தஞ்சை விளாரில் நவம்பர்8 - வெள்ளியன்று மாலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திறப்பு நிகழ்வில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

“இங்கு நாம் ஒரு நினைவுச் சின்னமாக எழுப்பியிருக்கும் இம்முள்ளிவாய்க்கால் முற்றத்தைத் தகர்க்க இவர்கள் ஏன் ஆசைப்படுகிறார்கள்? இந்நிகழ்வுக்கு ஏன் தடை விதிக்கிறார்கள்? இராசபக்சே செய்வதற்கும் இவர்கள் செய்வதற்கும் என்ன வேறுபாடு? மாவீரர் துயிலும் இல்லங்களை, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது தலைமையகத்தைத் தகர்த்து மகிழ்கிறான் இராசபக்சே.
 
அய்யா நெடுமாறன் அவர்கள் சொன்னதைப் போல், பேரழிவுக்கு உள்ளான நம் மக்களுக்கு நடுகல்லாக, நெடுங்கல்லாக, நினைவாக ஒரு மன்றத்தை உருவாக்கி, அதில் சிலைகளாக அவர்களுக்கு நேர்ந்த அவலங்களை வடித்திருக்கிறோம். இதை இடிக்கத் துடிக்கிறார்களே இங்குள்ளவர்கள், இவர்களுக்கும் இராசபக்சேவுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

இந்தியா இந்த இனப்படுகொலையில் பங்கெடுத்த நாடு. அண்ணன் வைகோ அவர்கள், இலங்கைக்கு ஆயுதம் அளிக்காதீர்கள் எனக் கேட்டுக் கொண்ட போது, நாம் கொடுக்க வில்லையெனில் சீனா கொடுத்து விடுவான் அதனால் தான் நாங்கள் இலங்கைக்கு ஆயுதம் அளிக்கிறோம் என நேரடியாக வாக்குமூலம் அளித்தவர் பிரதமர் மன்மோகன் சிங். ஈழத் தமிழனை இந்திய ஆயுதத்தால் சுட்டுக் கொல்வதா, சீன ஆயுதத்தால் சுட்டுக் கொல்வதா என்றால், இந்திய ஆயுதத்தால் தான் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்த நாடு இந்தியா.
 
எனவே, இன்றைக்கு இராசபக்சேவின் கூட்டாளியாக உள்ள இவர்கள், இறந்து போன, கொல்லப்பட்ட நம் சொந்தங்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதைக் கூடத்தடுக்கிறார்கள். இந்தியா தடுக்கிறது. அதன் உளவுத்துறைத் தடுக்கிறது.

தமிழக அரசு, தனக்கென தனி அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு, இம் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு உள்ள ஞாயத்தை இந்திய அரசுடன் பேச முடியாதா? சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பேசிய ஞாயத்தை, தினந்தோறும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பேச முடியாதா? நேற்று முன் தினம் ஒற்றை நீதிபதியாய் நீதிபதி ராஜா இவ்விழாவிற்கு அனுமதி வழங்கி, தமிழக அரசு இந்நிகழ்வுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென தமிழகக் காவல் துறைக்கு ஆணையிட்டார்களே, அதைக் காட்டி இவ் விழாவுக்கு உயர்நீதி மன்றமே அனுமதி கொடுத்து விட்டது என தமிழக முதலமைச்சர், இந்திய அரசிடம் சொல்லியிருக்க முடியாதா?

பின்னர், இந்த விளார் ஊராட்சி மன்றத் தலைவரை நிர்பந்தித்து, அவருக்கு நெருக்கடி கொடுத்து, அவசரக் கூட்டம் கூட்டி, சென்னையிலிருந்து அதிகாரிகளால் எழுதிக் கொண்டு வரப்பட்ட இரண்டுத் தீர்மானங்களை ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றினார்கள்.
 
முள்ளிவாய்க்கால் முற்றம் நெடுஞ்சாலையில், புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது, எனவே அதனை இடிக்க வேண்டு மென்ற ஒரு தீர்மானத்தை, விளார் கிராமப் பஞ்சாயத்துக் கவுன்சில் நிறை வேற்றியிருக்கிறது.

இந்தத் தீர்மானத்தை இயற்றியது, கவுன்சில் உறுப்பினர்கள் அல்ல, சென்னையிலிருந்து தான் இதை எழுதினார்கள். எழுதியவர்களும் டெல்லி அதிகாரிகள் அல்ல. தமிழக அரசு அதிகாரிகள்தான் இதை எழுதியிருக்கிறார்கள்.

இரண்டாவது தீர்மானம், இங்கே, நண்பர் வடுவூர் சிவா அவர்களால் மிக அழகாகப் போடப் பட்டுள்ள இந்த விழாப் பந்தலை அகற்ற வேண்டு மென்கிறது. ஒரு தமிழன் இந்தியா முழுவதும் சென்று பந்தல் போடுவது பெருமைக்குரியது. இங்கு பந்தல் போடும் பணியை ஓரிரிரு நாட்களில் முடித்து விட்டார்கள். அதன்பிறகு அலங்காரம் செய்ய விடாமல் காவல்துறையினர் தடுத்தனர். பந்தலைப் பிரி என்றனர். நீதிமன்ற ஆணைக் கிடைத்தவுடன் ஒரே நாளில் இவ்வளவு அலங்காரங்களையும் செய்து முடித்தனர்.
 
சிலப்பதிகாரத்தில் “மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண்ட அகத்து, நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தல்” என இளங்கோவடிகள் வர்ணித்தார். இந்தத் தமிழனுக்கு அன்றே அப்படிப்பட்ட அறிவும் ஆற்றலும் இருந்திருக்கிறது. அதன் வாரிசாக, அதன் மரபுத் தொடர்ச்சியாக இன்று சிவா இருக்கிறார்.

இந்தப் பந்தலை இடிக்க வேண்டுமென காவல்துறை வந்து நிற்கிறது. விளார் பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இதை யார் எழுதியது? ஜெயலலிதா தலைமையிலுள்ள தமிழக அரசு அதிகாரிகள் தான் இதை எழுதினார்கள்.
 
அந்தளவுக்கு ஏன் போக வேண்டும்? முள்ளிவாய்க்கால் முற்றம் யாருக்கு எதிரானது? என்ன ஆபத்தானது? தமிழினத்தின் மீது உங்களுக்கு (ஜெயலலிதாவுக்கு) காழ்ப் புணர்ச்சி இருக்கிறது என நான் குற்றம் சாட்டுகிறேன்.

ஏதோ ராஜதந்திரமாக, தேர்தல் நாடகமாக சட்ட மன்றத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்றினீர்கள். இலங்கைக் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென தீர்மானம் நிறை வேற்றினீர்கள். அதே கோரிக்கையை எடுத்துக் கொண்டு நமது மாணவத்தம்பிகள் சென்னையிலிருந்து, ஊட்டியிலிருந்து, இடிந்த கரையிலிருந்து, சாத்தூரிலிருந்து சுடரேந்தி, ஊர்திகளிலே மக்கள் கூடும் இடங்களில் பரப்புரை செய்யப் புறப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் ஆங்காங்கே கைது செய்தீர்கள். இந்த மாணவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? உங்களுக்கு எதிராக முழக்கம் போட்டார்களா? இந்தியாவுக்கு எதிராகக் கூட போட வில்லையே. காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாதென்று முழக்கமிட்டார்கள். புறப்பட்ட இடத்திலேயே அனைவரையும் கைது செய்தீர்கள்.
 
நம்முடைய இனம் இவ்வளவு பெரிய அழிவை சந்தித்திருக்கிறது. இந்தப் பேரழிவை எங்கோ இருக்கிற சேனல்-4 தொலைக்காட்சி காட்டுகிறது. இசைப்பிரியாவுக்கு நேர்ந்த அவலத்தை, சித்திரவதையை, மானக்கேடாக நடத்தியக் கொடுமையை, உலகம் கண்டிக்கிறது. இதுவரை சேனல்-4 காட்டியது. நேற்றிலிருந்து, பி.பி.சி. செய்தி நிறுவனம் காட்டத் தொடங்கியிருக்கிறது. ஈழத்தில் நடந்த மனித உரிமை மீறலை, படுகொலைகளை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை நாங்கள் அப்பட்டமாக தொடர்ந்து காட்டுவோம் என பி.பி.சி. அறிவித்து விட்டது.
 
சேனல்-4 காட்டுகிறது. பி.பி.சி. காட்டுகிறது. அவனுக்கெல்லாம் கூட மனம் பதைக்கிறது. நடுங்குகிறது. டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு உள்ளம் நடுங்காது. ஏனென்றால், இவர்கள் குற்றவாளிகள். இனப்படுகொலையில் பங்கெடுத்த கயவர்கள். ஆனால், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் நீங்கள், அந்த டெல்லி ஏகாதி பத்தியத்திற்கு கங்காணி வேலை பார்க்கிறீர்களா? இதுதான் இங்கு கேள்வி! எந்த மாநிலத்திலாவது, அந்த இனத்திற்கு இப்படிப்பட்ட கேடு நடந்திருந்தால் அந்த மாநில முதலமைச்சர் இப்படி நடந்து கொள்வாரா?

2008-, 2009 இல் அன்றைய முதலமைச்சர் இப்படித்தான் நடந்து கொண்டார். மேடையில் பேசிய எங்களுக்கெல்லாம் சிறைத் தண்டனை. அண்ணன் வைகோ, நெடுமாறன் அவர்களையெல்லாம் ஏற்கெனவே அம்மையார் பொடாவிலே சிறை வைத்தார். அதன்பின் வந்த கருணாநிதி, ஈரோட்டிலே ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக, நான், தோழர் கொளத்தூர் மணி, சீமான் ஆகிய எங்களைக் கைது செய்து கோவையில் சிறை வைத்தார். தோழர் சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம். கொளத்தூர் மணி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம். அன்றைக்கு கருணாநிதி போட்டார், இன்றைக்கு நீங்கள் கொளத்தூர் மணி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் போட்டிருக்கிறீர்கள்.
 
இந்த மேடையில் வந்து பேச வேண்டிய தலைவர் தோழர் கொளத்தூர் மணி. அவர் என்ன குற்றம் செய்தார்? எதற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டம்? ஈழத்திலே இராசபக்சே செய்யும் கெடுபிடிக்கும் இங்கே நீங்கள் செய்யும் கெடு பிடிக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? கருணாநிதி அன்று செய்த இனத்துரோகத்திற்கும், இன்று செயலலிதா செய்யும் இனத் துரோகத்திற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? வேட்டியிலும் புடவையிலும் தான் வேறுபாடு இருக்கிறது. வேறு எந்த வேறுபாடும் இல்லை.

இனி பழையத் தமிழர்கள் இல்லை. மந்தைத் தமிழர்கள் இல்லை. ஆட்டு மந்தை, மாட்டு மந்தை போல நாங்கள் ஓட்டு மந்தை வைத்திருக்கிறோம். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இனியும் இறுமாப்பு கொள்ள முடியாது. நீங்கள் நீட்டிய விரலைப் பார்த்து ஓட்டுப் போடுவான் என எண்ணுகிற பழையத் தமிழனல்ல. அவ்வாறு கருதிக் கொண்டிருந்த இனமானத் தலைவர் ஒருவர் கவிழ்ந்து விட்டார். அம்மையாருக்கு இது பாடம். யாருக்கும் மந்தையாக இருக்காமல், சுயமாக சிந்திக்கும் புதியத் தமிழின இளைஞர்கள், மாணவர்கள் இன்று கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். இது புதிய காலம், புதிய சகாப்தம்! எனவே, அப்படியெல்லாம் இந்த மந்தையை மடக்கிவிடலாம் என நினைக்காதீர்கள்.உங்களுக்கு பாடம் கிடைக்கும்.
 
எதற்காக இவ்வளவு பெரிய கெடுபிடிகள்? நான்கு நாட்களாக அய்யா நெடுமாறன் அவர்களோடு இருக்கிறோம். அவரது உள்ளத்திலே என்ன இருக்கிறது என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அந்த மனிதன் துன்பப் படலாமா? இது தான் எங்களுடையக் கேள்வி! அந்த மனிதன் செய்த குற்றமென்ன? எதற்காக நொந்து சாக வேண்டும்? எதற்காக அவரை சித்திர வதைப்படுத்தினீர்கள்? நான்கு நாட்களாக, நெடுமாறன் என்ற அம்மனிதரை, அந்த ஆத் மாவை, தமிழர்களின் பொதுச் சொத்தை சித்திரவதைப் படுத்தினீர்கள். எதற்காக? அவர் என்ன குற்றம் செய்தார்? இந்தக் கொடுமைகளையெல்லாம் நமது இளைஞர்கள், தமிழின உணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

யாருக்கும் நாம் காவடி தூக்க வேண்டியதில்லை. தமிழினத்துக் குத்தான் நாம் அணி வகுக்க வேண்டும். யாருக்கும் காவடி எடுக்க வேண்டிய அவசியம் தமிழினத்திற்கு இல்லை. இந்த இனத்திற்கு எது சரி, எது தவறு என நீங்கள் முடிவு செய்ய வேண்டும். கடந்த காலம் நம்முடைய மூத்த தலைமுறை, தலைவர்களின் தவற்றைக் கண்டிக்க, திருத்தத் தவறி விட்டது. அந்தத் தலைவர்கள் என்ன சொன்னாலும், பனம் பழத்தைக் காட்டி இதுதான் கரடி முட்டை என்று சொன்னாலும் ஏற்றுக் கொண்டு தலையாட்டிய நம் மூத்த தலைமுறை கொடுத்த தைரியத்தில், இந்தத் தலைவியும் அந்தத் தலைவரும் இப்படியெல்லாம் இனத்து ரோக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
இந்தத் தலைமுறை இப்படியே இருக்க முடியாது. அவரவர்களுக்கு கட்சி இருக்கட்டும். அது அவர்களது விருப்பம். ஆனால், ஒட்டு மொத்தத் தமிழினத்திற்கு ஒரு ஆபத்து என்றால், உரிமைப் பறிப்பு என்றால் எல்லோரும் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும். கேரளத்தில் அப்படி நடக்கிறது, கர்நாடகாவில் அப்படி நடக்கிறது.

பாழ்பட்ட தமிழகத்தில் மட்டும் ஏன் அப்படி நடப்ப தில்லை? என்ன உங்களுக்கு கட்சி விசுவாசம்? உங்கள் கட்சிக்கு விசுவாசமாய் இருக்கிறேன் என்ற பெயரில், இனத்திற்கு துரோகம் செய்யக் கூடாது. துரோகம் செய்தால் அதை தடுத்து நிறுத்தும் கடமை நம் மக்களுக்கு இருக்கிறது.
 
இந்தியா காமன் வெல்த்திறகுப் போகக் கூடாதென அய்யா நெடுமாறன் அவர்கள் சற்றுமுன் விளக்கினார்கள். இந்தியப் பிரதமர் போகக் கூடாது என்பதல்ல நமது முக்கியக் கோரிக்கை. காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும். அதிலே ஒன்றுதான், அதன் மாநாட்டை கொழும்பில் நடத்தக் கூடாதென்பது. நடந்தாலும் அதற்கு இந்தியா போகக் கூடாதென்பது.
 
தில்லிக்காரர்கள் சொல்கிறார்கள், இலங்கையோடு உள்ள உறவையும் கவனத்தில் கொண்டு, தமிழ் நாட்டு மக்களின் உணர்வையும் கவனத்தில் கொண்டு ஒரு முடிவெடுப்பார்களாம். இரண்டும் சமமா? ஒன்றரை இலட்சம் மக்களை இழந்திருக்கிறோம். இனப்படுகொலை நடந்திருக்கிறது. எங்கோ இருக்கும் கனடா சொல்கிறது, இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது, போருக்குப் பின்னர் அங்கு மனித உரிமைகளில் முன்னேற்றமில்லை, எனவே அதில் எங்கள் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என சொல்கிறது.

இங்கோ, தராசுத் தட்டு வைத்துப் பார்க்கிறான் கொலைகாரன். தமிழர்களின் உணர்வுகளைக் கணக்கில் எடுப்பானாம். இலங்கையுடன் உள்ள உறவைக் கணக்கிலெடுப்பானாம். சர்வதேச நிலைமைகளை கணக்கிலெடுப்பானாம். உன் இனம் இப்படி எங்காவது அழிந்திருந்தால், நீ இந்த கணக்கையெல்லாம் எடுப்பாயா? கொலைகாரனையும், கொல்லப்பட்டவன் குடும்பத்தையும் இருவரது உணர்வையும் சமத்தட்டில் வைத்துக் கணிக்கிறேன் என்கிறாயே, தமிழர்களை முட்டாள்கள் எனக் கருதுகிறாயா?

இலங்கையுடனான உறவும், தமிழர்களுடைய உணர்வும் இரண்டும் சமத்தட்டில் வைத்துப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றால் நீ எங்கள் இனத்தை வஞ்சிக்கிறாய். எங்களை ஏமாற்றுகிறாய். நாசூக்காகப் பேசி நடிக்கிறாய் என்று பொருள். நாங்கள் ஏமாந்து போவோமென்று கருதுகிறாயா? மாட்டோம்.
 
இராசபக்சே ஒரு கொலைகாரன். அவனோடு உள்ள உறவும், எங்களுடைய உணர்வும் சம மென்று கருதுகிறார், ஆட்சியிலிருக்கும் மன்மோகன் சிங்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன், இலங்கையோடு உறவை அறுத்துவிட்டால் ஈழத்தமிழர்களுக்காக யாரோடு பேசுவது என்கிறார். பாவிகளே! நீங்களா ஈழத்தமிழர்களுக்காகப் பேசினீர்கள்? ஈழத்தமிழரை எப்படி அழிக்க வேண்டும் என்பதற்காக மாதாமாதம் இராசபக்சேவுடன் அல்லவா, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் தூதர்களும் பேசினார்கள்! ஈழத்தமிழர்களை அழிப்பதற்கல்லவா இராசபக்சேயுடன் பேசினீர்கள்? இதுவரை என்ன சாதித்துக் கிழித்தீர்கள்?

இன்றுவரை வடக்கு மாகாணத்தில், கிழக்கு மாகாணத்தில் சிங்கள இராணுவத்தை வெளியேற்ற முடியவில்லை. இந்தியா என்ன சாதித்தது? ஏதோ பேசி சாதித்ததைப் போல நாடகமாடுகிறார்கள். அறிக்கைகள் கொடுக்கிறார்கள்.
 
இலங்கையைத் தண்டிக்க வேண்டுமே தவிர, அதனோடு பேசுவதற்கு ஒன்றுமில்லை. மனித உரிமைகளில் அக்கறையுள்ள ஒரு நாடு இலங்கையோடு பேச முடியாது. இலங்கையை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும். அது தான் இன்றையத் தேவையே தவிர, வேறெதுவுமில்லை.

இலங்கையை காமன் வெல்த்திலிருந்து நீக்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை. அது பெரிய கோரிக்கையும் அல்ல. பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்தில் இராசபக்சேக் கும்பலை நிறுத்த வேண்டும். ஐ.நா. மேற்பார்வையில் தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுவரை அங்கு ஐ.நா. மேற்பார்வையில் துயர்துடைப்புப் பணிகள் அங்கு நடைபெற வேண்டும். இவை தான் நமது கோரிக்கைகளே தவிர, காமன்வெல்த் அல்ல.
 
ஆனால், இதையும் காமன் வெல்த்திற்கு போகக் கூடாது என்பதையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலக அரங்கில் அந்தக் கொடியவனைத் தனிமைப்படுத்த, அம்பலப்படுத்த காமன் வெல்த் மாநாடு அங்கு நடைபெறக் கூடாது என்ற போராட்டத்தையும் நாம் விரிவுபடுத்த வேண்டும். ஒரு வேளை அங்கு நடை பெறும் மாநாட்டிற்கு இந்தியா போனால், ஒரு முடிவுக்கு வாருங்கள் தமிழர்களே! இந்தியா நமக்கான நாடு இல்லை என்ற முடிவுக்கு வாருங்கள்! நாம் அவர்களிடம் தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருக்க முடியாது! இந்தத் திசையில் தான் இனி நாம் சிந்திக்க வேண்டும் என்று முள்ளி வாய்க்கால் ஈகியர் பெயரால் உறுதி யேற்போம்!

அய்யா நெடுமாறன் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, இந்த முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தைப் பாது காப்போம், பராமரிப் போம்! தொடர்ந்து நமக்கு வழி காட்டும் நிலையமாக, மக்களுக்கு வீரவணக்க அரங்கமாக இது நிலவும். உலகின் மிகச்சிறந்த நினைவகமாக இது விளங்கும். தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாயிரம் ஆண்டு காலமாய் நிற்பது போல, முள்ளி வாய்க்கால் முற்றம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழும். இது தமிழினத்தின் சொத்து, இது போற்றப்படும். தமிழ் மக்களால் ஏற்கப்படும் என அய்யா அவர்களுக்கு உறுதிகூறி, அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்! வணக்கம்!’’

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.