ஊழல் தடுப்பு மசோதாவை வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகளும், அன்னா ஹசாரேயும் போராடியதன் விளைவாக நாடாளுமன்றத்தில் சோனியா காங்கிரஸ் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. லோட்கபாலில் கார்ப்பரேட் நிறுவனங்களையும் அவர்களது ஊடகங்களையும் சேர்க்க வேண்டுமென்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியதை காங்கிரசும் பிஜேபியும் ஏற்க மறுத்துவிட்டன. கார்ப்பரேட்டுகளின் கைப்பாவைகள் தான் நாங்கள் என்று ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் உறுதி செய்துள்ளன.

நாடாளுமன்ற மேலவையில் லோக்பால் மசோதா தோல்வியடையும் என்று பயந்த காங்கிரஸ் கட்சி ஓட்டெடுப்பே நடத்தாமல் அவையை கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இடதுசாரிக் கட்சிகளின் முக்கியத்திருத்தங்கள் ஏற்கப்படாததால் மக்களவையில் நடந்த இரண்டு வாக்கெடுப்புகளிலும் பங்கேற்கவில்லை. லோக்பால் மசோதா தாக்கலானதுமே பிரச்சனை தீர்ந்தது என்று கருதி மக்கள் அன்னா ஹசாரேயிடமிருந்து பின்வாங்கி விட்டனர் போலும், அவரது பம்பாய் பட்டினிப்போர் பிசுபிசுத்து வாபஸ் வாங்கப்பட்டுவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவைகளாக சோனியாகாந்தியும் மன்மோகன் சிங்கும் ஆகிவிட்ட நிலையில் அவர்களுக்கெதிராக மக்கள் திரும்பி வருகிறார்கள்.

சசிப் பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சியை ஆன்மீகவாதிகள் பெரிதும் நம்புகிறார்கள். சசிப் பெயர்ச்சியை தமிழக மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். சசிகலா நடராஜன் மற்றும் 15 பேரை ஜெயலலிதா அதிமுகவிலிருந்து நீக்கியிருப்பதை சனி விலகியது என்று மக்களும், அதிமுக அணிகளும் பார்க்கிறார்கள். விஜயகாந்த் அண்மையில் குடும்ப ஆடசி போய், கும்பலின் ஆட்சி வந்து விட்டது என்று வருத்தத்தோடு கூறியிருந்தார். ஏனெனில் அதிமுக ஆட்சி வந்ததுமே சசிகலா கும்பலின் லஞ்சஊழல் அட்டகாசம் துவங்கிவிட்டது. கடந்த ஆறுமாத காலத்திலேயே பல நூறு கோடிகள் சுருட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. சசிகலாவின் உறவினர் மகாதேவன் வீட்டில் பலகோடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.

சசிகலா கும்பலை நீக்கியதை வரவேற்கும் அதே நேரத்தில், கும்பல் மீண்டும் வந்து ஜெயலலிதாவுடன் ஒட்டிக் கொள்ளும் என்ற பீதியும் உள்ளது. கன்டெய்னர் லாரிகளில் கரன்சிக் கட்டுகளை போயஸ் தோட்டத்திலிருந்து அள்ளிச் சென்று ராஜகுடும்பம் போல வாழுகிறார்கள் என்று கும்பலைப் பற்றி முன்பு பேசப்பட்டது. கும்பலைத் தொடர்ந்து அனுமதித்தால் ஐந்தாண்டுகளில் கொள்ளையில் கருணாநிதி குடும்பத்தை மிஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தப் பிரச்சனையில் துக்ளக் சோ முதல் குஜராத்தின் மோடி வரை தலையிட்டிருப்பதாய் கூறப்படுகிறது. எது எப்படியானாலும் தமிழகத்தில் கொள்ளை நின்றால் நல்லதுதான்.

பிரிட்டனில் அக்ரமம்

ஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். ஆனால் இன்று பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. பிரிட்டிஷ் அரசு மானியங்களைக் குறைத்து சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்வி உதவித் தொகையை அடியோடு ரத்து செய்துவிட்டது. இதனால் பிரிட்டனில் கல்விக் கட்டணங்கள் மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது.

இதனால் பிரிட்டனில் மாணவிகள் தங்கள் படிப்புச் செலவை ஈடுகட்ட விபச்சாரத்தில் குதித்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. பிரிட்டனில் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கான நலஅமைப்பு இதுபற்றி மிகுந்த கவலை தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டல்களில் ஆடை அவிழ்ப்பு நடனமாடும் பெண்களில் 25 சதம் பேர் மாணவிகள் என்று லீட்ஸ் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

விபச்சாரம் மட்டுமின்றி சூதாட்டம் மற்றும் ஆபத்தான பணிகளில் மாணவ- மாணவியர் ஈடுபட்டு வருகின்றனர். அதைவிட மோசமான செய்தி, தங்கள் பிள்ளைகள் படிப்பிற்காக தாய்மார்களும் விபச்சாரப் படுகுழியில்  தள்ளப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. முதலாளித்துவம் வீழும் வரை அக்ரம ஆட்சிகள்  தொடரும். மக்கள் துயரங்களும் தொடரும். இந்திய அரசும் மானியங்களை வெட்டுவதற்குக் கத்தியைத் தீட்டிக்கொண்டிருக்கிறது.

கணிதமேதை ராமானுஜன்

கணிதம் சமூகத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்துள்ளது. அனைத்து விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சியும் கணித அறிவியல் சார்ந்தே வளர்ந்துள்ளன. 33ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த ராமானுஜன் ஐந்தே ஆண்டுகளில் 3000க்கு மேற்பட்ட சூத்திரங்களையும், தேற்றங்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர். அவரது 125வது பிறந்த நாள் 22-12-11ல் கொண்டாடப்பட்டது. மத்திய அரசு 2012ம் ஆண்டை ராமானுஜனின் நினைவாக கணித ஆண்டாகக் கொண்டாடப்போவதாய் அறிவித்துள்ளது.

பண்டைய இந்தியாவில் ஆரியப்பட்டா, பாஸ்கரா போன்ற கணித, வானியல் நிபுணர்கள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். அரேபியர் 1 முதல் 9 வரை எண் கணிதத்தை உருவாக்கி, அதை மேலும் பெருக்க முடியாமல் தவித்தபோது இந்தியக் கணித மேதைகள் பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்து உருவாக்கினர். அதைத் தொடர்ந்து கணிதம் வேகமாய் வளரத் தொடங்கியது.

ஏழைக்குடும்பத்தில் பிறந்த ராமானுஜன் இளவயதில் வறுமையில் வாடினார். 1913ல் அறிஞர் ஜி.எச்.ஹார்டிக்கு அவர் எழுதிய கடிதத்தில் "பசியுடன் போராடும் மனிதனான எனக்கு முதல் தேவையாக உணவு உள்ளது. எனது மூளையைப் பாதுகாக்க உணவு தேவைப்படுகிறது" என்று எழுதினார்.

இந்தியாவில் வைதீகமதம் கோலோச்சியபின் அறிஞர்களும், மேதைகளும், கல்வியாளர்களும் அழிக்கப்பட்டனர். இந்தியா அஞ்ஞானிகளின் கூடாரமாய், மூட நம்பிக்கைகளின் திருநாடாய் பல நூற்றாண்டுகளைக் கடந்து வருகிறது. இந்தியாவின் பழம் பெருமையை நிலைநாட்டும் விதத்தில் 1887ம் ஆண்டு பிறந்த ராமானுஜன், அழியாத் தடங்களைப் பதித்துச் சென்றுள்ளார்.

சம காலத்தில் கணிதம் பற்றிய ஆய்வுகள் குறைந்து, கணிதப் படிப்பிலேயே ஆர்வம் குறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு படித்துள்ளவர்கள் அவர் உருவாக்கிய கணித சூத்திரங்களைப் படிக்கவில்லை என்பதே வரலாறு. அவருக்குப் பின்பு இங்கு கணித மேதை உருவாகாதது நமது துரதிருஷ்டம்.

இணைய தளங்களுக்குத் தடையா?

மத்தியத் தொலைத்தொடர்பு அமைச்சர் கபில்சிபல் ஒரு கபட வேடதாரி. 2 ஜி ஒப்பந்தத்தால் அரசுக்கு ஒரு ரூபாய் கூட நட்டமேயில்லை என்று அறிக்கை விட்டு, அதனால் உலகமே அவரைக் காரித்துப்பியது. தற்போது இணையதளங்களில், எழுதுவதைத் தடை செய்வேன் என்று கொக்கரித்திருக்கிறார். ட்விட்டர், பேஸ்புக், இணையதளங்களில் ஊழல் தலைவியான சோனியா காந்தியையும், உதவாக்கரை பிரதமர் மன்மோகன் சிங்கையும் தாக்கி வலைத் தளங்களில் ஏராளமான செய்திகள் வெளிவந்துள்ளன. இதைப்பார்த்து மிரண்டுபோன மத்திய அரசு, வலைத்தளங்களைத் தடை செய்ய முயற்சிக்கிறது. மேலும், அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவான செய்திகள் பரப்பப்படுவதும் தடை செய்ய முயற்சிப்பதற்கு ஒரு காரணமாகும்.

கபில் சிபலின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கபில்சிபலை ஒரு முட்டாள் என்றும், தயவு செய்து நீங்கள் நரகத்துக்குப் போய்விடுங்கள் என்றும் மறுநாளே இணையங்கள் வெளுத்துக் கட்டின. உலகெங்கும் ஊழல் ஆட்சியாளர்கள், கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் எழுந்து வருகின்றன. துனீசியா, எகிப்து முதல் அரபு நாடுகளிலும், வட ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் புரட்சி ஏற்பட ஃ பேஸ்புக், ட்விட்டர்களே ஆதாரமாக இருந்தன. எழுத்து என்பது உலகம் முழுவதும் அதிகாரத்தை வீழ்த்த ஒரு கருவியாக வரலாறு நெடுகிலும் பயன்பட்டுள்ளது. சோனியா காந்தி மீதும் மத்திய ஆட்சியின் மீதும் கடுமையான வெறுப்பில் மக்கள் உள்ளனர். எனவே மக்களின் விமர்சனங்களைத் தடுக்க கபில்சிபல் முனைகிறார். நெருப்பைப் பொட்டலம் கட்ட முடியாது என்பது அவருக்குத் தெரியாது போலும்.

முல்லை பெரியாறு

முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரள அரசு எடுத்த நிலைபாடு காரணமாக கடந்த ஒரு மாதகாலம் தமிழகத்தில் பொது வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் நடைபெற்றன. ஐந்து மாவட்ட மக்களிடம் கேரள அரசின் அறிவிப்பு பீதியை ஏற்படுத்திவிட்டது. தொடர்ந்து விஷமிகள் களமிறங்கி இங்கு மலையாளிகள் மற்றும் நிறுவனங்களைத் தாக்குவதும், கேரளத்தில் தமிழர்கள் மற்றும் நிறுவனங்களைத் தாக்குவதும் நடைபெற்றது.

தமிழக அரசும் காவல்துறையும் தலையிட்டு நிலைமை கட்டுக்குள் வந்து, இருமாநிலப் போக்குவரத்து துவங்கியிருப்பது சகஜநிலை திரும்புவதற்கு வாய்ப்பாகும். மத்திய அரசு மௌனம் சாதிக்கிறது. தமிழகத்திற்கு இரு தினங்கள் வந்திருந்த பிரதமர் மன்மோகன்சிங் முல்லை பெரியாறு பற்றியோ, கூடங்குளம் பற்றியோ வாயே திறக்காமல் ஓடிவிட்டார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தி, நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவது, அணையின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் அமைத்த குழு உறுதிப்படுத்துவது, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குக் காத்திருப்பதே அறிவார்ந்த செயலாகும். அதை விடுத்து, கேரளாவின் புதிய அணைகட்டும் போக்கை ஏற்க முடியாது. புதிய அணை கட்டுவதன் மூலம் 999 ஆண்டு ஒப்பந்தத்தைக் காலாவதியாக்கும் முயற்சி அதில் அடங்கியுள்ளது.

இரு மாநில அரசுகளும், மக்களும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரட்டும். அதுவரை இரு மாநில மக்களும் அமைதிகாக்க வேண்டும்.