1989 ஆம் ஆண்டு மே 1 தொழிலாளர் நாள் அன்று கன்னியாகுமரியில் அணு உலைக்கு ஒப்பந்தம் போட ராஜீவ்காந்தி வரும் போது எனக்கு 24 வயது. எங்கள் மக்களோடு அணு உலை வேண்டாமென்று போராடினோம். காவல்துறை கூட்டத்திற்குள் கல் எரிந்து, காவல் துறை வாகனத்தை அவர்களே உடைத்து விட்டு வன் முறையை தூண்டி விட்டனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவர் உயிரிழந்தார், ஒருவருக்கு கால் போய்விட்டது. என்னையும், என்னைச் சார்ந்த பெண்களையும் பச்சை மட்டையால் கடற்கரை ஓரம் வழியாக விரட்டி அடித்து பதினாறு ஆண்களை கைது செய்தார்கள். அப்போது எங்கள் போராட்டத்தை வெளி உலகத்திற்கு எடுத்துச் செல்ல தொலைக்காட்சி, பத்திரிகை போன்ற ஊடகங்கள் இல்லை. அதனாலே எங்கள் போராட்டம் வெளியே தெரியவில்லை.

அப்பொழுது போராடிய மக்களைத் தவிர, மற்றவர்களுக்கு அணு உலையின் ஆபத்தைப் பற்றித் தெரியவில்லை. கடந்த 2011 மார்ச்சு 11 ஆம் நாள் ஜப்பானில் புகுசிமா அணு உலை சுனாமியால் வெடித்துச் சிதறிய நிகழ்வை, தொலைக் காட்சியில் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைத்து மக்களும் பார்த்தபோது தான் அதன் ஆபத்தை தெரிந்து கொண்டார்கள். அதன் ஆபத்தை பார்த்த பிறகுதான் கூடங்குளம் அணு உலை எவ்வளவு ஆபத்து என்று புரிந்து கொண்டார்கள். அதன் பிறகு நாங்கள் தொடர் போராட்டம் நடத்தினோம்.

மார்ச்சு 11 லிருந்து துண்டறிக்கைகள், தெருமுனைக் கூட்டம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

எங்களைப் போலவே 2007 ஆம் ஆண்டிலிருந்து அணு உலையின் கதிர் வீச்சால் வருகிற புற்று நோய் தைராய்டு போன்றபாதிப்புகளை துண்டறிக்கைகள் மூலமும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தவர்தான் எங்கள் உதயகுமார். அதன் பிறகுதான் ஆகஸ்ட்டு 16 ஆம் நாள் இடிந்தகரையில் வைத்து அணு உலையின் பாதிப்புகள் பற்றி ஒரு கருத்தரங்கு நடத்தினோம். அதில் பல கிராம மக்கள் கலந்து கொண்டார்கள். உதயகுமாரையும் நாங்கள் முதன் முறையாக அழைத்தோம் பேசினோம். நாங்கள் அன்றுதான் கடுமையான முடிவெடுத்தோம். ஆபத்தான அணு உலை மக்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று. அதனால் தொடர் போராட்டம் செய்ய முடிவெடுத்து முதலில் உண்ணாப் போராட்டம் செய்தோம். 2011 செப்டம்பர் 11 ஆம் நாள் 127 பேர் அமர்ந்து 12 நாள் உண்ணாப் போராட்டம் செய்தோம்.நான் செல்வி, சுந்தரி உள்ளிட்ட மூன்று பேரும் கலந்து கொண்டோம்.

அதன் பிறகு எத்தனையோ உண்ணாப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து நடத்தினோம். அப்போது எத்தனையோ கட்சித் தலைவர்கள் வெவ்வேறு அமைபுகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அப்போதுதான் வந்தார் நடுவண் அமைச்சர் நாராயணசாமி. எவ்வளவு பாதுகாப்போடு வரவேற்றோம். 127 பேரையும் பார்த்து கண்ணீர் மல்க கூறினார் “ அரசாங்கத்துக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகதான் அரசாங்கம் என்று, இவ்வளவு மக்கள் உள்ள பகுதியில் ஆபத்தான அணு உலைக் கூடாது. நான் பிரதமரிடம் சொல்வேன் என்றார். நாங்கள் அவரை ,மிகுந்த மரியாதையுடனும் அனுப்பி வைத்தோம். ஆனால் அப்போது ஆபத்து என்று சொன்ன அவர் வாய் இப்போது அணு உலை பாதுகாப்பானது என்று பேசுகிறது. அப்போதுதான் நடுவண் அரசு எங்கள் போராட்டத்தை நலிவடையச் செய்து எங்கள் மக்களை கொச்சைப்படுத்திப் பேசத் தொடங்கியது.

உதயகுமார்தான் போராட்டத்தைத் தூண்டி விடுகிறார் என்றும் வெளி நாட்டிலிருந்து பணம் வருகிறது என்றும் கூறியது. நங்கள் குடும்ப அட்டைக்கு 200 ரூபாய் வீதம் பிரித்து எங்கள் லூர்து மாதா ஆலயம் முன்பாக ஒலைப் பந்தல் போட்டோம். மீனவர்கள் கடலுக்குள் போய் வாரத்தில் ஒரு நாள் கிடைக்கும் வசூலில் 10 இல் ஒரு பங்கு போராட்டத்திற்கு கொடுப்பார்கள். விவசாயி மக்கள், வியாபாரிகள் அவர்களால் இயன்றதை கொடுப்பார்கள். அப்படித்தான் பணம் சேர்த்தோம்.

நாங்கள் உண்ணாநிலை இருந்து அறவழியில்தான் போராடினோம். எந்த வன்முறையும் செய்ய வில்லை எந்த அரசாங்க பொருளுக்கும் சேதம் விளைவிக்காமல்தான் போராட்டம் நடத்தினோம். அப்போது தமிழக அரசு எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, அம்மா அவர்கள் “ நான் உங்களில் ஒருத்தி. மக்களோடு மக்களாகத்தான் இருப்பேன். மக்கள் அச்சம் தீரும் வரை அணு உலைப் பணிகளை நிறுத்தி வையுங்கள்” என்றார்கள். நாங்கள் எந்த ஊருக்கு ஆர்ப்பாட்டம், செய்ய சென்றாலும் எங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு தந்து தமிழக அரசு போராடத் துணை நினறது. அப்போதெல்லாம் எங்களை கைது செய்யாத அரசு சங்கரன் கோயில் இடைத்தேர்தல் வந்த பிறகு எங்கள் மக்கள் போட்ட வாக்கில் வெற்றிப் பெற்ற பிறகு பதவி வெறிப் பிடித்து மார்ச்சு 19 ஆம்நாளன்று எங்கள் மக்களை கைது செய்து அணு உலை திறக்க ஆணையிட்டார்கள்.

எத்தனையோ உண்ணாப் போராட்டங்கள் 8 நாள், 5 நாள், 3 நாள் என எல்லா உண்ணாப்போரட்டத்திலும் நாங்கள் மூவரும் கலந்து கொண்டோம்.(சேவியர், சுந்தரி, செல்வி) ஆனால் 2012 மார்ச்சு 19 அன்று எங்கள் மக்களை கைது செய்தவுடன் உதயகுமார் சாகும் வரை உண்ணாப்போராட்டம் அறிவித்து அவரும் புஷ்பராயன் அண்ணனும் இருந்தார்கள். நான் உட்பட 9 பெண்களும், 8 ஆண்களும் கலந்து கொண்டோம். 5 நாளுக்கு பிறகு உதயகுமார் அண்ணனுக்கு உடல் நிலை மோசமானது. உடனே அவர்களை நாங்கள் எழும்பச் சொன்னோம். அவர் “எம் மக்கள்தான் முக்கியம் நீங்களே இருக்கும் போது நான் செத்தாலும் பரவாயில்லை நான் இருப்பேன்” என்றார்கள். அரசு மருத்துவ மனையிலிருந்து 6 நாளுக்கு பிறகு ஒரு மருத்துவர் வந்தார். “ உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது அவரை மருத்துவமனையில் வைத்துதான் பார்க்க வேண்டும்” என்றார். “எங்களுக்கு இங்கு வைத்து வேண்டுமானால் மருத்துவம் பாருங்கள் கூட்டிக்கொண்டு போக வேண்டாம்” என்று கூறிவிட்டோம். 7 ஆம் நாள் ஆம்புலன்சில் உதயகுமாரை கொண்டு போக மருத்துவர் வேடமணிந்து காவல் துறை வந்தது. அவர்கள் காவல் துறைதான் என்று தெரிந்து பெண்கள் நாங்கள் அடித்து விரட்டிவிட்டோம்.

 … “பாருங்கள் அரசாங்கம் செய்யும் சூழ்ச்சியை! உதயகுமார் கொலை செய்தாரா? களவு செய்தாரா! ஊழல் எதுவும் செய்தாரா? ஏன் மறைந்து இருந்து அவரைக் கைது செய்ய வேண்டும். வேண்டுமென்றால் அவர் செய்தக் குற்றங்களை நிரூபிக்க வேண்டியதுதானே..!

9 ஆம் நாள் மாவட்ட ஆட்சித்தலைவர் எங்களில் கொஞ்ச பேரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். “உண்ணாப் போராட்டத்தை கைவிடுங்கள் நாங்கள் கைது செய்தவர்களை விடச் சொல்கிறேன்” என்றார் 2012 மார்ச்சு 19 சங்கரன் கோயில் இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்றவுடனே எங்கள் ஊருக்கு 144 தடை உத்தரவு போட்டது அரசு. பால் வண்டி உட்பட அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. பால் வண்டி வராமல் எங்கள் ஏழை மக்கள் பாட்டிலில் நீர் நிரப்பி குழந்தைகளுக்குக் கொடுத்த காட்சி இப்போது நினைத்தாலே கண்ணில் நீர் நிறைகிறது. அந்தக் காட்சியினை பார்த்த ஊடகத்தினர் மனித நேயத்தோடு சிலருக்கு பால் பவுடர் வாங்கிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு இருந்த அந்த இரக்க மனசுகூட நாங்கள் ஓட்டுப் போட்டு தூங்கி வைத்த ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

எங்கள் கடலோர மக்கள் எங்களுக்கு ஆதரவாக அரிசி, பருப்பு தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை படகு மூலம் கொண்டு வந்து கொடுத்தார்கள். இந்த நிலையில்தான் உதயகுமார், புஷ்பராயன் நான் உட்பட 15 பேர் 9 நாள் உண்ணாநிலை இருந்தோம். அப்பொழுது மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சு வார்த்தைக்கு அழைத்த வுடன் ஊருக்கு ஒரு நபர் போக வேண்டும் என்று முடிவெடுத்தோம். இடிந்தகரையிலிருந்து சகோதரி சுந்தரி சென்றார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் “உண்ணாப் போராட்டத்தை கைவிடுங்கள், கைது செய்தவர்களை விடுதலை செய்கிறோம்” என்றார். அப்போது உதயகுமார் அண்ணன் “ அரசாங்கத்திற்கும் கொஞ்சம் கட்டுப்படுவோம் “ என்றார். அவரது உடல் நிலையும் கொஞ்சம் மோசமாக இருந்தது. அதனால் அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நாங்கள் 9 நாளோடு உண்ணாப்போராட்டத்தை முடித்துக் கொண்டு தொடர் உண்ணாப்போராட்டத்தில் இருந்தோம். அப்படி என்றால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேடையில் அமர்ந்திருப்போம். பிறகு கைது செய்தவர்களை கொஞ்சம் கொஞ்சம் பேராக விடுதலை செய்தது அரசு.

தமிழக அரசு மக்களுக்குள்ளே பிரிவினையை உண்டு பண்ண 500 கோடி வளர்ச்சித் திட்டங்கள் என்று ஆணை பிறப்பித்தது. மக்கள் அணு உலையால் மடிந்த பிறகு யாருக்கு வேண்டும் வளர்ச்சித் திட்டம். பணத்தைக் கண்டவுடன் ஊர் பஞ்சாயத்துத் தலைவர்கள் சிலர் குழப்பங்கள் செய்ய தொடங்கினார்கள். ஆனால் மக்கள் யாரும் அந்த திட்டத்தை ஆதரிக்க வில்லை. பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் கதையாக ஒவ்வொரு பஞ்சாயத்துத் தலைவர்களும் எங்களை விட்டு விலகத் தொடங்கினார்கள். நாங்கள் உறுதியாக இருந்தோம் அணு உலையை மூடினால் போதும் எங்களுக்கு இலவசங்களே வேண்டாமென்றோம்.

பிறகு உதயகுமாரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள். அப்போது பெண்கள் நாங்கள் அவரை அனுப்ப விரும்ப வில்லை. ஏனென்றால் முன்னொருமுறை மாவட்ட ஆட்சித்தலைவர் பேச்சு வார்த்தைக்கு அழைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றோம் நாங்கள் மூவர் உட்பட 16 பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றோம். வாசலில் நுழையும் போதே அங்கே ஏற்கெனவே மறைந்திருந்த காங்கிரசுக் கைக்கூலிகள், இந்து முன்னணியினர் கல் எரிந்து போராட்டக் குழுவினர் வந்த வண்டியை அடித்து நொறுக்கினார்கள். நாங்கள் பெண்கள் அனைவரும் அவர்களைப் பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தோம். அதன் பிறகு பெண்கள் என்றும் பார்க்காமல் எங்களை அந்தக் கைக்கூலிகள் மிதித்தார்கள். கையில் வைத்திருந்த வண்டி தலை கவசத்தால் (கெல்மட்) அடித்தார்கள். அதில் ஒரு பெண் (இனிதா) முழங்கையில் பலமான காயம் அடைந்தது. இன்னொரு சகோதரிக்கு ஒருவனுடைய நகம் பட்டு இரத்தம் பெருகியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள்ளேயே காவல் துறையினர் இருந்தும் எங்களுக்கு பாதுகாப்பில்லை என்றால் இந்த அணு உலை வெடித்தால் எங்களை அரசாங்கம் எப்படி பாதுகாக்கும். அன்று எங்களை அடித்தவர்களை கைது செய்வது போல் கண் துடைப்பு செய்தார்கள். அவர்கள் மீது ஒரு வழக்குக் கூட போடவில்லை. அதன் பிறகு நாங்கள் ஆட்சியர் அலுவலகம் வெளியே நின்று ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்தோம். அதன் பிறகு காவல்துறை எங்களை மூன்றடைப்பு காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்று எங்கள் மீது வழக்கு எழுதினார்கள். காயம் பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

அன்று நாங்கள் செல்ல வில்லையென்றால் உதயகுமாரை கொன்று இருப்பார்கள். பேச்சு வார்த்தைக்கு என்று கூப்பிட்டுவிட்டு ரவுடிக் கும்பலை வைத்து கொலை செய்யத் தூண்டியதே அரசாங்கம்தான் என்று பிறகு புரிந்தது. உதயகுமார் என்ன குற்றம் செய்தார் அவர் மீது ஏன் இவ்வளவு கொலைவெறியோடு நிற்கிறது இந்த அரசு? அதன் பிறகு அவரை நாங்கள் தனியாக எங்கும் அனுப்பவதில்லை.

அதன் பிறகு இனியன் குழு என்ற ஒரு குழுவை அனுப்பி கிராமம் கிராமமாக சென்று மக்களுடையே கருத்தைக் கேட்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது. பாதிக்கப்பட்ட மக்களாகிய எங்களிடம் கருத்துக் கேட்காமலேயே அணு உலை பாதுகாப்பாக உள்ளது என்று பொய்யான அறிக்கையை அரசுக்கு அளித்துவிட்டது.

இதன் பிறகு எத்தனையோ கேள்விகள் எத்தனையோ தீர்மானங்கள். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. இதன் பிறகுதான் அடுத்தக் கட்டமாக எரி பொருள் நிரப்ப அரசு அனுமதி வழங்கியது. இதற்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். பூவுலகில் நண்பர் சகோதரர் சுந்தர்ராசன் அவர்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். குழந்தைகளை கூட்டிக்கொண்டு நானும் என் கூட சேர்ந்த நால்வரும் முதலமைச்சரைப் பார்க்க சென்னைக்குச் சென்றோம். கடைசிக் கட்டத்திலாவது எரி பொருள் நிரப்ப அனுமதி வழங்கியதை ரத்து செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தீர்மானம் கொண்டு சென்றோம். அப்போதும் முதல்வர் அவர்களுக்கு மனம் இளக வில்லை. கடைசியாக எரி பொருளை நிரப்பாதே என்று முற்றுகைப் போராட்டம் அறிவித்தது போராட்டக் குழு. உடனே அரசு 144 தடை பிறப்பித்து போக்குவரத்தை தடை செய்தது.

2012 செப்டம்பர் 9இல் எங்கள் கடற்கரையில் எங்கள் மண்ணில் இருந்து கொண்டே எரி பொருளை நிரப்பாதே என்று முழக்கங்கள் போட்டோம். எங்கள் உரிமையைக் கேட்டுத்தானே போராடினோம். அணு உலையை நாங்கள் உடைக்க வில்லை. எந்த காவல் துறைக்கும் நாங்கள் பங்கம் விளைவிக்க வில்லை. எங்கள் குடும்பங்கள் குழந்தைகள், இளைஞர்கள் என எல்லோரும் கடற்கரையில் அமர்ந்தோம். கன்னியாகுமரியிலிருந்து சமையல் செய்வதற்கு கடல் மூலம் அரிசி பருப்பு கொண்டு வந்து கொடுத்தார்கள். நாங்கள் கடற்கரையில் இருந்து கொண்டே சமையல் செய்து சாப்பிட்டோம். காவல்துறையினர் எங்களை சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டார்கள். செப்டம்பர் 10 காலை 10 மணி அளவில் கடற்கரையிலிருந்து ஜெபமாலை சொல்லிக் கொண்டு ஜெபம் செய்து கொண்டுதான் இருந்தோம். அதன் பிறகு எரி பொருளை நிரப்பாதே என்று முழக்கங்கள் எழுப்பினோம்.

அப்போது மாவட்ட ஆட்சியர் எங்களிடம் வந்து “ இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார். நான் சுந்தரி, செல்வி இன்னும் சில சகோதரிகள் இருந்தோம் அப்போது நாங்கள் “எங்களுக்கு ஒரு முடிவு தெரிவதற்கு முன்னால் நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம். இது எங்கள் கடற்கரை எங்கள் மண். நாங்கள் அப்படித்தான் இருப்போம்” என்றோம். உதயகுமார் எங்கே என்று கேட்டார். “அவரை ஏன் கேட்கிறீர்கள் கலெக்டர் ஆபிசில பேச்சு வார்த்தை என்று சொல்லி கொலை செய்ய பார்த்தீர்களே அதற்கா கேட்கிறீர்கள். அவர் போராடவில்லை. மக்கள் நாங்கள் தான் போராடுகிறோம் எங்களிடம் கருத்தைக்கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம்.” என்றோம். “ ஐந்து பேர் மட்டும் எழுந்து பேசுங்கள்” என்றார். அப்போது நாங்கள் எழுந்து நின்று பேசினோம். அவர் “ தடையை மீறி இங்கே வந்தது குற்றம்” என்றார். “நாங்கள் எங்கள் இடத்தில் இருக்க எங்களுக்குத் தடையா? நாங்கள் போர் புரிந்தோமா? கலகம் செய்தோமா? எங்களுக்கு எதுக்கு 144 தடை என்று” கூறினோம். பேச்சு வார்த்தை எங்களிடம் நடத்திக் கொண்டிருக்கையிலேயே காவல் துறையை விட்டு எங்கள் மக்களை சுற்றி வளைத்தனர். உடனே கண்ணீர் புகைக் குண்டு வீசத் தொடங்கினார்கள்.

எங்கள் மக்கள் மீது தடியடி நடத்தினார்கள், எங்கள் மக்கள், குழந்தைகள் நாலா பக்கத்திலும் கடலுக்குள் சிதறி ஓடினார்கள் குழந்தைகள் தண்ணீருக்குள் விழுந்தெழுந்ததைப் பார்த்தால் யாருக்கும் மனது இறங்கும் ஆனால், ஆட்சியருக்கோ, டி.ஐ.ஜி, டி.எஸ்.பிகோ இரக்கம் வராமல் விரட்டி அடித்தார்கள். எங்கள் உதயகுமார் எங்களுக்கு அறவழியைத்தான் சொல்லித் தந்திருக்கிறார். அதனாலேயே நாங்கள் மூவரும் அந்த இடத்தை விட்டு ஓடவுமில்லை நகரவும் இல்லை. கண்ணீர் புகைக் குண்டில் வந்த புகை எனக்கு மூக்கில் பட்டவுடன் மூச்சுத் திணறல் போல வந்தது. என்னால் நிற்க முடியவில்லை. கடலுக்குள் ஒரு அலை வந்து இழுத்து விட்டது. என்னை இரண்டு காவலர்கள் வந்து உங்களைக் காப்பத்தனும் ஏந்திரிங்கமா என்று சொல்லி என்னை பெண் காவலரிடம் கொடுத்து விட்டார்கள்.

(தொடரும்)