''நெல்விலை வீழ்ச்சியைக் கண்டித்தும், உழவர்களின் சந்தையைப் பாதுகாத்து, இலாபமான விலை கிடைக்கச் செய்ய வேண்டுமெனக் கோரியும் தமிழக உழவர் முன்னணி சார்பில் 9.12.2011 வெள்ளி அன்று சிதம்பரம் வட்டம் சாக்காங்குடி பேருந்து நிறுத்தம் அருகில் உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற்றது.

 திரு என். ஜெயபாலன் (மாவட்டச்செயற்குழு, தமிழக உழவர் முன்னணி) தலைமையில் நடந்த இப்போராட்டத்தில், உழவர் முன்னணி மாவட்டத் தலைவர் அ.கோ. சிவராமன், மாவட்டச் செயலாளர் சி. ஆறுமுகம், ஒருங்கிணைப்பாளர் மா.கோ. தேவராசன், மேலமூங்கிலடி ராசேந்திரன், மதிவாணன், பொன்னுசாமி, வெங்கடாசலம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

போராட்டத்தை முடித்து வைத்து, கோரிக்கை களை விளக்கி தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் சிறப்புரை யாற்றினார்.

ஒரு ஏக்கருக்கு நெல் உற்பத்திச் செலவுக்கு சராசரி ரூ. 39,143 ஆகிறது. அரசு கொள்முதல் நிலையத் தில் விற்றால் கூட ஏக்கருக்கு ரூ.18,343 இழப்பு ஏற்படுகிறது. எனவே வேளாண் தொழில் லாபமாக நடைபெற குவிண்டால் ரூ. 2,100 என அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.

நெற்பயிருக்கான ஒரு ஏக்கர் காப்பீட்டுத் தொகை ரூ.120 லிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது உழவர்களிடையே பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையே அகற்றிவிட்டது. புதுச்சேரி அரசு போன்று பயிர்க்காப்பீடு தொகை முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டும். உர விலை நிர்ணயத்தை தனியாரிடம் விடாமல் அரசே நிர்ணயத்து குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு சட்டநெறிகளுக்கு முரணாக நடந்து கொள்வதை முடிவுக்குக் கொண்டுவர, கேரளத்திற்கு செல்லும் அனைத்துப் பாதைகளையும் மூடி, அம்மாநிலத்துக்கு எதிரான பொருளாதாரத் தடையை தமிழக அரசு விதிக்க வேண்டும்.

நெய்வேலியிலிருந்து கேரளத்திற்கு செல்லும் மின்சாரம் முழுவதையும் நிறுத்த வேண்டும் எனக் கோருகிறோம். அதனை முழுவதும் தமிழ்நாட்டிற்குத் திருப்பிவிட தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்'' எனப் பேசினார்.

200க்கும் மேற்பட்ட உழவர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.