இரண்டாம் உலக யுத்தம் உச்சத்தில் இருந்த சமயம், யுத்தத்திற்கு எதிராக லண்டன் வீதிகளில் பெரிய ஆர்ப்பாட்டத்திற்கும் ஊர்வலத்திற்கும் ஏற்பாடு செய்திருந்த நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் குழந்தைகளை பழையபடி விளையாட விடுங்கள்.. சண்டையை நிறுத்துங்கள் என்று அந்தக் கூட்டத்தில் முழங்கினார். இன்று நமது சமூகம் சண்டையை நிறுத்தியதோ இல்லையோ விளையாட்டிற்கு பெரிய தடை விதித்துள்ளது. பள்ளியில் வதங்கி பாடங்கள் மற்றும் அன்றாட சுமை எனும் எந்திரத்தில் சிக்கி, அறைக்கப்பட்டு நொந்து வீடு திரும்பும் ஒரு குழந்தையின் வாழ்க்கையைப் பாருங்கள்...

‘காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு

கனிபோல பிழியும் ஒரு பள்ளி

மாலை முழுதும் டியூசன் அப்புறம்

வீட்டுபாடமடிப் பாப்பா

என்று நடக்கும் இந்த மத்தியதர வர்க்கத்தின் பணம் சேர்க்கும் எதிர்காலம் பற்றிய பீதியுடன் கூடிய ஹிட்லர் முகாமின் வெறிக்கு ஒரு அளவில்லையா. பசங்க மாதிரி படத்தை பார்க்கும் இந்தக் கால சுட்டிக்குழந்தைகளுக்கு படத்தின் பல வித விளையாட்டுகள் புரியவில்லை என்பதை அறிந்தபோது பெரிய அதிர்ச்சி அடைந்தேன். கிட்டிப்புல் ஆட்டம், குதிரை தாண்டுவது, கோலி, சில்லு, பம்பரம் என எதையுமே வீதிகளில் காணக்கிடைப்பது இல்லை. பாண்டி யாடும் பெண்குழந்தைகள் பாட்டு, வீணை கிளாசுக்கும், மரம்ஏறி ஐஸ்பாய் ஆடும் பையன்கள் கராத்தே வகுப்பு களுக்கும் துரத்தப்பட்டு விட்டார்கள். ‘என்ன இருக்கு.. விளையாடி என்னத்த மெடலா வாங்கப்போற.. அதுக்கு உருப்படியா ஏதாவது செய்யலாம் இல்லயா’ என்று ஒரு குழந்தை ‘சும்மா’ இருக்கும் போதுகூட சர்டிபிகேட், கிரேடு, மெடல் வாங்குவதே எல்லாம் என்பதுபோல திணிக்கிறார்களே.. அதற்கும் சர்க்கஸில் சாட்டையால் விலங்குகளை பயிற்றுவிக்கும் சித்திரவதைக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா.

நாங்கள் எங்கள் போக்கில் வளர அனுமதிக்கப்பட்டதை தான் குழந்தை வளர்ப்பு என்பேன் என்கிறார் இரவீந்திரநாத் தாகூர். நாங்களாகவே எதில்வேண்டுமானாலும் எப்படி வேண்டு மானாலும் பொம்மைகள் செய்து விளையாடினோம். மண்ணு, ஓலை, கம்பு, வைக்கோல், தேங்காமட்டை, பனைவண்டி, ஆனால் எங்களில் ஒருவன் நகரத்தில் விலை கொடுத்து வாங்கிய பொம்மையோடு, ஒரு நாள் விளையாட வந்தபோதிலிருந்து எங்கள் விளையாட்டில் வர்த்தகம் புகுந்து விட்டது என்று தாகூர் எழுதுகிறார். அது எவ்வளவு பெரிய உண்மை. டெடிகரடி, பார்பி பொம்மை, ஹார்லிக்ஸ் வாங்கினால் ஹீமேன் இலவசம், பூஸ்டுக்கு ரஸ்லிங்மேனி புகழ் பாக்ஸி டாட்டு, அவர்களது இரத்தத்தை உறிஞ்சி கொழுக்கும் சர்வதேச வீடியோ கேம்ஸ் நிறுவனங்கள், பெரிய சந்தையாக பங்கு மார்க்கெட், உலகமயமாதல் எனும் பெரும் புயலில் நமது வீதிக்குழந்தையின் சிரிப்பொலியும் கும்மாளமும் கூட சத்தமின்றி நம்மிடமிருந்து சுரண்டப்பட்டு விட்டது என்பதை கவனங்கொள்ள நமக்கு அவகாசம் இல்லை.

கார்டூன், பே சானல், இணையம் என எங்கும் அவர்களை குறிவைத்து கொட்டப்படும் டிராகுலா முதல் ஸ்பைடர் மேன், மென்இன் பிளாக் என தொடரும் அமெரிக்க வன்முறை வெறியாட்டத்தின் மென் பொருள் விஷம் கோக்கோலா போலவே மத்தியதர வர்க்கத்தின் ஸ்டேடஸ் ஆகி குழந்தைகளின் சுதந்திர உணர்வுகளுக்குள் பண்பாட்டு ஆக்கிரமிப்பு செய்து குச்சிகிராப், காது கடுக்கன், பென்டன் வாட்சு என கவுரவ விலங்குகளை பூட்டியுள்ளது. பற்றாததற்கு இஞ்ஜீனீயர், டாக்டர், ஐ.ஏ.எஸ் என பெற்றோர் கனவு கட்டாய பாடமாகி ‘கோச்சிங்’ கிளாஸ் பொழுதுகளில் கழியும் அவர்களது மவுனம் ஒரு ஓலமாய் இச்சமூகம் முழுதும் காதை கிழித்தபடி ஒலித்துக் கொண்டே இருக்கிறது கல்வியாளர் ஜான்ஹோல்ட் சொல்வதைப்போல எங்கவீட்டு நாய்க்கு குட்டிக்கரணம் போடத் தெரியும் என்பதுபோல வீட்டிற்கு வரும் (வராத) உறவினர்களுக்கு தன் மகன் இப்படி அப்படி என கவுர பீத்தல்களுக்காக ஒரு செல்லப் பிராணிபோல் வளரும் குழந்தைகளே இன்றைய யதார்த்தம். எல்லா குழந்தைகளையும் அதிசய குழந்தைகளாய் குழந்தை உலகில் முதல் முறையாக விளம்பரப்படுத்த ஒருவெறி தொடர்ந்து சமூகத்தில் இயங்குவதன் விளைவு முழுக் குறளையும் ஒப்பிக்கும் நாலுவயது பிஞ்சுகள், 200 தலைநகரம் 63 கலைகள், 6000 ஊர் பேர் சொல்லுகின்றன நடக்காதமழலைகள். கின்னஸ் சாதனை பள்ளி, லிம்கா ரெக்கார்டு பல்துலக்கும் நர்சரி என குழந்தைகள் உலகில் அவர்கள் பேச்சு முதல் காலைக் கடன் வரை அனைத்தையும் வர்த்தகமாக்கும் வெறியைவிட கொடிய வன்முறைவேறு எதுவாக இருக்க முடியும்.

‘நான்மாடா உழைக்கிறேன்... நீ விளையாடப் போவியா’ என ஓடி விளையாட விடாத தந்தையர்களும், ‘நமக்கும் அந்த சித்தகத்திக்கும் ஒத்துகாதுனு தெரிஞ்சும் அவனோட பையன்கூட விளையாடுவாயா.. அங்கே விளையாடரதா இருந்தா என்னைய உயிரோட பார்க்கமுடியாது’ எனும் ரேஞ்சுக்கு கவுவர சச்சரவு வளர்த்து கூடி விளையாட விடாத அம்மாக்களுமே இன்று அதிகம்.

டயர் ஓட்டம், மாஞ்சா பட்டம், கபடியாட்டம், ஸ்கிப்பிங், சோழி, பல்லாங்குழி, தாயகட்டம், நொண்டியாட்டம், பேப்பந்து, பத்துகல்லு, சோடா சக்கரம், திருடன் போலீஸ், இவற்றுக்கு கணினி வழி வீடியோ கேம்ஸ், செல்போன் கேம்ஸ், மின் சர்க்யூட்டில் ஓடும் பிரிக் கேம் போன்றவை ஒருபோதும் மாற்றாக ஆகமுடியாது. கொலை கொலையா முந்திரிக்காயிலிருந்து ஒளிஞ்சாடுவது வரை யாவும் வெறும் விளையாட்டுகள் அல்ல. தோழமை, விட்டுக்கொடுத்து போவது, ஒருவருக்கு ஒருவர் பாராட்டி திறமையை அடையாளம் காண்பது, எல்லாவற்றிற்கும் மேலாக ரசிப்புத்தன்மை, சகிப்புத்தன்மை தோல்விகளை பக்குவமாய் எடுத்துக்கொள்ளும் இயல்பு, சுயநம்பிக்கை ஆகியன உள்ளிட்ட பள்ளிக்கூடத்தால் (வெறும் டிஜிட்டல் உலகத்தாலும்) கற்றுத்தர முடியாத பல அடிப்படைகளை வாழ்வில் சேர்க்கும் அற்புதங்கள். சிறுபேச்சுக்கும் வன்முறை, வீட்டில் கோவித்து ஓடுதல், தேர்வு தோல்விக்கு தற்கொலை, பிஞ்சில் பழுக்கும் காதல் யாவுமே இன்றைய சிறார்களின் அடையாளமாகிப் போனதற்கு விளையாட்டுகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டதே காரணம் என்பதில் சந்தேகமே இல்லை.

உறவு முறைகளை பேணுவதில் கூட இன்றைய குழந்தை நியாயத்தை அடிப்படையாக கருதாமல், லாபத்தை அடிப்படை அளவு கோலாய் கருதுவதுதான் உள்ளதிலேயே அதிகபட்ச சமூக அவலம் என்கிறார் அமெர்த்தியாசென். இயல்பு மழுங்கி விளையாட்டுகளிடமிருந்து தனிமைப் பட்டஇன்றைய குழந்தைகள், இருட்டை பார்த்து மட்டுமல்ல, பகல் வெளிச்சத்திலேயே வெளியேவர அஞ்சுகின்றனர். ஓபிசிட்டி எனும் அதீத எடை நோய் தாக்கியதன் பிஞ்சுகளையும் உடன் அழைத்துக்கொண்டு காலை நடைப்பயிற்சிக்கு கிளம்பும் இளசுகளை அதிகம் கொண்ட இன்றைய தமிழ் சமூகம் விளையாட்டை விளையாட்டாக கருதினால் இப்படி வினையில்தான் போய் முடியும்.