இந்திய நாட்டின் இமாலயத் தோல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் சிறந்த கல்வி அளிக்கத் தவறியது. விளைவு, மனித மேம்பாட்டில் உலகின் 179 நாடுகளில் இந்தியாவின் இடம் 128.

2015ஆம் ஆண்டில் அனைவருக்கும் 8 ஆண்டு ஆரம்பக் கல்வி அளிக்கத் தவறப் போகும் 40 நாடுகளில் இந்தியா ஒன்று. இந்நிலையில் சமீபத்தில் இரண்டு முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டம். இரண்டு, தமிழக அரசு அறிவித்திருக்கும் சமச்சீர் கல்வி. இவை இரண்டும் எந்த இந்தியக் குழந்தைகளின், தமிழ்நாட்டுக் குழந்தைகளின் மறுக்கவியலா கல்வி உரிமையை, நாட்டின் நீண்ட காலக் கவ்விக் கனவுகளை நிறைவேற்ற உதவும்? இரண்டும் ஓரளவிற்கு வரவேற்புக்குரியது, ஆனால் குறைகள் கொண்டன. அவற்றை நீக்குவதற்குச் செய்ய வேண்டியவை யாவை?

தமிழக அரசின் சமச்சீர் கல்வி அறிவிப்பு:

1. காலந்தாழ்ந்து வந்தாலும், சில பயன்களை அளிக்குமென்று எதிர்பார்க்கிறோம்.

2. மற்ற மாநிலங்களில் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் நடைமுறையில் இருக்கும் பல கல்வி வாரியங்கள் STATE MATRICULATION, ANGLO INDIAN, ORIENTAL EDUCATION BOARDS ஒரே வாரியமாக மாற்றப்பட்டு, ஒரே பாடத் திட்டம், ஒரே தேர்வுகள், ஒரே பாடப் புத்தங்கள் என்று மாற்றப்படும்.

3. சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து போராட்டத்தில் குதிப்போம் என்று அச்சுறுத்துகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. பல சலுகைகளை அனுபவித்துக் கொண்டு, கல்வியைக் கொள்ளையாக மாற்றயிருக்கும் இந்தப் பள்ளிகள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும். இப் பள்ளிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தமிழக அரசு இதனை கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

4. முதலில் செய்ய வேண்டியது, வெறும் அரசாணையாக நின்றுவிடாமல், உடனடியாக இதனைச் சட்டமாக்க வேண்டும். சட்ட மன்றம் தற்போது நடைபெறாவிட்டாலும், ஒரு அவசரச் சட்டமாக ORDINANCE அறிவித்து, அடுத்த சட்ட மன்றக் கூட்டத்தில் ஒரு வலிமையான சட்டமாக, ஓட்டைகளற்று, நீதி மன்றத்தில் நிற்கக்கூடிய சட்டமாக ஆக்க வேண்டும்.

5. இன்று கட்டணம் வசூலிக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அரசு பள்ளிகளைவிடத் தரம் மிகுந்த கல்வியைத் தாங்கள் அளிப்பதாகப் பறைசாற்றுகின்றன. பல வகைகளில் விளம்பரம் செய்கின்றன. சுமார் 3,600 மெட்ரிக் பள்ளிகளில் 300 பள்ளிகளில்தான் தேவையான உள்கட்டமைப்பும், தகுதி பெற்ற ஆசிரியர்களும் உள்ளன.

6. மெட்ரிக் பள்ளிகள் தரம் உயர்த்தவை என்று சொல்வதற்குக் காட்டும் ஒரு காரணம் அவர்களின் பாடத் திட்டம் அரசு பள்ளிப் பாடத்திட்டத்தினும் உயர்ந்தது என்பது. இது உண்மையல்ல. முத்துக்குமரன் குழு அறிக்கையில் இது குறித்து விளக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது. தேர்வுத் தாள்கள் அதிகம், அரசு பள்ளிகளில் 5 தேர்வுகள் என்றால், மெட்ரிக் பள்ளிகள் அதே பாடத் திட்டத்திற்கு11 தாள்கள் வைத்திருக்கிறார்கள். இதனால் கல்வித் தரம் உயர்ந்தது என்று எந்த வகையில் சொல்லமுடியும்? வெவ்வெறு பாடத்திட்டங்கள் இருப்பதால், பள்ளிகளுக்குள்ளாக ஆரோக்கியமற்ற போட்டி நிலவுகிறது. மெட்ரிக் பள்ளிகள் பாடத்திட்டத்தை உயர்த்திக் கொண்டே போகின்றன. இதனால், அரசு பள்ளிகளும் தங்கள் பாடத்திட்டத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். இவை அனைத்தும் சேர்ந்து, அனைத்துக் குழந்தைகளும் தாங்க முடியாத பாடத் திட்ட சுமையை அனுபவிக்கின்றனர். குழந்தைப் பருவத்தையே இழந்து தவிக்கிறனர். சமச்சீர் கல்வி இதனை முடிவுக்குக் கொ£ண்டுவரும்.

7. அடுத்து, மெட்ரிக் பள்ளிகளின் பாடப் புத்தகங்கள் தனியாரால், எவ்வித அரசின் அங்கீகாரமும் இல்லாமல், பல சமயங்களில் பிழைகள் நிறைந்து, அதிக விலையில் வெளியிடப்படுகின்றன. பாடத் திட்டங்கள் மாறாத போதிலும், பாடப் புத்தகங்கள் ஒவ்வொரு ஆண்டும் மாற்றப்படுவதும், கலைத்திட்டத்திற்கு தேவையற்ற பொருள் செலவு ஏற்படுவதும் தவிர, பல கோடி வியாபாரமாக இது மாறியிருக்கிறது. இதுவும் சமச்சீர் கல்வியில் முடிவுறும்.

இத்தகைய வரவேற்புக்குரிய அம்சங்களைக் கொண்டிருந்தாலும், இது சமச்சீர்க் கல்வியின் முதல் படிதான். செல்ல வேண்டிய தூரம் நீண்டது.

1. சமச்சீர் கல்வி உண்மையான சமமான, சீரான, கல்வியாக இருக்க வேண்டும். அரசு அறிவிப்பு, பாடத் திட்டம், தேர்வு, பாடப்புத்தகம் தவிர வேறு எதிலும் சம நிலையை உருவாக்காது.

2. மழலையர் கல்வி குறித்து அரசின் அறிவிப்பில் ஏதும் சொல்லப்படவில்லை. 3 வயதிலிருந்து மழலையர் கல்வி அளிக்கப்பட வேண்டும். பள்ளி செல்லும் பழக்கம், வாய் வழியாக பாடல்களும், பேசும் திறமையும் பெறுதல், மற்ற குழந்தைகளுடன் பழகுதல் போன்ற திறன்கள் இப் பருவத்தில் குழந்தை பெற்றால்தான் 6 வயதில் முதல் வகுப்பு செல்லும்போது, அதிர்ச்சி அளிக்கும் அனுபவமாக இருக்காது. தனியார் பள்ளிகளில் கற்கும் குழந்தைகள் அனைவரும் முன் பருவக் கல்வி கற்றுதான் பள்ளிக்கு வருகின்றனர். முதல் வகுப்பிலேயே தனியார் பள்ளி குழந்தைகளுக்கும், அரசு பள்ளி குழந்தைகளுக்கும் சமமின்மை உருவாக்கி விடுகிறது. இதனைப் போக்க அனைத்து அரசு, உள்ளாட்சி பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

3. சமச்சீரின்மைக்கான ஒரு முக்கிய காரணமான ஆங்கில வழிக் கல்வி மாற்றப்பட்டு, அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வி கொண்டு வரப்பட வேண்டும். பயிற்று மொழி தாய் மொழியே என்பது உலகம் முழுவதும் விவாதத்திற்கு அப்பாற்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. தரமான கல்விக்கு மிகத் தேவையானது. இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் சிகரம் கண்டோர் மிகப் பலரும் தாய் மொழிவழி கற்றவரே, ஆங்கிலக் கல்வி புரியாமல் கற்கும் கொடுமையையும், மனனம் செய்தலே கற்றல் என்ற சீரழிவையும் ஏற்படுத்தியுள்ளது.

4. ஆங்கிலம் இரண்டாவது மொழியாகக் கற்றுத் தருதல் வேண்டும்.

5. வரும் கல்வியாண்டு 2010  2011ல் 1, 6 ஆம் வகுப்புகளுக்கும், அதற்கு அடுத்த ஆண்டுகளில் மற்ற வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகாறும் நடைமுறைப்படுத்தப்பட்ட கலைத்திட்ட மாற்றங்கள், 3 ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் கொண்டுவரப்பட்ட நடைமுறை தொடர வேண்டும். புதிய கலைத் திட்டம் அதிகபட்சம்  3 ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் கொண்டு வரவேண்டும்.

6. இன்றைய வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழக அரசு சிறந்த தரம் கொண்ட பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். இன்று உள்ள 4 வாரியங்களையும் திருப்திப்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கக்கூடாது. NCERT உருவாக்கியுள்ள NATIONAL CURRICULUM FRAME WORK, 2005 ஐ ஒட்டி சிறந்த பாடத் திட்டங்கள் பல மாநிலங்களில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் அத்தகைய முயற்சி தொடங்கப்படவே இல்லை. சிறந்த கலைத் திட்டமும, பாடத் திட்டமும், பயிற்சி முறைகளும் இந்த தருணத்தில் உருவாக்கப்பட வேண்டும். அவை சுமையற்றவையாக இருக்க வேண்டும். 6ஆம் வகுப்புக் குழந்தைக்கு 8ஆம் வகுப்பிற்குரியதைக் கற்றுத் தரல் தரமான கல்வியல்ல, அது முற்றிலும் தரமற்ற கல்வி, அது குழந்தைகளின் மீது ஏற்றப்பட்ட சுமையே

7. கல்வி சிறு வயதிலிருந்தே மாணவர்களின் சிந்தனைத் திறன், பகுத்தறிவு, விமர்சனப் பார்வை, படைப்புத் திறன் ஆகியவற்றை வளர்ப்பதாக இருக்க வேண்டும். NCF, 2005 கூறியுள்ளவாறு அனைத்துப் பாடங்களும் மனித உரிமைக் கண்ணோட்டத்துடனும், சமூக ஈடுபாட்டை உருவாக்குவதாகவும் அமைய வேண்டும்.

8. மாணவர்களின் பன்முக வளர்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம் பாடத்திட்டமும், தேர்வுகளும், தரம் காணுதலும் EVALUATION அமைய வேண்டும். விளையாட்டு, ஓவியம், இசை, கைத்தொழில்கள் ஆகியவை அவசியமானதாகச் சேர்க்கப்பட்டு, மதிப்பெண்கள் தர வேண்டும்.

9. கற்பித்தல் முறைகள் மாணவர் மையமுடைதாக, குழந்தைகள் மகிழ்ச்சியான, அச்சுறுத்தலற்ற சூழலில், செயல் வழி கற்கும் வகுப்பறையாக இருக்க வேண்டும்.

10. சமமான தரமுடைய கல்வி என்றால் ஒரு பள்ளியில் இருக்க வேண்டுமென்று வகுக்கப்பட்டிருக்கும் அனைத்துத் தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தகைய NORMS AND STANDARDS பலவற்றில் விதிக்கப்பட்டிருக்கின்றன. உள்கட்டுமான வரையறைகள் ஒரு மாணவனுக்கான இடம், வகுப்பறை அமைப்பு, கழிப்பறைகள், தண்ணீர் வசதி, விளையாட்டுத் திடல் போன்றவை, ஆசிரியர், மாணவர் விகிதம், ஆசிரியர் தகுதிகள் போன்றவை தமிழ்நாடு தனியார் பள்ளி ஒழுங்காற்றுச் சட்டம், NIEPA நெறிமுறைகள், சம்பத் குழு அறிக்கை, கல்வி உரிமைச் சட்டம் போன்ற பலவற்றில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அனைத்துப் பள்ளிகளிலும், அரசு, சுயநிதி இரண்டிலும் இருக்க வேண்டும்.

11. அரசு பள்ளிகளில் தேவையான ஆசிரியர் நியமனம், ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர், ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்று நியமிக்க வேண்டும். சமச்சீரின்மையை உருவாக்கும் ஒன்று தனியார் பள்ளிகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் உண்டு, அரசு பள்ளிகளில் இல்லை. மாணவர் அரசு பள்ளிகளை விட்டு தனியார் பள்ளிகளுக்குச் செல்வதற்கு இது முக்கிய காரணம்.

12. ஆசிரியர் கல்வி ஒரு புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. ஆசிரியர் கல்வி இன்றை தேவைகளுக்கு ஏற்ற வண்ணம் முழுமையாக மாற்றப்பட வேண்டும். மனித நேயத்துடன், குழந்தைகளின் நண்பராக விளங்கும் ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் ஆசிரியர் கல்வித் திட்டம் விளங்க வேண்டும்.

13. மெட்ரிகுலேஷன், மற்ற பள்ளிகளில் தேவையான உள்கட்டுமானமோ, தகுதி பெற்ற ஆசிரியரோ பெரும்பாலான பள்ளிகளில் இல்லை. இது கண்டிப்பாக வலியுறுத்தப்பட வேண்டும். ஆசிரியர் பயிற்சி அற்ற ஆசிரியரைக் கொண்டு கற்றுத் தரல் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இப் பள்ளிகளுக்கு 1 அல்லது 2 ஆண்டுகளுக்குள் அனைத்துத் தகுதிகளும் இருக்க வேண்டும் என்று காலக்கெடு குறித்து, அவ்வாறு செய்யாத பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

14. பள்ளிகள் நன்கு நடைபெறத் தகுந்த கண்காணிப்புத் தேவை. அரசு பள்ளிகள் பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) முதற்கொண்டு, பல அதிகாரிகள் உள்ளனர். இப் பணியிடங்கள் பல காலியாக உள்ளன. தேவையான அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும். ஆயினும் கண்காணித்தல் சரியாக நடைபெறுவதில்லை. பல பள்ளிகளில், குறிப்பாக மலைப் பகுதிகள் போன்றவற்றில் இருக்கும் ஆசிரியர், பள்ளிகளுக்குக் குறித்த நேரத்தில் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. சமமின்மைக்கான இக் காரணம் களையப்பட வேண்டும்.

15. மெட்ரிக் பள்ளிகளைப் பொறுத்தவரை கண்காணித்தலே இல்லை என்று சொல்லலாம். சுமார் 3,600 பள்ளிகளுக்கு வெகு சில அதிகாரிகளே உள்ளனர். இப் பள்ளிகளும் அரசு பள்ளிகளுக்கான (CEO) முதலான அலுவலர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். இங்கும் சம நிலை வர வேண்டும்.

16. பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தைப் பொதுமைப்படுத்தும்போது 11,12 வகுப்புகளுக்கான பாடத்திட்டம் பெரும் சுமை கொண்டதாக உள்ளது. கல்லூரிகளில் கற்க வேண்டியதை பள்ளிகளில் திணிப்பது தரமான கல்வியல்ல. டியூஷன் வகுப்பிற்குச் செல்லாமல் இப் பாடத்திட்டத்தை மாணவர்களால் கற்க இயலவில்லை. இலவசக் கல்வி என்பதே இதனால் கேலிக் கூத்தாகிக்கொண்டிருக்கிறது. எங்குமில்லாத விந்தையான பள்ளிகள், 11, 12 வகுப்புகள் மட்டுமே உடைய பள்ளிகள் பெரும் கட்டணம் வசூலித்து, கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும்.

17. கல்வித் திட்டம், பாடத்திட்டம், பாட நூல்கள் தயாரிப்பில் வகுப்பறை கற்பித்தலில் ஈடுபட்டுள்ள, தற்போது பணிபுரியும் ஆசிரியர் பெரும் பங்கு பெற வேண்டும்.

18. தயாரிக்கப்பட்ட நகல் கலைத்திட்டமும், பாடத் திட்டமும் வலையில் போடப்பட்டு, வல்லுனர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இறுதி செய்யப்பட வேண்டும். பாட நூல்களைத் தயாரிப்பதிலும் அதே முறை பின்பற்றப்பட வேண்டும்.

19. உண்மையான சமச்சீர்க் கல்வி பொதுப்பள்ளிகள், அருகமைப் பள்ளிகள் வழியாக மட்டுமே நிறைவேற இயலும். அரசின் நிதிப் பொறுப்பில் நடக்கும், அனைத்துக் குழந்தைகளும் இலவசமாகக் கல்வி பெறும், ஒரு பள்ளியைச் சுற்றிய பகுதிலுள்ள அனைத்துக் குழந்தைகளும், ஏற்ற தாழ்வுகள், எளிய, பணக்காரர் என்ற பாகுபாடுகள் இன்றி, ஒன்றாகப் பயிலும் பள்ளிகள், உலகம் முழுவதும், குறிப்பாக வளர்ச்சியடைந்த அனைத்து நாடுகளிலும் உள்ள ஒரே வகைப்பட்ட அமைப்பு இங்கு வர வேண்டும். தனியார் பள்ளிகள் அனுமதிக்கப்படும், ஆனால், அவை உதவி பெறும் தனியார் பள்ளிகளாக இருக்கும். கோதாரி கமிஷன் பரிந்துரைத்த, நாடாளுமன்றத்தால் மூன்று முறை ஏற்றுக் கொள்ளப்பட்ட கல்வி முறை இது. தமிழக அரசு இந்த இலக்கைக் குறித்து செல்ல வேண்டும்.