தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று பாடினார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. அந்த தனிக்குணம் எதுவென தனியாக இனம் பிரித்து காண்பதில் பெரும் சிரமம் உள்ளது. வந்தாரை வருகவென வரவேற்பதுதான் தமிழரின் தனி மரபு என்றார் நண்பர் ஒருவர். எந்த நாட்டுக்குப் போனாலும் வந்தவரை வா என்றுதான் வரவேற்கிறார்கள். வந்தவரை யாரும் வாசலில் நிறுத்தி செருப்பால் அடிப்பதாகத் தெரியவில்லை. நகரங்களில் கோட்டைச்சுவர்கள் என உயர்ந்து நிற்கும் வீடுகளில் சுற்றுச்சுவர்கள் அதன்மீது உடைந்த கண்ணாடி பதித்து முள்வேலிக் கம்பி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அழைப்பு மணியை அழுத்தினால் கதவுக்குள் கதவு திறந்து லென்ஸ் வழியாக பார்த்துவிட்டு, உங்களைத் தெரியாதே என்கிறார்கள். அப்படியே உள்ளே அழைத்தாலும் நம்மோடு பேசிக்கொண்டிருப்பது என்னவோ பல நேரங்களில் தொலைக்காட்சிதான்.

காதலும் வீரமும்தான்  தமிழரின் தனிப் பண்பாடு என்றும் அதனால்தான் இலக்கியத்தை அகம்,புறம் என்று பிரித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். காதலும், சண்டையும் இல்லாமல் எந்த இனமும் இருந்ததாகவோ, இருப்பதாகவோ தெரியவில்லை.

இருந்தாலும் காதலைப்பாடுவதிலும், வீரத்தை வியப்பதிலும் தமிழ் இலக்கியம் உச்சத்தை தொட்டிருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. புன்னை மரத்தின் அருகில் அணைக்க வந்த காதலனிடம் என் தாய் நட்டதால் இந்த புன்னை மரம் என் சகோதரி என மறுதலிக்கும் காதலில் மானுடக் காதல் மட்டுமின்றி தாவரக்காதலும் ததும்புகிறது.

காதலன் அருகிருக்கும்போது பிரிவுத்துயர் தெரிவதில்லை. தொலைவிலிருக்கும் போதோ தொல்லையாய் இருக்கிறது என விழிக்கு அருகில் மைக்குச்சி வருவதை உவமானம் காட்டியது வள்ளுவக்காதல்.

போர்க்களத்திற்கு மழலையை அனுப்பும் தாயின் துணிவும் நெஞ்சைக்கீறி வீரர்கள் உடலை புதைக்கும் வழக்கமும் தமிழர்களின் விம்மும் வீரத்திற்கு சாட்சி சொல்கின்றன. குறுநில மன்னர்களுக்காக குடிமக்கள் அழிந்த கதைதான் என்றபோதும். இதே போன்ற வீரயுகக் கதைகளுக்கான தொன்மங்கள் உலகம் முழுவதும் விரவிக்கிடக்கத்தான் செய்கின்றன.

தமிழர்களின் தனிக் குணம் அல்லது தனி பலகீனம் என்று யோசிக்கும்போது அதீதமாக உணர்ச்சிவசப்படுவது கொஞ்ச காலத்திலேயே அதை மறந்துவிடுவது என்பதாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

மொழிக்காக தீக்குளித்த தீரர்கள் இங்குண்டு. வேறு எந்த மொழி பாதுகாப்புக்காகவும் இத்தனை பேர் தீக்குளித்து மாண்டதாகத் தெரியவில்லை. ஆனால் தமிழ் அன்றாடம் தீக்குளிப்பதும் இங்குதான் நடக்கிறது. தமிழ்ப்படத்தில் வொய் திஸ் கொலை வெறி என்று துவங்கி ஆங்கில வார்த்தைகளால் பின்னப்பட்ட ஒரு பேத்தலை லட்சக்கணக்கான தமிழர்கள் பார்த்து ரசித்ததாக தகவல்கள் பரப்பப்படுகின்றன.

தமிழர்கள் சார்ந்த எந்த ஒரு பிரச்சனை முன்னுக்கு வந்தாலும், தமிழர்கள் தீக்குளிப்பது ஒரு நடைமுறையாகவே மாறிவிட்டது. ஒரு நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக செய்தி வந்தால்கூட தீக்குளித்து விடுகிறான் தமிழன்.

தலைவர்கள் இறந்தால் அவர்ளது குடும்பத்தில் யாரும் தீக்குளிப்பதில்லை. தொண்டர்களோ தங்கள் குடும்பத்தை நட்டாற்றில் விட்டுவிட்டு தீக்குளித்து விடுகிறார்கள. தன்னுடைய தலைவன் காலையில் கைதாகி மாலையில் விடுதலையாகி விடுவார் என்று தெரிந்தால்கூட மதிய நேரத்தில் மண்டபத்தில் இருப்பதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் தீக்குளித்துவிடுகிறான் தமிழன்.

முல்லைப் பெரியாறு பிரச்சனை முன்னுக்கு வந்தபோது நான்கு பேர் தீக்குளித்ததாக வந்த தகவல் நெஞ்சை பதறவைக்கிறது. கேரளத்தில் இதுபோன்று நடந்ததாகத் தகவல் இல்லை. இந்த பண்பாட்டிலிருந்து தமிழன் வெளிவருவதே உயரிய பண்பாடாக இருக்கும். அதீதமாக உணர்ச்சிவசப்படுவதன் விளைவாக பல கூத்துகளும் நடக்கின்றன. அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்தேன். ஒரு தமிழன் செங்கல்லை கையில் ஏந்தியபடி பேருந்து ஒன்றை நோக்கி வேகமாக ஓடினான். முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஏற்பட்ட ஆத்திரத்தால் மலையாள எழுத்து எழுதப்பட்ட பேருந்தை அடிப்பது அவரது நோக்கம். ஆனால் அந்தப் பேருந்தில் எழுதப்பட்டிருந்ததோ தெலுங்கு எழுத்து நல்ல வேளையாக அந்த ஓட்டுநருக்கு தமிழ்த் தெரிந்திருந்ததால் ஒரு பேருந்து தப்பியது.. சட்டம் படித்த வழக்கறிஞர்கள் கூட கட்டிடத்தின் மீது ஏறிக்கொண்டு கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டுவது அவர்கள் படித்த சட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. மாறாக தங்களது சட்ட அறிவை பயன்படுத்தி தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டலாம்.

ஒவ்வொரு இனத்திற்கும் பண்பாடு சார்ந்த அடையாளம் முக்கியம். அது தொலைந்து விடுவது கூட தெரியாமல் இருப்பதுதான் தமிழனின் தனிக்குணமோ என்று விசனம் ஏற்பட்டாலும் காலத்திற்கேற்ற தமிழனின் நெகிழ்வு அவனை கரைந்து போகாமல் காத்துக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.