முப்பது கோடி முகமுடையாள் உயிர்

மெய்ப்புற ஒன்றுடையாள்

செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்.

என்றான் மகாகவி பாரதி.

ஆம் இந்தியா பல மொழிகளை, இனங்களை, கலாசாரங்களைக் கொண்ட நாடு. இவை அனைத்தையும் பாதுகாத்துக் கொண்டே கூட்டாட்சி தத்துவத்தின் மூலம் ஒன்றுபட்ட இந்தியாவாக நாம் அனைவரும் இந்தியனாக வாழவேண்டும் என்ற கோட்பாட்டில் தான் இந்திய அரசியல் சாசனமே 1950 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டாட்சி தத்துவத்திற்கு என்றுமே எதிராகத்தான் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், பி.ஜே.பி ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வந்துள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்னாள் அகண்ட பாரதம், ராமராஜ்ஜியம் என்ற பெயரில் திருவாளர் லால்கிஷன் அத்வானி தலைமையில் ரதயாத்திரை நடத்தப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட ரதயாத்திரையில் பல ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் (இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள்) படுகொலை செய்யப்பட்டனர். உயிரோடு எரிக்கப்பட்டனர். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். தற்போது, மீண்டும் நல்லவர்களைப் போல வேடம் தரித்து நியாயம் பேச கிளம்பிவிட்டார்கள்.

“நரி செத்தாலும் கண்ணு ரெண்டும் ஆட்டுமேல்” என்பார்களே. அது போலத்தான் இன்று பி.ஜே.பி க்கும். எல்.கே. அத்வானியின் ஊழலுக்கு எதிரான ரதயாத்திரைக்கும், மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி ஊழலில் தத்தளிக்கின்றது. 2ஜி ஸ்பெக்ட்ரம் 1,76,000 கோடி, எஸ் பேண்டு ஸ்பெக்ட்ரத்தில் 2 லட்சம் கோடி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 80 ஆயிரம் கோடி, ஆதர்ஷ் குடியிருப்பில் ஊழல் என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.           இச்சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள கூப்பாடு போடுகின்றனர் பி.ஜே.பி யினர். ஊழலுக்கு எதிராக முதலில் அன்னா ஹசாரேயை களம் இறக்கினார்கள். அன்னா ஹசாரே அவர்கள் முதலில் மோடி அரசை கைகாட்டி அரசு என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று சொன்னார். இந்தியாவில் 34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத மாநிலத்தை உதாரணம் சொல்லவில்லை. ஆனால் பிறகு ஹசாரே மோடிக்கு எதிராகவும், பி.ஜே.பிக்கு எதிராகவும் பேசியதும் அன்னா ஹசாரேவை ஜோக்கர் என வர்ணித்தினர். சாமியார் போர்வையில் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்த பாபா ராம்தேவை களம் இறக்கினார்கள். பாபா ராம்தேவும் டாம்பீகமாக சுமார் 20 கோடி ரூபாயில் ஏர்கூலர், மெத்தை, குளியலறை, கழிவறை என ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து, நாடகத்தைத் தொடங்கினார். அவர் தொடங்கிய அந்த நாடகம் ஒரு இரவு கூட தங்காமல் ஓடி மறைந்தது. பாபா ராம்தேவுக்கு எப்படி ஆயிரக்கணக்கான கோடி என ரெய்டு... இத்தியாதி ஏற்பாட்டின் மூலம் காங்கிரஸ் அரசாங்கம் அந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

ஊழலுக்கு எதிராக பி.ஜே.பி எடுத்த அஸ்திரங்கள் பலனளிக்கவில்லை. பிறகு இந்தியாவில் மத ஒற்றுமையை வலியுறுத்தி மோடி உண்ணாவிரதம் என்ற நாடகத்தை தொடங்கினார்கள் அதுவும் முழுமையாக, நாடகத்தை நடத்த முடியாமல் வேறுவழியின்றி பாதியிலேயே முடிக்க வேண்டியதாயிற்று. ஹசாரே, பாபா ராம் தேவ் போன்று ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் என பேசியவர்களெல்லாம் பேர் வாங்கும் நிலையில், அடுத்த பிரதமர் கனவில் உள்ள அத்வானிக்கு அச்சம் இயல்பாக ஆக்ரமித்துக்கொண்டது. எனவே எல்.கே அத்வானி தலைமையில் நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை என அத்வானி அஸ்திரத்தை எடுத்துள்ளனர்.

யார் இவர்கள்?

இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தேசப்பிதா என அனைவராலும் போற்றப்பட்ட, எளிமைக்கு இலக்கணமாய் திகழ்ந்த மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவின் வாரிசு தான் எல்.கே. அத்வானியும், பி.ஜே.பி யும் என்பதை நாடு மறக்காது.

நாட்டில் உள்ள ஏழை எளிய ஒடுக்கப்பட்ட சாதி இந்துக்கள் வறுமையில் வாடுகின்றனர். பொருளாதாரப் பிடிப்பு இல்லாமல் உள்ளனர்.இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மண்டல் கமிஷன் பரிந்துரையை திரு.வி.பி. சிங் அமல்படுத்த முயன்ற ஒரே காரணத்திற்காக நாடு முழுவதும் கலவரங்களை நடத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தவர்கள் தான் பி.ஜே.பி யினர் என்பதை நாடு மறக்காது.

1991ல் ராமர் கோவிலை கட்டுகிறோம் என்ற பெயரில் 450 ஆண்டுகால பழமையான பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கி உலக அளவில் இந்திய நாட்டிற்கு அவப் பெயரை தேடித்தந்தவர்கள். அது மட்டுமல்ல அதையொட்டி நாடு முழுவதும் பல ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்தவர்கள் பி.ஜே.பி யினர் என்பதை நாடு மறக்காது.

இவர்கள் தான்தற்போது ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை கிளம்பி இருக்கின்றனர்.

நேர்மையான கட்சியா பி.ஜே.பி

பி.ஜே.பி யின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் கொஞ்சமா? பி.ஜே.பி யின் அகில இந்திய தலைவராக இருந்த திரு. பங்காரு லட்சுமணன் கட்டுக் கட்டாக கரன்சி நோட்டுகளை லஞ்சமாக வாங்கியதை இந்திய நாட்டில் உள்ள அனைத்துத் தொலைக் காட்சிகளும் காட்டியது.

வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு இராணுவத் தளவாடங்களை வாங்குவற்காக ஆயுத கம்பெனிகளிடம் கோடி கோடியாக வாங்கியதை டெகல்கா டாட். காம் பத்திரிகை படம் பிடித்து காட்டியதை பார்த்து நாடே சிரித்தது. கார்கில் எல்லைப் பிரச்னையில் இந்திய நாட்டு ராணுவ வீரர்கள் சொந்த பந்தங்களை மறந்து, மனைவி மக்களை மறந்துமைனஸ் டிகிரிகுளிரில்எல்லையை பாதுகாக்கப் போராடியபோது “எரிகிற வீட்டில் பிடுங்கினவரை லாபம்” என்ற முறையில் இராணுவ வீரர்களுக்கு வாங்கிய காலணியிலும், சவப்பெட்டியிலும் கோடிக் கோடியாக கொள்ளை அடித்தது பி.ஜே.பி அரசு . இறந்து போன இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பில் பி.ஜே.பியும், காங்கிரசும் கூட்டுக் களவாணிகள் தானே.

பி.ஜே.பி ஆளக்கூடிய மாநிலங்களில் உள்ள கனிம வளங்களை தனிநபர்கள் கொள்ளையடிக்க அனுமதி கொடுத்தார்கள். நாட்டிலேயே கனிம வளம் அதிகமாக உள்ள மாநிலம் குஜராத். இரண்டு ஆண்டுகளே முதல்வராக இருந்த திரு. எடியூரப்பா அவர்கள் கோடி கணக்கான ரூபாய்களை சுருட்டியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் உள்ள கனிம வளமான சுரங்கத்தை தனது கூட்டாளிகளான ரெட்டி சகோதர்களுக்கு திருட்டுத்தனமாக கொடுத்ததற்கு எடியூரப்பாவிற்கு கிடைத்த சன்மானம் 15 ஆயிரம் கோடி ரூபாய். நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1. 25 லட்சம் கோடி அரசு குடியிருப்புகளை எல்லாம் தனது குடும்ப உறுப்பினர்களிடமும், உறவினர்களுக்கும் கொடுத்தது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இத்தகைய மக்கள் சொத்தை கொள்ளையடிக்கின்ற கட்சியான பி.ஜே.பி யின் தலைவர் தான் அத்வானி. அத்வானி தான் நாட்டில் ஊழலை ஒழிக்க கிளம்பி இருக்கிறார்.பி.ஜே.பிக்கும் , காங்கிரசுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் காங்கிரசும், பி.ஜே.பியும் என்பதை நாடு அறியும்.

ஊழலை ஒழிக்க என்ன செய்வது

ஆளக்கூடிய எந்த அரசாக இருந்தாலும் அந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான உழைப்பாளி மக்களின் நலனை பிரதிபலிக்கக் கூடிய அரசாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும். ஆனால் நம் நாட்டில் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் எந்த அரசாக இருந்தாலும் முதலாளிகளின் நலனை பாதுகாக்கக்கூடிய அரசாகவே உள்ளது. அதன் விளைவுகள் தான் ஊழல். குறிப்பாக 1991ல் அமல்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவு தான் இவ்வளவு பெரிய ஊழல். எனவே வரும் காலங்களில் இந்தப் பொருளாதார மாற்றத்தை குறிப்பாக உழைப்பாளி மக்களின் நலனை பாதுகாக்கக்கூடிய பொருளாதாரக் கொள்கையை யார் முன் வைக்கிறார்களோ அவர்களே உண்மையான மாற்றாகவும், ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்பவராகவும் இருப்பார்கள்.....