சிம்புதேவனின் மூன்றாவது படம் இது. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி,  அறை எண் 305 இல் கடவுள் ஆகிய முதல் இரு படங்களும் இவர் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குநர் என்பதை அடையாளம் காட்டின. வழக்கமாகத் தமிழ் சினிமா காட்டும் உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட உலகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் அவரது பாணி அல்லது அவரது தாகம் வசீகரமானது. சமூகப்பிரச்னைகளையும் இன்றைய அரசியல் நடப்புகளையும் வேறொரு தளத்தில் வைத்து விவாதிக்கும் விமர்சிக்கும் அவரது முத்திரையுடன்தான் கல்பாத்தி எஸ். அகோரத்தின் தயாரிப்பில் இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கமும் வெளிவந்துள்ளது.

இரும்புக்கோட்டை என்றழைக்கப்படுவது ஆங்கிலத்தில் USA Puram என்று அழைக்கப்படும் உசாபுரமாகும். ஆகவே அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் படத்தில் வில்லன். அந்த இரும்புக்கோட்டையின் தலைவன் கிழக்குக்கட்டை சுற்றிலுமுள்ள ஊர்களைத் தன் சூழ்ச்சிகளாலும் சதிகளாலும் மிரட்டல்களாலும் அடக்கி ஆள்கிறான். அவனுடைய பிடியிலிருந்து தப்ப விரும்பும் ஜெய்ஷங்கர்புரம், சைவ செவ்விந்தியர், அசைவ செவ்விந்தியர் போன்ற ஊர்களின் மக்கள் ஒற்றுமையின்றித் தமக்குள் சண்டையிட்டுக் கிடக்கிறார்கள். அவர்களை முரட்டு சிங்கம் ஒன்று படுத்தி உணர்வூட்டி,  தலைவனால் அல்ல மக்கள் சக்தியால்தான் மாற்றங்கள் நிகழும் என்பதை உணர்த்தி இரும்புக்கோட்டையை தகர்க்கச்செய்கிறான். உடைபட்ட கோட்டைக்குள்ளிருந்து அந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போரில் மடிந்த தலைவர்கள் யாசர் அராபத், சே குவேரா போன்றவர்களெல்லாம் மீண்டும் உயிர்பெற்று வருகிறார்கள். வரலாறு அவர்களை விடுதலை செய்கிறது. இப்படி ஒரு கதை இந்த முற்றிலும் புதிய கௌபாய் படத்துக்குள் துலாம்பரமாக வெளித்தெரியும்படி கூடவே ஓடி வந்து கொண்டிருக்கிறது. ஆகவே இது வழக்கமான ஒரு கௌபாய் படம் அல்ல. நாம் கைதட்டி வரவேற்க வேண்டிய ஒரு படமாகிறது.

கௌபாய்கள் என்றால் மாடு மேய்ப்பவர்கள் என்றுதான் பொருள். ஸ்பெயின் நாட்டில் இப்பண்பாடு துவங்கியதாகக் கூறப்படுகிறது. இவர்கள் வட அமெரிக்காவின் பரந்த நிலப்பரப்புகளில் பல்லாயிரக்கணக்கான கால்நடைகளை மேய்த்து பல்வேறு சாகசக்கதைகளின் நாயகர்களாக நீண்ட நெடுங்காலமாக அப்பகுதி மக்களின் நினைவுகளில் வாழ்பவர்கள். கௌபாய் ஜோக்ஸ், கௌபாய் கவிதைகள் என இலக்கிய உலகில் நாட்டுப்புறவியலின் ஒரு பகுதியாக அவர்களின் வழக்காறுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. பிற்காலத்தில் ஹாலிவுட் திரைப்பட கர்த்தாக்கள் பல கௌபாய் படங்களை தயாரித்து அக்கதைகளை இன்னும் பரவலாக்கினர். காடுகளிலும் மலைகளிலுமாக அலைந்து திரிந்த அக்கால்நடை மேய்ப்பாளர்கள் புதையல் தேடி அலையும் கூட்டத்தாருக்கு உதவுபவர்களாகவும் நிலவியல் அறிந்தவர்களாகவும் செவ்விந்தியர்களால் அவ்வப்போது தாக்கப்படுபவர்களாகவும் ஹாலிவுட் சினிமாக்களால் சித்தரிக்கப்பட்டார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் நிலப்பரப்பில் தங்கள் ஆதிபத்திய உரிமையை நிலைநாட்டப் போராடியவர்களாக செவ்விந்தியர்களை இப்படங்கள் காட்டுவதில்லை.

இப்பின்னணியை நன்கறிந்த சிம்புதேவன் கௌபாய்கள் பற்றி உலவும் கதைகள், நம்பிக்கைகள் மற்றும் உலகிலும் தமிழிலும் இதுவரை வெளிவந்துள்ள கௌபாய் திரைப்படங்களின் நினைவுகள் இவற்றின் மீது காலூன்றி நின்று முழுமையான ஒரு நகைச்சுவைக் கதையைப் பின்னி இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். ஆந்திர மாநிலம் ரெய்ச்சுட்டி, மோதனூர், பெங்களூரு,  புனே, நாக்பூர், அம்பாசமுத்திரம், புதுச்சேரி எனப் பல்வேறு நிலப்பரப்புகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு அவற்றையெல்லாம் ஒரே நிலப்பரப்பாக்கி நம் கண்முன்னே விரித்துள்ளார்கள். நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் பிரம்மாண்டமான அரங்குகள், சிலைகள் என உழைத்துத் தயாரித்திருக்கிறார்கள்.

மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது, மனோரமா, நாசர், லாரன்ஸ், இளவரசு, பத்மப்ரியா, சந்தியா, லட்சுமிராய், செந்தில், பாஸ்கர், மௌலி , வையாபுரி, சாய்குமார் எனப் பட்டியல் நீள்கிறது. இவர்களில் பத்மப்பிரியா, சந்தியா போன்ற பலருக்கு படத்தில் அழுத்தமான பாத்திரங்கள் இல்லை. நாசர், லாரன்ஸ், இளவரசு, பாஸ்கர், சாம்ஸ் போன்றோர்தான் படத்தை முன்னகர்த்திச் செல்கிறார்கள். பாஸ்கர் செவ்விந்திய மொழியில் பேச அதை சாம்ஸ் தமிழில் மொழிபெயர்க்கும் காட்சிகள் தமிழ் சினிமா நகைச்சுவைக்காட்சிகள் வரலாற்றில் அழுந்தத்தடம் பதித்த காட்சிகளாக நம்மைச் சிரிக்க வைக்கின்றன.

அணுசக்தி ஒப்பந்தம், தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்பதுகூடத் தெரியாத தமிழர் நிலை,  எது நடந்தாலும் கவலையின்றித் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் மனநிலை எனப் பல சமூக விசயங்கள் படம் நெடுகிலும் வசனங்களில் கிண்டல் செய்யப்படுகின்றன. பஞ்ச் டயலாக் என்ற பெயரில் அர்த்தமற்ற வசனங்களைக் கொட்டிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சினிமாச் சூழலில் இது போன்ற மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியவையாகும். படத்தின் இறுதிக்காட்சியில் இரும்புக்கோட்டை அதிபர் நாசர் மக்களால் தாக்கப்படும்போது ”உலகத்தின் எல்லா முதலாளிகளுக்கும் கடைசியில் இதுதான் கதி என்பதுதான் வரலாறு ” என்று நாயகன் வசனம் பேசுகிறான்.

பின்னணி இசை சிறப்பாக அமைந்ததுபோலப் பாடல்கள் மனதில் நிற்கவேயில்லை. வைரமுத்து-ஜி. வி. பிரகாஷ் கூட்டணி வெற்றிபெறவில்லை. கலை இயக்குநர் முத்துராஜும் ஒளிப்பதிவாளர் அழகப்பனும் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய கலைஞர்கள். படத்தின் முற்பாதியின் குதிரைவேகத்தைப் பிற்பாதியிலும் காப்பாற்றப் போராடியிருக்கவேண்டும். நகையுணர்வு தவிர்த்த பிற உணர்வுகளுக்குப் படத்தின் கதையில் இடம் இல்லை. காமெடி படத்தில் அதெல்லாம் வேண்டாம் என்று விட்டு விட்டார்கள். கடைசிக்காட்சியில் மனோரமா பேசும் சண்டாளா என்கிற வசனம் தவிர்க்கப்ப்பட்டிருக்க வேண்டும். 18ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்று சொன்னாலும் சமகால மாற்றங்களை நுட்பமாகக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டுமல்லவா?

30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ஒரு கௌபாய் படம். ஆபாசமும் வக்கிரமும் இல்லாத ஆரோக்கியமான ஒரு நகைச்சுவைப்படம். எல்லாவற்றுக்கும் மேலாக சமூக விமர்சனத்தையும் கூடவே கொண்டிருக்கிற படம். சிம்புதேவனின் அழுத்தமான முத்திரையோடு வந்திருக்கிற படம். வாழ்த்துகிறோம். வரவேற்கிறோம்.

 -சதன்.