வேளாண்மை மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியிருக்கும் காலம் இது. இந்திய, தமிழக அரசுகளின் வேளாண் கொள்கை திட்டமிட்ட முறையில், உழவர்களை வேளாண்மையிலிருந்தும் நிலத்திலிருந்தும் வெளியேற்றுவதை உள்நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனை எதிர்கொண்டு, வேளாண்மையை பாதுகாக்க மாற்றுக் கோரிக்கைகளை உருவாக்கி உழவர் இயக்கங்களும் மக்களும் போராடா விட்டால், மிகப்பெரியப் பேரழிவு நேரும்.

வேளாண்மையைப் பாதுகாப்பது வெறும் உழவர்களின் பொருளியல் கோரிக்கை மட்டுமல்ல. தமிழர்களின் வாழ்முறையை, தமிழர் தாயகத்தை பாதுகாக்க இது முதன்மையான தேவையாகும்.

தமிழ்நாட்டின் சாகுபடிப் பரப்பு 1990 ஆம் ஆண்டை ஒப்பிட 1 கோடியே 68 இலட்சம் ஏக்கரிலிருந்து 2008ஆம் ஆண்டு 1 கோடியே 28 இலட்சம் ஏக்கராக தேய்ந்துவிட்டது. காவிரிப் பாசன மாவட்டங்களில் மட்டும் சாகுபடிப் பரப்பு 21.6 இலட்சம் ஏக்கரிலிருந்து, வெறும் 14 இலட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.

வேளாண்மையை விட்டுவிலகும் போக்கு உழவர்களிடையே அதிகரித்து வருவதை இது எடுத்துக்காட்டுகிறது. உத்திரவாதமான தண்ணீர் இன்மை, உழவுத் தொழிலுக்கு குறைந்த வட்டியில் அரசுகள் கடன் வழங்காமை, இடுபொருள் விலையேற்றம், வேளாண் சந்தை இழப்பு, வேளாண் விளைபொருளுக்கு இலாப விலை கிடைக்காமை, வாழ்க்கைச் செலவு தாறுமாறாக உயர்தல், அதிகரித்து வரும் நகர்மய வாழ்முறை போன்றவையே இதற்குக் காரணம்.

உழவர்களின் சராசரி மாத வருமானம் தமிழ்நாட்டில் ரூ. 2072 என்று அர சின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடன்பட்டுள்ள உழவர்களின் எண்ணிக்கையில், ஆந்திராவுக்கு அடுத்து தமிழகம் தான் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், உழவர்களின் வாழ்வைப் பாதுகாக்க சந்தைப் பாதுகாப்பு, இலாப விலை, வேளாண் மானியம், வருவாய் உறுதிப்பாடு என பலமுனை முயற்சிகள் தேவைப்படுகின்றன.

நுகர்வோர் விலைவாசிக் குறியீடு ஆகஸ்ட் 2000க்கும் ஆகஸ்ட் 2009க்கும் இடையே 25% உயர்ந்துள்ளது. யூரியா உள்ளிட்ட இடுபொருள்கள் விலை 25% உயர்ந்துள்ளது. ஆள்பற்றாக்குறைக் காரணமாக உழவுத் தொழிலாளர்களின் கூலி 300% உயர்ந்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை 86% மட்டுமே உயர்ந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் ஊதியம் 150%-ம், சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் 500%-ம், நீதிபதிகள் சம்பளம் 400%-ம் உயர்ந்துள்ளன. தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைப் பேர்வழிகள்e">, ஆன்லைன் வணிகர ்கள் ஆகியோரின் வருமானம் பன்மடங்குப் பெருகிவிட்டது.

உழவர்களுக்கு எதிராக அரசு கடைபிடிக்கும் பாரபட்சத்தை இந்த விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. வேளாண் விளை பொருள்களையும், தொழில் உற்பத்திப் பொருட்களையும் பண்டமாற்று வகையில் ஒப்பிட்டுப் பார்த்தால், வேளாண் விளை பொருள்கள் தங்கள் வாங்கும் சக்தியை 53% இழந்துள்ளன.

தனி வேளாண் மண்டலமே சந்தைப் பாதுகாப்பு 

வேளாண்மையை ஒரு இலாபகரமான தொழிலாக மாற்றாமல் அதனைப் பாதுகாக்க முடியாது.

இதற்கு முதன்மையான தேவை சந்தைப் பாதுகாப்பு.

உலகமயமும் இந்தியமயமும் இணைந்து தமிழ்நாட்டு வேளாண் சந்தையை நசுக்குகின்றன. கர்நாடக அரிசியும், ஆந்திரா பொன்னியும், பஞ்சாப், அரியானா அரிசியும் தமிழ்நாட்டுச் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன. இது போதாதென்று அரசின் திறந்தப் பொருளாதாரக் கொள்கை தாய்லாந்து அரிசியை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வர வழிவகுக்கிறது. எனவே, தமிழ்நாட்டு நெல் உழவர்களுக்கு தமிழ்நாடு சந்தையாக இல்லை.

மற்றொருபுறம், தமிழக அரசு அறிவித்துள்ள 1 ரூபாய் அரிசித் திட்டம் மூலம் பெருமளவு வெளிமாநில அரிசி ‘மத்தியத் தொகுப்பு’ என்ற பெயரால் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கிறது. பிற வேளாண் உற்பத்தி பொருள்களின் நிலையும் இது போன்றது தான்.

தமிழ்த் தேச வேளாண் சந்தையை தற்காத்துக் கொள்ள ‘தமிழ்நாட்டை தனி வேளாண் மண்டலமாக அறிவி’ என வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டிற்குள் வெளி மாநிலத்திலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் தங்குதடையின்றி வேளாண் விளைபொருட்கள் நுழைவதை கட்டுக்குள் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.

இவ்வாறு அறிவிக்கப்படும் தனி வேளாண் மண்டலம் செயல்பட அதற்கான நிர்வாகப் பொறியமைவுகள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் அரிசி, பருப்பு, மிளகாய், பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்களின் தேவை என்ன, தமிழ்நாட்டுக்குள் அவற்றின் உற்பத்தி என்ன என்பதை கணக்கிட்டு தமிழ்நாட்டுக்குள் விளையும் வேளாண் விளைபொருட்களை முன்னுரிமை கொடுத்து அரசும் தனியாரும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக வேண்டும். தமிழகத்தில் விளையும் வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்த பிறகு தான் அதற்கு மேல் உள்ளத் தேவைகளுக்கு வெளி வேளாண் பொருட்களை தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

இதனை திட்டமிட்ட முறையில் கண்காணிக்க, தனி வேளாண் மண்டல ஆணையம் நிறுவப்பட வேண்டும். இந்த ஆணையத்தில் உழவர்கள், நுகர்வோர் பேராளர்களும், அரசு அதிகாரிகளும் இடம்பெற வேண்டும்.

தமிழக அரசு தங்களது நியாய விலைக் கடைக்கு உணவு மானியம் பெறுவதை பணமாகப் பெற்று தமிழ்நாட்டிற்குள் விளையும் பொருட்களை முன்னுரிமை அளித்துக் கொள்முதல் செய்ய வேண்டுமே அன்றி வேளாண் மானியத்தை தானியமாகப் பெறக் கூடாது. இவ்வாறு தானியமாகப் பெறுவது வெளி மாநில உணவுதானியங்கள் தமிழ்நாட்டிற்குள் படையெடுக்க வழி ஏற்படுத்துகிறது.

இலாப விலை 

வேளாண் விளைபொருட்களுக்கு இலாப விலை கிடைக்க உறுதி செய்ய வேண்டும். குண்டூசி முதல் எல்லா தொழில் உற்பத்திப் பொருட்களுக்கும் அவரவர்களே விலையை நிர்ணயித்து உற்பத்திச் செலவைவிட பலமடங்கு இலாபம் பெறுவதை உறுதி செய்து கொள்கின்றனர். ஆனால், வேளாண் விளை பொருட்களுக்கு மட்டும் கட்டுப்படியான விலை கொடுத்தால் போதும் என்று அரசியலாளர்கள் வரம்பு கட்டுகிறார்கள்.

இந்திய அரசு அறிவிக்கும் கொள்முதல் விலை(குறைந்தபட்ச ஆதரவு விலை) தொழில்முறைக் கணக்கீடுகளுக்குத் தொடர்பேதுமில்லாமல் அறிவியலுக்கு ஒவ்வாத வகையிலேயே கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இந்திய அரசின் வேளாண் விலைநிர்ணய ஆணையம் உற்பத்திச் செலவை கணக்கிடும் போது வேளாண் நிலத்திற்கான வாடகை, வளத் தேய்மானம், உழவர்களின் குடும்ப உழைப்பு, நுகர்வுப் பொருள் விலைஉயர்வு ஆகியவற்றுக்கு உரிய பணமதிப்பீடு வழங்கி அவற்றை உற்பத்தி செலவில் சேர்ப்பதேயில்லை. இவ்வாறு கணக்கிடப்படும் உற்பத்திச் செலவுக்கு மேல் 10 அல்லது 15 விழுக்காடு சேர்த்து, கொள்முதல் விலை அறிவிக்கப்படும்.

உழவுத்தொழிலை இரண்டாம்பட்சமாகப் புறந்தள்ளும் இந்த நகர்ப்புற -- முதலாளிய அணுகுமுறை அடியோடு மாற்றப்பட வேண்டும். நுகர்பொருள் உற்பத்தித் துறையில், தொழில்நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருட்களுக்கு எவ்வளவு இலாபம் வைத்து விலை நிர்ணயிக்கிறார்களோ கிட்டத்தட்ட அதே அளவில் வேளாண் விளை பொருட்களுக்கும் இலாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசு நியமித்த முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான ‘தேசிய உழவர் ஆணையம்’ கூட தனது பரிந்துரையில் “குறைந்தது 50% இலாபமாவது கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை தீர்மானிக்கப்பட வேண்டும்’’ என அறிவித்திருப்பது, கவனங் கொள்ளத்தக்கது.

அனைத்து வேளாண் விளை பொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் வேண்டும்.

உரிய உணவு மானியம் பெறாமல் அரசு அறிவிக்கும் 1 ரூபாய் அரிசித்திட்டம் நெல்கொள்முதல் விலையை செயற்கையாக அழுத்தி வைக்கவே பயன்படுகிறது. மற்றபடி வெளிச்சந்தை அரிசிவிலையை கட்டுக்குள் நிறுத்த இந்த 1 ரூபாய் அரிசித்திட்டம் பயன்படவில்லை என்பது கண்கூடு. இணைய வர்த்தகம்(Online Trading), வருங்கால வர்த்தகம்(Future Trading) போன்றவை கோலோச்சும் தாராளமயப் பொருளியலில் உழவர்களும் நுகர்வோரும் ஒருசேர பிழியப்படுகிறார்கள் என்பதே கண்கண்ட உண்மை. தமிழ்நாட்டில் நிலவும் அரிசி, பருப்பு, காய்கறி விலையே இதற்குச் சான்று.

உழைப்பு மானியம் 

வேளாண் பணி இல்லாத காலத்தில், கிராமப்புற உழவுத் தொழிலாளர்கள் மாற்றுப் பணி ஏதும் இல்லாமல் வாடக்கூடாது என்பதற்காக தொடர் போராட்டங் களுக்கிடையில் கொண்டு வரப்பட்டது தான் ‘தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்’ (100 நாள் வேலைத்திட்டம்). இப்போது, இத்திட்டம் ஆண்டு முழுவதும் செயல்படுவதாக மாற்றியமைக்கப்பட்டது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழல் வேட்டைக்கே திட்டமிட்டு இது செயல்படுத்தப்படுகின்றது.

மீண்டும் மீண்டும் மண் வேலைக்கே இத்திட்டப் பணிகள் திருப்பி விடப்படுவதால் வெட்டியக் குளத்தையே மீண்டும் வெட்டியதாக கணக்குக் காட்டுவதற்கும், போட்ட சாலையையே மீண்டும் போட்டதாக போலி ரசீதுகள் தயாரிக்கவும் எளிதாக இட்டுச் செல்கிறது. வேலை செய்யாமலும் அரைகுறையாக செய்து விட்டும், பெயரைப் பதிவு செய்து கொண்டபிறகு கூலி தர வாய்ப்புள்ளதால், அறிவிக்கப்பட்ட கூலியைவிட குறைவாகப் பெற்றுக் கொள்ள மக்களும் அணியமாகி விடுகின்றனர். வேளாண் சார் சிறுதொழில்கள், கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றை நோக்கி இத்திட்டம் செயல்படுத்தப்படாததால் அரசுப்பணம் அரசியல்வாதிகளின் கைக்கு மாறுவதற்கான ஓர் எளிய வழியாக மட்டுமே இது நடைமுறையில் உள்ளது.

மற்றொருபுறம், வேளாண் பணிகளுக்கு ஆள்பற்றாக்குறையை இது தீவிரப்படுத்துகிறது. உழவர்களுக்கும், உழவுத் தொழிலாளிகளுக்கும் இடையே கசப்புணர்வையும் ஏற்படுத்தவும் மோதல்களை உருவாக்கவும் ஆதிக்கவாதிகளுக்கு உற்றவழியாகத் திகழ்கிறது.

உழவுத் தொழிலுக்கு பயன்படும் வகையில் இந்த நூறுநாள் வேலைத்திட்டத்தை மாற்றியமைக்க ஆந்திரா உழவர் அமைப்புகள் மாற்று யோசனையைத் தெரிவித்துள்ளன. இது வரவேற்கத்தகுந்தது.

100 நாள் வேலைத்திட்டத்தில் இன்னும் சில நாட்கள் கூடுதலாகச் சேர்த்து அந்த வேலைநாட்களை வேளாண் பணிகளுக்கு திருப்பிவிடலாம். அதற்கான கூலித் தொகையை உழவர்களுக்கு பணமாக நேரில் வழங்கி உழவுத் தொழிலாளிகளை வைத்தோ, குடும்ப உழைப்பைப் பயன்படுத்தியோ எப்படிச் செய்தாலும் அதற்கு இத்தொகையை பயன்படுத்த வழிசெய்யலாம். தமிழகத்தில் நடப்பிலுள்ள உழவர் அடையாள அட்டை செம்மைப் படுத்தப்பட்டால் இவ்வாறு உழவர்களுக்கு தொகை வழங்குவது எளிதாக்கப்பட்டுவிடும்.

இவ்வாறு உழவர்களின் கூலிச் செலவில் ஒரு பகுதியை அரசே ஏற்பதை உழைப்பு மானியம் (Labour Subsidy) என்கிறோம்.

உழைப்பு மானியம் வழங்கி 100 நாள் வேலைத்திட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தால் ஆள்பற்றாக்குறையாலும் கட்டுப்படி ஆகாத கூலி உயர்வாலும் உழவுத் தொழில் நசிவதை தடுத்து நிறுத்த முடியும்.

உழவர் வருவாய் ஆணையம்

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் உள்ளிட்ட பணக்கார நாடுகளில் ஏராளமான மானியங்கள் வழங்கிதான் உழவுத்தொழிலைத் தூக்கி நிறுத்துகின்றனர். இதனை முன் எடுத்துக்காட்டாகக் கொண்டு உழவர்களுக்கு நேரடி வருவாய் வழங்க உழவர் வருவாய் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வேளாண் அறிவியலாளர் முனைவர் தேவீந்தர் சர்மா முன்வைத்தார். இதனை ஏற்று ஆந்திராவிலுள்ள உழவர் இயக்கங்களும் இதற்கான கோரிக்கைகளை எழுப்பி போராடி வருகின்றன.

ஏராளமான வேளாண் மானியம் அளித்து வருவதால் தான் தொழில்வள நாடுகளின், வேளாண் விளைபொருட்கள் உலகச் சந்தையில் ஆக்கிரமிக்க முடிகின்றது. உழவுத் தொழிலும் இலாபகரமாக நடக்கிறது.

எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் எலிசபெத் இராணி பெறுகிற வேளாண் மானியம் ஆண்டுக்கு 7 இலட்சத்து 67 ஆயிரம் பவுண்டு. அதாவது 6 கோடியே 15 இலட்சம் ரூபாய். பிரிட்டிஷ் இளவரசர் பெறுகிற ஆண்டு வேளாண் மானியம் 3 இலட்சம் பவுண்டு. அதாவது, 2 கோடியே 40 இலட்சம் ரூபாய்.

அமெரிக்க பருத்தி உற்பத்தியாளர்கள் 300 கோடி டாலர் (13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) மதிப்புள்ள பருத்தியை விளைவித்துக் கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக 390 கோடி டாலர் (17,550 கோடி ரூபாய்) வேளாண் மானியமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். அதாவது தங்கள் உற்பத்தியின் சந்தை விலையை விட இவர்கள் பெறுகிற மானியம் மட்டுமே அதை விடக் கூடுதலானது. அதற்கு மேல் இவர்களது விளைபொருள்களை விற்றுக் கிடைக்கிற தொகை வேறு.

இவ்வாறு வேளாண் நிறுவனங்களுக்கு அரசின் மானியம் நேரடி வருவாயாக வழங்கப்படுகிறது.

இதே அடிப்படையில் தான் இங்கும் உழவர் வருவாய் ஆணையம் கோருகிறோம். மேலை நாடுகளைப் போல் பல்லாயிரம் ஏக்கர் விளை நிலவுடைமை பெற்றுள்ள நிலமுதலாளிகள் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டின் சராசரி நிலவுடைமை 2 ஏக்கர் தான். 15 ஏக்கருக்கு கீழ் நிலம் உள்ளவர்கள் தான் இங்கு பெரும்பாலோர்.

ஆந்திரா உழவர் அமைப்புகள் வைத்துள்ள கோரிக்கையை கோட்பாட்டளவில் நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆயினும், தமிழ்நாட்டின் நிலைமையை கணக்கில் கொண்டு அதில் சில அடிப்படை மாறுதல்கள் செய்து கீழ்வரும் கோரிக்கையை முன் வைக்கிறோம்.

ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூபாய் 12,000 வீதமும் உழவுத் தொழிலாளர்களுக்கு ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூபாய் 12,000 -மும் அரசு நேரடி வருவாய் வழங்க வேண்டும்.

15 ஏக்கர் வரையிலும் உள்ள நிலவுடைமைக்கே இவ்வாறான நேரடி வருவாய் வழங்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒருவர் 20 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் அவருக்கு 15 ஏக்கர் என்ற உச்சபட்ச அளவுக்கு மட்டுமே மேற்கண்ட கணக்கின்படி மேற்படி வருவாய் வழங்கப்பட வேண்டும். மீதமுள்ள 5 ஏக்கருக்கு இத்திட்டம் பொருந்தாது.

உழைக்கும் உழவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். அதாவது, ஒரு நிலவுடைமையாளரின் நிலத்தில், இன்னொருவர் குத்தகைக்கு சாகுபடி செய்தால், குத்தகை சாகுபடியாளருக்கு மட்டுமே இந்த நேரடி வருவாய் கிடைக்கும்.

தமிழகத்தில் 15 ஏக்கருக்கு கீழே உள்ள நிலவுடைமையின் மொத்தப் பரப்பு 1 கோடியே 45 இலட்சம் ஏக்கர் ஆகும். ஏக்கருக்கு 12,000 வீதம் இவர்களுக்கு நேரடி வருவாய் வழங்கினால் அதற்கு ஆகும் செலவு 17 ஆயிரத்து 400 கோடி ரூபாய்.

தமிழகத்தின் உழவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 87 இலட்சம். ஒருவருக்கு 12,000 வீதம் நேரடி வருவாய் வழங்கப்பட்டால் அதற்கு ஆகும் செலவு ஆண்டுக்கு 10 ஆயிரத்து 440 கோடி ரூபாய்.

ஆக மொத்தம் நாம் கோரும் நேரடி வருவாய் வழங்குவதன் மூலம் அரசுக்குச் செலவு ஆண்டுக்கு 27 ஆயிரத்து 840 கோடி ரூபாய். இந்தத் தொகை தமிழகத்திலுள்ள 1 கோடியே 30 இலட்சம் வேளாண்சார் மக்களுக்காக நாம் கேட்கிறோம்.

ஓய்வூதியர்களை சேர்த்து மொத்தமுள்ள 18 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊதியமாக வழங்கும் தொகை ஆண்டுக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய். பல்லாயிரம் கோடி வருமானம் பெறும் தொழில் அதிபர்கள் பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் இந்திய அரசும், தமிழக அரசும் பல்லாயிரம் கோடி ரூபாயை மானியமாக திருப்பிவிடுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இவற்றை ஒப்பிட, உழவர்களுக்கும் உழவுத் தொழிலாளர்களுக்கும் நாம் கோரும் நேரடி வருவாய் மிக எளியத் தொகையே ஆகும்.

இவ்வாறு நேரடி வருவாய் வழங்குவதை தீர்மானிக்க ‘உழவர் வருவாய் ஆணையம்’(Farmers Income Commission) அமைக்க வேண்டுமெனக் கோருகிறோம்.

பயிர்க்காப்பீடு 

வேளாண்மை என்பது இயற்கையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஈடுகொடுத்து நடத்தப்படுகின்ற சூதாட்டமாக உள்ளது. இந்நிலையில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செம்மையுற செயல்படுத்துவது இன்றியமையாதது ஆகும்.

இப்போதுள்ள பயிர் காப்பீட்டு முறை, அறிவியலுக்கு ஒவ்வாத கணக்கீட்டு முறையில் இயங்குகிறது. ஒரு வருவாய்க் குறுவட்டம்(பிர்கா) முழுவதும் ஒற்றை அலகாக அடிப்படையில் வைக்கப்பட்டு இந்த இழப்பின் அளவு கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒரு குறுவட்டம் முழுமைக்கும் இயற்கை சீற்ற பாதிப்பு ஒரே அளவாகக் கொள்ளப்படுகிறது. ஆனால், உண்மை நிலவரம் அவ்வாறில்லை. ஒரே நிலவுடைமையாளருக்கு அவருடைய 5 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கர் மட்டும் விளைச்சல் முழுமையாக பாழ்பட்டு மற்ற பகுதியில் பயிர்ச் சேதம் கருதத்தக்கதாக இல்லாமல் கூட இருக்கலாம். ஒரே நிலவுடைமையாளரையே ஒரு அலகாக கொள்ள முடியாத புறநிலை உள்ளது.

எனவே, இயற்கை சீற்றத்தால் பயிர்ச்சேதம் ஏற்படும்போது ஒவ்வொரு ஏக்கரையும் ஒரு அலகாக ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில் இழப்புகளை கணக்கிட்டு பயிர் காப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு வழங்கப்படாததால், ஒவ்வொரு முறை வெள்ளச் சேதமோ, வறட்சியோ ஏற்படுகிற போதும் நிவாரணம் கோரி அரசுக்கு உழவர்கள் மனு போடுவதும், மனம் போன போக்கில் ஏதோ ஒரு தொகையை இடர்நீக்கத் தொகையாக அரசு அறிவிப்பதும், அதனை சேதமடைந்தவர், சேதமடையாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் பிரித்துக் கொடுப்பதும் நடைமுறையாகத் தொடர்கிறது.

இவ்வாறு அனைவருக்கும் வழங்கும் போது, கணிசமானத் தொகை கையூட்டாகக் கிடைப்பதால் உள்ளூர் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வெள்ளம் வறட்சியைக் கண்டு மனம் குதூகலிக்கிறார்கள். அரசு வழங்கும் தொகை ஆட்சியாளர் வழங்கும் இனாம் என்ற மனநிலை உழவர்களிடம் பரவியுள்ளதால், இந்த ஊழல் விநியோகத்தை அவர்களும் கண்டு கொள்வதில்லை.

வாகனங்களுக்கும் பிற தொழில் கருவிகளுக்கும் காப்பீட்டுத் திட்டம் இருப்பது போல, பயிர் காப்பீட்டுத் திட்டமும் தன் போக்கில் செயல்படுவதற்கு ஏற்பாடுகள் வேண்டும். அதற்கு ஏக்கர் வாரியாகக் கணக்கிட்டு இழப்பீடு வழங்கும் பயிர் காப்பீட்டு முறை செயலுக்கு வர வேண்டும்.

இவ்வாறான மாற்று திட்டங்களே வேளாண்மையைப் பாதுகாக்கும். கிராமங்கள் அயலாருக்கு கைமாறாமல், தமிழர் தாயகம் பாதுகாக்கப்பட வழி ஏற்படும்.

மேல் தோற்றத்தில் இது மலைப்பாக தோன்றினாலும், இக்கோரிக்கைகள் சமூக நீதியின் பாற்பட்ட நியாயம் என்பதால் உழவர்களும் அறிவாளர்களும் ஒன்றிணைந்து களம் கண்டால் உறுதியாகக் கைக்கூடும்.

- கி.வெங்கட்ராமன் 

Pin It