அன்பினாலும், இரைச்சல்களாலும் நிறைந்து கிடந்த நமது தெருக்கள் இப்போது வெறிச்சோடிக்கிடக்கின்றன. வண்ணங்களும், கனவுகளுமாய் விரிந்து கொண்டேயிருந்த உலகம் இப்போது சுருங்கி வருகிறது. எல்லைகளில்லாமல் ஒலித்துக்கொண்டிருந்த மழலைகளின் இசை, இன்று சுவர்களுக்குள் அடைபடுவதால் சுவடு தெரியாமல் நடந்து செல்கிறது வரலாறு. பின் மாலைப்பொழுதில், முற்றத்தில் நின்றுகொண்டு விரல் நீட்டி நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தவர்கள், இருட்டு அறையில் ஸ்டிக்கர் நட்சத்திரங்கள் மின்னுவதை பார்க்க காத்திருக்கிறார்கள். கற்பனைத் தோரணங்களால் மின்னிக்கொண்டிருந்த அவர்களின் உலகம் மின் காந்த அலைகளால் நிரப்பப்படுகிறது. என்னைப் பாருங்கள், என்னிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், என்னோடு மட்டுமே பேசுங்கள் என தன்னைத் தானே சுற்றிக்கொண்டே நம்மையும் சுற்றி வந்து கொண்டிருந்த பிரபஞ்சம் இப்போது நின்ற இடத்திலேயே இயக்கம் இல்லாமல் நின்று விடும் போலிருக்கிறது. ஆம்..., காட்சி ஊடகங்களால் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.

குழந்தைகளின் உலகிற்கு. மலட்டுத்தனமான பொய்களை தேசமெங்கும் விதைத்து மொட்டை மரமென நுகர்வு ஆசைகளை வளர்த்து இலாபம் மட்டுமே அறுவடை செய்யும் காட்சி ஊடகங்களின் விளம்பரங்களால் குழந்தையெனும் விளைநிலங்கள் பாலைகளாக மாறிவருகின்றன. விளம்பரங்களில் பொய்களை பயன்படுத்த வரம்புகளில்லா அனுமதியும், அளவில்லாத அங்கீகாரமும் வழங்கப்பட்டிருக்கும் இந்நாட்டின் எதிர்காலம் பொய்யர்களின் பெயரால் தீர்மானிக்கப்படும் அவலம் மெல்லத் துவங்கி இருக்கிறது.

என்ன பேசுவது, என்ன உடை உடுத்துவது, எதை சாப்பிடுவது, ஆண் எதை விரும்ப வேண்டும். பெண் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அனைத்தையும் தீர்மானிக்கும் காட்சி ஊடகங்கள், குழந்தைகள் அ, ஆவன்னா கற்றுக்கொள்ளும் முன்பே தாங்கள் தீர்மானித்ததை சொல்லிக்கொடுக்கத் துவங்கிவிடுகின்றன. பேசப்பழகும் குழந்தை டிவியில் இருந்துதான் அதிகமான வார்த்தைகளை காதில் கேட்கின்றன. கேட்கும் திறன் அறியத்துவங்கும் குழந்தைகள் டிவியின் இசை கேட்டே திரும்பிப் பார்க்கத் துவங்குகின்றன. இந்த சீரியல் டைட்டில் சாங் கேட்டால் போதும் எங்க இருந்தாலும் திரும்பிப் பார்ப்பான் என பெருமையோடு பேசும் தாய்க்கு அதன் விளைவுகள் அறிந்திருக்க நியாயம் இல்லை. முதல் மூன்று வயதுக்குள்ளேயே டிவி ரிமோட் மூலம் விளையாடத் துவங்கும் குழந்தைகள், பின்னர் டிவியை தன் முதல் நண்பனாக உணரத்துவங்கி இறுதியில் வழிகாட்டியாய் வாழத் துவங்கி விடுகிறது. சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டிய கதைகள் காணாமல் போய்விட்டன. டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது, தூங்குவது என ஒரு புதிய வாழ்க்கை முறை பழக்கமாக்கப்படுகிறது வீட்டினுள். எந்த தொந்தரவும் இல்லை என துவக்கத்தில் அனுமதிக்கும் பெற்றோர்கள் குழந்தை வீட்டுப்பாடம் செய்ய மறுக்கும் பருவத்தில் தான் டிவி நம் குழந்தையின் வாழ்வில் மறுக்க முடியாத அங்கீகாரம் பெற்றுள்ளது என உணரத்துவங்குகின்றனர். ஆனாலும், டிவி இல்லாத வீட்டை கற்பனை செய்வது பெற்றோர்களுக்கும் சாத்தியமில்லை என்பதால் மறுக்க முடியாமல் உடன்படுகின்றனர் அனைவரும்.

செய்திகள் தருவது என்ற சமூகத் தளத்தில் இருந்து பொழுதுபோக்கு என்ற தளத்திற்கு தாங்களாகவே மாறிக்கொண்ட காட்சி ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் கட்டியமைக்க விரும்பும் உலகை சிருஷ்டிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். அந்த உலகின் ஒரே மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டுமென்பதுதான் அவர்களின் விருப்பம். டிவியில் பார்ப்பதை நம்புவது, வாங்குவது, அதன் வழியே வாழ்வை தீர்மானிப்பது என்று மட்டுமே வாழ்க்கை முறை அமைந்தால்தான் வியாபாரம் பெருகிக் கொண்டேயிருக்கும் அவர்களுக்கு. கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் விளம்பரங்கள் மூலம் கோடி கோடியாய் வருமானமீட்டும் காட்சி ஊடகங்கள், தங்கள் இலக்கை குறி வைத்து மகளிர், குழந்தை என தனித்தனி நேரம் ஒதுக்கிய காலம் மாறிவிட்டது. இப்போது அவர்களின் முதல் இலக்கு குழந்தைகள் தான். குழந்தைகளுக்கு என தனி சானல் இன்று தமிழகத்தில் மட்டும் சுமார் 22 வரை 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டேயிருக்கிறது. இதில் அதிகம் தமிழ் சேனல்கள் தான். ஆங்கில நிகழ்ச்சிகளை தமிழாக்கம் செய்து ஒளி பரப்புவதும் மிகத் தாராளமாக நடைபெறுகின்றன.

குழந்தைகளிடையே மிகப் பிரபலமான ஆங்கில- தமிழ் மொழியாக்க நிகழ்ச்சிகளும் பல உண்டு. ஆக, ஒரு குழந்தை டிவிக்கும் தனக்குமான உறவை மிக நெருக்கமாக்கிக்கொள்ள வாய்ப்புகள் இங்கு மிக அதிகம். எந்தவொரு நாட்டிலும் இத்தனை குழந்தைகள் சானல் இருக்குமா என்றால் இல்லை என அழுத்தமாய் பதில் சொல்லிவிடலாம். இவை தவிர தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ள சுமார் 50 சானல்கள் தாராளமாய் 24 மணி நேரமும் ஒலிபரப்பாகிக்கொண்டே இருக்கின்றன. இதிலும் பல சானல்களை குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் சூழல் தற்போது பல வீடுகளிலும் சாதாரணமாக மாறிவிட்டது. போரடிக்கும் ஒவ்வொரு விநாடிக்கும் ஒவ்வொரு சானல் என கையில் ரிமோட் வைத்து மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தை சராசரியாக ஒரு வாரத்தில் என்னென்ன பார்க்க நேரிடுகிறது தெரியுமா?துப்பாக்கி கொண்டு சுடும் சுமார் 100 காட்சிகள், 100 முதல் 200 வரையான ஆபாசக் காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள், சுமார் 20 முதல் 30 வரையான பாலியல் காட்சிகள், சுமார் 25 முதல் 40 கொலைகள்,

எப்போதும் குழந்தை கேட்கும் அனைத்தையும் வாங்கித் தரும் விளம்பர பெற்றோர்கள் 100 பேர் இயல்பிற்கு புறம்பான சாகசங்கள் செய்யும் கதாபாத்திரங்கள், கேடு செய்யும் மந்திரவாதிகள், பேய், ஆவிகளின் பழிவாங்கும் செயல்கள், பேசும் பாம்பு போன்ற மூடநம்பிக்கைகள், இரட்டை அர்த்த வார்த்தைகள், பெண்ணை கேலி செய்தல், அப்பா-அம்மாவை இழிவு செய்தல், நண்பர்களோடு சேர்ந்து வம்புகள் செய்தல், பொய் சொல்லுதல், பிறரை துன்புறுத்தல் போன்றவை அடங்கிய நகைச்சுவைக் காட்சிகள். பணக்காரர் ஆவதற்காக எதையும் செய்யும் கதாபாத்திரங்கள் போன்றைவைதான் எப்போதும் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கின்றன. திரைப்படங்களை குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கையில் மட்டுமே அன்பு பெருகி வீடெங்கும் ஒடுவதாக எண்ணும் நம்மவர்கள் எந்தக் காட்சியையும் குழந்தையின் கண்களில் இருந்து மறைக்க இயலாது. மறைத்து விடலாம் என நாம் ரிமோட்டை தேடுகையில் குழந்தை நம்மைப் பார்த்து உதட்டோரம் சிரிக்குமே அதன் அர்த்தம் என்ன தெரியுமா? இத்தனை விளைவுகளுக்கும் காரணமான திரைப்படங்களை எந்த தடையும் இல்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதிப்பது மிக அபாயகரமான ஒன்றாகும். திரைப்படத்தில் வளர்ந்துவரும் ஆபாசம், வன்முறைகளை கட்டுப்படுத்த இயலாத அரசு அதை தொலைக்காட்சியிலும் அனுமதிப்பது ஒரு சமூக விரோதச் செயலாகும்.

அடுத்து விளம்பரங்கள் உருவாக்கும் உலகில் நடக்கும் அநீதிகளை பேசுவோம். ஒரு குழந்தை சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்தது 150 முதல் 200 தடவை விளம்பரங்களைப் பார்க்கின்றன. இதில் 20 முதல் 30 வகையான விளம்பரங்களே மீண்டும் மீண்டும் வருகின்றன. ஊட்டச்சத்து பானங்கள், சாக்லெட், பிஸ்கட்,நூடுல்ஸ், குலோப் ஜாம், கோக், -பெப்சி, சிப்ஸ், மிண்ட், பிஸ்ஸா போன்ற விளம்பரங்களே இதில் மிக அதிகம். விளம்பரத்தில் வரும் காட்சியில் மிக முக்கியமாக குழந்தைகள் மனதில் பதிவது இதை வாங்கித் தருவோரே சிறந்த பெற்றோர் என்பதுதான். சாக்லேட் பற்சொத்தையை உருவாக்கும் எனத் தெரியாத பெற்றோர் யாரும் இருக்க முடியாது. ஆனாலும், ஏன் வாங்கித் தருகிறார்கள்? ஒரு வேளை, கோல்கேட், குளோஸ் அப் மற்றும் பெப்சோடண்ட் தரும் நம்பிக்கையோ என்னவோ. அதை விடவும் உண்மையானது என்னவெனில், என் குழந்தைக்கு டிவியில் வரும் அனைத்தையும் வாங்கித்தரும் அப்பா, அம்மாவாக நான் இருப்பேன் எனப் பலர் சபதம் போட்டுத் திரிவதுதான்.

என்ன பிராண்ட் வேணும் என குழந்தைகள் கேட்பதை பலர் ரசிக்கிறார்கள். கடையில் நின்று கொண்டு டைரி மில்க் வேணுமா- மன்ச் வேணுமா என குழந்தையிடம் கேட்பதை மிக சந்தோசமாக நினைக்கிறார்கள் பலர். என்னமோ குழந்தை அறிவார்ந்து ஒன்றைக் கேட்பது போல் நினைந்து நெஞ்சுருகிப்போகும் பெற்றோர்கள் அதன் எதிர்கால விளைவை யோசிப்பதில்லை. குழந்தையின் மனதில் பிராண்டை பதிய வைக்க விளம்பரங்கள் கையாளும் வழிமுறைகள் பல மோசடியானது. சாக்லெட்டில் புதியதாக வந்துள்ள கிண்டர் ஜாயின் விலை ரூ.30, ஆனால் இதர சாக்லேட்டுகள் ரூ.5 முதலே கிடைக்கும். ஆக, கிண்டர் ஜாய் தன்னுடைய வரவை மிக நவீனமாக காட்டிக்கொள்ள விலை உயர்வையும் ஒரு காரணியாக காட்டிக்கொள்கிறார்கள். விலை உயர்ந்த பொருள்கள் கட்டாயம் தரம் உயர்வாக இருக்கும் என்பதும் ஏற்கனவே விளம்பரங்கள் உருவாக்கி வைத்த பிம்பங்கள் தானே.

இரண்டாவதாக முட்டை உருவத்திலான வடிவத்தை சாக்லேட் பாக்கெட்டிற்கு பயன்படுத்துவது. மூன்றாவது, கால்சியம் உள்ளதால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதென ஒரு வாசகம். போதாதா வியாபாரம் சூடு பிடிக்க. இன்று இந்தியாவின் குழந்தைகள் சந்தையில் மிக முக்கிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது இத்தாலியைச் சேர்ந்த கிண்டர் ஜாய். கிட் காட் மற்றும் மன்ச் ஆகியன நெஸ்டில் என்ற ஸ்விட்சர்லாந்து நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். இதன் இதர தயாரிப்புகளாக போலோ, நெஸ்டில் பால், ஜாஸ், மேகி என பல குழந்தைகளுக்கானதாகும். பெர்க், 5 ஸ்டார், டைரி மில்க் போன்ற சாக்லேட் அனைத்தும் காட்பெரி எனும் இங்கிலாந்து நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். எக்லேர்ஸ், டங் டிரிங்ஸ், ஜெம்ஸ், ஹால்ஸ், போர்ன்விடா, போர்ன்வில்லா, பப்பல்லோ பபுள் கம், ஆகியன இதன் இதர தயாரிப்புகள். சில நிறுவனங்கள் மட்டுமே குழந்தை சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இவர்கள் தங்களின் அனைத்து தயாரிப்புகளையும் குழந்தைகளிடம் விற்பனை செய்வதற்காக கையாளும் விளம்பர முறைகள் அனைத்தும் குழந்தைகளிடம் அறிவியல் பூர்வமற்ற பார்வையை ஏற்படுத்துவது மட்டுமல்ல, உடல்நலத்தையும் பாதிப்படையவே செய்கின்றன.

காம்பிளான் குடித்தால் வளர முடியாது என விளக்கங்களுடன் மக்களுக்கு முதலில் சொன்னது குடும்ப ஊட்ட சத்து பானம் என தன்னைக் கூறிக்கொள்ளும் ஹார்லிக்ஸ் தான். அதே போன்று ஹார்லிக்ஸில் சத்து என எதுவும் கிடையாதென அடித்துச் சொன்னது காம்பிளான் தான். கோக், -பெப்சி போட்டி விளம்பரங்களால் இரண்டும் உடல்நலத்துக்கு கேடு என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதைப் போன்று காம்பிளான், ஹார்லிக்ஸ் இரண்டும் மோசடியானது, உடல் நலத்துக்கு நல்லதல்ல என பரஸ்பரம் கூறிக்கொண்ட போதிலும் காட்சி ஊடகங்கள் இந்த விளம்பரங்களை இன்றளவும் ஏன் ஒளி பரப்புகின்றன? ஊடகங்களுக்கு குழந்தைகள் மீது அக்கறை உள்ளதா? காம்பிளான் ஒரு பிரிட்டிஷ் நிறுவனம். ஹார்லிக்ஸ் ஒரு லண்டன் நிறுவனம். சக்தியின் ரகசியம் என கபில்தேவ், டெண்டுல்கர், சேவாக், தோனி ஆகியோரால் கூறப்பட்ட பூஸ்ட் ஒரு லண்டன் நிறுவனமாகும். தற்போது குழந்தை மருத்துவர்களால் முன்மொழியப்படும் உலகின் நம்பர் ஒன் பிராண்ட் என அறிவு வளர்ச்சியை முன்மொழிந்து வந்துள்ள பீடியா ஸ்யூர் ஒரு அமெரிக்க நிறுவனமாகும். ஆக, சத்துள்ள எந்தப்பொருளும் தாய்மார்களுக்கு பரிந்துரைக்க இந்தியாவில் இல்லை போலும்.

பெற்றோர்களின் அன்பு, குழந்தைகளின் ஆரோக்கியம், குழந்தைகளுக்காக பரிசு வாங்கித்தருவது, மற்ற குழந்தைகளிடமிருந்து நம் குழந்தை தாழ்ந்து, தனிமைப்பட்டு போய்விடக்கூடாது என்ற பெற்றோர்களின் பாசத்தை மையமாக வைத்துத் தான் பெரும்பாலான பொருட்களின் விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன. பிரஷ், பேஸ்ட், காம்பிளான், சோப், ஷாம்பு, நூடுல்ஸ் என மாறிவிட்ட காலைப்பொழுதில் சுமார் ரூ.300 மாத செலவாகிவிடுகிறது ஒரு குழந்தைக்கு. ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி என சொல்லிக்கொடுத்த பள்ளிக்கூடங்கள் பிரஷ் கொண்டு டூத் தேய்க்கும் பேஸ்ட் விளம்பர பாடங்களை போதிக்கின்றன நவீனம் என்ற பேரில். குழந்தைகள் கைகளில் அழுக்கு அதிகம் இருக்கும். எனவே, சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் டெட்டால் போட்டு சுத்தப்படுத்துங்கள். வீட்டின் தரையிலும் அழுக்கு இருப்பதால் டெட்டால் கொண்டு கழுவித் துடைப்பவளே அன்புள்ள தாயாகிறாள்.

பாத்திரங்கள் கழுவுவதிலும், துணிகளைத் துவக்கையிலும் உங்களுக்கு கவனம் அதிகம் தேவை, இல்லையெனில் பாதிப்பு குழந்தைகளுக்குத் தானாம். சுத்தம் சுத்தம், ஆரோக்கியம் என எத்தனையெத்தனை விளம்பரங்கள். திடீரென ஒரு நாள் பள்ளி சென்ற குழந்தைகளிடம் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் உப்பில் அயோடின் உள்ளதா என பரிசோதிக்க ஒரு கொத்து உப்பை கொடுத்து விடுங்கள் என ஒரு சுற்றறிக்கை கொடுத்து அனுப்பினார்கள். அயோடின் இல்லையெனில் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பாதிக்குமென விளம்பரமும் அதே நேரம் டிவியில் வந்தது. விளைவு, கடைக்கு வெளியே மூட்டையாக திறந்தே வைக்கப்பட்டிருந்த உப்பு காணாமல் போனது. வண்ண நிறங்களில் அமெரிக்க நிறுவனத்திலிருந்து உப்புத்தூள் வந்திறங்கியது. இதே போன்று, குடிநீர் பற்றி பேசிப்பேசி இன்று சுடவைத்த குடிநீர் என்பதற்கு மாறாக விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டனர். வாழ்க்கையின் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் ஒரு பயத்தை எழுப்பி, அதன் முன் உங்கள் குழந்தையை நிறுத்தி, எனவே ஆரோக்கிய வாழ்விற்கு வாங்குவீர்....... இது தான் காட்சி ஊடகங்களின் இன்றைய சேவை.

தரமான குடிநீர், சுகாதாரமான வாழ்வு முறை, சுற்றுச் சூழல் பராமரிப்பு, கல்விச்சூழல், கல்வித்தரம், குழந்தையின் கல்வி மனநிலை என எந்த ஒரு பொருளைப் பேசினாலும் விளம்பரத்தை மட்டுமே முன்நிறுத்தும் இந்த பேரழிவு வாதங்கள் நாடு முழுக்க உள்ள அனைத்து குடும்பங்களிலும் உள்ள பணத்தை சில பெரு முதலைகளின் வாயில் போட்டு மெல்ல வைக்கும் வேலையை மட்டுமே செய்கின்றன. எந்த ஒரு பொருளிலும் அரசின் பங்கு, பொது மக்களின் பங்கு என எதையும் பேச மறுக்கும் காட்சி ஊடகங்களை ஊடகங்களின் பட்டியலில் இருந்து முதலில் நீக்கவேண்டும். திரைப்பட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒலிபரப்புகையில் கால ஒதுக்கீடு செய்து வரைமுறைகளை உருவாக்கிட வேண்டும். குழந்தை விளம்பரங்களை முழுமையாக தடை செய்வதோடு மட்டுமல்லாமல், எந்த ஒரு பொருளுக்கும் மக்களிடையே பயத்தை உருவாக்கும் விளம்பரங்களை தயாரிக்கக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும். குறிப்பாக குழந்தை சானல்கள் அனைத்தையும் தடை செய்வதோடு, இதர சானல்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே முழு தணிக்கையோடு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பிட வேண்டும். அதில் கல்வி நோக்கம் மட்டுமே இருந்திட வேண்டும்.