உள்ளாட்சி அமைப்புகள் இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்திருத்தங்கள் 73 மற்றும் 74வது மூலமாக அதிகாரமிக்க அமைப்பாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறையும் முறையாக தொடர்ச்சியாக தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக உள்ளாட்சி தேர்தல் என்பது நடத்தப்படாமல் இருந்து வந்தது.

தற்சமயம் 1996 முதல் 2011 உள்ளாட்சி தேர்தல் வரை நான்கு தடவை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்றம், சட்டமன்றம் அடுத்தபடியாக மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி செய்யும் இடமாக இம்மன்றங்கள் உள்ளது. உள்ளாட்சி மன்றங்கள் தான் மக்களுக்கு சேவை செய்யும் மிக நெருக்கமான இடங்களாகும்.

ஜனநாயகத்தை நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்ல அதிகாரத்தை பரவலாக்குவது அவசியமாகும். அதிகாரத்தை பரவலாக்கிட இந்தியா போன்ற பெரும் ஜனத்தொகை கொண்ட நாட்டில் உள்ளாட்சி மன்றங்கள் மிக முக்கிய கருவியாகும்.

அதிமுக விற்கு பெரும் வெற்றியை அளித்துள்ள இத்தேர்தல் முடிவிற்கு காரணம் கடந்த கால திமுக ஆட்சியின் வெறுப்பு இன்னமும் மக்கள் மத்தியில் மிக ஆழமாக பதிந்துள்ளதே ஆகும். தலைநகர் முதல் குமரி முனை வரை தலைமை துவங்கி கடைசி உடன் பிறப்பு வரை உள்ளாட்சிகளில் செய்த அக்கிரமங்கள் தான் அவை. கட்டட வரைபட அனுமதி துவங்கி மக்களின் அடிப்படைத் தேவையான சாலை, சாக்கடை, குடிநீர் கல்வி சுகாதாரம் என அனைத்து இடங்களிலும் உள்ளாட்சிகளில் கழகக் கண்மணிகளின் கமிஷன் ஆட்சியே நடைபெற்றது. அத்தோடு மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படவில்லை. செய்த பணிகளின் தரம் பற்றி எழுதத் தேவையான காகிதம் செய்வதற்கு தமிழகத்தின் காடுகளில் உள்ள மரம் போதாது.

உள்ளாட்சி அமைப்புகள் செய்யும் முக்கிய பணிகள்

1.குடிநீர், 2.சாக்கடை, 3.சாலை, 4.தெருவிளக்கு, 5.கட்டட வரைபட அனுமதி, 6.கல்வி, 7.சுகாதாரம், 8.சான்றிதழ் வழங்குவது போன்றவையாகும். 1.வீட்டுவரி, 2.தண்ணீர் வரி, 3.காலிமனை வரி போன்ற வரிகளை வசூலித்தும் மத்திய, -மாநில அரசுகள் தரும் நிதியின் மூலமாகவும் இப்பணிகளை நிறைவேற்றி வருகிறது.

கிராம ஊராட்சி

கிராம ஊராட்சி தலைவருக்கு யாருக்கும் இல்லாத சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில் காசோலையில் கையெழுத்திடும் உரிமையாகும். கிராம ஊராட்சியில் மூன்று விதமாக வங்கி கணக்குகளை அரசின் வழிகாட்டுதலோடு பராமரித்து வருகின்றனர். ஊராட்சியிலோ ஊராட்சிக்கு அருகிலேயோ உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இக்கணக்குகள் துவக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இக்கணக்குகளை தலைவர் மற்றும் துணைத் தலைவர் இணைந்து கையெழுத்திட்டு இயக்கி வரலாம். கிராம ஊராட்சிக்கு வரவினம் மற்றும் மத்திய, -மாநில அரசுகளின் திட்டம் சிறப்பு நிதி ஆகியவற்றை இக்கணக்கில் வைக்கின்றனர். பின்னர் கிராம சபை கிராம ஊராட்சிக் கூட்டத் தீர்மானம் அடிப்படையில் மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்ற பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் கிராமப்புற மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகளை நிறைவேற்றுவதற்கு தற்சமயம் உள்ள நிதி வரவினம் என்பது பொதுவாக மோசமாகவே உள்ளது.

ஊராட்சிகள் குடிநீர், சுகாதாரம், சாலை, சாக்கடை தெருவிளக்கு நிறைவேற்றிட வருமானம் இல்லாமல் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. மத்திய-மாநில அரசுகளின் நிதியை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். ஆனால் மத்திய, -மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கும் நிதியளவு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே தமிழகத்தில் உள்ளது. கேரளா, மேற்குவங்கம் 30 சதவீதத்திற்கும் மேலான நிதியை ஒதுக்குகின்றனர். மாவட்ட ஊராட்சிக்கு தனிப்பட்ட சொந்த வருமானம் கிடையாது. மத்திய, -மாநில அரசுகளின் நிதி கிடைத்தால் மட்டுமே மாவட்ட ஊராட்சிகள் பணியினை திட்டமிட முடியும். அதே போன்றே ஊராட்சி ஒன்றியங்களும் நிதி கிடைத்தால் மட்டுமே பணியினை செய்ய முடியும். ஊராட்சி ஒன்றியங்கள் பள்ளிக்கூடங்களில் கட்டட பராமரிப்பு பொறுப்பை தன்வசம் கொண்டுள்ளது. இப்பராமரிப்பு பணிகளுக்குக் கூட பணம் இல்லாமல் மோசமான நிலைமையில் பல பள்ளிக் கட்டடங்கள் உள்ளன. சொந்த பொறுப்பில் ஏதேனும் வணிக வளாகங்கள் இருந்தால் மட்டுமே இதற்கு வருமானம் கிட்டும். மாவட்ட ஊராட்சியும் ஊராட்சி ஒன்றியங்களும் தமிழகத்தில் கிட்டத்தட்ட அதிகாரம் ஏதுமற்ற அலங்கார பொம்மைகளாகவே உள்ளன. மாவட்ட வளர்ச்சி குறித்து திட்டமிடுதலை மாவட்ட ஊராட்சியோ ஊராட்சி ஒன்றியம் முன்னேற்றம் குறித்த முயற்சியை ஊராட்சி ஒன்றியமோ செய்வதற்கு அதிகாரமோ நிதியோ இல்லை. இந்நிலையை மாற்றி மாவட்ட திட்டக்குழுவை போல மாவட்ட ஊராட்சியையும் கொண்டு வந்து அதிகாரம் அளித்திடுவது உள்ளாட்சியில் ஜனநாயகத்தை வளர்த்திட உதவிடும்.

மாநகராட்சி

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சட்டத்தின்படி இம்மன்றங்களின் செயல்பாடு என்பது அமையும். வளர்ந்து வரும் நகரமயமாக்கல் காரணமாக மக்கள் நகரங்களை அண்டிப் பிழைக்க வேண்டிய நிலைமையை மத்திய, -மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கியுள்ளன. இதனால் நாள் தோறும் நகர்ப்புறங்களில் குடியேறும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நகரங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் என்பது தரமான போதுமான அளவு கிடைப்பதில் பெரும் இடைவெளி உள்ளது. ஒரு தனி மனிதனுக்கு குறைந்தபட்சம் நல்ல குடிநீர் 160 லிட்டர் அளிக்கப்பட வேண்டும். ஆனால் 70 லிட்டர் கூட மாநகராட்சிகளில் தற்சமயம் தரப்படவில்லை.

சுகாதாரம்: சாக்கடையை பராமரிப்பது பாதாள சாக்கடைகளை உருவாக்குவது குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளுக்கு போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படுவதில்லை. இப்பிரச்சனைகளை கண்டு கொள்ளவில்லை. கட்டட வரைபட அனுமதி தொழிற்சாலை களுக்கு அனுமதி தருவது, ரியல் எஸ்டேட் போன்ற நிலம் சார்ந்த அனுமதிகளில் ஏராளமான முறைகேடுகள் உள்ளாட்சி மன்றங்களில் நடைபெறுகிறது. சந்தை மதிப்பிற்கும் உள்ளாட்சி மன்றங்களில் விதிக்கப்படும் வரி அளவிற்கும் மிகப்பெரிய மாறுபாடு உள்ளது. இதற்கு காரணம் உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கமிஷனைப் பொருத்தே இதன் மாறுபாடு கூடுவதும் குறைவதுமாக உள்ளது.

இதனால் மக்கள் செலுத்தக்கூடிய வரியும் அரசின் திட்ட பணமும் பெருமளவு கொள்ளையடிக்கப்படுவதோடு, ஊழலும் தலைவிரித்தாடுகிறது. நிறைவேற்றப்படுகின்ற பணிகள் மிக மோசமான அளவிற்கு தரமற்றதாக இருக்கின்றது. ஒரே பணியை இதனால் மீண்டும் மீண்டும் உள்ளாட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றது. இக்காரணத்தால் மக்களின் பணம் விரயமாவதோடு ஊழலும் ஒழுங்கீனமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உள்ளாட்சியில் பெண்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி மேயரில் 10ல் 6 பேர் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சிறப்பான அம்சமாகும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை உரிய முறையில் அதற்குரிய அதிகாரங்களோடு பணியாற்ற வைப்பது அரசின் கடமையாகும். சாதி ரீதியாகவோ சமூக ரீதியாகவோ தடைகள் ஏற்படாமல் பெண்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் உள்ளாட்சி அதிகாரத்தை தகுந்த முறையில் நிறைவேற்றிட பயிற்சியும் பாதுகாப்பும் செய்திடுவதின் மூலமாக உள்ளாட்சியை ஜனநாயகப்படுத்தி சமூகத்தை மேம்படுத்திட வேண்டும்.

ஆளும் கட்சி பெருவாரியான இடங்களை பெற்றுள்ளதால் உள்ளாட்சி மன்றங்களை முறையாக நடத்திடும் முழுப் பொறுப்பும் அதிமுகவுக்கே உள்ளது. எதிர்க் கட்சிகள் சிறிய எண்ணிக்கையில் இருக்கின்ற போதும் அவர்களின் விவாதத்திற்கு உரிய பதிலும் நடவடிக்கைகளும் எடுப்பது அவசியமாகும். எதிர்க் கட்சிகளுக்கு பங்கேற்க வாய்ப்பு கிடைக்காத மன்றங்களில் ஆளும் கட்சியே எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டிய கடமை ஆகும். எனவே தற்சமயம் அமோக வெற்றி பெற்றுள்ள அதிமுக அரசு கடந்த ஆட்சியைப் போலவே செயல்படாமல் கடந்த காலத்தில் செய்யப்படாமல் உள்ள ஏராளமான அடிப்படை பணிகளை வருங்காலத்தில் செய்திடுவதே மக்கள் அளித்தத் தீர்ப்பிற்கு தரும் மரியாதையாகும்.