அரசின் வணிகமயக் கல்விக் கொள்கையும், அரசு அதிகாரிகளின் அலட்சியமும், மக்களின் ஆங்கில மோகமும் மீண்டும் பத்து உயிர்களை வேதாரணியத்தில் காவு கொண்டிருக்கிறது.

நாகை மாவட்டம் வேதாரணியத்தை அடுத்த கரியாப்பட்டினம் என்ற பகுதியில் கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு வரை தேவி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி என்ற பெயரில் செயல்பட்டுவந்த பள்ளி இந்தக் கல்வி ஆண்டு முதல் கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி என்ற பெயரில் செயல்பட்டது.

கரியாப்பட்டிணத்தைச் சுற்றியுள்ள நாகக்குடையான், கத்தரிப்புலம், செட்டிப்புலம், மருதூர், வடமழை, மணக்காடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாணவர்களை 5 சிற்றுந்துகளில் (VAN) அழைத்து வருகின்றனர்.

03.12.2009 அன்று காலை சுமார் 8 மணியளவில் நாகக்குடையான் பகுதியில் பள்ளி மாணவர்களையும் ஆசிரியை சுகந்தியையும் ஏற்றிக் கொண்டு வரும்போது கத்தரிப்புலம் ஊராட்சிக்குட்பட்ட பனையடிக் குத்தகைப் பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் சாலையோரக் குளத்தில் கவிழ்ந்து ஆசிரியை சுகந்தி (வயது 21) மற்றும் 9 பள்ளி மாணவ மாணவிகள் இறந்துள்ளனர்.
 
இந்தப் பள்ளி வாகனத்தை செட்டிப்புலத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஓட்டும்போது கைபேசியில் பேசிக் கொண்டே ஓட்டியுள்ளார். சாலையின் தன்மையறியாது கவனக் குறைவாக வாகனத்தை இயக்கியுள்ளார். இதனால் சாலையோரக் குளத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்தது.
 
1.மகாலெட்சுமி(வயது 9), 2. அபிநயா (3), 3. விஜிலா(4), 4. அஜய்(6), ஹரிஹரன் (3), ஈஸ்வரி (7), 7. அஜய் (6), 8. ஜெயசூர்யா (4), 9. ஜெயபிரசாத் (5) மற்றும் ஆசிரியை சுகந்தி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

2004 சூலை 16 அன்று குடந்தை சரஸ்வதி நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தீ விபத்தில் 93 குழந்தைகள் கருகிப் போயினர்.இந்த விபத்துக்குப் பிறகு கல்வித்துறை அதிகாரிகள் இந்தப் பள்ளி முறையான அனுமதி பெறவில்லை. விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளிக்கட்டிடம் கட்டவில்லை என்றனர். கூரைக் கட்டிடங்களுக்குத் தடைவிதித்தனர்.

குடந்தை நிகழ்வைப் போலவே பனையடிக் குத்தகையில் விபத்து நடந்த பிறகு கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி முறையான அங்கீகாரம் பெறவில்லை என்று சொல்லி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வீராச்சாமி 250 மாணவர்களும் 226 மாணவிகளும் ஆக மொத்தம் 476 மாணவர்கள் படித்து வரும் பள்ளியை இழுத்து மூட உத்தரவிடுகிறார்.
 
விபத்துக்குள்ளான வாகனம் தனியார் சொந்தப் பயன்பாட்டுக்குரியது. அதனைப் பள்ளி வாகனமாகப் பயன்படுத்தியது, 13 பேரை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டிய வாகனத்தில் 21 பேரை அழைத்துச் சென்றது ஆகியன மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம் என்கிறார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன். மேலும், கரியாப்பட்டினம் காவல்நிலையப் பரிந்துரை கிடைத்ததும் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும், ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப் பரிந்துரைக்கப்படும் என்கிறார். பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ50,000, ஆசிரியை சுகந்திக்கு ஒரு இலட்சம் என்று 5.5 இலட்சம் நிவாரணத் தொகையை அறிவித்து தமிழக முதல்வர் கருணாநிதி தன் கடமையை முடித்துக் கொண்டார்.
 
பத்துப்பேரின் மரணம் என்பது வெறும் விபத்தல்ல. சமூகச் சீர்கேட்டின் வெளிப்பாடு. தமிழகத்தில் 1964 வரை இலவசப் பள்ளிக் கல்வி நடைமுறையில் இருந்த நிலை மெல்ல மெல்ல மாறி 1978க்குப் பிறகு கல்வி வணிகமயமானது. மெட்ரிகுலேசன் பள்ளிகள் தனி அரசையே நடத்துகின்றன. ஆங்கிலக் கல்வி என்னும் பெயரில் கொள்ளையடிக்கின்றனர்.

“மெட்ரிகுலேசன் பள்ளி 1950 ஆம் ஆண்டு வாக்கில் உருவானவை. இவை பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்தன. பல்கலைக் கழகங்கள்தாம் இவற்றுக்குத் தேர்வு நடத்தின. 1977ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 29 மெட்ரிக் பள்ளிகளும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு பள்ளியும் ஆக 30 பள்ளிகள் மட்டுமே இருந்தன. இவை அனைத்திலும் பணம் கட்டிப்படிக்க வேண்டும். ஆங்கிலமே பயிற்று மொழி. 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளைத் தமிழக அரசின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று முன் மொழியப்பட்டது.
 
அவசர நிலைப்பிரகடன காலத்தில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி இருந்த போது 19.7.1976 அன்று சென்னைப் பல்கலை மெட்ரிக் பள்ளி பிரதிநிதிகள் கலந்து பேசி தமிழக அரசு தனியாக மெட்ரிகுலேசன் வாரியம் உருவாக்கி அதன் இயக்குநர் கீழ் அது செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டது. பயிற்று மொழி, பண வசூல் எல்லாம் பழைய மாதிரியே தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது.

25.07.1977 நாளிட்ட G.O.MS.No. 1720 (கல்வித்துறை) ஆணை மெட்ரிகுலேசன் வாரிய உறுப்பினர்கள் குறித்து வரையறை செய்தது. மெட்ரிகுலேசன் விதிமுறைகளையும் அவ்வாணை வகுத்தது. 1987ல் மெட்ரிக் பள்ளிகள் 200 ஆயின. 1992ல் இவை 1000 ஆயின. இப்பொழுது 2000க்கும் மேல் உள்ளன.” (நேர்மையற்ற தீர்ப்பு நெருப்புக்குத் தீனி - பெ. மணியரசன்)

அரசின் பொறுப்பில் இருந்த கல்வி தனியார்மயம் ஆக்கப்பட்டு உள்ளது. மது விற்பனை அரசு உடைமை ஆக்கப்பட்டு உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் நடத்தி வருகின்றனர். கல்வி முழுக்க முழுக்க வணிகமயமாகி உள்ளது.

மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்குத் தனிவாரியம் என்பதால் அரசுத்துறை கல்வி அதிகாரிகள் மெட்ரிகுலேசன் பள்ளிகளைக் கண்காணிப்பது இல்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்கலாம். மெட்ரிகுலேசன் பள்ளிகளைக் கண்காணிக்கும் அதிகாரி (Inspector of Matriculation School . IMS) விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

ஆங்கிலமயத்துக்கு ஆதரவான தமிழக அரசின் கல்விக் கொள்கையால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல் பணம் கொடுத்து தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். நாகக்குடையான், கத்தரிப்புலம், செட்டிப்புலம் பகுதிகளில் அரசு தொடக்கப்பள்ளி, அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் பல உள்ளன. ஆங்கில வழிக்கல்வி என்பதற்காகவே சுமார் 8 கி.மீ தொலைவு உள்ள கரியாப்பட்டினம் கலைவாணி மகா மெட்ரிக் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர். அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில்தான் படிக்க வைக்கின்றனர்.

கலைவாணி மகா மெட்ரிக் பள்ளியினை மாதம்தோறும் ஆய்வு செய்த அதிகாரிக்கு அது அங்கீகாரம் பெறாத பள்ளி என்று தெரியாதா? மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மெட்ரிக் பள்ளியை ஏன் கண்காணிக்கவில்லை?
 
பத்திரகாளியம்மன் கோவிலுக்குச் சொந்தமான குளத்தை ஊராட்சிமன்றத் தலைவி திருமதி. குணசேகரிராசன் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விட்டுள்ளார். பனையடிக் குத்தகை பகுதியைச் சார்ந்த திரு. சந்திரசேகர் என்பவர் குளத்தை ஏலம் எடுத்து பொக்கலையன் எந்திரம் மூலம் 20 அடி வரை ஆழப்படுத்தி உள்ளார். இந்த நீரைப் பயன்படுத்தி கார்த்திகைக் கிழங்கு, கடலை போன்ற பணப் பயிர்களை வேளாண்மை செய்து வருகிறார். சாலை ஓரத்தில் 20 அடி ஆழம் உள்ள குளத்தைச் சுற்றி எந்த விதத் தடுப்பும் இல்லை. எச்சரிக்கைப் பலகையும் இல்லை. (15.12.2009 அன்று விபத்து நடந்த 16-ம் நாள் பார்த்தபோது கூட இப்படித்தான் இருந்தது)

கலைவாணி மகா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தங்கராசு கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வாங்கியவர். பணியில் இருக்கும் போதே தேவி மழலையர் மற்றும் நர்சரிப்பள்ளி நடத்தி வந்தார். ஓய்வு பெற்ற பிறகு கலைவாணி மெட்ரிக் பள்ளியாக மாற்றம் செய்தார்.

விபத்துக்குள்ளான பள்ளி வாகனம் தேத்தாகுடி அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரியும் கார்த்திகேயனுக்குச் சொந்தமானது. தனது உறவினர் சுமித்ரா பெயரில் வாகனத்தைப் பதிவு செய்துள்ளார். சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கிய வண்டியை விதிமுறைகளை மீறி பள்ளி வாகனமாக வாடகைக்கு விட்டுள்ளார்.

பள்ளி வாகன விபத்துக்கு முதல் குற்றவாளி வாகன ஓட்டுநர் மகேந்திரன். இரண்டாவது குற்றவாளி வாகன உரிமையாளர். மூன்றாவது குற்றவாளி பள்ளி தாளாளர் என்று காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதிகாரிகள் தங்கள் கடமையினை உணர்ந்து செயல்படாததற்கு யார் தண்டனை தருவது?
 
2003ல் முன்வைக்கப்பட்ட சிட்டிபாபு ஆணைய அறிக்கை, குடந்தை தீ விபத்திற்குப் பிறகு நீதிபதி சம்பத் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை ஆகியவற்றை அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. குடந்தை மற்றும் வேதாரணியம் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் அரசு தொடக்கக்கல்வி முதல் பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்துக் கல்வியையும் தமிழில் வழங்க வேண்டும். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான தனி வாரியத்தை உடனடியாகக் கலைக்க வேண்டும். உள்ளூர்ப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் ஆசிரியர்களும் தமது கடமை உணர்ந்து செயலாற்ற வேண்டும். இல்லையெனில் குடந்தை, வேதாரணியம் போல் பேரழிவுகள் தொடர்வதைத் தடுக்க முடியாது.

உயிர் கொடுத்து உயிர்காத்த பெண்
 
பள்ளி வாகனம் விபத்துக்குள்ளான போது ஆசிரியை சுகந்தி 11 குழந்தைகளை வாகன உதவியாளர் சுப்பிரமணியன் உதவியோடு காப்பாற்றிவிட்டு அடுத்த குழந்தையைக் காப்பாற்ற முனைந்தபோது பரிதாபமாக இறந்தார். ஏழ்மை மிகுந்த விவசாயக் குடும்பத்தில் திரு. மாரியப்பன் திருமதி. அன்னலெட்சுமி தம்பதியருக்கு மகளாகப் பிறந்து தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முடித்தவர் ரூ1000 மாதச் சம்பளத்திற்கு அந்தப் பள்ளியில் பணி புரிந்தார். தன் உயிரையும் பொருட்படுத்தாது 11 மாணவர்களைக் காப்பாற்றிய சுகந்தியின் பெருங்குணம் போற்றத்தக்கதாகும்.

- நா.வைகறை - இ.தனஞ்செயன்