இந்த கணம்

கலங்கிய கண்களோடு
நெருங்கி வருகிறாய்.
நடுங்கும் கைகளை
இறுக்கமாய்
பற்றிக் கொள்கிறாய்
முகம் பார்த்து
துடிக்கும் உதடுகளை
மெல்லக் கடித்துக்
கொள்கிறாய்.
நெஞ்சோடு
சேர்த்தணைக்கிறாய்
பின்னங்கழுத்தில்
லேசாய் சூடுபரப்புகிறது
உன் மூச்சுக் காற்று
வார்த்தைகளேதுமற்ற
இந்த ஆறுதலான
உன் அணைப்பே
போதுமென்றிருக்கிறது
இப்போதைக்கு.


நாளை. . .


கடந்து போன
காற்றில்
இன்னுமிருக்கிறது. . .
கனவின்
கருகல் நெடி.
ஆனாலுமென்ன. . .
அன்றாட
விடியலைப் போலவே
வந்துதான் விடுகின்றன. . .
வாழ்தலுக்கான
புதுப்புதுக் கனவுகளும்

 

கலப்பு

யாரோடும் பேசாத
வார்த்தைகளின்
மீதமர்ந்து
வேடிக்கை பார்க்கிறது
மௌனம்.
யாரெறிவர்
முதல் கல்லென
நின்று கவனிக்கிறது
காற்றும்.
குழந்தையின்
குதூகலத்தோடு
குதித்தோடி வரும்
உன் வருகையில்,
சட்டென
கலந்தோடி விடுகின்றன. . .
மௌனமும், காற்றும்
எதிர்வேளை
காத்திருப்பதும்
சுகம் தானே. . . என்கிறாய்
நான் காத்திருக்கையில்.
ஒருவேளை-
நீ காத்திருக்க நேருமெனில்-
உணர்ந்திருப்பாய் நீயும்
காத்திருத்தலின்
உயிர் நெருடும்
அவஸ்தையை.