காவிரி வழக்கில், உச்ச நீதிமன்றம் ஒதுங்கிக் கொண்டது; நழுவிக்கொண்டது; தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டது. தமிழகக் கர்நாடக முதலமைச்சர்கள் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று 26.11.2012 அன்று கூறிவிட்டது.

முதலமைச்சர் செயலலிதா 29.11.2012 அன்று பெங்களூர் சென்று கர்நாடக முதலமைச்சருடன் பேச்சு நடத்த உள்ளார். நாம் இவ்வாசிரிய உரையை 28.11.2012 முற்பகல் எழுதுகிறோம். மீண்டும் உச்ச நீதிமன்றம் 30.11.2012 அன்று விசாரணை நடத்தும்.

இரு மாநில முதலமைச்சர்கள் 26முறை பேச்சு நடத்திப் பயனில்லாத நிலையில்தான் தீர்ப்பாயம் 1990 இல் அமைக்கப்பட்டது, அத்தீர்ப்பாயத்தின் எந்தத் தீர்ப்பையும் கர்நாடகம் ஏற்கவில்லை இவ்வாண்டு, பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் ஆணையிட்டதை, உச்சநீதிமன்றம் ஆணையிட்டதை, காவிரிக் கண்காணிப்புக் குழு அறிவித்த முடிவை செயல்படுத்த மறுத்துவிட்டது கர்நாடகம்.

மேற்சொன்ன அமைப்புகள் அனைத்தும் கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு, ஆதர வான அணுகுமுறையை எடுத்து, சட்டப்படி தரவேண்டிய தண்ணீர் அளவை மிகக் குறைத்து, அடையாளத்துக்கு ஏதோ ஒரு குறைந்த அளவுத் தண்ணீரைத் திறந்து விடுமாறு கூறின என்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி. இருந்தும் அதைத் கூட செயல்படுத்த மறுத்துவிட்டது கர்நாடகம்.

பற்றாக்குறைக் காலத்தில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறை பற்றி 2003 இல் காவிரிக் கண்காணிப்புக் குழு ஒரு திட்டம் வகுத்தது. பருவமழை எத்தனை விழுக்காடு குறைவாக இருக்கிறதோ அத்தனை விழுக்காடு தண்ணீரைக் குறைத்துக் கொண்டு மீதித் தரவேண்டிய தண்ணீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்பதே அத்திட்டம்.

நடப்பு சாகுபடிப் பருவத்தில், கர்நாடகத்தில் 40 விழுக்காடு தென்மேற்குப் பருவமழை குறைந்துவிட்டது என்கிறது கர்நாடகம். காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்ற வழக்கில் உள்ளதால், இடைக்காலத் தீர்ப்பின்படி தண்ணீர் தரவேண்டியது கர்நாடகத்தின் சட்டக் கடமையாகும்.

அந்த இடைக்காலத் தீர்ப்பின் படி கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு சூன்மாதம் 10.16 ஆ.மி.க. (டி.எம்.சி) சூலைமாதம் 42.76 ஆ.மி.க., ஆகஸ்ட் மாதம் 54.72 ஆ.மி.க. செப்டம்பர் 29.36 அக்டோபர் 30.17 ஆ.மி.க. நவம்பர் 16.05 ஆ.மி.க. டிசம்பர் மாதம் 10.37 ஆ.மி.க. சனவரிமாதம் 2.51 ஆ.மி.க., பிப்ரவரிமாதம் 2.17 ஆ.மி.க. மார்ச்சுமாதம் 2.40 ஆ.மி.க. ஏப்ரல் மாதம் 2.32 ஆ.மி.க., மே மாதம் 2.01 ஆ.மி.க. காவிரி நீர் திறந்து விட வேண்டும் ( ஆக மொத்தம்: 205 ஆ.மி.க.)

இந்தக் கணக்கில், பருவமழைக் குறைவான 40 விழுக்காட்டைக் கழித்துக் கொண்டுதான் தமிழகம் தண்ணீர் கேட்கிறது. அதன்படி 2012 அக்டோடபர் அவரை தரவேண்டிய தண்ணீர் பாக்கி சற்றொப்ப 52.8 ஆ.மி.க. 15.11.2012 அன்று கூடிய கண்காணிப்புக் குழுவில் இந்த 52.8 ஆ.மி.க. பாக்கி நீரைத் திறந்து விடுமாறு தமிழக அரசு வலியுறுத்தியது. அப்போது, கர்நாடக அணைகளில் 80 ஆ.மி.க. அளவிற்குத் தண்ணீர் இருப்பு இருந்தது.

ஆனால் காவிரிக் கண்காணிபுக் குழு கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு விவரம் எங்களிடம் இல்லை என்று கைவிரித்தது.

அத்துடன் நிற்கவில்லை; தமிழகச் சாகுபடிப் பருவகாலம் எது என்பதும் எங்களுக்குத் தெரியாது என்றது. வழக்கமாக காவிரி நீரைப் பொறுத்த வரை தமிழகச் சாகுபடி காலம் சூன் மாதம் தொடங்கி சனவரி மாதம் முடிவடையும். இவ்வாண்டு செப்டம்பர் 17 ஆம் நாள்தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் பிப்ரவரிமாதம் வரை தண்ணீர் தேவைப்படும் என்றது தமிழக அரசு. கர்நாடகமோ டிசம்பர் மாதத்துடன் தமிழகச் சாகுபடிப் பருவம் முடிவடைந்து விடும் என்று வல்லடி வழக்குப் பேசியது.

தமிழகச் சாகுபடிப் பருவம், எதுவரை என்று தெரிந்திருந்தும், அதுபற்றி எங்களுக்குத் தெரியாது என்றது கண்காணிப்புக்குழு. கண்காணிப்புக் குழுவின் தலைவராக உள்ளவர். நடுவண் நீர்வளத்துறையின் செயலாளராகிய துருவிஜயசிங்கும் அவரது குழுவினரும் கடந்த மாதம்தான் தமிழகம் கர்நாடகம் ஆகிய மாநிலங் களுக்கு வந்து அணைகளையும் கழனிகளையும் பார்வையிட்டு, உழவர்களிடம் விசாரணை நடத்திச் சென்றனர். அக்குழுவினர் எங்களுக்கு கர்நாடகத்தின் தண்ணீர் இருப்பு தெரியாது என்று கூறுவதும், தமிழகச் சாகுபடிப் பருவம் தெரியாது என்று கூறுவதும் ஓர வஞ்சனை அல்லவா? அடாவடித்தனம் செய்யும் கர்நாடகத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் நயவஞ்சகம் இல்லையா?

கண்காணிப்புக் குழு ஏன் இப்படி ஒரு பக்கச் சார்பாக நடந்து கொள்கிறது? இந்திய அரசு காவிரிச் சிக்கலில் கர்நாடகத்துக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டிற்குப் பாதக மாகவும் நடந்து கொள்கிறது அதே பாணியில் கண்காணிப்புக் குழுவை செயல்பட வைக்கிறது இந்திய அரசு.

எனவே ஒன்றுந்தெரியாத பாப்பா போல், கண்காணிப்புக் குழு நவம்பர் 16 முதல் 30 வரைக் கர்நாடகம் தர வேண்டிய 8.03 ஆ.மி.க.வில் 40 விழுக்காட்டைக் கழித்துக் கொண்டு 4.81 ஆ.மி.க. திறந்து விடவேண்டும் என்றது. அதற்குமுன் இதே கண் காணிப்புக் குழு அக்டோபர் 16 முதல் 31 வரை 8.85 ஆ.மி.க. தண்ணீர் திறந்து விடக் கூறியது. அதைச் செயல்படுத்த முடியாது என்று அறிவித்தது கர்நாடகம். அது பற்றி 15.11.2012 கூட்டத்தில் வாய்திறக்கவில்லை கண்காணிப்புக் குழு. நவம்பர் 1 முதல் 15 வரை தரவேண்டிய தண்ணீர் பற்றியும் கண்காணிப்புக்குழு வாய்த்திறக்கவில்லை. “தமிழகம் கோரிய 52.8 ஆ.மி.க. பற்றி நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. எங்களிடம் விவரமில்லை “ என்று கூறிவிட்டது. கண்காணிப்புக் குழு.

கண்காணிப்புக்குழுவின் இந்த கர்நாடகச் சார்புக் கயமைத் தனத்தைக் கண்டு மனதிற்குள் களிக்கிறது இந்திய அரசு. இப்போது உச்சநீதிமன்றமும் சண்டைக் காரர்களே சமாதானம் பேசிக் கொள்ளுங்கள் என்று நழுவிக் கொண்டது. இந்திய அரசுக்கு நெருக்கடி தரும் எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் வழக்கம் போல் வாய்ச்சவடால் அடிப்பதும், புதுபுது வழக்குகள் போடுவதுமாக ஏமாற்றுகிறது தமிழக அரசு.

தமிழகமக்களே, கல்வி கற்றுள்ள தமிழக உழவர்களின் பிள்ளைகளே, உங்களுக்கு இன்னும் இந்தியாவின் தமிழின விரோதப்போக்கு புரியவில்லை? ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழிக்க இந்திய துணை நின்றது கூட உங்களுக்கு உண்மை என்னவென்று உணர்த்தவில்லையா? அதன் தொடர்ச்சிதான் காவிரி உரிமையைக் கர்நாடகம் பறிக்கத் துணைநிற்கும் அதன் செயல் என்று புரியவில்லையா?

தமிழக முதல்வர் செயலலிதாவுக்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் இந்த உண்மைகள் புரியும். ஆனால் அவர்கள் தமிழினத்தை இந்தியாவுக்கு அடமானம் வைத்துக் கங்காணி வேலைபார்த்து அதன் மூலம் கிடைக்கும் பதவி, பணம் கங்காணி அதிகாரம் ஆகியவற்றிற்காக உண்மை நிலையை மூடி மறைக்கிறார்கள். கருணாநிதி பிரதமருக்கு அடிக்கடி கடிதம் எழுதி தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவார். செயலலிதா உச்சநீதி மன்றத்தில் ஒவ்வொரு நாளும் வழக்குப் போட்டு, தமிழர்களிடையே வீராங்கனை வேடமிடுவார்!

தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத்தரமுடியாது என்று கர்நாடகம் அடாவடித்தனம் செய்து தமிழினத்தின் மீது தனது பகையைக் காட்டி கன்னட இன வெறியோடு நடந்துகொள்கிறது. தமிழினத்திற்கெதிரான கன்னட இனவெறிக்கு உச்ச நீதிமன்றம் உட்பட பிரதமர் உட்பட இந்திய அரசின் எல்லா உறுப்புகளும் துணை நிற்கின்றன.

இதனால் தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 5 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி அழிந்தது. 16 இலட்சம் ஏக்கர் சம்பாப் பயிர் காய்ந்து கருகிக் கொண்டுள்ளது.

இந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது, என்ன செய்து தமிழகத்திற்குரிய பங்கு நீரைப் பெறுவது என்பதற்குத் திட்டம் வகுக்க, உத்திகளை உருவாக்க ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவில்லை?

காட்டிக் கொடுத்த கழகங்கள் என்று மக்கள் நம்மை வசைபாடுவோர்களோ, வருங் காலத்தில் நமது வாக்கு வங்கி திவாலாகி விடுமோ என்ற அச்சம் அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. கட்சித் தலைமைகளுக்கு இல்லை. இக்கழகங்கள் தமிழ்மக்களின் ஏமாளித்தனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளன. கன்னடர்களைப்போல், மலையாளி களைப் போல், தெலுங்கர்களைப் போல் சொந்த தேசிய இனஉணர்வு ஏற்படாமல் தடுத்து, இல்லாத இந்திய தேசிய இனஉணர்வுக்கும், தெலுங்கு, கன்னட, மலையாளிகளை உள்ளடக்கிய திராவிட இன உணர்வுக்கும் அல்லவா தமிழர்களைப் பலியாக்கி உள்ளார்கள். இந்த இன மடைமாற்றல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

திருவாரூர் மாவட்டம் வலிவலம் அருகே கூரத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த உழவர் இராசாங்கம், தமது 6 ஏக்கர் சம்பாப் பயிர் தண்ணீர் இன்றி காய்ந்து கருகுவதைப் பார்த்து நெஞ்சொடிந்து நஞ்சருந்தி மடிந்து போனார்! கடன் தொல்லை, பிள்ளைகள் படிப்பு, திருமணம், இன்ன பிற குடும்பச்செலவுகள் இவற்றிற்கெல்லாம் என்ன செய்வோம் என்று நெஞ்சம் புழுங்கும் இராசாங்கங்கள் எத்தனையோ பேர் நடமாடும் பிணங்களாக வாழ்கிறார்கள்.

கர்நாடகத்தில் இன்றைய நிலவரப்படி 80 ஆ.மி.க. தண்ணீர் இருந்தும் அங்கு சாகுபடிப் பருவம் முடிந்துவிட்ட நிலையிலும், அதில் 40 ஆ.மி.க. தண்ணீரைக் கூட பெற முடியவில்லை தமிழக அரசால், தமிழகத் தேர்தல் கட்சிகளால்! தமிழர்களுக்கு ஆதரவாக எந்தச் சட்டத்தையும் செயல்படுத்த மறுக்கிறது இந்திய அரசு! இவற்றிடமிருந்து என்ன நீதியை எந்த ஞாயத்தை எதிர்பார்க்கிறாய் தமிழினமே?

வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் மேட்டூர் அணையில் சேமிக்கப்படும் தண்ணீர்தான் மறு ஆண்டின் சூன், சூலைப் பருவக் குறுவை சாகுபடிக்குத் திறந்து விடப்படும். வரும் சூன், சூலை மாதம் குறுவைக்குத் திறந்து விட மேட்டூர் அணையில் தண்ணீர் இருக்காது; சேறும் சகதியும் தான் இருக்கும். தமிழகக் காவிரி மாவட்டங்கள் நிரந்தரப் பாலை நிலமாக மாறவேண்டியது தானா?

முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு செயல்படாது. கச்சத்தீவை மீட்க முடியாது. சுண்டைக்காய் சிங்களநாடு தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதையும், தாக்குவதையும் தடுக்க முடியாது. பிறகு என்ன வெங்காயத்துக்காக தமிழ்நாடு இந்தியாவில் இருக்க வேண்டும்? தமிழினத்தை அழித்துக் கொள்வதற்காக இந்தியாவில் அடிமை வாழ்வு வாழவேண்டுமா?

தமிழினமே, எண்ணிப்பார்! எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்!