வெப்பம் மிகுந்த மூச்சுக்காற்று முகத்தில் படர்ந்தது. குரல் வளையின் மீது வருடிய கரங்கள் சில நொடி களிலேயே கழுத்தை நெரிக்கத் துவங்கின. கழுத்து எலும்புகள் உடைபடும் நெரிசலில் சிக்கியது. மூச்சு முட்டியது. உடலெங்கும் வியர்வை பெருக்கெடுத்து ஓடியது. மடார் மடாரென்று இரு கைகளாலும் பலம் கொண்ட மட்டில் தடுக்க முனைந்த போதும், எதுவும் முடியாத பட்சத்தில் தரையை ஆவேசமாக ஓங்கி ஓங்கி அறைவதைத் தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடிய வில்லை. துடித்தன கால்கள், பிறகு துவண்டன. அகலத் திறந்த விழிகள் நிலைகுத்தி நின்றது. கடைசி மூச்சு அடி வயிற்றில் கிளம்பி உடலைவிட்டு வெளியேற நகர்ந்த வேளையில், சிவராமன் துள்ளிக் குதித்து எழுந்தான்.

சிவராமன் வீட்டை ஒருமுறை சுற்றும், முற்றும் பார்த்தான். வெள்ளை நிற இரவு நேர விளக்கொளி வீடு முழுக்க நிறைந்திருந்தது. பின் பக்கத்து ஜன்னலில் நிலவின் வெளிச்சம் தெரிந்தது. ஹாலின் மத்தியில் தரையின் விரிப்பில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான். கட்டிலின் விளிம்பில் காயத்ரி இவ னைப் பார்த்தபடி படுத்திருந்தாள். கண்களைத் திறந்து இவனை முறைத்தபடி படுத்திருப்பதாக நினைத்து, சற்று நகர்ந்து உற்றுப் பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்தில் லேசாக வாயை திறந்தபடி காயத்ரி நித்திரையில் இருந்தாள். அவளுக்கு அந்தப்பக்கமாய் சுவரையொட்டி தலையணையை முட்டுக் கொடுத்துப் படுத்திருந்தான் வெங்கடேஷ்.

முன்பக்கத்து அறையில் வெளிச்சம் குறைவதும், கூடுவதுமாக இருந்தது. டி.வியை அணைக்க வில்லையோ என நினைத்தவன், எழுந்து சென்று பார்த்தான். அறை யின் மூலையில் சிவப்பு நிற உல்லனில் டி.வி அமைதியாக இருந்தது. சுவரில் பல்லி போன்ற ஜந்து இருட்டில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தது. வைகாசி மாசத்து கடைசி நாட்களாக இருந்த தால் காத்து பலமாக வீசியது. அடுப் படியின் மேலே போட்டிருந்த ஆஸ் பெஸ்டாசின் சத்தம் தடதடவென அவ்வப்போது அமைதியை சிதைத்து பயமுறுத்தியது.

மீண்டும் படுக்கை விரிப்பில் உட்கார்ந்தான் சிவராமன். கண்களை கசக்கிக் கொண்டான். தலையை திருப்பி ஷெல்ப்பில் இருந்த கடி காரத்தைப் பார்த்தான். இரண்டே காலைத் தாண்டி முட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

கழுத்தை கைகளால் தடவிப் பார்த்துக் கொண்டான். கழுத்தை நெரித்த வலியை அவனால் உணர முடிந்தது. குரல் வளை தடித்துச் சென்றது. லேசாக இருமிக் கொண்டான். கட்டிலின் மேல் கிடந்த துண்டை எடுத்து உடம்பை துடைத்துக் கொண்டான். கனவு போல இருந்தாலும், அவனால் சட்டென அதனை உதறி விட முடிய வில்லை.

வேறு எவரும் வந்து போகவும் முடியாது. மீண்டும் காயத்ரியை உற்றுப் பார்த்தான். அவள் அமைதியாகவே தூங்கிக் கொண்டிருந்தாள். அவனுக்குள் பதட்டமும் பயமும் குறைந்த பாடில்லை. காலை நீட்டிப் படுத்தவன் தூங்க முடியாமல் கைகளை தலைக்கு கீழே வைத்து, சுழலும் மின் விசிறியைப் பார்த்தபடி இருந்தான்.

நேற்றிரவு சிவராமன் வீட்டுக்கு வந்தவுடன் இருவரிடமும் மனஸ்தாபம் ஏற்பட்டது. ஓயாமல் அம்மா வீட்டுக்குப் போகக்கூடாது என சிவராமன் சொல்லிக் கொண்டிருந்தான். எந்த வசதியும் இல்லாத காயத்ரியின் அம்மாவின் வீடு சிவ ராமனுக்கு சுத்தமாகப் பிடித்ததில்லை. பல சமயங் களில் காயத்ரி மட்டுமே சென்று வந்தாள். இப் போது அதுவும் கூடாது எனக் கூறுகிறான். காயத்ரி கண்கள் கலங்கியபடி அடுப்படிக்கு அருகில் அமர்ந்தாள்.

அவர்களுக்கிடையிலான ஊடலுக்கு காலம் செல்லச்செல்ல காரணங்களே தேவையற்றுப் போயிருந்தன. மறுத்துப் பேசுவதும், உரத்துப் பேசுவதுமாக சண்டை நீடித்தது. அந்தச் சமயங்களில் இரண்டாம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ் இவர்களையே உற்றுப்பார்ப்பான். பிறகு எதுவும் செய்ய முடியாதவனாக பழைய ஜாமென்ரி டப்பாக்களையெல்லாம் அடுக்கி வைத்து நடு வழியில் சின்னதான காரை ஓட்டிச் செல்வான். இவர்களின் சத்தம் அதிகரிக்கும் போது கார் நின்று நின்று செல்லும். சிவராமன் வீட்டில் இல்லாத போது கார் டுர்...டுர் ... என சத்தத்தோடு போகும்.

காயத்ரி ஒவ்வொரு தடவையும் அழுகையின் இறுதியில் இனி இவனோடு பேசவே கூடாது என முடிவெடுப்பாள். ஆனாலும் அது மறுநாள் மாலை வரை நீடிக்காது. எதையேனும் அவனிடம் கேட்கும்படியாக அமைந்து விடும். அதையே சமாதானத்திற்கான துவக்கமாக எடுத்துக் கொள்வான். அதற்கு மேல் வீம்பு செய்ய காயத்ரிக்கு மனமிருக்காது.

சிவராமனது மனதில் சில சம்பவங்கள் இப்படியாக வந்து போய்க் கொண்டிருந்தன. ஆனால் கழுத்தை நெரிக்கும் வரை செல்ல மாட்டாள் என நினைத்துக் கொண்டான். ஆனாலும் அப்படியா ஒரு வன்மம் தன் கூடவே குடும்பம் நடத்தும் அவளுக்கு தோன்றக்கூடும். இருக்காது, அப்படி ஒரு போதும் நினைக்க மாட்டாள் என்றே கருதினான். அப்படியானால் வேறு யாராக இருக்க முடியும்.. கண்களை மூடி கழுத்தை நெரிக்கும் கரங்களின் வழியே முகத்தை அனுமானிக்க முயற்சி செய்து பார்த்தான், முடியவில்லை.

காலையில் வீட்டு வாசலில் வெங்கடேஷின் ஸ்கூல் ஆட்டோ அடித்த ஹாரன் சத்தத்தில் சிவராமன் விழித்துக் கொண்டான். வெங்கடேஷ் ஸ்கூல் பேக்கை தூக்கிக் கொண்டு இவனைப் பார்த்து லேசாக புன்னகைத்த படி சென்றான். வாசல் வரை சென்று ஆட்டோவை அனுப்பி விட்டு காயத்ரி வீட்டுக்குள் வந்தாள். மணி எட்டைத் தாண்டி இருந்தது. படுக்கையிலிருந்து எழுந்து விரிப்புகளை காலால் கட்டிலுக்குக் கீழே தள்ளினான்.

“ராத்திரி நல்ல தூங்கிட்டியோ” என காயத்ரி யைப் பார்த்து தனது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளும் வகையில் கேட்டான்.

காயத்ரி இவனை நிமிர்ந்து பார்த்து “பெறகு, விடிய விடிய முழிச்சிக்கிட்டு இருப்பாகளோ” என சொன்னவள், இவனுக்காக காத்திருக்காமல் அடுப்படி வேலையில் மும்முரமாக இருந்தாள். சிவராமனுக்கு சந்தேகம் தீராமல் மேலும் வலு வாயிற்று. ஒரு தடவை கழுத்தை நெரிக்க விடிய விடிய முழிக்க வேண்டியதில்லையே, அதைத்தான் அவள் சூசகமாகக் சொல்கிறாளோ என நினைத்தான்.

காயத்ரி எப்போதும் இப்படி இருந்ததில்லை என மனதிற்குள் சொல்லிக் கொண்டான். பிறகு எதுவாக இருக்க முடியும் என நினைத்தபடி அவனது கொரியர் சர்வீஸ் ஆபிசுக்குள் நுழைந்தான். இனி அவனே நினைத்தாலும் எதைப்பற்றியும் யோசிக்க முடியாது.

சிவராமன் முதலில் பெரியாஸ்பத்திரிக்குச் சென்றான். அவனும் காயத்ரியுமாக பேசி முடிவெடுத்தார்கள். பக்கத்திலேயே இருந்த கிளினிக்கில் டெஸ்ட் செய்து பார்த்ததில், காயத்ரிக்கு குழந்தை உண்டாகி இருந்தது.

“வேண்டாம்னு நெனைக்கிறேன் காயத்ரி” சிவராமன் சொன்ன போது அவள் மௌனமாக இருந்தாள். சிவராமன் காயத்ரியை சம்மதிக்க வைப்பதில் ரொம்பவும் சிரமப்பட தேவை இருக்காது என்றே கருதினான்.

சின்னதாக இருந்த கிளினிக்கில் இன்ஜெக்சன் போட்டு மாத்திரை கொடுத்தார்கள். “ஒரு வாரந்தான ஆகியிருக்கு. இத சாப்பிடுங்க. குளிக்க வந்துரும்” என்று டாக்டர் சொன்னார்.

பத்து நாளை கடந்த பிறகும் எதுவும் நடக்க வில்லை. காயத்ரி அவள் பாட்டுக்கு இருந்தாள். சிவராமனுக்குத்தான் கோபம் வந்தது . “ஒரு வாரத்துல சரியாயிடும்னு டாக்டர் சொல்லியும் ஒன்னு நடக்கல. கொஞ்சமாச்சு கவலை இருக்கா உனக்கு . நாம பேசித் தான முடிவெடுத்தோம். என்ன ஏதுன்னு மறுபடி விசாரிக்க வேண்டாமா?” என்று கத்திப் பேசினான் சிவராமன். அடுப்படிக்குள் இருந்தவள் இவனுக்கு நேராக வந்து நின்றாள்.

“அடுத்து என்ன செய்யணும்னு நீங்கதா முடிவெடுக்கணும். நான் எங்க போயி விசாரிக்க. இந்த ஊர்ல எனக்கு யார தெரியும்?” என்றாள் காயத்ரி.

அமைதியாக, அவளையே உற்றுப் பார்த்த சிவராமன் , விறுவிறுவென்று எழுந்து வெளியே வந்தான். பிறகுதான் பெரியாஸ்பத்திரிக்கு வந்து நின்றான். பெண்கள் பிரிவுக்கு சென்றவன் எங்கு யாரை விசாரிப்பது எனத் தெரியாமல் திகைத்தான்.

இரண்டு பக்கமும் எதிர் எதிரே அடுக்கி வைத்த மாதிரி பச்சைத் துணி விரித்த கட்டில்கள் . பெண்களாகத் தான் இருந்தார்கள். கட்டில் கிடைக்காத பெண்கள் வராண்டாவில் பாயை விரித்து ஊரிலிருந்து கொண்டு வந்த சேலை துணிமணிகளை விரித்து படுத்துக் கிடந்தார்கள். அனேகம் பேர் கர்ப்பப்பை அகற்றத்தான் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

சதையற்ற முகத்தோடு ஆப்ரேஷனுக்காக காத்துக் கிடந்தார்கள். கல்யாணமான புதிதில் மாசமாக இருப்பதை எல்லோருக்கும் சொல்லி பூரித்துப் போனவர்கள். சிந்திய ரத்தத்திற்கும் மெலிந்த தேகத்திற்கும் பதிலேதும் அற்ற இறுகிய முகங்களோடு ரண அறுவைச் சிகிச்சைக்காக வரிசையில் இருந்தார்கள். சிவராமனுக்கு பயமும் திகைப்பும் சொல்ல முடியாத துயரத்தை தந்தது. மனித தசைகள் ஆட்டிறைச்சி போல தொங்கும் முகங்களற்ற கூடாரத்தில் நிற்பதாக உணர்ந்தான். பெரியாஸ்பத்திரி போகும் எண்ணத்தை விட்டு விட்டான்.

வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்த ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள். “பழைய சேலைங்க ரெண்டு மூணு கொண்டாங்க” என்று ஆயா சொன்னாள். மருந்து நெடி வீசும் அறைக்கு போன காயத்ரிக்கு லேசாக கண்ணில் நீர் துளிர்த்தது. அவள் ஏற்கனவே சிவ ராமனிடம் சொல்லியிருந்தாள். “வீட்ல யாருக்கும் சொல்ல வேண்டாமா? எங்க அம்மாட்ட சொல்லட்டுமா?”

“புரிஞ்சுக்கோ காயத்ரி. அவங்க இத ஏத்துக்க மாட்டாங்க. ரெண்டு புள்ளையாச்சு வேணும்னு கேப்பாங்க. நாம குழப்பத்துல இருந்தத அவங்க கிட்ட எப்பிடிச் சொல்ல. ஊசி, மாத்திரை சாப்பிட்ட பெறகு சும்மா இருக்க முடியுமா?” சிவராமன் சொன்னதைக் கேட்டு காயத்ரி எதுவும் பேசாமல் இருந்தாள்.

வலி தெரியாமல் இருந்ததே தவிர காயத்ரியால் அனைத்தையும் உணர முடிந்தது.

பெரும் துயரம் பாறை போல் அவள் மீது இறங்கிக் கொண்டிருந்தது. அவளது பழைய சேலைகள் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டன. அவளது மனசைப் போல. பச்சை நிற சேலை யொன்று காயத்ரியின் அக்கா ஊருக்கு போனபோது கொடுத்தது. கைத்தாங்கலாக ஆயா தான் காயத்ரியை பிடித்து மெதுவாக வராண்டாவிற்கு கொண்டு வந்து அங்கியிருந்த பெஞ்சில் படுக்க வைத்தாள். சிவராமனைப் பார்த்து “ஒரு மணி நேரம் கழிச்சி கூப்ட்டு போங்க” என்றாள்.

பத்து நிமிஷத்திற்கு ஒரு முறை காயத்ரிக்கு குமட்டிக் கொண்டு வந்தது. வயிறைப் புரட்டியது. தலைமாட்டில் நின்று கொண்டிருந்த இவனை பார்த்து “வெங்கடேஷ் எங்க?” என்றாள் ஈனஸ்வரத்தில்.

“அவன் ஸ்கூலுக்கு போய்ட்டான். மதியம் சாப்பிட கடையில் வாங்கி கொடுத்துட்டேன்” என்றான். கொஞ்ச நேரத்தில் ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தார்கள். காயத்ரி சோர்வுற்று இருந்தாள். சாப்பிட மறுத்தாள். “காயத்ரி சாப்பிடு. வேண்டாம்ணு சொல்லாத நம்ம உடம்ப நாம தான பாத்துக்கனும்” என்றான் சிவராமன். அவனை உற்றுப் பார்த்த காயத்ரி எதுவோ முனகினாள். என்னவென்று கேட்க நினைத்தவன் எதுவும் பேசாமல் இருந்து விட்டான்.

தரையில் விரிப்பில் சிவராமன் படுத்திருந்தான். வேலையை முடித்து விட்டு எட்டுமணிக்கு மேல் கிளம்பி வீடு வந்து சேர நேரமாகிவிட்டது. சிவ ராமனுக்கு தூக்கம் வரவில்லை. தலையை திருப்பி கடிகாரத்தை பார்த்தான். நேரம் பதினொன்றை கடந்திருந்தது. கட்டிலில் காயத்ரியும் வெங்கடே ஷும் படுத்திருந்தார்கள்.

“காயத்ரி... காயத்ரி” லேசான சத்தத்தோடு சிவராமன் கூப்பிட்டான். முதுகைக் காட்டியபடி படுத்திருந்த காயத்ரி திரும்பிப் படுத்தபடி இவனைப் பார்த்தாள். என்ன என்பது போல தலையை அசைத்தாள். “ஒண்ணு இல்லை. கீழ வந்து படுத்துக்கோ” என்றான் சிவராமன். கண்களைத் திறந்தபடி இவனையே பார்த்தாள் காயத்ரி.

“கோபம் தீரலியா” என்றான் சிவராமன். காயத்ரி மௌனமாகவே இருந்தாள். “எல்லா வீட்லயும் பிரச்சனை இருக்கத்தான் செய்யிது. பிரச்சனையில்லாத வீடு எங்கதான் இருக்கு. ஆரம்பம்னு இருந்தா முடிவுன்னு ஒன்னு இருக்குல்ல” என்றபடி சிவராமன். காயத்ரியின் கைகள் மீது தனது கையால் வருடினான்.

விருட்டென்று கையை உதறிய காயத்ரி, சிவராமனை கண்கள் விரிய பார்த்தாள். காயத்ரியின் கண்கள் சிவப்பேறி இருந்தது.

 “நாப்பது நாள் கழிச்சு மாத்திரை சாப்ட்டு, இருக்கோ செத்துட்டோன்னு தெரியாம மனச கல்லாக்கி இருந்தேன். உசுரயே உருவி எடுக்கிற மாதிரி ஆஸ்பத்திரியில பொணமா கெடந்தேன். பொம்பளையா பொறந்து தொலைச்சமேன்னு நெனைச்சி நாலுநாளு குமட்டி குமட்டி எம் மேலேயே காறித் துப்பிக்கிட்டேன்.” காயத்ரி படுத்தபடியே உடல் அசைவற்று கனத்த குரலில் பேசினாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியப்படி இருந்தது. சிவராமன் அசைவற்று கிடந்தான்.

“அது ஒரு நா கூத்து இல்ல. ஜென்மத்துக்கு மறக்க முடியாது அந்த வலிய. அது ஒன்னு கல்லு தட்டி கால் வலிச்ச மாதிரி கெடையாது. உசுரே போற மாதிரி. கொலைக்காரப் பாவிக்கிட்ட கொஞ்ச மாச்சு கோவப்படலேன்னா நா மனுஷியே கெடையாது” என்றவள் கண்களை மூடினாள்.

சிவராமனுக்கு வியர்த்தது. தனது குரல்வளையை யாரோ நெரிப்பது போல உணர்ந்தான். அந்த இரவின் இருள் நீடித்தது.