒரு சொல் பேசப்படுவதில்லை.

அவரது “மேக் இன் இந்தி யா’’வில் வேளாண்மைக்கு ஒரு ஓரத்தில்கூட இடமில்லை. இப்போ தும், மிகத் தந்திரமாக உழவர்களின் வாழ் நிலையைப் பற்றி பேசுகிறாரே தவிர அவர்களது வேளாண் தொழிலைப் பாதுகாப்பதற்கு, ஒரு சொல்லும் பேசவில்லை.

மிக நீண்ட காலமாகவே திட்ட மிட்ட முறையில் ஆட்சியாளர் களால் வேளாண்மை புறக்கணிக் கப் பட்டே வருகிறது. வேளாண் மையில் கிடைக்கும் உபரியிலிருந்து நிகழும், வளர்ச்சியாக தொழில் வளர்ச்சி இருப்பதற்கு மாறாக, வேளாண்மையைஅழிக்கும் தொழில் வளர்ச்சியே அரசின் கொள்கையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

குறைந்தது தொழில்துறைக்கு இணையாக சமமாகக் கூட, வேளாண் மை மதிக்கப்படவில்லை. மோடி அரசு,வேளாண்மையை அழித்து வளர்க்கும் பாதையில், முன்னால் இருந்த எந்த அரசையும் விட மிகக் கொடிய முறையில் வேகம் காட்டுகிறது.

கஜேந்திர சிங் மரணம் குறித்து, நாடாளுமன்றத்தில் பசப்பிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மோடி அரசு, ஓசையில்லாமல் அனைத்து அரசுத்துறை வங்கி களுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப் பியது. சேம வங்கி(ரிசர்வ் பாங்) வழியாக அனுப் பப்பட்ட அந்த சுற்றறிக்கை, இனி உழவர்கள் பெறும் வேளாண் கடன்களுக்கான வட்டி மானியம் கைவிடப்படுவ தோடு, இரண்டு விழுக்காடு வட்டி உயர்வும் இருக்கும் என அறிவித் தது.

இதுவரை, உழவர்களுக்கு 9 விழுக்காடு வட்டியில் வேளாண் பயிர்க்கடன்கள் இந்திய அரசு வங்கிகளால் வழங்கப்பட்டு வந்தன. கடனுக்கு அரசு வங்கிகள் விதிக்கும் இந்த வட்டியில் இரண்டு விழுக் காடு தொகையை இந்திய அரசே மானியமாக ஏற்றுக் கொண்டது. ஆக, 7 விழுக்காட்டு வட்டியில் உழ வர்களுக்கு பயிர்க்கடன் வழங்கப் பட்டது.

இதில், முறையாகக் கடனை வட்டியோடு திரும்பச் செலுத்தும் உழவர்களுக்கு 3 விழுக்காடு வட் டித் தள்ளுபடியும் வழங்கப்பட்டது. அவ்வாறான உழவர்கள், நடை முறையில் 4 விழுக்காடு வட்டியில் கடன் பெற்றார்கள்.

இப்போது, வட்டி அளவு 9 விழுக்காட்டிலிருந்து 11 விழுக் காடாக உயர்த்தப்படுவதுடன் இந்திய அரசு அளித்துவந்த வட்டி மானியம் 2 விழுக்காடு இனி கிடைக்காது. கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் உழவர்களுக் கான வட்டித் தள்ளுபடியும் இனி கிடையாது. இதனால் திடீரென்று உழவர்கள் வாங்கும் கடனுக்கான வட்டி அளவு 4 விழுக்காடு உயர்த் தப்பட்டுள்ளது.

இதற்கும் ஒவ்வொரு முறை கடன் பெறும்போதும், தங்களது நிலம் தொடர்பான சிட்டா, அடங் கல் நகல்களை அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிலும், வங்கி மேலாளர் நிறை வடைந்தால் மட்டுமே கிடைக்கும்.

எதனால் உழவர்கள் அதிகம் தற்கொலை செய்து கொண்டார் களோ, அந்த காரணி இதன் மூலம் அதிகப்படுத்தப்படுகிறது. கடன் என்பதுதான் அந்தக் காரணி!

அரசு வங்கி அளிக்கும் கடனுக்கு இவ்வளவு நிபந்தனைகளும் திடீர் வட்டி உயர்வும் அறிவிக்கப்பட்டுள் ளதால், உழவர்கள் மேலும் தனியார் கெந்து வட்டிக்காரர்களிடம் விரட் டப்படுவார்கள். உரிய விளைச்சல் அல்லது, கடன் கட்டும் அளவுக்கு வருமானம் இல்லாது போனால், இந்தத் தனியார் கடனை உழவர் களால் கட்ட முடியாது. அது, வட் டிக்கு வட்டியாக குட்டி போட்டு மலைபோல் நிற்கும். அந்த நிலை யில்தான், கடனைத் திரும்பச் செலுத்த முடியாத உழவர்கள் மானத்திற்கு பயந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்திய அரசின் வட்டி உயர்வு அறிவிப்பு, உழவர்களின் தற்கொ லையை அதிகப்படுத்தும் ஆபத்தே உள்ளது.

உண்மை இவ்வாறிருக்க, எது வுமே தனக்குத் தெரியாதது போல், மோடி முதலைக் கண்ணீர் வடிப் பது அருவருப்பானது.

இதற்கு முன் தில்லி ஆட்சி யாளர்களால் நடத்தப்பட்ட வேளாண் சந்தைப் பறிப்பு, வேளாண் விளைபொருட் களுக் கான விலை குறைப்பு ஆகியவை மோடி அரசில் இன்னும் வேகம் பெற்றுள்ளன.

உலக வர்த்தகக் கழகத்தில் நடை பெற்று வரும் பன்னாட்டுப் பேச்சு வார்த்தைகள் நிறைவு பெறும் தரு வாயில் உள்ளன. இப்பேச்சு வார்த்தையில், இந்தியாவில் உழவர்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு மானியங்களை நிறுத்தும் நிபந்தனையும், இந்தியச் சந்தையை அயல்நாட்டு வேளாண் நிறுவனங்களுக்கு திறந்து விடும் நிபந்தனையும் தீவிரமாகப் பேசப்படுகின்றன.

தொழில்துறை முதலாளிகளின் உலகச் சந்தை வேட்டையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் விதிக்கும் நிபந்தனையை ஏற்கும் நிலையில் மோடி அரசு உள்ளது.

உழவர்களுக்கு வழங்கப்படும் வேளாண் மானியத்தை கிட்டத்தட்ட அறவே நிறுத்துவது, நுகர் வோருக்கு மானிய விலையில் உணவு தானியம் உள்ளிட்ட இன்றி யமையாப் பொருள்களை வழங்குவதற்கான உணவு மானியத்தைக் கைவிடுவது, வெள்ளைக்கார வேளாண் பெருநிறுவனங்களுக்கு தங்குதடையற்று இந்தியச் சந்தையைத் திறந்துவிடுவது ஆகிய முடிவு கள் தனித்தனியாக பல்வேறு துறைகளின் அறிவிப்புகள் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மோடி அரசு அமர்த்திய சாந்த குமார் குழு இந்திய உணவுக் கழகத்தை முற்றிலுமாக கலைத்து விடுவது, அரிசி கோதுமை தவிர வேறெதுவும் மானிய விலையில் வழங்கக் கூடாது, 47 விழுக்காடு மக்களுக்கு மேல் யாருக்கும் இந்தக் குறைந்த மானியத்தை அளிக்கக் கூடாது என்று பரிந்துரை செய்தது. அதனை மோடி அரசு ஏற்றுள்ளது.

அதேபோல், மானிய விலையில் மண்ணெண்ணெய், எரிவளி வழங்குவதையும் படிப்படியாகக் கைவிடும் திசையில் மோடி அரசு செயல்பட்டுக் கொண்டுள்ளது. விளக்கு எரிக்க யாரும் மண் ணெண்ணெய் பயன்படுத்துவ தில்லை என்ற காரணத்தைக் காட்டி, தமிழ்நாட்டிற்கு வழங்கப் பட்டு வந்த மானிய விலை மண் ணெண்ணெயைக் கிட்டத்தட்ட அறவே நிறுத்திவிட்டது.

வருமான வரி செலுத்துவோர், உயர் வருமானமுள்ளோர் தாங்களே முன்வந்து, எரிவளி மானியத்தைக் கை விடும்படி மோடி அரசு ஒருபுறம் பரப்புரையும், மறு புறம் அழுத்தமும் கொடுத்து வருகிறது.

அரிசிக்கு மட்டுமே மானியம் வழங்கலாம் என்று சொன்னாலும், அந்த மானியத்தை பாதிக்கு மேல் மோடி அரசு குறைத்துவிட்டது.

இவ்வாறு, உணவு வழங்கல் துறையில் பெருமளவு கொள்முதல் குறைவு ஏற்படும்போது, அதற்கேற்ப இந்திய உணவுக்கழகம் கலைக்கப்படும் போது, உழவர்கள் விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கும் சந்தை வாய்ப்பு பறிக்கப்படுகிறது. வெளிச்சந்தையில் விற்கலாம் என்றால், அதையும் வெளிநாட்டு வேளாண் பெருநிறுவனங்களுக்குத் திறந்து விடுகிறது.

அமெரிக்கா, - ஐரோப்பிய ஒன்றியம், - சப்பான் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏராளமான வேளாண் மானியங்கள் வாரி வழங்கப்படுகிறது. விலையே இல்லாமல் அவ்வேளாண் தானியங்களை அவர்கள் விற்றாலும், இழப்பு ஏற்பட்டுவிடாத வகையில் ஏராளமான மானியம் அங்கு வழங்கப்படுகிறது.

எனவே, போட்டி போட்டுக் கொண்டு, இந்தியச் சந்தையில் வெளிநாட்டு வேளாண் விளை பொருட்கள் இங்கு ஆகும் சாகுபடிச் செலவைவிட குறைவான விலையில், விற்கப்படும்.

இந்த நெரிசலில், எல்லா மாநிலங்களும் அம்மாநிலத்து உழவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்ற போதிலும், தமிழ்நாட்டு உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு இவை எல்லாவற்றையும்விட கடுமையானது.

தமிழ்நாடு நீர் முற்றுகையில் வைக்கப்பட்டிருக்கிறது.இன் னொருபுறம், விரைவாக நகர் மயமாகி வருகிறது. இவ்விரண்டு காரணங்களாலும் காவிரிப் படுகை மாவட்டங்கள் உள்ளிட்டு, தாமிர பரணி ஆற்றுப்படுகை உள்ளிட்டு, தமிழ்நாட்டின் எல்லாப் பகுதி களிலும் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் கீழே போய்க் கொண்டி ருக்கிறது. அதோடு, தாறுமாறான மின்வெட்டும் சேர்ந்து கொண்டி ருக்கிறது.

இதனால், குழாய்களின் மூல மாக நிலத்தடி நீரை எடுத்து சாகு படிக்குப் பயன்படுத்தும் சாகுபடிச் செலவு கூடிவிட்டது. நகர்மயமாதல் அதனை ஒட்டிய கட்டிட விரி வாக்கம் ஆகியவற்றால், வேளாண் பணிகளுக்கு ஆள்பற்றாக்குறை ஏற்பட்டு கூலி விகிதம் அதிகமாகி அந்தச் செலவும் பல மடங்கு கூடி விட்டது.

பறித்து வைத்துக் கொண்டுள்ள குறையாத நீர் வளமும், குறைவான நகர் மயமும் உள்ள கர்நாடகம், ஆந்திரம் ஆகிய பகுதிகளில் தமிழ் நாட்டைவிட, சாகுபடிச் செலவு குறைவாக இருப்பதால், அங்குள்ள உழவர்கள் தங்கள் நெருக்கடியை சமாளிக்க தமிழ்நாட்டுச் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைவான விலைக்கு வேளாண் விளை பொருட்களை விற்கிறார்கள். கர்நாடக அரிசி மட்டுமின்றி, கர் நாடக சர்க்கரையும் தமிழ் நாட்டுச் சந்தையை ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டது.

அடுக்கிய மூட்டையில் அடி மூட்டையாக தமிழ்நாட்டு உழவர் கள் நசுங்கிக் கொண்டிருக்கி றார்கள்.

தொழில்துறைக்கு வழங்கப்படும் மானியம், வரிக்குறைப்பு, சந்தை ஏற்பாடு ஆகியவற்றில் பாதி அளவு கூட கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மைக்கு வழங்கப்படுவ தில்லை.

இவ்வாறான வேளாண்மை புறக்கணிப்பில் கட்சிகளிடையே வேறுபாடில்லை. உழவர்களுக்காகக் குரல் கொடுக்க வலுவான ஊடக மும் இல்லை. உழவர்கள் அனைவ ராலும் அனாதையாக விடப்பட் டுள்ளனர். இவர்கள் பேசும் “வளர்ச் சி’’யில் வேளாண்மைக்கும், உழவர் களுக்கும் இடமே இல்லை.

இங்குள்ள பொதுவுடைமை இயக்கத்தினரும் இந்தப் பார்வைக் கோளாறுக்கு ஆட்பட்டிருக் கிறார்கள். வேளாண்மை மற்றும் அது சார்ந்த அனைத்துமே பிற் போக்கு, - பின்தங்கிய தன்மை என்ற பார்வை அவர்களைப் பற்றிக் கொண்டுள்ளது. தொழிற்துறை வளர்ச்சிதான் முற்போக்கானது, நவீனமானது என்ற பார்வையில் முதலாளியவாதிகளுக்கும் பொதுவு டைமைவாதிகளுக்கும் அடிப்படை வேறுபாடு எதுவு மில்லை.

முதலாளிய உற்பத்தி முறைதான் (Capitalist Mode of Production) முன் செல்லக்கூடியது, தலைமை தாங்கக் கூடியது என்ற மக்கள் பகைப் பார்வை, இந்த இருதரப்பாருக்குமே இருக்கிறது. ஒரு நாட்டு வளர்ச்சியில், தொழில்துறைக்கு சமமானப் பங்கு வேளாண்மைக்கும் இருக்க வேண்டும் என்ற பார்வைகூட, இருதரப்பாருக்கும் இல்லை.

இதனால்தான், மிகத் துணிச்சலாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, “உழவர்களே வேளாண்மையை விட்டு வெளி யேறுங்கள்’’ என்று வெளிப் படை யாக சொல்ல முடிந்தது. இன்று, நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை ஞாயப்படுத்துவதற்கு, மோடி முன் வைக்கும் முதன்மை யான வாதம் “நாங்கள் நான்கு மடங்கு விலை தருகிறோம், உழவர்களே நிலத்தை விட்டு வெளி யேறுங்கள்’’ என்பது தான்!

நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை எதிர்க்கிற தேர்தல் கட்சிகள் அனைத்துமே, நிலத்தை விட்டு உழவர்கள் வெளியேறாமல் இருக்கும் வகையில் வேளாண்மையை இலாபமான தொழிலாக நடத்து வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறாமல் அமைதி காக்கிறார்கள். ஏனென்றால், இவர் களிடம் உருப்படியான மாற்றுக் கொள்கை எதுவுமில்லை.

எல்லா கட்சித் தலைவர்களும் பல்வேறு மாநிலங்களில் உள்ள எல்லா கட்சி முதல்வர்களும், தங்கள் மாநிலத்தை முதன்மைத் தொழில் வளர்ச்சி மாநிலமாக மாற்றப் போவதாக அறிவித்து போட்டி போட்டுக் கொண்டு மானிய விலையில் பெருமுதலாளி களுக்கு நிலம்தர அறிவிப்புகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் கள்.

இந்நிறுவனங்களுக்கு வரி விடு முறை அளிப்பதில் மாநிலங்களுக் கிடையே பெரும் போட்டி நிலவு கிறது. மானிய விலையில் தண்ணீர், மிகக்குறைந்த விலையில் வெட்டில் லாத மின்சாரம், அரசு செலவில் சாலை மற்றும் விமானப் போக்கு வரத்து ஏற்பாடுகள், கட்ட மைப்பு வசதிகள் என எல்லா மாநிலங் களும் அறிவித்துக் கொண்டிருக் கின்றன.

“சட்டம் குறைந்த நாடாக இந்தியாவை மாற்றுவோம்” என அறிவித்து, மோடி நாடு தழுவிய அளவில் தொழிலாளர் சட்டங் களையும், சுற்றுச்சூழல் சட்டங் களையும், உள்ளாட்சி சட்டங் களையும் கிட்டத்தட்ட இல்லாத தாக்குவதுபோல பல்வேறு கட்சி களின் மாநில அரசுகள் செய்கின் றன. இந்தப் போக்கில், கட்சி களிடையே பெரிய வேறுபாடு ஏதுமில்லை.

வேளாண்மையை உறுதியாகப் பாதுகாத்து நிற்கும் மாற்று வளர்ச் சிப் பாதையை இவர்கள் யாரும் முன்வைப்பதில்லை. எரி ஆற்ற லுக்கு நிலக்கரியையோ, பெட்ரோ லையோ பெருமளவு சாராத காற் றாலை மின்சாரம், கதிரவன் மின் சாரம், கழிவிலிருந்து மின்சாரம் போன்றவையும், பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை விழுங்கும் பெருந் தொழில்கள்- பெரும் சாலைக் கட்டமைப்புகள் ஆகியவற்றைச் சாராமல் சிறு தொழில் - சிற்ற ணைகள் - சிறு குறு உற்பத்தி முறை உற்பத்தி நடுவங்களையே சுற்றி விரியும் சந்தை - அதற்கேற்ற நுகர்வு அறம் என்ற மாற்றுப் பாதைதான் வேளாண்மையைப் பாதுகாக்கும்.

இவை ஒருபுறமிருக்க, உடனடிக் கோரிக்கையாக அந்தந்த மாநிலங் களும் தனி வேளாண் மண்டலம், வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவோடு குறைந்தது 50 விழுக்காடு சேர்த்து வழங்கும் இலாப விலை, உலக வர்த்தகக் கழகப் பேச்சுவார்த்தையிலிருந்து வேளாண்மைத்துறையை வெளியே எடுத்தல் என்பனவற்றை முன் வைப்பதற்குக்கூட பொதுவுடை மைக் கட்சி உள்ளிட்ட எந்த எதிர்க் கட்சியும் அணியமாக இல்லை.

இந்தியாவிலிருந்து வேளாண் விளை பொருட்கள் வெளிநாடு களுக்கு ஏற்றுமதியாவது மிக மிக அரிதாக இருக்கும்போது, உலகச் சந்தை பேச்சுவார்த்தையின் போது, இந்திய வேளாண் சந்தையை இணைப்பதென்பது கோட்பாட்ட ளவில் பிழையானது என்று சொல்வதற்குக் கூட இங்கு தேர்தல் கட்சிகள் எதுவுமில்லை. பொதுவுடைமைக் கட்சிகளுக்கு இவ்வாறான சிந்தனை ஏதுமில்லை.

இதனால்தான் இவ்வளவு அமளிகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையில்கூட, எப்படியும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறை வேற்றவிடலாம் என்ற துணிச் சலில் நரேந்திர மோடி இருக்கிறார். “ஆலோசனை வழங்குங்கள். அதை ஆய்வு செய்வதற்கு நான் அணிய மாக இருக்கிறேன்’’ என நாடாளு மன்றத்தில் அவர் சொல்வது, வெறும் சனநாயகத் தோற்றத் துக்காக மட்டுமல்ல.

மாறாக ஏதோ சில ஆலோச னைகள் வழங்குவது என்ற பெய ரால் மேலோட்டமான திருத் தங்கள் சிலவற்றை முன் மொழிந்து, அதை மோடியும் ஏற்றுக் கொண்டு அதன் பிறகு நிலம் கையகப்படுத்தல் சட்டம் நிறைவேறுவதற்கு நேரடி யாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பது என்ற சில எதிர்க்கட்சிகளின் சதித்திட்டமும் இதற்குள் இருக்கிறது.

மாநில அரசுகள் விரும்ப வில்லையென்றால், இச்சட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என மோடி சொல்வதற்கான காரணம், தாங்கள் ஆளும் மாநிலங்களில் இக்கட்சிகள் இச்சட்டத்தை தவ றாமல் செயல்படுத்துவார்கள் என்ற துணிச்சல்தான். இதே துணிச்சலில்தான், பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருமுதலா ளிகளும் இருக்கிறார்கள்.

எனவே, வேளாண்மையை இலாபமானத் தொழிலாக மகிழ்ச்சி யான வாழ்முறையாக மாற்ற வேண்டும் என்றமையக் கொள் கையில் இருந்து கொண்டு, அதற் கேற்ப சிறு, நடுத்தரத் தொழில்கள் சார்ந்த மாற்றுப் பொருளியலை கைக்கொள்வதுதான் இதற்கு உறுதி யான மாற்றாக இருக்க முடியும்.

தேர்தல் கட்சிகளை எதிர் பார்த் துக் காத்திருக்காமல், மக்கள் இயக் கங்களும் உழவர் அமைப்புகளும் தெளிவான இந்த மாற்றுக் கொள் கையோடு உறுதியாகக் கள மிறங்கி னால் மோடி அரசின் இந்த நிலப் பறிப்புச் சட்டம் நிறைவேறாமல் முறியடிக்க முடியும். இத் திசையில் அணிதிரள்வோம்!