ஆயிரம்தான் பொங்கலைத் தமிழர் திருநாள் என்று உரக்கக் கூவிப் பார்த்தாலும், தீபாவளிக்கு இருக்கிற மவுசு பொங்கலுக்கு இல்லைதான்.

என்ன காரணம்?

முதலாளித்துவமும் பார்ப்பனீயமும்தான் காரணம்.

உங்களுக்கு வேற வேலை இல்லையா? எதற்கெடுத்தாலும் பார்ப்பனீயம்... முதலாளி...இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. சரி எப்படிக் காரணம்?

தீபாவளி கொண்டாடப்படுவதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிற கதைகளில் பல முரண்பாடுகள் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் முழுக்க முழுக்க பார்ப்பன நலன் அல்லது அதன் உயர்வு சார்ந்ததாக இருக்கிறது.

பார்ப்பனரல்லாதவர்கள் தீபாவளியைத் தங்கள் பண்டிகையாக விரும்பி விசேஷமாகக் கொண்டாடுவதற்கு, மத ரீதியாகப் பல கவர்ச்சிகரமான மத்தாப்புகள் கொளுத்திப் போடப்படுகின்றன.

சரி, இதுல முதலாளித்துவம் எங்கிருந்து வந்துச்சு?

பார்ப்பனீயம் முதலாளித்துவத்தோடு கைகோத்து, அதிகார மட்டத்தில் இருப்பதால்தான், தொழிலாளர்களுக்கு ‘போனஸ்’ பொங்கலுக்குத் தராமல், தீபாவளிக்குத் தரப்படுகிறது. தீபாவளி விசேஷமாகக் கொண்டாடப்படுவதற்கு 100 சதவீதக் காரணம் இதுதான்.

தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முதலாளிகளும், வர்த்தக நிறுவனங்களும் தொழிலாளர்களின் ‘போனஸை’ குறிவைத்துத் தங்களின் விளம்பரங்களின் மூலம் ‘தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு’ மக்களைத் தயார் செய்கிறார்கள். தனது தள்ளுபடி மோசடியையும் ஆரம்பித்து விடுகிறார்கள்.

சரி, அதுக்கு என்ன செய்யறது?

தீபாவளிக்கு இருக்கிற மவுசைக் குறைத்து அதைப் பொங்கலுக்குக் கூட்ட வேண்டும் என்றால், தீபாவளிக்குத் தருகிற ‘போனஸை’ நிறுத்தி, அதைப் பொங்கலுக்கு மாற்ற வேண்டும்.

மாற்றினால்?

“விழாக்கள், பண்டிகைகள் எல்லாம் முதலாளிகளின் வேட்டை நாய்கள்’’ என்றார் காரல் மார்க்ஸ். அந்த வேட்டை நாய்கள் எல்லாம் பச்சைத் தமிழனாக மாறிப் பொங்கலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ‘தமிழர் திருநாளைக் கொண்டாட எங்களிடம் வாருங்கள்’ என்று பொங்க ஆரம்பித்துவிடும்.

அப்புறம் என்ன ஆகும்?

வழக்கம்போலத் தாழ்த்தப்பட்ட மக்களைத் தள்ளிவைச்சிட்டு, ‘தமிழர் திருநாள்’ விசேஷமாகக் கொண்டாடப்படும்.

என்னங்க இது புதுக் கதையா இருக்கு? தாழ்த்தப்பட்ட மக்களை யாருங்க தள்ளிவைச்சா? எதையாவது சொல்லிக் குழப்பத்தை உண்டு பண்ணிக்கிட்டே இருங்க.

நீங்க என்ன சந்திர மண்டலத்துல இருந்து வந்திருக்கீங்களா? தமிழர்களின் ‘வீர விளையாட்டு’ என்று சொல்லப்படுகிற, ஜல்லிக்கட்டுல - மாட்டை அடக்குகிற போட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பதில்லை, என்பது உங்களுக்குத் தெரியாதா?

‘மாட்டுப்பொங்கல்’ என்று ஒரு நாளைத் தீர்மானிச்சு, அந்த நாளில் தனக்கு உழைத்தவர்கள் என்கிற அடிப்படையில் மாட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒரே நிலையில் வைத்து ‘மரியாதை’ செய்கிற பழக்கம் என்ன ஜப்பான்காரன் பழக்கமா?

பார்ப்பனர்களைத் திட்டுனா சந்தோஷப்படுறீங்க. உங்க கதையை எடுத்து உட்டா உடனே, நீங்களும் பார்ப்பனரா மாறிடுறீங்க? என்னங்க நியாயம் இது?

பார்ப்பனக் கைக்கூலி ஏ.ஆர்.ரகுமானும் ‘ரீமிக்சும்’

‘இன்றைய திரைப்பட இசையமைப்பாளர்கள் பழைய பாடல்களையே ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் தருகிறார்களே? இது என்ன முறை?’ என்று சிவகுமார் என்பவர் www.wordpress.mathimaran.com என்ற என்னுடைய வலைப் பதிவில் இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு நான் இப்படிப் பதில் எழுதியிருந்தேன்;

கதையின்படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழைய பாடலைக் கொஞ்சம் மாற்றிப் பாடுவதில் தவறில்லை. அப்படித்தான் தியாகராஜ பாகவதர் பாடிய ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்று ‘செஞ்சுருட்டி’ ராகத்தில் அமைந்த பாடலை, அதற்குப் பின்வந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் கொஞ்சம் வேகம் கூட்டி டி.எம். சவுந்தரராஜனை வைத்துப் பாட வைத்தார்.

‘புதிய பறவை’ படத்தில் உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்’ என்று ‘ஹரிகாம்போதியில்’ மெல்லிசை மன்னர் இசை யமைத்த பாடலை, இசைஞானி இளையராஜா ‘தாய்க்கு ஒரு தாலாட்டு’ என்ற படத்தில், பழைய பாடலின் பின்னணி இசையை மட்டும் கொஞ்சம் மாற்றி, ‘பழைய பாடல்போல புதிய பாடல் இல்லை’ என்று மெல்லிசை மன்னருக்கு மரியாதை செய்திருப்பார்.

இது முன்னர் இருந்த மேதைகளுக்கு, அதே துறையைச் சார்ந்த மேதைகள் செய்த கவுரவம். ஆனால் இப்போது நடப்பதோ களவானித்தனம்.

பழைய பாடல்களை மறைமுகமாகத் திருடி இசையமைத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது நேரடியாகப் பகிரங்கமாக வழிப்பறி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த இசையமைப்பாளர்களை விடக் கல்யாண வீடுகளில் பாடுகிறவர்கள் நிரம்ப நேர்மையோடு இருக்கிறார்கள். ‘இந்தப் படப் பாடல், இவர் இசையமைத்தது’ என்று சொல்லிவிட்டு பாடுகிறார்கள். ஆனால் இவர்களோ, கொஞ்சமும் வெட்கமில்லாமல் அடுத்தவர் பாடல்களைத் தன் பாடல்கள், என்றே அறிவித்துக் கொள்கிறார்கள்.

இந்த மோசடியை ஆரம்பித்து வைத்தது, பார்ப்பனக் கைக்கூலியான ஏ.ஆர். ரகுமான். ‘படகோட்டி’ படத்திற்கு மெல்லிசை மன்னர் அமைத்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற அருமையான கற்பனைகள் கொண்ட பாடலை, ‘பாவம் கொடூரன்’ எஸ்.ஜே. சூர்யா என்பவருக்காகக் களவாடியிருந்தார் ரகுமான்.

கே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’ என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை. இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டுத் தயாரித்தார்கள். கே.ஆர். நாராயணனுக்கு எதிராக அப்துல்கலாமை பா.ஜ.க., தயாரித்ததைப் போல்.

அந்த விசுவாசம் ரகுமானுக்கு இருந்ததால்தான், ‘ரோஜா’ ‘பம்பாய்’ போன்ற இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படங்களில் அவருடைய இசையும் இஸ்லாமிய எதிர்ப்புக் குறியீடுகளாகவும், இஸ்லாமிய இசை தீவிரவாத அடையாளமாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இன்றுகூட இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்களும், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கிட்டை எதிர்க்கிற பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும், பா.ஜ.க. வைச் சேர்ந்த பலரும் - ஏ.ஆர். ரகுமான் மற்றும் அப்துல் கலாமின் ஆதரவாளர்கள்தான். இவர்களை ஆதரிப்பதின் மூலமாக, தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது இஸ்லாமிய ஆதரவாளர்களாகச் சித்தரித்துக் கொள்கிறார்கள்.
Pin It