பாரதிய சனதாவின் தீவிர இந்துத்துவத்திற்கும் காங்கிரசின் மிதவாத இந்துத்துவத்திற்கும் இடையே நடக்கிற போட்டியில் சட்ட நெறிகளும், நீதி நியாயங்களும், அறம் சார்ந்த ஆட்சிமுறையும் வீசி எறியப்பட்டு ஒரு அப்பாவி அவசர அவசர மாகத் தூக்கிலடப்பட்டு, ஒரு பச்சைப் படுகொலை அரங்கேறிவிட்டது.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல்குரு 9-2-2013 அன்று காலை 7.56 க்கு முன்னறிவிப்பு ஏதுமின்றி, அவரது மனைவிக்கோ குடும்பத்தாருக்கோ தெரிவிக்காமல் தில்லி திகார் சிறையில் கமுக்கமாகத் தூக்கிலடப்பட்டு, அவரது உடல் சிறை வளாகத்துக்குள்ளேயே புதைக்கப்பட்டது. இச்செய்தியை இந்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டே அன்று காலை 8 மணிக்கு அறிவித்து அது தொலைக்காட்சிகளில் செய்தியாக காட்டப்பட்டபோது தான் அப்சல் குருவின் மனைவிக்கே அச்செய்தி தெரிந் துள்ளது.

இச்சாவுத் தண்டனை நிறைவேற்றப் படும் போது ஜம்மு- காசுமீர் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டு, கைப்பேசி, இணையதளத் தொடர்புகள் அனைத்தும் அம் மாநி லத்தில் முற்றிலுமாகத் துண்டிக்கப் பட்டு போராட்டத் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு ஒட்டு மொத்த காசுமீரும் அரச பயங்கர வாத அதிரடியில் வைக்கப்பட்டிருந்தது.

வாஜ்பாய் தலைமையில் பாரதிய சனதா கூட்டணி ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் 13-12-2001 அன்று காலை 11.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத் தில் வெள்ளை அம்பாசிடர் காரில் நுழைந்த 5 பயங் கரவாதிகள் நாடாளு மன்றத்தைத் தகர்க் கும் நோக் குடன் வந்தார்கள் என்பதே வழக்கு. நாடாளு மன்றப் பாதுகாவல் படையின ருக்கும், தாக்குதல் நடத்தியோ ருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையை அன்று தொலைக்காட்சி ஒளிபரப்பி யது.

உள்துறை அமைச்சகத்தின் அனுமதி ஒட்டி (ஸ்டிக்கர்) போலியாகத் தயாரிக்கப்பட்டு அம்பாசிடர் காரில் ஒட்டப் பட்டிருந்ததால் நாடாளுமன்ற வளாகத்துக்குள் காவலர்களின் அனுமதியைப் பெற்று அந்த கார் உள்ளே நுழைய முடிந்தது என்று தில்லி காவல்துறை விளக்கமளித்தது. வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த வரிசையில் காரை நிறுத்த முயலும் போது அங்கு நிறுத்திவைக்கப்படிருந்த குடியரசுத் துணைத் தலைவரின் வண்டியில் இந்த அம்பாசிடர் கார் இடித்ததால் நாடாளு மன்றக் காவல் படையினர் அங்கு விரைந்ததாகவும் அப் போது வெள்ளை அம்பாசிடரி லிருந்து வெளியே வந்த 5 பேரும் துப்பாக்கியால் சுடத் தொடங்கி சண்டை நடை பெற்றதாகவும் அரசு கூறியது. இந்தத் துப்பாக்கிச் சண்டையில் ‘பயங்கரவாதிகள்’ 5 பேரும் நிகழ்விடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல் படையினர் 8 பேர் தோட்டக் காரர் ஒருவர் என அரசுத் தரப்பில் 9 பேர் கொல்லப் பட்டனர்.

வந்தவர்களின் நோக்கம் நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும் போதே நாடாளுமன்றக் கட்டடத்தைத் தாக்கி தகர்ப்பதுதான் எனக் கூறிய அன்றைய பிரதமர் வாஜ்பாய், நியூயார்க் இரட்டை கோபுரத் தகர்ப்புக்கு இணையான சர்வதேச இசுலாமிய பயங்கரவாதத்தின் இன்னொரு தாக்குதல் இது என வர்ணித்தார்.

பயங்கரவாதிகள் வந்த காரில் அவர்கள் பயன்படுத்திய ஆயு தங்கள், கைப்பேசி சிம் கார்டு, மடிக்கணினி, அவர்களில் சிலரது புகைப்படங்கள், உலர்ந்த பழங்கள், அவற்றோடு ஒரு காதல் கடிதம்வேறு கிடந்து கைப்பற்றப்பட்டதாக காவல் துறை அறிவித்தது.

தாக்குதல் நடந்த இரண்டா வது நாளே அதாவது 15.12.2001 அன்றே வழக்கின் முழுப் பரி மாணமும் தெளிவாகி விட் டதாகக் கூறிய தில்லி காவல் துறை இக்குற்றத்தில் ஈடுபட்ட பயங்ரவாதிகள் 4 பேரைக் கைது செய்துவிட்டதாகவும் அறிவித் தது.

1999 இல் இந்திய விமானம் ஒன்று பாக்கிசுத்தானிய பயங் கரவாதிகளால் கடத்தப்பட்டு ஆப்கானிஸ்த்தானத்தின் கந்தகார் விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில் இந்திய அரசோடு நடந்த பேச்சு வார்த் தையின் விளைவாக அவர் களது நிபந்தனைப்படி இந்தியச் சிறையிலிருந்து ஜெய்ஷ் - சே- முகமது என்ற அமைப்பின் தலைவர் மசூத் அசார் விடுதலை செய்யப்பட்டார்.

மசூத் அசார் விடுதலையான உடனேயே தீட்டிய திட்டம் தான் நாடாளுமன்றத் தாக்குதல் என்று இந்திய அரசு கூறியது. மசூத் அசார் இத்தாக்குதல் செயலுக்கான பொறுப்பை அவ்வமைப்பை சேர்ந்த அடுத்த நிலைத் தலைவரான காசி பாபா என்பவரிடம் ஒப்படைத்ததா கவும், இந்த காசி பாபா இதனை நிறைவேற்ற தாரிக் அகமது என்ற பாக்கிசுத்தானியரை ஈடு படுத்தியதாகவும் அவரது திட் டப்படி பாக்கிசுத்தானி லிருந்து 5 பயங்கரவாதிகள் தில்லி மாநகருக்குள் ஊடுருவியதா கவும் தில்லி காவல்துறை தனது வழக்குரையில் கூறியது.

இத்தாக்குதலுக்கான சதிச் செயலில் வெவ்வேறு பாத்திரம் வகித்ததாக பேராசிரியர் எஸ்.ஏ. ஆர் கிலானி, சௌகத் உசைன் குரு, அவருடைய மனைவி அப்சான் குரு மற்றும் அப்சல் குரு ஆகிய நால்வர் கைது செய் யப்பட்டு இவர்களில் அப்சான் குருவுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் மற்ற மூவருக் கும் மரண தண்டனையும் விரைவு நீதிமன்றத்தில் வழங்கப் பட்டன. மேல் முறையீட்டில் வெவ்வேறு கட்டங்களில் சௌகத் குருவுக்கு பத்தாண்டு தண்டனையும், பேராசிரியர் கிலானிக்கு விடுதலையும் வழங் கப்பட்டது. உச்ச நீதிமன்றம் 4.8.2005 அன்று அளித்த தீர்ப் பில் அப்சல் குருவின் சாவுத் தண்டனையை உறுதி செய்தது.

இந்த ஒட்டுமொத்த வழக்கே உண்மையான குற்றவாளிக ளைக்கண்டுபிடிக்காமல் கையில் கிடைத்தவர்களைக் கொண்டு புனையப்பட்ட ஒன்று என்பதை உச்ச நீதி மன்றம் உணர்ந்தே இருந்தது. நீதிபதிகள் வெங்கட்டராம ரெட்டி மற்றும் நாவலேக்கர் ஆகிய இருவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புரையில் வெவ்வேறு வகை யில் இது ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது.

உயர் பாதுகாப்புப் பகுதி யான நாடாளுமன்றத்தைத் தாக்க வந்த தீவிரவாதிகள் கை பேசி, சிம்கார்டு, லேப்டாப் போன்ற பல தடயங்களைக் கையோடு கொண்டுவந்ததாகக் காவல்துறை கூறுவதே நம்பும் படியாக இல்லை.

தில்லி காவல்துறை புனை வில் பல ஓட்டைகள் இருந் தாலும் அவற்றை எடுத்துக் கூறி வலுவாக வாதாடி வழக்கு நடத்த அப்சல் குருவுக்கு உரிய வாய்ப்பு வழங்கப் படவில்லை. இவர் களுக்கு வழக்காட முன்வந்த மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத் மலானியின் வீடு தாக்கப் பட்டது. எனவே முன்னணி வழக்கறிஞர்கள் இவர்களுக்காக வழக்காடத் தயங்கினர். விரைவு நீதிமன்றம் அப்சல் குருவுக்காக மிக இளைய வழக்குரைஞரை அமர்த்தியது. பயிற்சி பெற்ற காவல்துறை அதிகாரிகள் புனைந்த வழக்கை எதிர் கொள் ளும் அளவுக்குப் போதிய பயிற்சி இல்லாதவர் அவர்.

இந்த வழக்குரைஞரும் ஒரு முறைகூட சிறையிலடைக்கப் பட்டிருந்த அப்சல் குருவை சந்தித்து வழக்கு பற்றி கலந்து ஆலோசிக்கவில்லை. தனிமைச் சிறையில் மிகுந்த கெடுபிடிக்கு இடையில் இருந்த அப்சல் குரு வறியவர் என்பதால் முன்னணி வழக்குரைஞர்களை அமர்த்தி கொள்ளவும் அவரால் முடிய வில்லை.

அப்சல் குருவை இவ்வழக்கில் சேர்ப்பதற்கிருந்த முக்கிய மான சான்றுக்கருவிகள் மடிக் கணினி, கைப்பேசி, சிம்கார்டு மற்றும் தக்குதலுக்குப் பயன் பட்ட வெள்ளை அம்பாசிடர் கார் ஆகியவை ஆகும்.

இந்த அம்பாசிடர் காரைத் தீவிரவாதிகளுக்கு அப்சல் குரு தான் வாங்கிக்கொடுத்தார் என்பதற்கான, ஐயத்திற்கிடமற்ற எந்தச் சான்றையும் காவல்துறை வைக்கவில்லை. எதற்கு இந்த வாகனம் பயன்படப்போகிறது என்பதை அறிந்திருந்தார் என்ப தையும் ஐயத்திற்கிடமின்றி காவல்துறை மெய்ப்பிக்க வில்லை. அப்சல்குருவை 15.12. 2001 அன்று ஜம்மு காசுமீர் மாநிலத் தலைநகர் சிறீநகரில் மடிக்கணிணி மற்றும் மோட் டரோலா கைப்பேசியுடன் கைது செய்ததாக கைது ஆவ ணத்தில் (அரஸ்ட் மெமோ) கூறிய காவல்துறை இப் பொருள்களைக் கைப்பற்றிய தற்கான சான்றாவணத்தில் (சீசர் மெமோ) அவை தில்லியில் கை பற்றப்பட்டதாக கூறியது. அதற்கு தில்லியை சேர்ந்த பிஸ் மில்லா என்பவரிடம் சாட்சிக் கையொப்பமும் காட்டியது.

திசம்பர் 12 அன்று கைப் பேசி, அதிலுள்ள சிம் கார் டுடன் வாங்கப்பட்டதாக சாட் சிகள் மூலம் கூறிய தில்லி காவல்துறையானது இந்த சிம் கார்டு ஏற்கெனவே நவம்பர் மாதத்திலிருந்தே செயல் பாட்டி லிருந்திருக்கிறது என்பதை கிலானி குறித்த குறுக்கு விசார ணையில் ஏற்றுக் கொண்டது. முக்கியமான இந்த முரண் பாட்டைக் கீழ் நீதிமன்றம் கண்டுகொள்ளவே இல்லை. உச்ச நீதிமன்றம் இந்த ஓட்டை யைக் கவனமாகக் குறிப்பிடு கிறது. ஆயினும் அப்சல் குரு குற்றவாளி அல்ல என்ற முடி வுக்கு வரமறுத்தது.

அப்சல் குருவிடம் திசம்பர் 15 அன்று கைப்பற்றிய மடிக் கணினியை 2002 சனவரி 16 அன்று தான் சீலிட்ட உறையில் காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மடிக்கணினி அப்சல் குருவின் பயன்பாட்டில் நீண்டகாலம் இருந்ததாக சொல்லும் தில்லி காவல்துறை அக்கணினியில் தீவிரவாதி களுக்கு உருவாக்கிய போலி அடையாள அட்டைகள், உள் துறை அமைச்சகத்தின் அனு மதி பெற்றதாக போலியாக தயாரிக் கப்பட்ட போலி ஒட்டிகள் ஆகியவற்றுக்கான பதிவுகள் மட்டுமே இருந்ததா கவும் மற்றவற்றை கைப்பற்றப் படுவதற்கு முன்னதாகவே அப்சல் குரு அழித்துவிட்ட தாகவும் கூறினர். மற்றவற்றை அழித்த அப்சல் குரு முக்கிய மான இந்தத் தடயத்தை மட்டும் எப்படி அழிக்காமல் விட்டார் என்பதற்கு காவல்துறை உருப் படியான எந்த விளக்கமும் அளிக்கவில்லை. நீதிமன்றமும் இதனைக் கண்டு கொள்ள வில்லை.

நீதிமன்றத்தில் தாக்கல் செய் ததாக சொல்லப்பட்ட நாளுக் குப் பின்னாலும் மடிக்கணி னியில் புதிய பதிவுகள் இருந் தது கண்டறியப்பட்டது. விரைவு நீதிமன்றத்தின் பொறுப்பிலிருந்த மடிக்கணி னியில் புதிய பதிவுகள் எப்படி வந்தன என்பது விளக்கப்பட வும் இல்லை.

அதைவிட தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டு நிகழ் விடத்திலேயே கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளின் பெயர்கள் மற்றும் ஊர்கள் பற்றி ஆதாரப் பூர்வமான எந்தத் தகவலையும் இது நாள்வரை காவல்துறை முன்வைக்கவே இல்லை. கொடும் சித்ரவதைகளின் ஊடே அப்சல் குரு கூறியதாக சொல்லப்படும் பெயர்கள் மட்டுமே உள்ளன. அதற்குத் தற்சார்பான வேறு எந்தச் சான்றும் இல்லை.

மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் இவ்வாறான குறை பாடுகள் மலிந்திருப்பதை ஏற் றுக்கொண்டது. அப்சல் குரு வுக்கு எதிராக நேரடிச் சான் றுகள் எதுவுமே இல்லை, சுற்ற டியான சான்றுகள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன என உச்ச நீதிமன்றம் உறுதிபடக் கூறியது. ஆயினும் “தேசத்தின் மனச்சான்றையே உலுக்கிய இவ்வளவு பெரிய பயங்கரவாதச் செயலுக்கு அப்சல் குருவை தூக்கிலிடாவிட்டால் தேசத் தின் கூட்டுமனச்சான்று நிறை வடையாது என்பதால் அரிதி லும் அரிதான வழக்காக கருதி அவருக்கு உயிர் பிரியும் வரை தூக்கிலிடும் தண்டனையை உறுதிசெய்கிறோம் ”என நீதி பதிகள் வெங்கட்ட ரெட்டியும் நாவலேக்கரும் தங்கள் தீர்ப்பு ரையில் குறிப்பிட்டனர்.

இந்துத்துவா வெறிபிடித்த இரத்தக் காட்டேரியான பாரத மாதாவுக்கு ஏதாவது ஒரு மனித உயிரை பலிகொடுத்தால்தான் அவள் மலையேறுவாள் என் பதை இந்த நீதிமன்ற பூசாரிகள் மென்மையான சொற்களில் குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

பாரத மாதாவின் பலிபீடத் தில் ஒரு அப்பாவி காசுமீரியின் உயிர் காவுகொடுக்கப்பட நீதி யின் பெயராலேயே இவ்வாறான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தேசத்தின் கூட்டு மனச் சான்று எதைக் கோருகிறது என அறிவதற்கு கருத்துக் கணிப்பு ஏதும் வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்தார் களா? இல்லை. இந்தக் கூட்டு மனச்சான்றுக்குள் காசுமீரி மக்களின் மனவிருப்பமும், நாடு முழுவதும் உள்ள இசுலா மியர்களின் கூட்டு மன விருப்ப மும் கணக்கில் கொள்ளப் பட்டதா? அதுவும் இல்லை.

இந்துத்துவ - இந்தியத் தேசிய வெறியர்கள் சிலரின் ஊடக வெறிக்கூச்சல் மட்டுமே உச்ச நீதி மன்றத்தால் நாட்டின் கூட்டு மனச்சான்று என கொள்ளப்பட்டிருக்கிறது.

சரி, இந்தக் கூட்டு மனச் சான்று என்பதன் பொருள் என்ன? பழிக்குப் பழி வாங்கு வது என்பது தானே ! ஒரு கொலையில் உயிரிழந்தவரின் உறவினர்களோ, கொலையுண் டவர்களின் மீது அனுதாபம் கொண்டவர்களோ பழிக்குப் பழியாக மரணதண்டனையைக் கோருவது இயல்பு. சட்டத்தின் ஆட்சியையும் நீதியையும் நிலை நாட்டவேண்டியப் பொறுப் பிலுள்ள நீதிமன்றம் இந்த உணர்வலைகளுக்கு ஆட்படக் கூடாது. அவ்வாறு ஆட்பட் டால் கொலையுண்டவர்களின் குடும்பம் சார்பாக பழிக்குப் பழியாகக் கொலைக் குற்றத்தில் ஈடுபடுகிற நிறுவனமாக நீதி மன்றம் மாறிவிடும். இதனை உச்ச நீதிமன்றத்தின் பலத் தீர்ப்புகள் எச்சரிக்கையாக கூறிச் சென்றிருக்கின்றன.

இதனால்தான் பழிக்குப் பழி என்ற மரணதண்டனை கூடாது என்ற குரல் உலகமெங்கும் இன்று ஓங்கி ஒலிக்கிறது.

அப்சல்குரு தொடர்பில் சட்ட வழிமுறைகளின்படி “அரிதிலும் அரிதான வழக்கு” என்பதைக்கூட உச்ச நீதி மன்றம் மெய்ப்பித்துவிட வில்லை. அப்சல் குரு எந்த பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவர் அல்லர், பயங்கரவாத செயல் எதிலும் அவர் ஈடு படவில்லை என்று சான்று ரைக்கும் உச்ச நீதிமன்றம், இத் தாக்குதலில் ஒன்பது பேர் மரணமடைவதற்கு அப்சல் குரு காரணமாக இருந்தார் என்ப தற்கு நேரடிச் சான்றுகள் எதுவு மில்லை என எடுத்துரைக்கும் உச்ச நீதிமன்றம், இது மரண தண்டனை வழங்கத்தக்க அரிதி லும் அரிதான வழக்கு என் பதை சட்ட நெறிப்படி நிலை நாட்டவும் இல்லை. “இவ்வழக் கில் ஒருவருக்காவது மரண தண்டனை வழங்க வில்லை என்றால் நாட்டு மக்கள் திருப்தி அடைய மாட்டார்கள் ”என வாதிடுவது சட்டத்தின் ஆட் சிக்கு எதிரானது. நேயர் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டுப் பாடும் பாடகர் அல்லர் நீதி பதிகள்.

அப்சல் குருவின் சாவுத் தண்டனைக்கு எதிராகக் கரு ணை மனு தன்னிடம் வந்த போது குடியரசுத்தலைவர் சாவுத்தண்டனையை நீக்கி சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டியிருக்க வேண்டும். இந்திய அமைச்சரவையின் சார் பில் உள்துறை அமைச்சகம் அப்சல் குருவின் கருணை மனுவை ஏற்க மறுத்து அவரது சாவுத்தண்டனையை உறுதி செய்து பரிந்துரை அளித்தபின் குடியரசுத்தலைவர் தம்மிச் சையாக வேறு ஒரு முடிவு எடுக்கமுடியாதுதான். ஆயினும் அந்தக் கோப்பில் உடனடியா கக் கையெழுத்திடுவதை பிர ணாப் முகர்ஜி தவிர்த்திருக் கலாம்.

2013 சனவரி 21 அன்று உள்துறை அமைச்சகம் அப்சல் குருவின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும் கோப்பை குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அனுப்பியது. 2013 பிப்ரவரி 3 அன்று அப்பரிந்துரையை ஏற்று பிரணாப் முகர்ஜி அவசரமாகக் கையெழுத்திட வேண்டிய சட்டத்தேவை எதுவு மில்லை.

சாவுத்தண்டணை தொடர் பாக முக்கியமான சில வழக்கு கள் உச்ச நீதிமன்ற விசாரணை யில் உள்ளன. சாவுத் தண் டணை வழங்கப்பட்டு நீண்ட காலம் சிறையிலிருப்பவர்க ளுக்கு, அந்த நீண்டகால சிறை வாசத்தையே காரணமாகக் காட்டி சாவுத்தண்டணையை ரத்து செய்து வாழ்நாள் சிறை யாக மாற்றி, குடியரசுத் தலை வரும் மாநில ஆளுநரும் கருணை வழங்கலாமா என்ற முக்கிய சிக்கல் உச்ச நீதிமன்ற ஆய்வில் உள்ளது. “நீண்டகால சிறைவாசம்” என எவ்வளவு ஆண்டு சிறைவாசத்தை வரை யறுப்பது என்பது உள்ளிட்ட பல கேள்விகள் இவ்வழக்கு களில் நிலுவையில் உள்ளன.

தவிரவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனம்போன போக் கில் மரணதண்டனை வழங்கிய போது சட்ட அறியாமை (ஜீமீக்ஷீ வீஸீநீuக்ஷீவீuனீ) என்ற தவறு நேர்ந்து விட்டதையும், அவ்வகைத் தீர்ப்புகளின் காரணமாக ஏற் கெனவே இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது என்பதையும் உச்ச நீதிமன்றமே வலுவான ஆதாரங் களோடு எடுத்துக் காட்டியிருக் கிறது. (விரிவிற்கு காண்க : “மூன்று தமிழர் கருணை மனுவுக்கு ஆதரவான புதிய சட்ட நிலை” -கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசியத் தமிழர் கண் ணோட்டம், சனவரி 16-31, 2013 )

இவை அனைத்துமே கருணை மனுத் தொடர்பான வழக்குகளாக உள்ளவை. எனவே, நியாயமாகப் பார்த்தால் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இவ்வழக்குகளின் தீர்ப்பு வரும்வரை அப்சல் குரு கோப்பில் ஒப்புதல் கையெழுத் திடுவதை தவிர்த்திருக்க வேண்டும். மாறாகக் கோப்பு வந்து இரண்டு வாரத்துக் குள்ளாகவே அவசர அவசரமாக கையெழுத்திட்டுருக்கிறார்.

கருணை மனு நிராகரிக்கப் பட்ட பிறகு தூக்கில் போடுவ தற்கான நாள் குறிக்கப்பட்டதை தொடர்புடையவரின் குடும்பத் திற்குத் தெரிவிப்பது ஆட்சியா ளர்களின் சட்டக் கடமை. அப்சல் குரு மனைவியின் பெயர் குறிப்பிட்டு சோப்பூரில் உள்ள அவரது முகவரிக்கு விரைவு அஞ்சலில் தூக்கிலிடும் நாள் தொடர்பான கடிதம் அனுப்பப்பட்டு விட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் சிண்டே கூறுகிறார். அஞ்சலில் அனுப்பிவிட்டு ஊரடங்கு உத் தரவும் பிறப்பித்தனர். ஊர டங்கு நேரத்தில் அஞ்சலகர்கள் வெளியில் செல்ல முடியாது என்பது ஊரறிந்த உண்மை.

கடிதம் போய் சேர்வதற்குள் ளாக அப்சல் குருவை கொன்று விட வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் உண்மையான நோக்கம்.

ஏன் இவ்வளவு கமுக்கமாக அப்சல் குருவின் தூக்கு தண்ட னையை நிறைவேற்றி னார்கள் என்ற வினாவுக்கு அரசுத் தரப்பிலிருந்து கசிந்து வரும் விடை அதிர்ச்சி அளிக்கிறது. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு தூக்கி லிடுவதற்கான நாள் முன் கூட்டியே அறிவிக்கப்பட்ட தால்தான் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு இது தொடர்பாக உயர்நீதி மன்றத் தில் வழக்கு தொடுக்கப்பட்டு தடையாணையும் பெறப்பட்டது. இனி இவ்வாறான நிலை ஏற்பட வாய்ப்பளிக்கக் கூடாது என ஆட்சியாளர்கள் முடிவெடுத்துவிட்டார்களாம். ஏற்கெனவே அஜ்மல் கசாப் கடந்த 2012 நவம்பர் 12 அன்று இதே போல் கமுக்கமான முறையில் தூக்கிலிடப்பட் டதை நோக்கும் போது கசிந்து வந்த செய்தி உண்மையாக இருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.

தங்களது போட்டி இந்துத்துவ - இந்திய வெறி அரசியலுக்கு தோதாக சட்டத்தின் ஆட்சியையே குழி தோண்டிப் புதைக்கிறார்கள். இந்தப் போட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ‘இடதுசாரிகளும்’, மாயாவதி, நிதீஷ்குமார், முலாயம் சிங் உள்ளிட்ட ‘சமூக நீதிக்காவலர்களும்’ ஒரே ஆரிய இந்தியப் படை வரிசையில் தான் அணிவகுக்கிறார்கள். இது மிக ஆபத்தானது.

அப்சல் குருவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக் கப்பட்டால் அவரது இறுதி ஊர்வலமே ஜம்மு- காசுமீரில் பயங்கரமான சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் எனக் காரணம் காட்டி அவரது உடலைக்கூட அவரது மனை வியிடம் ஒப்படைக்க மறுக்கி றது இந்தியப் பேயாட்சி.

சேகுவேராவின் உடலுக்கும், பின்லேடன் உடலுக்கும், தமிழீத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிப் போராளிகளின் உடலுக்கும், காசுமீர் போராளி மக்புல் பட்டின் உடலுக்கும் நேர்ந்த நிலையே அப்சல் குருவுக்கும் நிகழ்ந்துள்ளது. உலகம் முழுவதும் வல்லாதிக்க - இன வெறியர்கள் ஒன்று போலவே நடந்துகொள்கிறார்கள்.

தூக்கில் கொன்று புதைக்கப் பட்டது அப்சல் குரு மட்டுமல்ல சட்டத்தின் ஆட்சியும் தான்.