அந்த அறிவிப்பை நாளேட்டில் படித்த போது கேசவனுக்கு மட்டில்லா மகிழ்ச்சி. அதிர்ஷ்ட தேவதை தலைவாசலைத் தட்டிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. அருள்மிகு ராகவேந்திரா ஆராய்ச்சி பவுண்டேஷன் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அதாவது நான்காண்டு படிக்க வேண்டிய, பட்டப்படிப்புக்குச் சமதையான 'டிப்ளமோ' படிப்பை ஒரே ஆண்டில் பயிற்றுவித்துப் பல்கலைக்கழகச் சான்றிதழும் வழங்கப்படும். 'டிப்ளமோ' வகுப்பில் சேருவதற்குப் பட்டப்படிப்பெல்லாம் படித்திருக்க வேண்டியதில்லை. வெறும் எஸ்.எஸ்.எல்.சி. பாசாகியிருந்தால் மட்டும் போதுமானது.

எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்த கையோடு கேசவன் பிடுங்கித் தின்னும் வறுமை காரணமாகப் படிப்பை மேலும் தொடர முடியாமல், இளமையிலேயே விதவையாகிப் போன தாயாக வடிவாம்பாளைக் காப்பாற்றுவதற்கும் தனது வயிற்றுப் பாட்டைப் பார்ப்பதற்கும் வேண்டி உள்ளூர் பெரிய மனிதர்களின் சிபாரிசில் 'சனியம்' பிடித்த இந்த நாலாந்தர அரசு உத்தியோகத்தில் சேர வேண்டியதாயிற்று. அரசு உத்தியோகம் என்று தான் பெயர் நகரக்குழிகூட தேவலாம்.

இந்த ஏழு ஆண்டுகளில் கேசவன் அனுபவித்த இன்னல்களும் அவமானமும் சொல்லிமாளாது. பேய்க்கு வாழ்க்கைப்பட்ட கதைதான். பேயாவது சற்று கருணைகாட்டும். ஆனால் அவன் வேலை பார்க்கும் இலாகாப் பொறுப்பில் வந்தமரும் அதிகாரிகள் பேய்களை விடக் கொடியவர்கள். எந்த நேரத்தில் என்ன அவதாரம் எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களது குரங்குத்தனங்களுக்கும், கோபக்கனலுக்கும் ஆளாகாமல் இருக்க நெருப்பை மடியில் கட்டிக் கொண்டு வேலை செய்கிற மாதிரி அவ்வளவு எச்சரிக்கையோடு வேலை பார்க்க வேண்டியிருக்கிறது.

அதிகாரிகள்தான் அப்படி என்றால் கையைப் பிடிச்சவனுக்கெல்லாம் பெண்டாட்டி என்கிற மாதிரி, வேற்று இலாகா அதிகாரிகள், அதிகாரிகளின் உறவினர்கள், உறவினர்களின் உறவினர்களின் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், காண்ட்ராக்டர்கள் என்று கண்ட கண்ட பயல்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அசந்து மறந்து பதில் சொல்லவில்லையென்றால், அல்லது எரிச்சல் தாளாமல் முறைத்துப் பார்த்துவிட்டால் போதும் மொட்டைப் பெட்டிஷன்கள் பறக்கும். வேலைக்கே உலை வைக்கப்போவதாக மறைமுகமாகவும், நேர்முகமானதுமான மிரட்டல்கள். அவற்றை ஒட்டிவரும் மெமோக்கள் அவற்றுக்கெல்லாம் விளக்கம் கேட்டு வரும் நோட்டீசுகள், இவ்வளவு சிரமங்களையும் தாங்கிக் கொண்டு இரவு பகலாகச் செக்குமாடாக உழைத்த போதும் நல்ல பெயர்கிடையாது. அதற்கேற்ற சன்மானமும் கிடையாது.

ஆபீஸ் பியூன் கொண்டுவந்து மேஜையில் குவித்து வைத்திருக்கும் பைல்களில் தாறுமாறாகக் கிடக்கும் கடிதங்கள், உத்தரவுகள், அரசு ஆணைகள், ஆவணங்கள், ஆதாரங்கள் அத்தனையையும் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு, கண்பூத்துப் போகும் படியாகப் படித்து, தானியத்தினின்றும் பதரை நீக்குவது போல் வேண்டாதவற்றை அப்புறப்படுத்திப் 'பைலை' ஒழுங்குபடுத்தி, அதிகாரியின் ஒப்புதலுக்கும், கையெழுத்துக்கும் வைத்தால் போதும், புதுமாப்பிள்ளையாட்டம் ஏட் கண்டிஷன் அறையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும் அதிகாரி தனது பாண்டித்தியத்தையும் மேலாண்மையையும் நிலை நாட்டுவதற்கு வேண்டி - ஏதோ அவன் அப்பன் வீட்டுச் சொத்தே பறிபோன மாதிரி நாலு நொள்ளைப்பேச்சுப் பேசாமல், மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் பைல் அவன் கண்ணில் படுவதில்லை. அல்லாமல் பேய்க்கு இரத்தப்பலி கொடுத்தமாதிரி அவனுடைய மேஜை டிராயரிலோ, மனைவியின் சேமிப்பிலோ தட்சணை விழாமல் 'பைலைப் பிரித்துக் கூடப் பார்க்க மாட்டான். சுளை சுளையாகப் பணம் வராத வரையில் அவனது பச்சைமை பேனா திறக்க மறுத்துவிடும்.

இவ்வளவு பணம் புரளும் இடத்தில் நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பொசியும் என்பது போல் கேசவனுக்கும் ஏதாவது கிடைக்க வேண்டுமே அதுதான் கிடையாது எல்லாவற்றையும் அதிகாரியே பகாசுரன்மாதிரி தனது பைக்குள் அடக்கமாக்கிக் கொள்கிறான். "என்ன சார், எவ்வளவு சிரமப்பட்டு, ஓட்டை உடைசல்களையெல்லாம் ஒட்டுப்போட்டு சரி செய்து பைலை ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறேன். ஒரு கையெழுத்தை மட்டும் போட்டுவிட்டு அவ்வளவு லஞ்சப்பணத்தையும் நீங்களே அமுக்கிக் கொள்கிறீங்களே இது நியாயமா" என்று ஒரு அதிகாரியை ஒரு நாலாந்தர சிப்பந்தியகால் கேட்க முடியுமா? கேட்டால் சண்டாளன் வேலைக்கல்லவா உலை வைத்துப் போடுவான்.

பீயூனுக்காவது 'பக்லீஸ்' என்ற பேரில் வருகிறவர்கள். பிச்சைக் காசு போட்டுவிட்டுப் போகிறார்கள். அந்த நெற்றிக்காசு கூட கேசவனுக்குக் கிடைப்பதில்லை. சம்பளம் என்கிற பெயரில் சகலவிதமான பிடித்தங்களும் போகக் கிடைக்கும் வரட்டு வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பமென்கிற வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்த வேண்டியிருக்கிறது.

இந்த லெட்சணத்தில் மனைவி தையல் நாயகி கல்யாணமாகி வீட்டுப்படி ஏறி வந்த ஐந்து ஆண்டுகளிலேயே மூன்றுபிள்ளைகளுக்குத் தாயாகிப் போனாள். அதிலும் இரண்டு பெட்டைகள். அவனைக் கேட்டுக் கொண்டா பிள்ளைகள் பிறக்கின்றன? அந்த இரண்டுக்கும் சீர்சினத்தி செய்ய இப்போவே சேமித்தாக வேண்டியுள்ளது. இந்தக்காலத்தில் எவ்வளவுதான் சீர்திருத்தம் பேசினாலும், யார்தான் வரதட்சணை வாங்காமல் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள். மேற்கொண்டும் சிக்கனம் என்றால், நீண்டகாலத்திட்டமாகப் பிள்ளைகளைப் பெறாமல் இருக்க வேண்டும் என்பதுதான். எனவே, பிரம்ம தேவனை ஏமாற்றும் வித்தையாகக் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சரியம் என்ற முறையில் கட்டாயப் பிரம்மச்சரியத்தை அனுஷ்டிக்க வேண்டியதாக இருக்கிறது. இருந்தாலும் உணர்ச்சி என்கிற இயற்கை விதி அவனது கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கிறதே.

இப்படியாகப் பலவிதமான பொருளாதார சிக்கனங்களைக் கேசவன் கடைப்பிடித்த போதும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசி காரணமாக மாதாந்திர வீட்டுப் பட்ஜெட்டில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை அமானுஷ சக்தியாக விசுவரூபம் பெற்று மென்னியைப் பிடிக்கிறது. நிலைமை இப்படியே நீடிக்குமானால் எப்படிப்பட்ட அரசு சிப்பந்தியாக இருந்தாலும் அவனும், அவன் குடும்பத்தாரும் என்றைக்காவது ஒரு நாள் கப்பறை ஏந்தி வீதிக்கு வந்துவிட நேரிடும் என்கிற பீதி 'டெமாக்கிளஸ்' வாளாக அவனை வாட்டிவதை செய்துகொண்டிருந்தது.

அல்லாமலும் கேசவனைப் பொறுத்தமட்டில் அவனது திறமைக்கும் புத்திக் கூர்மைக்கும் இந்த வேலை லாயக்கற்றதல்ல என்பது அவனது ஆணித்தரமான அபிப்பிராயம். பொறியில் மாட்டிக் கொண்ட எலியாக இந்த வேலையை உதறிவிட்டுப் போய்விட வேண்டும் என்று ஒவ்வெரு கணமும் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தான்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கேசவனது பார்வையில் அருள் மிகு ராகவேந்திரா" நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு கண்ணில் பட்டது. விளம்பரத்தைப் பார்த்த மட்டில் தனது நீண்டநாள் கனவு பரிதாபமாகிவிட்டதே போன்றும், ஜென்ம சாபல்யம் ஏற்பட்டுப் போனதே போன்றும் உணரலானான். மகிழ்ச்சியையே கண்டிராத கேவசனின் முகத்தில் அன்றுதான் ஒரு புன் முறுவல் முகிழ்த்தது.

பட்டப்படிப்புக்குச் சமதையான நான்காண்டு 'டிப்ளமோ' படிப்பை ஒரே ஆண்டில் முடித்துச் சான்றிதழ் பெற்று விட்டால் போதும் வேலை கைமேல் கிடைத்த மாதிரிதான். அதிலும் மனிதனது ஆரோக்யம் பேணும் படிக்கான உணவுத் தூய்மை பற்றிய டிப்ளமோ படிப்பு அது.

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிசு என்கிற அளவிலான அரசு உத்தியோகம் அது. அந்த அலுவலகம் கூட அவன் வேலை செய்யும் இலாகாவுக்குப் பக்கத்தில் கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது. அந்த அலுவலகமே மகாலெட்சுமி வாசம்செய்யும் அலுவலகம் அந்த வேலை மட்டும் கிடைத்துவிட்டால் அவன் இத்தனை ஆண்டுகள் அனுபவித்த அல்லல்களும், இன்னல்களும் வறுமையும் பஞ்சாய்ப் பறந்தோடிப் போய் விடும் என்பதை கற்பகத் தருவும், காமதேனும் அவனுக்குக் கைக்கட்டிச் சேவகம் செய்யும்.

அந்த அலுவலகத்தில் பணி செய்யும் ஒவ்வொரு உத்தியோகஸ்தனுடையவும் வீட்டில் செல்வம் கொழிக்கிறது. மாதம் திரும்பிவிட்டால் போதும், டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களிலிருந்து பெட்டி பெட்டியாகப் பலசரக்குப் பொருட்கள் போய் இறங்கிவிடுகின்றன. அவர்களைக் கேட்காமலேயே கிம்பளம், அவர்களது மேஜை டிராயர்களின் அடைக்கலம் புகுத்துவிடுகின்றன.

அந்த அதிகாரிகள் நகரத்தின் எந்த உணவு விடுதிக்குள் - அது நட்சத்திர ஹோட்டல்களாக இருந்தாலும் கூட - அவர்கள் நுழைந்தால் ராஜமரியாதை. இவர்களுக்குக் கிடைக்கும் கிம்பளத்தைக் கணக்கில் கொண்டால் இவர்கள் வாங்கும் அரசுச் சம்பளம் கொசுறு மாதிரிதான்.

தெய்வ பக்தியும், பயந்த சுபாவமும் கொண்ட கேசவனுக்குச் சம்பளம் அல்லாமல் கிம்பளம் பற்றியும், லஞ்சம் வாங்குவது பற்றியும் யோசனை எழுந்தபோது உடம்பு ஓடிப் புல்லரித்தது. மனதில் இனம் தெரியாத ஒரு பீதி. ஆண்டவன் தன்னைத் தண்டித்து விடுவாரோ என்று மனஉறுத்தல் ஏற்படத்தான் செய்தது.

ஆனால் இந்தக் காலத்தில் கிம்பளம் பெறுவதும், லஞ்சம் வாங்குவதும்  மாமூலாகவும் நியதியுமாகிப் போனபின்பு அவன் மட்டும் எப்படி விதி விலக்காக இருக்க முடியும் பெரிய பெரிய அதிகாரிகளும் மந்திரிப் பிரதானிகளும் லஞ்சம் வாங்கத்தானே செய்கிறார்கள். கடவுளுக்குப் பயந்தவர்கள் ஆண்டவனைச் சாந்தப்படுத்துவதற்கு நேர்த்திக்கடன் என்ற பெயரில் திருப்பதி வெங்கடாஜலபதி உண்டியலிலும், பழனி முருகன் சந்நிதானத்திலும் காணிக்கையாக ஆண்டவனுக்கான பங்கை அர்ப்பணம் பண்ணிப் போடுகிறார்கள். தமது பங்கைப் பெற்றுக் கொண்டு அந்தச் சாமிகளும் பாவமன்னிப்பு அளித்துவிடுகின்றன. பாவத்துக்குப் பரிகாரம் என்பது விலை போகும் சரக்காக மாறிப்போன கலியுகத்தில் கேசவன் மட்டும் என்ன விதிவிலக்காக இருக்கமுடியும்? விரலுக்குத் தக்க வீக்கம் என்ற வகையில் கேசவன் தன் பங்குக்குக் காவியோ, கருப்பு உடையோ போட்டுக் கொண்டு ஒரு மண்டலம் உபவாசம் இருந்து பழனிக்கோ, ஐயப்பன் மலைக்கோ நடைபயணம் போய்விட்டு வந்தால் பாவவிமோச்சனம் கிடைத்துவிடப்போகிறது.

இவ்வாறு பலவாறாகச் சிந்தித்து மனதைத் திடப்படுத்தி ஒரு மனதாக அந்த டிப்ளமோ படிப்பை முடித்து, உத்தியோகத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டு, விண்ணப்பப் படிவத்துக்கான பணஓலையுடன் விண்ணப்பப் படிவத்துக்கு எழுதிப்போட்டான். விண்ணப்பப் படிவத்தைப் பார்த்தபோது கேசவன் மலைத்துப் போனான்.

அதாவது அந்த ஓராண்டு படிப்புக்கான கட்டணம் (ஃபீஸ்) எகிறிக்கொண்டு, விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்று வாமனாக அவனைப் பயமுறுத்துவதாக இருந்தது. இருந்தாலும் நாலு ஆண்டு படிப்பை ஓராண்டில் முடித்துச் சான்றிதழ் பெற்று, உத்தியோகம் பெற்றுவிட்டால் என்கிற தூரத்துக் கனவு! தனது பொருளாதார எல்லையையும் தாண்டி நிற்கும் கல்விக் கட்டணத்தை எப்படி ஈடுசெய்வது என்று இரவு - பகலாகச் சிந்தித்தபோது, கடைசியில் அவன் மனைவி தையல் நாயகி சீதனமாகக் கொண்டுவந்த பத்துசவரன் தங்க நகை ஆபத்பாந்தவனாக அவன் கண்ணிப்பட்டதும், நகையை விற்றுவிட்டால்தான் படிப்புக்கான கட்டணம் ஒரு வகையாகத்தேறும்.

அந்த பத்துச் சவரன் நகையைப் பொறுத்தமட்டில், தையல் நாயகி கேசவனின் தர்ம பத்தினியாக வந்த நாள் முதல் அவளது உடலை அலங்கரித்துக் கிடந்ததைவிட வங்கியிலும், வட்டிக்கடைகளிலும் அடைக்கலமாக இருந்த காலம்தான் அதிகம். தையல் நாயகியின் பிரசவ காலச் செலவினங்களையும், பிள்ளைகளின் வைத்தியச் செவுகளையும் சமாளிக்க அந்த நகைதான் ஆபத்பாந்தவனாக இருந்திருக்கிறது.

வட்டிகட்ட முடியாமல், நகை மூழ்கிப் போகும் நிலை ஏற்படும் போதும், ஏல நோட்டீஸவிடப்பட்ட பிறகும் கடன் உடன்வாங்கி மீட்கப்பட்டு, மீண்டும் அடகுக் கடையில்- என்று இவ்வாறு இத்தனை ஆண்டுகாலம், நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற கணக்கில் பாதுகாக்கப்பட்ட நகையை விற்றுவிடுவது என்ற கேசவனது முடிவைக் கேட்டபோது தையல் நாயகிக்கு மயக்கமே போட்டுவிட்டது. உயிரையே பறிகொடுத்த மாதிரி ஒப்பாரி வைத்தாள்.

நாளை வரப்போகும் சுபிட்சத்தையும் நல்வாழ்வையும் சொல்லி அவளுக்கு ஆசைகாட்டி எப்படியோ மனைவியின் சம்மதத்தையும்  பெற்று நகையைக் கிரயம் செய்த போதும் அஞ்சல்வழிக் கல்விக் கட்டணத்திற்கு நிதி போதாமையால் கந்துவட்டிக்காரனிடம் கேசவன் அடைக்கலம் புகவேண்டியதாயிற்று. கடைசியில் கேசவன் அவன் கனவு கண்டபடியே அருள்மிகு ராகவேந்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தன்னை ஒரு டிப்ளமோ மாணவனாகப் பதிவு செய்து கொண்டான்.

மெய்வருத்தம் பாராது, கண்துஞ்சாது கருமமே கண்ணாகச் சகல அல்லல்களையும், இன்னல்களையும் அவஸ்தைகளையும் தாங்கிக் கொண்டு பரீட்சையும் எழுதி முடித்தான். 'டிப்ளமோ' படிப்புக்கான தேர்வு முடிவுகளை ராகவேந்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகமே பத்திரிகையில் வெளியிட்டிருந்தது. கேசவனது உழைப்புக்கேற்ற பலன் கிடைத்திருந்தது. அவன் முதல் வகுப்பில் வெற்றி பெற்றிருந்தான்.

அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கேசவனை வந்தடைந்ததாட்டம், எந்த வேலையில் சேர வேண்டும் என்று கனவு கண்டானோ அந்தப் பணிக்கான விண்ணப்ப அறிவிப்பும் பத்திரிகையின் வேறு ஒரு பக்கத்தில் வெளியாகி இருந்தது. வேலைக்கான படிப்புத் தகுதி கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதார், விஞ்ஞானம் சார்ந்த பட்டதாரியாகவோ, அதற்கு ஒப்பான நான்காண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றவராகவோ இருக்க வேண்டும் என்று கண்டிருந்தது.

கேசவன் கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் அறிவிப்பைப் படித்தான். பல்கலைக்கழக மானியக்குழுவினுடையவும், பொறியியல் கல்விக்குழுமத்தினுடையவும் அங்கீகாரமோ ஒப்புதலோ பெறாத ஓராண்டு 'டிப்ளமோ' சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கொட்டை எழுத்துக்களில் எச்சரிக்கைவிடப்பட்டிருந்தது. நெஞ்சில் பாராங்கல்லைத் தூக்கிப் போட்டது போன்ற வேதனை.

கேசவன் கண்ட கனவெல்லாம் பகல் கனவாக- வெறும் கர்ப்பனையாக வீணாகிப் போய்விட்ட வெறுமை. அவனை நம்பி தன் வாழ்வையே ஒப்படைத்துவிட்டிருந்த மனைவி. வரும் காலம் இருளாகிப் போன மக்கள், தாயார், எமனினும் கொடியவனான கந்துவட்டிக்காரன் அவன் மனத்திரையில் வந்து வந்து போனார்கள். கேசவனுக்குத் தலைசுற்றிக் கொண்டு வந்தது. நினைவு தப்பிப்போன மயக்கம். அந்த அரசு சிப்பந்தி ஆபீஸ் பைல்களுக்கிடையில் நெஞ்சு வெடித்துச் செத்துக் கிடந்தான்.