தி இந்து நாளிதழில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரை தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மாற்றுக் கருத்தின்றி அனைத்துத் தரப்பினரும் ஜெயமோகனின் கருத்தை எதிர்த் துள்ளனர்.

அந்தக் கட்டுரையில், ‘சென்னையில் பெரும் ஆங்கிலப் புத்தகக் கடையொன்றில் ஆங்கில நூல் ஒன்று 2,000 பிரதிகள் விற்றிருக்கிறது. பரபரப்பாக விற்கும் ஒரு தமிழ் நூல் வருடம் 2,000 பிரதிகள்தான் விற்கும். அதில் 1,500 பிரதிகள் நூலகத்துக்கு வாங்கப்படுபவை. தமிழகம் முழுக்க 500 பிரதிகள் வாசகர்களிடம் விற்கப்பட்டால் அது ஒரு சாதனை! ஏனெனில், நம் இளைய தலைமுறை வாசிக்கிறார்கள். ஆனால் தமிழில் வாசிப்பதில்லை. இந்தியா எங்கும் ஆங்கிலவழிக் கல்வி பரவலாகி வருகிறது. உலகமயச் சூழலில் ஆங்கிலமே வேலை வாய்ப்புக்குரிய மொழி. நம் குழந்தைகள் தேர்வுக்காக மட்டுமே தாய்மொழியைக்கற்கின்றனர். நம் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே எழுதுகின்றன, வாசிக்கின்றன. ஆகவே, இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொண்ட தமிழ் அவர்கள் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.

கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்: அம்மா இங்கே வா வா என்றால், “ammaa ingkee vaa vaa” என்று. பள்ளிகளில் இதைக் கற்பித்தால், குழந்தைகளுக்கு ஒரே ஒரு எழுத்துருவைக் கற்பித்தால் போதும். அவர்கள் தமிழை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக வாசிக்க அது உதவும் அல்லவா? அது காதில் தமிழ் கேட்கும் சூழல் கொண்ட, தமிழைப் புரிந்துகொள்ளக்கூடிய எவரும் தமிழில் வாசிக்கும் சூழலை உருவாக்கும். தமிழ் வருங்காலத்திலும் வாசிக்கப்படும். இல்லையேல், தமிழ் ஒருவகைப் பேச்சு வழக்காக மட்டுமே நீடிக்கும்.’ என்று கூறியிருக்கிறார்.

மேலே, ஒட்டு மொத்த அவரது கட்டுரையின் கருத்தை அவரது வார்த்தைகளில் சுருக்கி தந்திருக்கிறேன்.

ஜெயமோகன் ஆங்கிலப் புத்தகங்கள் அதிகளவில் விற்பனை ஆகிறது என்கிறார். அதுவும் தமிழ்ப் புத்தகங்களை ஒப்பிடும் போது அதன் விற்பனை மிக அதிகம் என்கிறார்.
 
ஐயா ஜெயமோகன் அவர்களே, ஆங்கிலப் புத்தகத்தை (ஆங்கில வாசிப்பு பழக்கமுள்ள) அனைத்து மொழியினரும் படிக்கின்றனர். ஆக இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிப் புத்தகங்களை விட ஆங்கிலப் புத்தகங்கள் அதிகமாகவே விற்பனை ஆகலாம்.
 
ஒருவேளை உங்கள் புத்தகங்கள் பரவலாக வரவேற்பு இல்லாமல் குறைவாக விற்பனை ஆகிறது என்று நீங்கள் கருதினால் அதை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுப் பாருங்கள். சும்மா பிச்சுக் கொண்டு போகும்!! அதை விடுத்து, தமிழ் மொழியில் புத்தகமே எழுத வேண்டாம். ஆங்கில எழுத்துருவில் எழுதுங்கள் என்று சொல்வது நியாயமா?

அடுத்ததாக, இந்தியா முழுவதும் ஆங்கில வழிக்கல்வி பரவலாகி வருகிறது என்பதை காரணமாக சொல்லி தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதினால் என்ன என்று கேட்கிறீர்கள்.
 
அப்படியென்றால் இந்தியாவுக்குள் உள்ள பிற மொழிகளையும் ஆங்கில எழுத்துருவில் எழுதுங்கள் என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். ஏன் சொல்லவில்லை?. அதுவும் அந்தக் கட்டுரையில் அது பற்றி ஒரு வரி கூட இல்லை.
 
கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகியன இந்தியாவுக்குள் தான் இருக்கிறது. எனவே அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று “உங்கள் தாய் மொழியில் எழுதுவதை கைவிட்டு விட்டு ஆங்கில எழுத்துருவில் எழுதுங்கள்’’ என்று சொல்லிப் பாருங்களேன்!
 
உலகமயச் சூழலில் ஆங்கிலமே வேலை வாய்ப்புக்குரிய மொழி என்று சொல்லி இருக்கிறீர்கள். இதற்கான புள்ளி விபரங்கள் உங்களிடம் உண்டா? வேலை வாய்ப்புக்காக வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் மக்கள் தமிழைக் கற்றுக் கொண்டுதான் வருகிறார்களா?

அவ்வளவு ஏன்? உலகம் முழுவதும் பரவி இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்ற பின்னர்தான் அந்நாடுகளுக்குச் சென்றார்களா?

நான் தமிழ் வழியில் படித்தவன். என்னுடன் பள்ளியில் இருந்து கல்லூரி வரை படித்த நண்பர்களில் பலர் இன்று வெளிநாடுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் பணியாற்றுகிறார்கள். அவர்களில் பலர் பள்ளிக் காலங்களிலும், கல்லூரிக் காலங்களிலும் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசும் முடியாதவர்களாக இருந்தார்கள்.

தேவையின் பொருட்டு, மிகக் குறுகிய காலத்திலேயே ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டு விட்டார்கள். இன்னொன்றையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் என்னதான் ஆங்கிலத்தில் புலமை பெற்றாலும், ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவனுக்கு அடுத்த நிலையிலேயே இருக்க முடியும். இந்தியாவில் பிறந்து ஆங்கில வழியில் கற்பதால் யாரும் ஆங்கிலேயர்கள் ஆகிவிட முடியாது.

அடுத்து நம் குழந்தைகள் தேர்வுக்காக மட்டுமே தாய் மொழியைக் கற்கின்றனர் என்கிறீர்கள். அதில் என்ன உங்களுக்குப் பிரச்சனை? நம் கல்விக் கூடங்களில் கற்கும் பாடங்கள் அனைத்துமே தேர்வுக்காகவே கற்பிக்கப்படுகின்றன. கற்கப்படுகின்றன. அது நம் பாடத்திட்டத்தில் உள்ள சிக்கல். அது மாற்றப்பட வேண்டும் என் பதில் மாற்றுக் கருத்து இல்லை.
 
ஆனால் அதையே காரணமாக வைத்து தமிழை ஒழித்துக் கட்டும் வழியை முன்மொழியலாமா?

நம்முடைய குழந்தைகள் ஆங்கிலத்திலேயே வாசிக்கின்றன. எழுதுகின்றன. எனவே தாய்மொழி அவர்களுக்கு கைகளுக்கும் கருத்துகளுக்கும் பழக்க மற்றதாகி விடுகின்றன என்று சொல்கிறீர்கள். ஐயா..நான் கேட்கிறேன். ஆங்கில வழியில் படிப்பவர்கள் அனைவரும் ஆங்கில புத்தகங்களை வாங்கிக் குவித்து படித்து அறிவாளி ஆகிவிடுகிறார்களா?

“சிகப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்’’ என்கிற நடிகர் வடிவேலு காமெடியை விட இது பெரிய காமெடியாக இல்லை. ஆங்கிலத்தில் வாசிப்பவருக்கு தாய் மொழி சரளமாக வரவில்லை என்றால் அது நிச்சயம் தவறானது. அதை அவர் சரிசெய்து கொள்ள வேண்டும்.

இது எப்படி இருக்கிறது தெரியுமா? இந்தக் காலத்தில் பிள்ளைகள் யாரும் பெற்றோரை மதிப்ப தில்லை என்பதால், குறிப்பிட்ட வயது வந்ததும் பெற்றோர்களை சாகடித்து விடலாம் என்று சொல்வது போல் உள்ளது.

கணினியில் தட்டச்சு செய்பவர்கள் ஆங்கில எழுத்துகளிலேயே தமிழைத் தட்டச்சு செய்கிறார்கள் என்கிறீர்கள். இருக்கட்டுமே. இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் நான் பழைய தட்டச்சு முறையிலேயே தமிழை கணினியில் தட்டச்சு செய்கிறேன். எனக்குக் கற்றுக் கொடுத்தவருக்கு அது தெரிந்திருந்தது. அதனால் அதைக் கற்றுக் கொண்டேன். நான் பலருக்கும் இந்த முறையைக் கற்றுக் கொடுத்து வருகிறேன்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு கணினியில் தமிழில் தட்டுச்சு செய்யவே முடியாத நிலை பரவலாக இருந்தது. இன்று சூழல் மாறி விட்டது. இப்போது கைபேசியிலும் தமிழில் குறுந்தகவல் அனுப்ப முடியும். தமிழை நேசிப்பவர்கள், தாய்மொழிப்பற்று கொண்டவர்கள் மாற்றுவழியை யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் மூலம் தமிழ் மேன்மேலும் வளரும். நீங்கள் பாவம்!! அலட்டிக் கொள்ள வேண்டாம்.

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் தமிழை புரிந்து கொள்ளக் கூடிய யாரும் தமிழை வாசிக்கும் வசதி கிடைக்கும் என்கிறீர்கள்.

ஒரு மொழியின் எழுத்துகளை அழித்துவிட்டு வேறொரு எழுத்துருவில் அந்த மொழியின் படைப்புகளை கொண்டு செல்வது உயிரில்லாத பிணத்துடன் புணர்வதற்குசமம். அதுவும் நாமே கொலை செய்து விட்டு, அதன்பின்பு புணரும் கொடுமைக்குச் சமம். அதை நாங்கள் செய்ய மாட்டோம். செய்யவும் விடமாட்டோம்.
உங்கள் புத்தகங்களின் விற்பனை உங்களுக்குத் திருப்தியாக இல்லை என்றால் அதற்கு மாற்று வழி ஏதாவது யோசியுங்கள். அதை விடுத்து இந்த விபரீதங்களை எங்கள் முன் வைக்காதீர்கள்.

உங்கள் திரைக்கதை, உரையாடலில் எழுதிய கடல், நீர்ப்பறவை போன்ற படங்கள் மோசமான தோல்வியை தழுவின. அதற்காகத் தமிழ்த் திரையுலகினரிடம் சென்று, “தமிழ்ப்படங்களை எடுப்பதை நிறுத்தி விடுங்கள்; ஆங்கிலப் படங்களை டப்பிங் செய்து வெளியிட்டால் போதும்’’ என்று சொன்னாலும் சொல்வீர்கள், ஆச்சர்யப் படுவதற்கு இல்லை.