தமிழ்நாட்டில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க மொழிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, தமிழ் இனத்தை இழிவுப்படுத்தும் கேலிச் சித்திரத்தை நடுவண் பள்ளி பாடப்புத்தகத்தில் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் (பக்கம்-153) “சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் அரசியல்” என்ற பகுதியில் ஒரு கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1965இல் மாணவர்களின் எழுச்சியான பங்கேற்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த கேலிச்சித்திரம் ஆகும் அது.

இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை ஏற்கும் வரை இந்தியுடன், ஆங்கிலமும் இந்தியாவின் இணை ஆட்சி மொழியாகத் தொடரும் என இந்திய அரசு வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து அப்போராட்டம் வருவதாக அறிவிக்கப்பட்டது. முடிவுக்கு வந்தது. ஆயினும் அந்த வாக்குறுதிக்குப் பிறகும் பல இடங்களில் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது. இதனை கிண்டல் செய்து 1965இல் டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டில் வந்த கேலிச் சித்திரத்தை இந்திய அரசின் தேசிய பாடத்திட்டக் குழு 12ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இணைத்துள்ளது.

அச்சித்திரத்தில் ஒரு தமிழ் மாணவன் இரண்டு கைகளிலும் கற்களை ஏந்தியபடி நிற்கிறான். அவனுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையை முகத்தில் கேள்விக் குறியோடு உற்று நோக்குகிறான். அதில் “ASSURANCES: NO HINDI! ENGLISH TO CONTINUE! NO COMPULSION TO LEARN HINDI. NO HINDI, ENGLISH FOR EVER“ என்று எழுதப்பட்டுள்ளது. (”இந்தி இல்லை. ஆங்கிலம் தொடரும் இந்தி கற்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்தி இல்லை. ஆங்கிலம் எப்போதும். “என்பது அதன் பொருள்) அந்த அறிவிப்பு பலகைக்கு முன்னால் பக்தவச்சலம் நிற்கிறார். இன்னொரு ஓரத்தில் இராசாசி நிற்கிறார். 1965 மொழிப் போராட்டத்தின் போது ”இந்தி ஒரு போதும் வேண்டாம்; ஆங்கிலம் எப்போதும் வேண்டும்” (HINDI NEVER , ENGLISH EVER) என்று முழக்கம் கொடுத்தவர் இராசாசி. இதை குறிப்பதற்காக இராசாசி படம் அச்சித்திரத்தில் இடம் பெற்றிருக்கக்கூடும்.

மாணவனைப் பார்த்து பக்தவச்சலம் கூறுவ தாக இடம் பெற்றுள்ள வாசகம் தான் சிக்கலுக்குரியது. “THE BOY CAN’T READ ENGLISH EITHER” (பையனுக்கு ஆங்கிலத்தையும் படிக்க இயலவில்லை) என்று அந்த வாசகம் கூறுகிறது. 

தமிழ்நாட்டு மாணவன் தனக்கு இந்தி படிக்க இயலாததால்தான் மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டது போலவும், இப்போது ஆங்கிலம் தொடரும் (ENGLISH TO CONTINUE) என்ற ஆங்கில வாசகத்தையும் அவனால் படிக்க முடியாமல் விழிக்கிறான் என்பது போலவும் இச்சித்திரம் கேலி பேசுகிறது .

இந்திய வல்லாதிக்கத்தின் இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழக மாணவர்கள் நடத்திய தமிழ் மொழி காப்பு போராட்டத்தை - தமிழ்த் தேசிய எழுச்சியை, இந்தி மொழியை படிக்க முடியாததால் நடத்தப்பட்டப் போராட்டமாக இக்கேலிச் சித்திரம் இழிவுப்படுத்துகிறது. தமிழ்நாட்டு மாணவர்க்கு ஆங்கிலமும் தெரியவில்லை என பகடி செய்கிறது.

1965 மொழிப் போராட்டம் நடந்துக் கொண்டிருந்த போது அப்போராட்டத்தை எதிர்த்தும், கேலி செய்தும் வடநாட்டு ஏடுகள் எழுதின. அவற்றில் ஒன்றுதான் டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டில் வந்த இந்த ஆர்.கே.இலட்சுமணனின் கேலிச் சித்திரம். அதனை பள்ளிப் பாடப்புத்தகத்தில் இப்போது இணைக்க வேண்டிய அவசியம் என்ன?

“அக்கேலிச் சித்திரத்தை தனித்துப் பார்க்கக் கூடாது; அப்புத்தகத்தில் வந்துள்ள முழுப்பாடத்தையும் சேர்த்து பார்க்க வேண்டும். இந்திய அரசின் பாடத்திட்ட உருவாக்கத்தில் முதல் முறையாக திராவிட இயக்கத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அப்போராட்டக் காலத்தில் இந்து ஏட்டில் வெளிவந்த போராட்ட புகைப் படங்களும் இடம் பெற்றுள்ளன” என்று தேசியப் பாடத்திட்ட குழுவின் முதன்மை ஆலோசகராக இருந்த யோகேந்திரயாதவ் கூறுகிறார். கேள்வி கேட்டு பதில் தேடும் புதிய பாடமுறைக்கு ஏற்ப பல கருத்துகளும் இடம் பெறத்தக்க அளவில் இப்பாடம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த முறைக்கு இசையவே இக்கேலிச்சித்திரமும் இடம் பெற்றுள்ளது என்கிறார்.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற முழக்கத்தோடு எழுந்த திராவிட இயக்கம் முனைந்து நடத்திய போராட்டங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டமும் ஒன்று என அப்பாடத்தில் வருகிறது. அதைத்தவிர இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கான காரணத்தையோ, அதன் பின்னணியையோ இந்திய அரசு மற்றும் தமிழகம் ஆகிய இருகோணங்களிலிருந்தும் மேலோட்டமாக கூட விளக்கிவிடவில்லை.

இந்நிலையில் இந்தி ஆதிக்கவாதிகளின் கோணத்திலிருந்து வெளியான இக்கேலிச் சித்திரத்தை வெளியிட்டது பாடத்திட்ட தயாரிப்பின் பன்முக அணுகுமுறை என்பதாக ஏற்க முடியாது.

கூடுதலாக மொழிகள் படிக்க முடியாதவன் நடத்திய போராட்டமாக ஒரு மாபெரும் மொழிக்காப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தமிழினம் குறித்த இழிவான படிமத்தை இன்றைய மாணவர்களிடம் பரப்புவதே இக்கேலிச் சித்திரத்தை பாடப்புத்தகத்தில் சேர்த்ததன் நோக்கமாகும். இது கடும் கண்டனத்துக்குரியது.

எனவே, இந்திய அரசு சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இக்கேலிச் சித்திரத்தை உடனடியாக அகற்றிவிட வேண்டும்.

தமிழ்நாட்டுப் பாடநூலிலும் பிழை

வட நாட்டார் தயாரித்த பாட நூல்களில் தமிழினம் இழிவுப்படுத்தப்படுகிற தென்றால் தமிழ்நாட்டுப் பாட நூலில் இந்தி மொழிக்கு இல்லாதப் பீடமெல்லாம் அளிக்கப்படுகிறது.

சமச்சீர்க் கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசின் பாடநூல் நிறுவனம் அணியப்படுத்திய 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திலேயே இந்த அவலம் நிகழ்ந்துள்ளது.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பாடப் பகுதியில் (பக்கம்: 253) இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இது முற்றிலும் பிழையான தகவல். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்தியாவை தேசம் என்றோ, இந்திமொழியை தேசிய மொழி என்றோ எங்கும் குறிப்பிடவில்லை. ‘தேவ நாகரி எழுத்திலுள்ள இந்தி இந்தியாவின் அலுவல் மொழி’ (official language) என்றே இந்திய அரசமைப்புச் சட்டம் வரையறுக்கிறது.

அலுவல் மொழி என்ற வகையிலேயே இந்தி ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டு நம் தமிழ் மொழி அழுத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில் இந்தியாவின் தேசிய மொழி இந்தி எனக்குறிப்பதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவின் அனைத்து நிலையிலும் தொடர்பு மொழியாக இந்தியை தமிழக மாணவர்களின் மனதில் தவறாகப் பதிய வைக்கவே இது பயன்படும்.

இந்தித் திணிப்பை எதிர்த்து 1965லும் அதற்கு முன்னர் 1938லும் தமிழர்கள் நடத்திய மொழிக்காப்புப் போராட்டம் பாட நூல்களில் குறிக்கப்பட வேண்டும். என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழ் இனத்தின் மகத்தான தற்காப்புப் போராட்டமான மொழிப்போராட்ட வரலாறு பாட நூல்களின் வழியாக சொல்லித் தரப்படாததால் அடுத்தடுத்த தலைமுறைகள் அதன் தேவையை அறியாதவர்களாக உருவாகி விட்டார்கள்.

இன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் பெருமளவு வட நாட்டு வேலைவாய்ப்பை பெற முடியாமல் தடுக்கப்பட்டதாக புலம்புவோர் பெரும் தொகையினராக உள்ளனர்.

மொழிப் போராட்டத்தின் விளைவாக இந்தித் திணிப்பு தடுக்கப்படாமல் தமிழ் நாட்டிலும் மும்மொழிக் கொள்கை செயல்பட்டிருக்குமானால் தமிழ்நாட்டு அரசு வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கு இந்தியிலும் வினாத்தாள் அளித்து நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் அவ்வாறு நடக்கும்போது வட நாட்டவர்கள் இந்தியில் போட்டித் தேர்வு எழுதி வெற்றிப்பெற்று நம் கிராமங்களில் கிராம அலுவலர்களாகவும் வட்டாட்சியராகவும் காவல் நிலைய அதிகாரிகளாகவும் ஆக்கிரமித்திருப்பர்.

தமிழர்கள் போய் வட நாட்டு வேலைவாய்ப்பை பெருவதற்குமாறாக தமிழ் நாட்டு வேலை வாய்ப்பில் வட நாட்டார் ஆக்கிரமிப்பு நிகழ்ந்திருக்கும்.

மொழிப் போராட்ட வரலாறு பாடப்புத்தகத்தில் இடம் பெறாததால் இந்த விழிப்புணர்வு மங்கிவிட்டது.

இந்நிலையில் இந்தியை தேசிய மொழி என்று அலங்கரித்துச் சொல்வதன் மூலம் தமிழக மாணவர்களிடையே இன்னும் தாழ்வு மனப்பான்மையே விதைக்கப்படுகிறது.

எனவே தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தயாரித்த 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இந்தி, இந்தியாவின் தேசிய மொழி எனக் குறிப்பிட்டிருப்பதை உடனடியாக தமிழக அரசு நீக்க வேண்டும்.