இளைஞர்களை போதையில் ஆழ்த்தி, அவர்தம் ஆளுமையைச் சீரழித்து, உடலையும் நாசப்படுத்தும் மதுவை, அரசே விற்பனை செய்யும் அவலம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

உணவைப் போலவே, மக்களுக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ள கல்வி, மருத்துவம் ஆகியவற்றை தனியார் நிறுவனங்களும், முதலாளிகளும் கொள்ளை இலாபத்தில் வழங்கிக் கொண்டிருக்க, அரசாங்கமோ மது விற்பனையில் இலக்குகள் நிர்ணயித்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் தீபாவளிப் பண்டிகையின் போது, தமிழக அரசின் மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக் மதுக்கடைகள், சற்றொப்ப 270 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்துள்ளதாக அறிவித்தது. கடந்த, நவம்பர் 10ஆம் நாளில் ரூ 110 கோடிக்கும், நவம்பர் 11ஆம் நாளில் ரூ 100 கோடிக்கும், இதன் உச்சமாக தீபாவளி முதல் நாளான 12.11.2012 அன்று ரூ 150 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.

இது அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை விட கூடுதலானது என்பது மட்டுமல்ல, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20 கோடிக்கு அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இத்தனைக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவின் விலை, இதுவரை 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. பீர் விலை ரூ 10 முதல் ரூ 15 வரையும், பிராந்தி, விஸ்கி போன்ற மதுவகைகள் ரூ 5 முதல் ரூ 40 வரையும் இதுவரை உயர்த்தப்பட்டுள்ளன.

இவ்வளவு விலையேற்றம் நடந்தும் கூட, குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையாமலிருப்பது மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிகமாக உள்ளதையேக் காட்டுகிறது. குடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவே விலையேற்றம் செய்கிறோம் என அரசும், அதிகாரிகளும் வெளியில் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் மது விற்பனை மூலம் வரும் வருமானத்தை மேலும் அதிகரிக்கவே இவ்விலையேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது ஓரளவு நிறைவேறியும் உள்ளது.

உடலுழைப்பில் ஈடுபடுகின்ற எளிய உழைப்பாளிகள் உடற்சோர்வை மறக்க மதுவை நாடுவது என்ற கடந்த கால நிலைமையெல்லாம் இப்போது இல்லை. பள்ளி – கல்லூரி மாணவர்களும், படித்து வேலைக்குச் செல்லும் இளைஞர்களும், அலுவலகங்களில் பணிபுரியும் நடுத்தர வர்க்க உழைப்பாளிகளும் மதுவை நாடிச் சென்று தம் ஆளுமையை சீரழித்துக் கொள்வது தான் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் சமூகப் போக்கும் கவலை கொள்ள வைத்துள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என பல்வேறு விழாக் காலங்களின் போது, தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம், அதிகளவில் மதுவை விற்பனை செய்ய வேண்டுமென இலக்கு நிர்ணயிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக, டாஸ்மாக் ஊழியர்கள் மது விற்பனையை அதிகரிக்க, அந்தந்த பகுதியில் பல திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். மதுப்பாட்டில் ஒன்றை பலருக்கு பகிர்ந்தளிக்கும் ‘கட்டிங்’ முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்வாறு, தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6823 டாஸ்மாக் மதுவிற்பனைக் கடை மற்றும், ஏராளமான அரசு அங்கீகரிக்கப்பட்ட மது அருந்தும் கூடங்களும், பலதரப்பட்ட ‘குடிமகன்’களுடன் இணைந்து தான், அரசின் இலக்கைத் தாண்டி விற்பனை செய்து முடிக்கும் ‘சாதனை’யை ஒன்றிணைந்து நடத்துகிறார்கள்.

அ.தி.மு.க. அரசு 2003ஆம் ஆண்டு அக்டோபர் முதல் சில்லறை மது விற்பனை முழுவதையும் டாஸ்மாக் மூலம் ஏற்று நடத்திவருகிறது.

தனியார் மதுபான நிறுவனங்களுக்கு, அரசே முகவராக இருந்து விற்பனை செய்துத் தந்து, தனியாருக்கு கொள்ளை இலாபம் சம்பாதித்துக் கொடுக்க முன்வந்த போது, மதுபான முதலாளிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

அ.தி.மு.க. அரசின் இம்முடிவை எதிர்த்து, யோக்கியவான் போல எதிர்த்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி செயலலிதா அம்மையாரின் முடிவைத் தனது ஆட்சியில் முழுமையாக ஏற்றுக் கொண்டு, செயல்படுத்தினார். இதன் பின்னணியில், மதுபான உற்பத்தி முதலாளிகள் தேர்தல் கட்சிகளுடன் கொண்ட ‘சுமுக உறவே’ இருந்தது பின்னர் அம்பலமானது.

இன்றைக்கும், தமிழக அரசு அதிகம் கொள்முதல் செய்யும் மது வகைகளை, உற்பத்தி செய்துத் தரும் மைடாஸ் மதுபான நிறுவனத்தின் அதிபர் மோகன், அ.தி.மு.க.வில் பதவிப் பெற்றுத் தரும் அளவிற்கு செல்வாக்குப் படைத்தவராக வலம் வந்தவர். எலைட் டிஸ்டிலரிஸ் மதுபான நிறுவனத்தில், தி.மு.க.வின் முக்கியத் தலைவர் ஜெகத்ரட்சகன் முக்கியமான பங்குதாரர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான ‘பெண் சிங்கம்’, ‘உளியின் ஒசை’ திரைப்படங்களைத் தயாரித்தவர், எஸ்.என்.ஜெ. டிஸ்டிலரீஸ் என்ற மதுபான நிறுவனத்தின் அதிபர் என்.ஜெயமுருகன்.

இவ்வாறு, தி.மு.க. அ.தி.மு.க. கட்சிகளும், மதுபான முதலாளிகளும் வைத்துக் கொண்ட கூட்டு, இன்று வரை அவ்வாறேத் தொடர்கின்றது. இந்த உறவில் விரிசல் ஏற்படும் போதெல்லாம், மதுவிலக்கு குறித்த அவ்வப்போது இந்தக் கட்சிகள் குரல் எழுப்புவார்கள். தேர்தல் கட்சிகள் சிலோகித்துப் பேசிக் கொள்வர்.

சுயமாக சிந்திக்கும் ஆற்றல், சொந்தமாக உழைத்து உண்ணும் சுயமரியாதை கொண்ட மனநிலை, இவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஆளுமையோடு இளைய சமுதாயத்தினர் உருவாவதை எந்த தேர்தல் அரசியல் கட்சியும் உண்மையில் பொறுத்துக் கொள்வதே இல்லை.

தேர்தல் பரப்புரைக்காக வரும் இளைஞர்களுக்கு மது விருந்து வைப்பதும், மதுவையே கையூட்டாக அளித்து வாக்குப் பெறுவதும் என மதுவை மக்கள் மீது திணிக்கும் வேலையையும் தேர்தல் கட்சிகள் தான் வலிந்து மேற்கொண்டனர்.

பன்னாட்டு மது நிறுவனங்களும் முதலாளிகளும், கொழுப்பதற்காக உயர்தர பன்னாட்டு நிறுவன மது வகைகளுக்காகப் புதிய மதுக்கடைகளைத் திறக்க முன்வருகின்றது அ.தி.மு.க. அரசு.

உலகமயப் பொருளியல் கொள்கையின் விளைவால் ஏற்பட்ட, விலைவாசி உயர்வு, வேளாண்மை முடக்கம், 8 மணி நேர வேலை என்பது நீங்கி அதிக நேரம் பணியிலிருப்பது, அரசுகளின் இலவச அரிசி, உழைக்காமலேயே சம்பளம் பெறும் வகையிலான நூறு நாள் வேலைத்திட்டம் என பல்வேறு காரணிகள், மக்களை பொருளியல் மற்றும் உளவியல் குளறுபடிகளில் ஆழ்த்தின. இவை, மக்கள் வாழ்வில் நிலையற்றத் தன்மையையும், மனச்சோர்வையும் அதிகப்படுத்தின.

மேலும், உலகமய நுகர்வியப் பண்பாட்டின விளைவாலும், பொருளியல் அழுத்தங்களாலும் சிதைக்கப்பட்ட குடும்ப அமைப்பு, குடும்பம் மற்றும் சுற்றத்தாருடன் விரிசலை ஏற்படுத்தி, குடும்ப உறுப்பினர்களை உதிரிகளாகக் கட்டமைத்தது. ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகப் பேசி, ஒன்று கூடி வாழ்ந்த வாழ்க்கை முறை மாற்றி, அனைவரும் தனித்து விடப்பட்ட நிலையில், எளிமையான சிக்கல்களுக்குக் கூட, மதுவையும், அதன் உச்சமாகத் தற்கொலையையும் தீர்வாக மக்கள் நாடுகின்றனர். தமது சொந்த சோகங்களைத் தீர்க்கும் இரட்சகனாக மது இவ்வகையில் தான் இளைஞர்களுக்குப் பெரிதும் அறிமுகமானது.

காதல் தோல்வி முதல், தேர்வில் தோல்வி வரை இளைஞர்களின் மனச்சோர்வுக்குத் தீர்வாக மதுவும், அதற்கு அடுத்த நிலையில் தற்கொலையும் வைக்கப்பட்டிருப்பதனால் தான், தமிழகத்தில் அதிகளவில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற உண்மையையும் நாம் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளின் தீவிர விற்பனைக்கு பின்னரான காலங்களில், ‘பீர் குடிப்பவன் தான் இளைஞன்’ என்று கருதத்தக்க வகையில், திரைப்படங்களாலும், ஊடகங்களாலும் நடத்தப்பட்ட கருத்தியல் பரப்புரை அமைந்தது, ஒளிந்திருந்து, எப்பொழுதாவது ஒருமுறைக் குடித்து வந்த இளைஞர்களை, நிரந்தரமான, வெளிப்படையான குடிமகன்களாக மாற்றியது. பல திரைப்படங்களில் பெண்கள் பீர் குடிக்கும் காட்சிகளும் இடம் பிடித்தன. இவற்றின் விளைவாக, பள்ளி – கல்லூரி மாணவர்கள் வகுப்பறைக்கே குடித்து விட்டு வந்து நின்ற அவல நிகழ்வுகள் நடைபெற்றன.

தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிகளவில் பணம் சம்பாதிக்க வந்த புதிய இளைஞர்களை, அவர்களது வேலை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க என்ற பெயரில், மதுபான அடிமைகளாக மாற்றும் வேலை அத்துறையிலேயே நடைபெற்றுக் கொண்டுள்ளது. அந்நிறுவனங்கள் அளிக்கும் விருந்துகளில் மது வகைகள் தவறாமல் இடம்பிடிக்கின்றன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வரவும், வளர்ச்சியும், மது அருந்துவதை தமது பணியிடப் பண்பாட்டில்(Work Culture) ஒன்றாகக் கருதும் இளைஞர்களை உற்பத்தி செய்து கொண்டிருப்பதால், மது விற்பனையை இது கூடுதலாக்குகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் ஜியோஸ்கோப் என்ற மது நிறுவன மேலாண் இயக்குநர் ஆர்.எல்.ராஜா. (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 19.01.2012)

மேலும், சென்னை போன்ற மாநகரங்களில், புதிய ஐந்து நட்சத்திர விடுதிகளும் மதுக்கூடங்களும், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் ஆண்களை மட்டுமின்றி, அதிலுள்ள பெண்களையும் மதுபோதையில் ஆழத்துவது குறிப்பிடத்தக்கது.

முதலாளிகளின் கூட்டமைப்பான அசோசாம்(ASSOCHAM), தனது தொண்டு நிறுவனத்தின் மூலம்? சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட பெருநகரங்களில் மதுப்பழக்கம் குறித்து அண்மையில் எடுத்து வெளியிட்ட ஆய்வறிக்கை, நமது கூற்றுக்கு வலு சேர்க்கிறது. அந்த ஆய்வில், 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களில், 45 விழுக்காட்டினர், ஒரு மாதத்தில் 6 முறை குடிப்பதாகவும், விழாக் காலங்களின் போது 70 விழுக்காட்டினர் மது அருந்துவதாகவும் தெரிவிக்கிறது. பன்னாட்டு முதலாளிகளின் கூட்டமைப்பான அசோசாம் வெளியிட்ட இவ்வாய்வு அறிக்கையில், மேற்கத்தியமயமாக்கல் தான் இதற்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டிருப்பது தான் வேடிக்கை. (காண்க: http://www.assocham.org/prels/printnews.php?id=2617)

அசோசாமின் மற்றொரு ஆய்வறிக்கை, 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் மட்டைப்பந்து உலகக் கோப்பை நடைபெற்ற போது, மட்டைப்பந்து போட்டிகளை ஆர்வமுடன் பார்த்த இளையோரில் 55 விழுக்காட்டினர், போட்டியை முன்னிட்டு மது அருந்தினர் எனத் தெரிவித்தது. மது முதலாளி விஜய் மல்லையா கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டும் பின்னணி இதுதான்.

கடந்த 2002-03 நிதியாண்டில் 2,828.09 கோடிக்கு மது விற்பனையில் வருவாய் ஈட்டிய டாஸ்மாக் நிறுவனம், 2011-12 நிதியாண்டில் சற்றொப்ப 18,081 கோடி ரூபாய் மதுவை விற்பனை செய்ய முடிந்தது.

இந்த அதிகரித்துள்ள தொகை, உழைக்கும் மக்களில் கணிசமானோர், தமக்குக் கிடைத்த கொஞ்ச நஞ்சக் கூலி வருவாயைக் கூட மது அருந்தி அழித்ததன் காரணமாக வந்தத் தொகை. மதுவிற்கு அடிமையாகி நுரையீரல் அழுகி இறந்தவர்களின் குடுமபங்கள், வாழ வழியற்று நடுத்தெருவிற்கு வந்ததன் மூலம் கிடைத்த தொகை இது.

இவ்வாறு பலரது குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்ததன் காரணமாகக் கிடைத்த இந்தத் தொகையால் தான் அரசாங்கமே செயல்படுகின்றது எனச் சொல்வதற்கு உண்மையில் இந்த அரசியல்வாதிகள் வெட்கப்படுவதே இல்லை?

போதைப் பொருட்களை அரசே கட்டுப்படுத்த வேண்டும் எனக்கூறும், இந்திய அரசியலமைப்பு விதி 47-ஐ முறைப்படி கடைபிடித்தால், தமிழக அரசின் டாஸ்மாக் கடை மது விற்பனை, அரசமைப்புக்கு எதிரான நடவடிக்கையாகும். 

தமிழக அரசின் சொந்த வருவாய் வழிகளில் முதன்மையான வருவாய் இனமாக மதுக்கடை வருமானமே உள்ளது. எனவே, இதுவரை இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக் குறை 1,18,610 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாக தமிழக அரசு தனது 2012-13 வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துள்ள நிலையில், 18,000 கோடி வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் கடைகளை மூடலாமா எனவும் கேள்வி எழுப்புகின்றனர் சிலர்.

பெரும்பற்றாக்குறைக்கு இடையிலும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவதற்கு வேறு வழி என்ன இருக்கிறது எனக் கேட்போரும் உண்டு. அவர்கள் கீழ்வரும் அட்டவணைப் பார்க்கட்டும்.

tn_govt_650

தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு வசூலிக்கும் உற்பத்தி வரி (Central Excise Duty) கடந்த ஆண்டு 9376 கோடி ரூபாய். சுங்க வரி 29875 கோடி ரூபாய். தமிழகத்தில் இருந்து இந்திய அரசு வசூலித்த நிறுவன வருமான வரி, தனி நபர் வருமான வரி, செல்வ வரி, ஆகியவை மொத்தம் 34,586 கோடி ரூபாய். தமிழகத்திலிருந்து இந்திய அரசுக்கு கிடைத்த, சேவை வரி கடந்த ஆண்டில் 5594 கோடி ரூபாய். ஆக, வடநாட்டு தில்லிக் கொள்ளையர்கள், தமிழகத்திலிருந்து அள்ளிச் சென்ற வரி வருமானம் மட்டும், 79,631 கோடி ரூபாய் ஆகும்.(காண்க: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 அக்டோபர் 1-15 , கி.வெங்கட்ராமன்)

தமிழகத்திலிருந்து இந்திய அரசு கொண்டு செல்லும் இப் பெருந்தொகையை தமிழக அரசு, இதுவரை ஒருமுறை கூட முழுவதுமாகக் கேட்கவில்லை தமிழகத்திற்கு உரிமையுள்ள வருமானமான இந்தப் பெருந்தொகையில், தமக்குரியப் பங்கைக் கேட்க வக்கில்லாத தி.மு.க. – அ.தி.மு.க. உள்ளிட்ட தேர்தல் கட்சிகள் அனைத்தும், தில்லிக்குச் சென்று 1000 கோடிக்கும், 2000 கோடிக்கும் பிச்சை எடுப்பதை ஏதோ பெரிய சாதனையாக படங்காட்டுகின்றன. இதை நம்புபவர்கள், ‘டாஸ்மாக் இல்லையெனில் அரசே நடக்காது’ என ஏமாறுகின்றனர்.

எனவே, தமிழக அரசு, இந்திய அரசு தமிழகத்திலிருந்து கொள்ளையடித்துச் செல்லும் பணத்தை கேட்டுப் பெற்று, வருவாய் இழப்பில்லாமல் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். தமிழக அரசு, மதுக்கடைகளை மூட முன்வரவில்லையெனில், அப்பணியை விழிப்புணர்வுள்ள தமிழக இளையோர் சமூகத்தைத் திரட்டி நாம் மேற்கொள்வோம்! டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டுவோம். அது நம் கடமை!