maniarasan 400”தமிழிசை வளர்த்த ஆபிரகாம் பண்டிதருக்குத் தஞ்சையில் ஆண்டுதோறும் இசைவிழா நடத்த வேண்டும்’’ எனத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், ஆபிரகாம் பண்டிதர் இசைக்களஞ்சியம் - பாரதிதாசன் நூல்கள் வெளியீட்டு விழாவில் பேசினார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெற்ற 37ஆவது புத்தகக்காட்சியில் 21.01.2014 அன்று மாலை, தமிழ்மண் பதிப்பகம் சார்பில் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரம் - தொகுதி 7 மற்றும் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைத் தொகுப்பான ‘பாவேந்தம்’ தொகுதி 25 ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சிறப்புற நடைபெற்றது.

நிகழ்வுக்கு, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் தலைமையேற்றார். முன்னதாக, முனைவர் கு.திருமாறன் நிகழ்வைத் தொகுத்து வழங்க, முனைவர் மு.இளமுருகன் வரவேற்புரையாற்றினார்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் இயக்குநர் சீமான் நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை நிகழ்த்தினார்.முனைவர் பொற்கோ, முனைவர் வீ.அரசு, முனைவர் இராமர் இளங்கோ, புலவர் செந்தலை ந.கவுதமன் உள்ளிட்டோர் நூல்கள் குறித்து ஆய்வுரை வழங்கினர்.

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் வ.கவுதமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பதிப்பாசிரியர்கள் முதுமுனைவர் இரா.இளங்குமரனார், முனைவர் இரா.இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி.தமிழகன், முனைவர் இ.அங்கயற்கண்ணி ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டு நூல்கள் குறித்து ஆய்வுரை வழங்கிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பின்வருமாறு பேசினார்:

ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரத்தை இசைக் களஞ்சியமாக ஏழு தொகுதிகளாகவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது கவிதை களைத் தொகுத்து பாவேந்தம் என்ற தலைப்பில் 25 தொகுதிக ளாகவும் வெளியிடும் விழா இன்று சிறப்புற நடந்து கொண்டுள்ளது. அதை நிறைவேற்றிய தமிழ்மண் பதிப்பகத்தாருக்கும், அதன் உரிமையாளர் அய்யா இள வழகனாருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டு களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு பல்கலைக்கழகம் என்ன செய்ய வேண்டுமோ அந்தப் பணியை இளவழகன் அவர்கள் செய்துள்ளதாக, தலைமையுரையாற்றிய அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் கூறினார்கள். அது சரியே! தமிழக அரசு, இது போன்ற பணிகளைச் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, இப்பணிகளைச் செய்து வரும் இளவழகன் போன்றவர்களுக்கு ஊக்கமாவது கொடுத்திருக்கலாம் அல்லவா? அதைக்கூட தமிழக அரசு செய்வதில்லை. தமிழுக்குத் தொண்டு செய்யும் பெரும்பணியை இளவழகன் அவர்கள் ஏற்றுச் செய்து வருகிறார்கள். ஏற்கெனவே, அவர் வெளியிட்டுள்ள பழந்தமிழ்த் தொகுப்புகள், தமிழறிஞர்களின் படைப்பு கள் எனப் பலவற்றை இங்கே அய்யா நெடுமாறன் அடுக்கினார்.

“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ?” என பாரதிதாசன் கேட்டார். அதுபோல, தமிழ் நூல்க ளைத் தொடர்ந்து கொண்டு வரும் அய்யா இளவழ கனார் அவர்களுக்கு என்றும் மரணமில்லை. இதே போல், இன்னும் சில பதிப்பகங்களும் தமிழ்த்தொண்டு புரிந்து வருகின்றன. அவற்றையும் நாம் பாராட்டுகிறோம்.

இத்தமிழ் நூல்களை வெளியிடும் பதிப்பகத்தினர், அதை தமிழகத்தின் நூலகங்களில் சேர்க்க என்ன பாடு படுகிறார்கள் தெரியுமா? நேர்வழியில் நூல்களை நூல கங்களுக்குள் கொண்டு சேர்க்க முடியவில்லை. கொல் லைப்புற வழியாகத்தான் நூல்களை நூலகங்களில் கொண்டு சேர்க்க முடிகிறது. கொல்லைப்புறமோ, கொள்ளைப் புறமாக இருக்கிறது.

இப்பொழுது இங்கு ஆபிரகாம் பண்டிதர்-- பாவேந்தர் பாரதிதாசன் நூல்களை வெளியிட்ட இளவழகனாரை தமிழக அரசு மாலை போட்டு வரவேற்க வேண்டாமா? தமிழகத்தின் நூலகங்களுக் காக இந்நூல்களை வாங்குவதில் தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? தமிழ் வளர்ச்சியில் தமிழக அரசுக்கு அக்கறையில்லையா?

இதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு, தமிழ் அன்னைக்கு 100 கோடி ரூபாயில் சிலை வைக்கிறார் களாம். எதற்கு? வாண வேடிக்கைக் காட்டுவதற்கா? மக்களுக்கு தத்துவத்தை, கோட்பாடுகளை கேட்பதை விட சர்க்கஸ் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். அந்த உளவியலை அரசியல் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். செயலில் கொள்கையைக் காட்டுவ தில்லை. பேச்சில் மட்டும் உயர்ந்த இலட்சியங்களை வெளியிடும் பழக்கம் இங்கு நீடித்துக் கொண்டுள்ளது. இதனால் தான், இங்கு இரசிக்கத் தக்க வகையில் பேசும் பேச்சாளர்கள் பெருத்தார்கள். கருத்து வேறு செயல் வேறு என முழங்கும் மைக் மதனகாமராஜர்கள் இங்கே உருவானார்கள். தங்களுடைய ஆரவாரப் பேச்சை இரசிக்கும் மனநிலையை மக்களிடம் உருவாக்கினர். இந்நிலை மாற வேண்டும்.

இங்கே வெளியிட்டுள்ள நூல்கள் சிறந்த தமிழ்க் கருவூலங்கள். ஆபிரகாம் பண்டிதரின் இசைக் களஞ்சி யத்தை சாதாரணமாக எல்லோரும் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. தமிழிசை என்பது அடிப்படையில் அது ஒரு கணக்காகும். எளிமையாக எழுதப்பட்டுள்ள பாவேந்தர் பாடல்களைப் புரிந்து கொள்ள முடியா தவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். எங்களுக்குப் புரியாத நூலை வாங்கி நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று தமிழ் மக்கள் கருதக்கூடாது. இது போன்ற நூல்கள் உங்கள் வீட்டில் இருப்பது உங்களுக்குப் பெருமை. வீட்டுக்கு அணிகலன். உங்க ளால் படித்துப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், பின்னர் உங்கள் பிள்ளைகள் படிப்பார்கள்; உங்கள் பேரப் பிள்ளைகள் படிப்பார்கள்; உங்கள் நண்பர்கள் படிப்பார்கள். வழிவழியாகப் பயன்படும் அறிவுச் செல்வம் இவை. எங்கள் தாத்தா, இப்படிப்பட்ட நூல்களை எல்லாம் வாங்கி வைத்திருந்தார் என்று உங்கள் பேரப்பிள்ளைகள் பெருமைப் பட்டுக் கொள்வார்கள். இந்தக் காலத்தில், தமிழ்த் தேசிய சிந்தனை அனைத்து மட்டத்திலும் வளர்ந்து வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில், இந்நூல்களின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும்.

பழைய தமிழ் நூல்களை தொகுத்துப் புதிதாக வெளியடுவது ஒரு கடினமானப் பணி. அந்நூல்களின் முதல் பதிப்பு தொடங்கி, அடுத்தடுத்த பதிப்புகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்பவற்றைப் பற்றியெல்லாம் அறிந்து அவற்றை, புதிய தொகுப்பில் பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதல் தொகுதி முதல் பதிப்பாக வெளிவந்த போது, அதற்கு யார் யாரெல் லாம் உதவினார்கள் என்ற செய்தி அதிலே இருக்கும். அந்த செய்தி, அடுத்தடுத்த பதிப்புகளில் தொடர வேண் டும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமது கவிதை நூல்கள் மறுபதிப்பு காணும்போது, அவர் சில திருத் தங்களைச் செய்துள்ளார். குறிப்பாக, ‘திராவிடர்’ என்று வரும் இடங்களிலெல்லாம் அச்சொல்லுக்கு மாற்றாக ‘தமிழர்’ என்ற சொல்லை எழுதித் திருத்தியுள்ளார். பாரதிதாசன் ஆய்வுப் பணியில் தலைமையானவராக விளங்கும் அய்யா இளவரசு அவர்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள். அவரை வைத்துக் கொண்டு நான் சொல்கிறேன். பிற்காலத்தில் பாரதிதாசன் தெளிவாகத் தமிழ்த்தேசியத்தை முன்வைத்தார். திராவிடர் என்ற சொல்வரும் இடங்களிலெல்லாம் அதைத் தமிழர் என்று போட்டு மாற்றினார்.

தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் இளவழகன் அவர்கள், இத் தொகுப்புகளை வெளியிடும்போது அவை தொடர்பான வல்லுநர்களைக் கொண்டு தொகுத்துள்ளார். பதிப்புப் பணிக்கு தக்காரை பயன்படுத்தியுள்ளார். எடுத்துக் காட்டாக, பாவேந்தம் தொகுப்புக்கு அய்யா இளவரசு அவர்களையும், பண்டிதர் தொகுப்புக்கு இசையியல் பேராசிரியர் முனைவர் அங்கயற்கண்ணி அவர்களையும் ஈடுபடுத்தி யுள்ளார். இது பாராட்டத்தக்க செயல்!

ஆபிரகாம் பண்டிதரின் சிறப்பு தமிழிசைக்கான கோட்பாடுகளை வகுத்ததாகும். தமிழர்களைப் பொறுத்தவரை இசை, சிற்பம், நாட்டியம், கட்டடக் கலை போன்ற வற்றில் உலகம் வியக்க சாதனைகள் புரிந்திருக்கிறார்கள். ஆனால், அவற்றிற்கான கோட்பாடுகள் (Theory) தமிழில் இல்லை. நம் முன்னோர்கள் அக்கோட்பாடுகளை எழுதவில்லையா? அல்லது எழுதப்பட்டவை அழிந்து விட்டனவா என்ற கேள்வி இருக்கிறது.

பரதநாட்டியம் என்றால் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. உத்திரப்பிரதேசத்திலோ, மற்ற இடத் திலோ கிடையாது. ஆனால், பரத நாட்டியத்திற்கான இலக்கணம் சமற்கிருதத்தில் எழுதப் பட்டிருக்கிறது. சமற்கிருதம் போற்றப்படும் வடநாட்டில், பரத நாட்டியம் இல்லை. தஞ்சை பெரிய கோயில், அதற்கு முன் மாமல்ல புரம் - காஞ்சிபுரம் கட்டடக் கலைகள், சிற்பக்கலைகள் போன்றவை வடநாட்டில் கிடையாது. ஆனால், சிற்பசாத்திரம் வடமொழியில் தான் இருக்கிறது. கட்டடக் கலைக்கான கோட்பாட்டு நூல் சமற்கிருதத்தில் இருக்கிறது. தமிழில் இல்லை.

இவற்றை வைத்துக் கொண்டு இந்தக் கலைகள் எல்லாம் ஆரி யர்களால் உருவாக்கப்பட்டவை என்றும் வடமொழியிலிருந்து தமிழ் மொழிக்கு வந்தவை என்றும் ஆரியப் பார்ப்பனர்கள் கயிறு திரிக்கிறார்கள். இலக்கணங்களை வைத்திருக்கிற நீங்கள் அதற்கான செயல்பாட்டை ஏன் வைத்திருக்க வில்லை? ஆபிரகாம் பண்டிதர் தமிழிசை இலக்கணத்தை பதிவு செய்த தோடு, தமிழிசைதான் இந்தியாவிலுள்ள எல்லா இசைகளுக்கும் மூல இசை - முதல் இசை என்று கூறுகி றார்.

“தமிழ்ப் பாஷை உண்டான காலமே கர்நாடக சங்கீதம் உண்டான காலமாம்.

தமிழ் பாஷைக்குரிய இனிமையே தென்னிந்திய சங்கீதத்தின் இனிமையாம்.

தமிழ் பாஷை எப்படி அன்னிய பாஷையோடு கலவாத தனித்த பாஷையோ அப்படியே

தென்னிந்திய சங்கீதமும் மற்ற சங்கீதங்களோடு கலவாமல் தனித்த விதிகளுடையதாம்’’

- தமிழிசைக் களஞ்சியம் மு. ஆபிரகாம் பண்டிதர்( கருணாமிர்த சாகரம்)

பாகம்- 1  பக்கம் : ஜ்ஜ்ஸ்வீவீ வளவன் பதிப்பகம், சென்னை -17

கட்டாத கோயில்கள் குறித்தும், ஆடாத நாட்டி யங்கள் குறித்தும் சமற்கிருதத்தில் எழுதி வைத்திருப் பது வேடிக்கையானது! அது மோசடியானது! இதில் இன்னொரு வேடிக்கை, ஆரியப் பார்ப்பனர்களான அவர்களுக்கும் கூட, தாய்மொழி சமற்கிருதம் கிடை யாது. ஏனென்றால், சமற்கிருதம்தான் வானத்திலி ருப் பவர்களின் தாய் மொழியாயிற்றே! மனிதர்களுக்குத் தான் அது தாய்மொழி கிடையாது என அவர்களே சொல்லிவிட்டார்களே!

ஆரியப் பார்ப்பனர்களின் இந்த மோசடித்தனம் அன்றும் நடைபெற்றது. இன்றும் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இங்கே தொல்லியல் துறை இயக்கு நராக இருந்த நாகசாமி என்பவர், சமற்கிருதத்தி லிருந்து தான் சங்க இலக்கியங்களும், சிலப்பதிகார மும் தோன்றின என்று இப்பொழுது நூலெழு தியுள்ளார். இந்த தில்லுமுல்லு திரு தாளத்தை எதிர்த்து அய்யா பொற்கோ அவர்கள் தலைமையில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தினோம். நாகசாமியின் நாச வேலையை முறியடிக்க தமிழறிஞர்கள் நூல்கள் வெளியிட்டுள்ளார்கள்.

ஆபிரகாம் பண்டிதர் வாழ்ந்து தமிழிசையை வளர்த்த தஞ்சை மண்ணில், அவருக்கு நாம் விழா எடுத்ததில்லை. ஆனால், தமிழைப் புறந்தள்ளி அயல் மொழிக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் தஞ்சைக்கு அருகே தியாகராயருக்கு ஆண்டு தோறும் ஒருவாரம் விழா நடக்கிறது. தஞ்சையிலே பண்டிதர் வாழ்ந்த வீட்டுக்கு எதிரே உள்ள தெரு, இன்றைக்கும் ஆபிரகாம் பண்டிதர் தெரு என்ற பெயரோடுதான் இருக்கிறது. அவருடைய கொள்ளுப் பேரன்களும், கொள்ளுப் பெயர்த்திகளும் அவர் வாழ்ந்த வீட்டில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு நாங்கள் தொடர்பு கொண்டு ஆபிரகாம் பண்டிதர் விழா நடத்த முயன்றோம். ஓராண்டு தான் அவ்வாறு விழா நடத்தினோம். அதற்கு மேல் தொடர முடிய வில்லை.

இங்கே நூல்கள் வெளியிட்டுள்ள இளவழகன் அவர்களும், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தை இரண்டாவது தலைமையகமாகக் கொண்டுள்ள ஐயா நெடுமாறன் அவர்களும், தஞ்சையில் ஆபிரகாம் பண்டிதார் விழாவை தமிழிசை விழாவாக நடத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாங்களும் அதில் பங்கெடுத்துச் செயல்படுவோம்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் மிக நுட்ப மானவர். அவரை ஒரு முரட்டுக் கவிஞர் என்பதைப் போலத்தான் ஆரியச் சார்பாளர்கள் பேசுகிறார்கள். அவ்வாறு பேசும் கூட்டங்களில், தப்பித்தவறி பாரதி தாசன் பற்றிய தலைப்பில் யாரேனும் பேசினால் அவர்கள் பாரதிதாசனின் ஆற்றலை, கவிதை நயத்தை, சிறப்புகளை பேச மாட்டார்கள். பாரதியாரைப் பாராட்டி பாரதிதாசன் எப்படியெல்லாம் பாடினார் என்பதை எடுத்துக் காட்டிவிட்டு பேச்சை நிறுத்திக் கொள்வார்கள். அவ்வளவு கெட்டிக்காரர்கள் அவர்கள். பாரதியாரின் சிறப்புகளை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், அவர்கள் பாரதிதாசனை இன்றும் கூட ஏற்க மறுக்கிறார்கள் என்பதை ஏமாளித் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி குறித்து பேச வந்த பாரதிதாசன் சமூக அறிவியலோடு பாடலெழுதியுள்ளார்.

“இனத்தைச் செய்தது மொழி தான் / இனத்தின் மனத்தை செய்தது மொழிதான் / மனத்திலிருந்து மொழியை அகற்றுதல் முயல் கொம்பே!’’ என்கிறார் பாரதிதாசன்.

மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றக் கருவியல்ல. அது, ஓர் இனத்தை உருவாக்குகிறது. ஓர் இனத்தின் பண்பை உருவாக்குகிறது. இவ்வாறான சமூக அறிவியல் கருத்தை சின்ன சின்ன வரிகளில் செப்பமாக வெளிப்படுத்தியுள்ளார் பாரதிதாசன். இனத்தின் மனத்தைச் செய்தது மொழிதான் என்பது மிகவும் ஆழ மானக் கருத்து. ஒரு தேசிய இன உருவாக்கத்தில், மொழியும் பண்பும் அந்த தேசிய இனத்திற்கு ஒரு பொதுவான உளவியல் உருவாக்கத்தை வழங்குகின்றன என்று ஸ்டாலின் சொன்னார். இந்த சமூக அறிவியல் கருத்தை பாரதிதாசன் தன்வழியில் நச்சென்று வெளிப்படுத்தியுள்ளார்.

மொழியில்லாமல் இனமில்லை, இனமில்லாமல் மொழியில்லை. இசைக்கு மொழியில்லை என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். காரணம், அவர்கள் மொழி இங்கு பேசப்படுவதில்லை. அதற்காக அப்படியொரு உத்தியைக் கையாண்டு இசைக்கு மொழித் தேவை யில்லை என்கிறார்கள். சாகித்யம் முக்கியமல்ல, இராகம் தான் முக்கியம் என்கிறார்கள். சொற்கள் முக்கியமல்ல என்பது அவர்கள் கூற்று. ஆனால், ஆபிர காம் பண்டிதர் இக்கூற்றை மறுத்தார். சொற்களும் பண்ணும் உடலும் உயிரும் போன்றவை என்றார். இப்பார்வை தான் தமிழர் மரபு சார்ந்தது! இசைக்கு சொற்களும் பண்ணும் உடலும் உயிருமாக இருப்பதைப் போல, இனமும் மொழியும் உடலும் உயிரும் போன்றவை என்பது பாவேந்தரின் கருத்து. அதுவே சரியான சமூக அறிவியல் பார்வை!

எனவே, மொழியைப் புறந்தள்ளி இனம் கிடையாது. இது போன்ற பல முக்கிய கருத்துகளைக் கொண்ட இந்நூல்களை வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத் தாருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து விடை பெற்றுக் கொள்கிறேன்! நன்றி!’’

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

நிகழ்வின் நிறைவில், திரு. அ.மதிவாணன் நன்றி நவின்றார். இந்நிகழ்வில், திரளான தமிழின உணர்வா ளர்களும், புத்தகப் படிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.