பிரச்சாரங்கள் இலக்கியமாகாது. ஆனால் இலக்கியங்கள் தன்னுள் பிரச்சாரத்தைக் கொண்டிருக்கும் எனும் படைப்பு விதிகளின் படி “செந்நீர்” நாவல் திகழ்கின்றது. தமிழில் ஆகச் சிறந்த இலக்கியப் படைப்புகளுள் ஒன்றாக செந்நீர் தன்னை அடையாளப் படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் “தமிழ்த் தேசியம்” எனும் விடுதலைக் கருத்தியலை உள்ளீடாகக் கொண்ட இந்நாவல் தன் பணியில் வெற்றிப் பெற்றுள்ளதாக உறுதிடன் கூறலாம்.

செந்நீர் நாவல் – மூணாறு மலைச்சரிவுகளின் கொடுங்கதை என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் அதனினும் மேலாக ஓர் இனத்தின் தாயக இழப்பின் வலியை, மக்களின் உரிமைகளற்று வாழ்பவை, விளிம்பு நிலை மனிதர்களின் அடிமைத்தன வாழ்வை, கட்டுண்டு கிடக்கும் தொல்குடி மக்களின் உள்ளக் குமுறலை அழகுற பதிவு செய்துள்ளது. கோடை மனிதர்களின் கனவு நிலமாகத் திகழ்கிற மலைச் சரிவு மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையும், அவர்கள் மீதான பொருளியல் சுரண்டல்களையும் வட்டார மொழிகலந்து எளிய நடையில் பதிவு செய்துள்ள ஆசிரியர் அன்வர் பாலசிங்கம் பாராட்டுதலுக்குரியவர். இவற்றிற்கும் மேலாக நிகழ்கால தமிழினத்தின் அரசியல் நெருக்கடிக்கூறுகளை தன் களனாகக் கொண்டுள்ளது இந்நூல்.

 “சாரே எங்க தமிழ்நாட்டுல போலிஸ் வண்டில தமிழ்ல காவல்னு போட்டிருக்கும் அதப்போல இ.. மலையாள பாஷையில போலிசுக்கு எதும் உண்டா”.. என்று மலையாள காவல்துறையைச் சேர்ந்த வினுவிடம் கேட்கும் சுப்பன் பதில் இல்லாமல் முழிக்கும் வினுவிடம் “சாரே மலையாளத்துல போலிசை போலீசுன்னுதான் எழுதனும்.. விளிக்கனும் அறியுமா.. மனசுலாக்கனும் தமிழ் ஏற்றங்கூடிய பாஷையாக்கும்..” என்று சுப்பனின் குரலில் ஆசிரியர் பேசுவது ஒரு தமிழ்த் தேசிய இலக்கியமாக இந்நாவலை வெளிச்சமிடுகின்றது..

 “கரும்புத் தோட்ட்த்திலே- அவர் கால்களும் கைகளும் சேர்ந்து விழும்படி வருந்துகின்றனரே”.. நாட்டை நினைப்பாரோ எந்த நாளினிப் போயதைக் காண்பதென்றே யன்னை வீட்டை நினைப்பாரோ.” அவர் விம்மி விம்மி யழுங்கு குரல் கேட்டிருப்பாய் காற்றே!.. என்று வேதனையுற்ற பாரதியின் கால்ந்தொட்டே தமிழர்கள் உலகஎங்கும் உள்ள கரும்புத் தோட்டங்களிலும், இரப்பர் காடுகளிலும், தேயிலை மலைச் சரிவுகளிலும் தம் உயிரை, உடலை உரமாக்கி உழைத்து உழைத்து அழிந்த கொடுங்கதைகளின் நீட்சியாக மூணாறுத் தேயிலைக் காடுகளின் தமிழர் வாழ்வை நம்முன் விவரிக்கின்றது. “செந்நீர்” தமிழர் தாயகமாம் தமிழ்நாட்டின் முன் தொடர்ச்சியான மூணாறு மலைப்பகுதிகள் அரசியல் பாரபட்சங்களில் அயல் ஆளுகைக்கு உட்பட்டு தொல்குடிகளின் நெறிக்கப்படும் குரல் வளைகளின் வழியாக பேசுகிறது. “செந்நீர்” இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம், சர்வதேசியம் இவற்றில் மாயப்பிம்பங்களை கதை மாந்தர்கள் தோலுரித்துக் காட்டுகின்றனர். காட்டுராஜா, பூபாலன், போன்ற அதிகார மையத்தின் ஆடிகாட்டிகள் தத்தமது நலனுக்காக தங்கள் தொப்புள் கொடி உறவுகளின் கருவறுக்கவும் தயங்குவதில்லை என்பதையும், கார்ப்பரேட் கம்பெனிகளின் கைக்கூலிகளாக, அவர்தம், அடியாட்களாக மாறி பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகளையும், அவற்றின் தொழிற்சங்கங்களையும் இந்நாவல் அடையாளம் காட்டுகின்றது. ஆயினும் அரசியல் மாச்சரியம் கடந்து தேசிய இன ஓர்மையில் தன்னை மீட்டுருவாக்கம் செய்து தற்காத்துக் கொள்ளப் போராடும் நம்பிக்கையினை செந்நீர் கதை மாந்தர்களான முனியாண்டியும், சின்ன சாமியும், நம்முள் விதைக்கிறார்கள்.

தன் பிள்ளையின் படிப்பினால் தன் தலைமுறைச் சோகம் மாறும் எனும் சிறு மகிழ்ச்சியைக் கூட சுப்பன் போன்ற ஒடுக்குண்ட மக்கள் கூறி மகிழ்வதை ஆதிக்க சக்திகள் அனுமதிப்பதில்லை எனும் உண்மை இழையோடுகிறது இந்நூலில். நாவலின் நாயகி முத்தம்மாள் போன்றவர்கள் மரபு வழிப்பட்ட மக்கள் முத்தம்மாளின் வீரமும் வெஞ்சினமும் தமிழ் மரபு வழிபட்டது என்பதை சொல்லாமல் உணர்த்துகிறது நாவல். தமிழர்கள் வாழும் ஒவ்வொரு மண்ணிலும் தங்களைத் தேசிய இனமாக மீட்டெடுத்து தமது உரிமைகளைக் காக்க முன் முயற்ச்சி எடுக்கும் எத்தனை “கிட்டுகள்” (பிரபாகரன் படம் பையில் வைத்திருந்தான் என்பதற்காகவே) காணமல் போக செய்யப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணும் போதே உள்ளம் பதறுகிறது. மூணாறு சுற்றுலாத் தலமல்ல. தொல்தமிழர்களின் முள்வேலி முகாம் என நம் முன் பதியனிடுகிறது நாவல். இந்நாவல் மூலம் இதன் ஆசிரியர் அன்வர் பாலசிங்கம் தமிழ்த் தேசிய படைப்பிலக்கிய வாதியாக தன் இருப்பினை வெளிப்படுத்தியுள்ளார் பாராட்டுகள்.

செந்நீர் நாவலில் சிசில குறைபாடுகள் இருப்பதாகவே காண்கிறோம். இது பற்றிக் கூறுவது செந்நீரை செம்மைப் படுத்தவே. காட்டுராஜாவின் கல்வித்தகுதி பற்றி கூறுமிடத்து (பக்கம்-72) (எந்த அடிப்படை தகுதியுமின்றி 25 வயது நிறைந்தவர்கள் எழுதும் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டம்) என்று அடைப்புக்குறி வரிகள். காரனம் வறுமையின் பொர்டுட்டும் வாழ்வின் பல்வேறு இடர்பாடுகளினால் கல்வியில் இடை நிற்றல் உள்ள சாமன்யர்கள் பட்டம் பெறும் தாகம் தீர்க்கும் வாய்ப்பாகவே அஞ்சல் வழி பட்ட படிப்பை நாம் காண்கிறோம். ஒடுக்கதலுக்கு எதிரான இலக்கியம் ஒடுக்கப்படும் மக்களின் கனவுகளிலொன்றை குறைமதிப்பீடு செய்வது எப்படி நியாமாகும்?. மேலும் டாக்டர் சிவமணியின் பாத்திரம் அதன் வடிவமைப்பில் குறைபாட்டு டையதாகப்படுகின்றது. இலக்கு பற்றி நாவலாசிரியர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நாவலின் கதைக் கலம் முன்னுக்குப்பின் முரண்பட்டுள்ளதா? சிறிது குழப்பம் உருவாக்குவதாக படுகின்றது. எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் குறைகளைக் களைவார் என்று நம்புகிறோம்.

செந்நீர் நாவல் செம்மையான தமிழ்படைப்பிலக்கியம். செந்நீர் மலைச்சரிவு களின் கொடுங்கதையை சமவெளிக்கு எதிரொலித்துள்ளது. இந்நூல் இப்படி முடிகின்றது.. “குண்டுமலைக்காரர்கள் இனி பேசமாட்டார்கள்” நாவலைப் படித்து முடித்தவுடன் ஒவ்வொரு தமிழனின் உள்ளமும் நிச்சயம் கூறும் “குண்டுமலைக்காரர்கள் மட்டுமல்ல!.

ஆசிரியர்: அன்வர் பாலசிங்கம்
பக்கம்:152
விலை: ரூ.135/-
வெளியீடு: கொற்றவை பதிப்பகம்
40/1 100 அடிச் சாலை
காரைக்குடி.
பேச: 9445801247 / 9791498999

Pin It