தமிழகத்தில் உள்ள 9 சதவிகித வனப்பரப்பில் கண்ணுக்கும் மனதுக்கும் இதமாக உள்ள பறவைகள் 60 குடும்பங்களில் 350 எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மழைக்கால ஆரம்பத்தில் நமது சூழலை விரும்பி நீர் நிலைகளை நாடி விருந்தாளிகளாக வரும் பறவைகள் சில லட்சத்தை தொடும். உள்ளுர் விருந்தாளிகளாக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பறவைகளும் இதில் அடங்கும்.

அந்த வகையில் நீர் நிலைகளில் காணப்படும் கொக்குகள், நாரைகள், நீர்க்காகங்கள் யாவும் உள்ளூர் பறவைகளே.பலவித வாத்துகள், உள்ளான்கள், பவழக்காலிகள், ஆலாக்கள் போன்றவை இலங்கை, மியான்மர், பாகிஸ்தான், சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றன.

தமிழகத்தில் 12 முக்கிய நீராதாரங்களில் பறவைகள் வந்து செல்வதை கணக்கில் கொண்டு பறவைகள் சரணாலயங்களாக அறிவித்து பராமரித்து வருகிறது மத்திய அரசு.

1. பழவேற்காடு பறவைகள் சரணாலயம்

2. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

3. கரிக்கிலி பறவைகள் சரணாலயம்

4. கரைவெட்டி பறவைகள் சரணாலயம்

5. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்

6. வடுவூர் பறவைகள் சரணாலயம்

7. சித்திரன்குடி பறவைகள் சரணாலயம்

8. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

9. மேல்வல்வனூர் + கீழ்செல்வனூர் பறவைகள் சரணாலயம்

10. கஞ்சிரன்குளம் பறவைகள் சரணாலயம்

11. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்

12. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

மேற்கண்ட சரணாலயங்கள் தவிர ஏரி, குளங்கள், ஆறுகள், நீர்நிலைகளையும் பலவித நீர்ப்பறவைகள் வசிப்பிடமாகக் கொள்வதைக் காணலாம்.

பழவேற்காடு பறவைகள் சரணாலயம் 

தமிழக, ஆந்திர கடற்கரையோரத்தில் 481 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. பழவேற்காடு பறவைகள் சரணாலயம். 153.67 சதுர கி.மீ தமிழக எல்லைக்குட்பட்டது. 800 முதல் 2000 மி.மீ வரை ஆண்டு தோறும் மழை வளம் பெறும் பழவேற்காடு பூ நாரைகளுக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது. ஒரிசாவில் அமைந்துள்ள சில்கா ஏரிக்கு அடுத்து அதிகப்படியான பூ நாரைகள் வரும் இடம் பழவேற்காடு. 

பூ நாரைகளோடு, உள்ளான்கள், பட்டைத்தலை வாத்து உள்ளிட்ட பலவித வாத்து வகைகள். பவழக்காலிகள், ஆலாக்கள் என ஆயிரக்கணக்கில் வலசை பறவைகள் வந்து செல்கின்றன. இவை தவிர கொக்குகள், நாரைகள், கரண்டி வாயன் உள்ளிட்ட பறவைகளும் வந்து செல்கின்றன. 

160 விதமான பறவைகள் வந்து செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 90 கி.மீ தொலைவிலும், பொன்னேரியில் இருந்து 19 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது சரணாலயம். பார்வையாளர்கள் வந்து செல்ல நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் ஏற்ற காலமாகும். 

வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 

77.185 ஏக்கர் பரப்பில் ஈரோடு மாவட்டத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இங்கு, மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவை இனங்களை காணலாம். நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் பார்வையாளர்கள் வந்து செல்ல ஏற்ற காலமாகும். 

கரிக்கிலி பறவைகள் சரணாலயம் 

சென்னையில் இருந்து 86 கி.மீ தொலைவில் மதுராந்தகம் தாலுகாவில் 61.21 ஏக்கர் பரப்பில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. செப்டம்பர் மாத துவக்கத்தில் ஆரம்பிக்கும் பருவம் மார்ச், ஏப்ரல் வரை பறவைகள் இங்கு இருக்க காணலாம். வாத்து வகைகளுக்கும், உப்புக் கொத்திகளுக்கும் ஏற்ற உறைவிடமாக உள்ளது. ஊசிவால் வாத்து, தட்டை வாயன், முக்குளிப்பான், புள்ளிமூக்கு வாத்து ஊசிவால் வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக்கொக்கு, சின்னக்கொக்கு போன்ற பறவை இனங்களை காணலாம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலம் பார்வையாளர்களுக்கு ஏற்ற காலமாகும். 

கரைவெட்டி பறவைகள் சரணாலயம் 

தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் 454 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது தான் கரைவெட்டி பறவைகள் சரணாலயம். திருச்சியில் இருந்து 50 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 35 கி.மீ தூரத்திலும் கரைவெட்டி அமைந்துள்ளது. மிக அருகாமை நகரமாக அரியலூர் 12 கி.மீ தொலைவில் உள்ளது. 321 ஏக்கர் சரணாலயமாக உள்ள கரைவெட்டியில் நவம்பர் முதல் மே மாதம் வரை பறவைகள் வந்து செல்லும் காலமாகும். ஆண்டிற்கு 800 முதல் 2000 மி.மீ வரை மழை பொழிகிறது.90 வகையான நீர்ப்பறவைகளும், 100 வகையான வாழிடப் பறவைகளும், ஒட்டு மொத்தமாக 188 பறவை இனங்களும் இங்கு வந்து செல்வது கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 16 வகையான வாத்துக்களும் அடங்கும்.பட்டைத் தலை வாத்து, செங்கால் நாரை, கூழைக்கடா, விரால் அடிப்பாள், பொரி வல்லூறு, ஆளிப் பருந்து, சேற்றும் பூனைப் பருந்து போன்ற பறவைகளை இங்கு காணலாம்.கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிகபட்சமாக 50,000 பறவைகள் ஓராண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்கள் பறவைகளை பார்க்க ஏற்ற காலமாகும். 

உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம் 

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் 1999 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. திருவாரூரில் இருந்து 65 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 68 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. உதயமார்த்தாண்டபுரம் சரணாலயத்திற்கு நீர் ஆதாரமாக மேட்டுர் அணையின் நீரே உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் சரணாலயம் அமைந்துள்ளது.ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வறண்டு இருக்கும் சரணாலயம் ஆகஸ்ட், டிசம்பர் மாதம் வரை பறவைகளின் வருகையால் அழகு மிளிர்ந்து காணப்படும்.சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை குத்து நாரை, வாக்கா போன்ற பறவை இனங்களில் அதிகளவாக நத்தை குத்தி நாரைகள் காணப்படுகிறது. அதிகபட்சமாக 10,000 பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் சுற்றிப்பார்க்க ஏற்ற காலமாகும். 

வடுவூர் பறவைகள் சரணாலயம் 

1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வடுவூர் பறவைகள் சரணாலயம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்த வடுவூர் 40 விதமான நீர்ப் பறவைகளால் காண்போரை கவர்ந்திருக்கிறது. நவம்பர் மாத வாக்கில் 20,000 பறவை இங்கு குவிந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டில் துவங்கி டிசம்பர், ஜனவரி முடிய பறவைகள் வந்து செல்லும்.பறவைகளைக் காண நவம்பர், டிசம்பர் மாதங்களில் இங்கு வரலாம். வெள்ளை அரிவாள் மூக்கன், கூழைக்கடா, நீர்க்காகங்கள், கிறவை, ஊசிவால் வாத்து, நாரை என பலவித பறவைகள் இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. 

சித்திரன்குடி பறவைகள் சரணாலயம் 

இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகாவில் பலவித வண்ணப் பறவைகளால் எழிலுடன் காட்சி தரும் சித்திரன்குடி பறவைகள் சரணாலயம் 1989 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 47.63 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள சித்திரன்குடியில் கூழைக்கடா நத்தைகுத்தி நாரை, சின்ன, பெரிய கொக்கு, குருட்டுக்கொக்கு, நாரைகளை காணலாம்.பறவைகளை காண ஜனவரி ஏற்ற மாதமாகும். 12. கி.மீ தொலைவில் சாயல்குடி அமைந்துள்ளது. இராமநாதபுரத்தில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது. 

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் 

திருநெல்வேலியில் இருந்து 33 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கூந்தன்குளம் 1994 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. கூந்தன்குளம், காடன் குளம் என இயற்கையாக அமைந்துள்ள பகுதிகளில் 129.33 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள பறவைகள் புகலிடத்தில் பூ நாரைகளின் வரவு அழகு சேர்க்கிறது. கூந்தன் குளம் கிராம மக்களின் பாதுகாப்பில் பறவைகள் யாவும் மனிதர் பயம் இன்றி அனைத்து வீடுகளிலும் கூடு கட்டுவது சிறப்பம்சமாகும். 

43 வகையான நீர்ப்பறவைகள் இங்கு வருவது கணக்கிடப்பட்டுள்ளது. செந்நிற நீண்ட கால்களையும், மெல்லியதாக நீண்டு வளைந்த கழுத்தையும், ரோஜா வண்ணத்தையும் ஒத்த பூ நாரைகள் தவிர சைபீரியா பகுதியில் இருந்து நாரை, மஞ்சள் மூக்கு நாரை, மூன்று வித கொக்குகள் கரண்டி வாயள், வாத்து வகைகள் என வண்ணக்கலவையாக கூந்தன்குளத்திற்கு அழகு சேர்க்கிறது.ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 1 லட்சம் பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. அருகாமை நகரமாக நாசரேத் 15 கி.மீ தொலைவில் உள்ளது. நவம்பர், டிசம்பர் வருகை புரிய தொடங்கும் பறவைகள் மே மாத வாக்கில் தங்கள் இருப்பிடத்திற்கு திருப்பிச் செல்கின்றன. பறவைகளை பார்க்க ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் ஏற்ற காலமாகும். 

மேல்செல்வனூர் - கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம் 

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் அமைந்துள்ள மேல்- + கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம் தமிழகத்தின் பெரிய பறவைகள் சரணாயலமாகும். 593.08 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள பறவைகள் புகலிடம் 1998 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. கொக்குகள், கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் உட்பட இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. சாயல்குடியில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், கடலாடியில் இருந்து 15 கி.மீ தூரத்திலும் இராமநாதபுரத்திலிருந்து 45 கி.மீ தூரத்திலும் இப்பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. 

கஞ்சிரன்குளம் பறவைகள் சரணாலயம் 

170 பறவை இனங்களுக்கு வாழ்விடமாக உள்ள கஞ்சிரன்குளம் 1989ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 66.66 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள சரணாலயத்தில் மஞ்சள்மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், சின்ன, பெரிய கொக்கு என பலவித பறவை இனங்கள் வாழ்கின்றன.முதுகுளத்தூரில் இருந்து 8 கி.மீ தொலைவிலும், மதுரையில் இருந்து 117 கி.மீ தொலைவிலும் கஞ்சிரன்குளம் அமைந்துள்ளது. 

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் 

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே பறவைகள் சரணாலயம் வேட்டங்குடியாகும். 38.4 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள வேட்டங்குடி ஜூன் 1977 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள வேட்டங்குடியில் நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, வக்கா, பாம்புத்தாரா, கரண்டி வாயன் போன்ற பறவை இனங்கள் கூடுகட்டி குஞ்சு பொரிக்கின்றன. காரைக் குடியில் இருந்து 32 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 

நாட்டின் பழமையான பறவைகள் சரணாலயங்களில் வேடந்தாங்கலும் ஒன்று. 250 ஆண்டுகளாக கிராம மக்களின் பாதுகாப்பில் பறவைகளின் வாழ்விடமாக வேடந்தாங்கல் உள்ளது. சென்னையில் இருந்து 75 கி.மீ தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து 30 கி.மீ தூரத்திலும் வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயம் அமைந்துள்ளது. அக்டோபர் மாத மத்திய வாக்கில் வரத் தொடங்கும் பறவைகள் ஏப்ரல் மாத இறுதியில்தான் தங்களது இருப்பிடத்திற்கே திரும்பிச் செல்கின்றன. ஆண்டின் அதிகபட்ச அளவாக 40000 முதல் 50000 வரையிலான பறவைகளை ஜனவரி மாதத்தில் வேடந்தாங்கலில் காணமுடியும். 

115 விதமான பறவைகள் வருகை புரியும் இங்கு.தமிழ்சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற ‘அன்றில்’ என்ற அழகிய பறவை இனம், இன்று அரிவாள் மூக்கன் என்று பறவையியலாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. வேடந்தாங்களில் மூன்று வித அரிவாள் மூக்கன்களை காணலாம். 1. வெள்ளை அரிவாள் மூக்கன், 2. பழுப்பு நிற அரிவாள் மூக்கன், 3. கருப்பு அரிவாள் மூக்கன். இவை தவிர கொக்குகள், நாரைகள், ஊசிவால் வாத்து, நீர்க்கோழி, புள்ளி மூக்கு வாத்து போன்ற எண்ணற்ற பறவைகளை வேடந்தாங்கலில் காணலாம். மீன்கொத்தி, வால் காக்கை, சின்னான், புள்ளி ஆந்தை, கதிர்க்குருவி, மண்கொத்தி, குக்குறுவாள்கள், என வாழிட பறவைகளையும் காணலாம்,1960 களில் உள்ளான்கள், ஆற்று ஆலாக்கள், பருந்து வகைகள் காணப்பட்டதாகவும், கூழைகடாக்கள் ஒரு சிலவற்றையே கண்டதாக சூழலியலாளகும் ஒளிப்படக் கலைஞருமான மா. கிருஷ்ணன் தனது பறவைகளும், வேடந்தாங்கலும் நூலில் பதிவு செய்துள்ளார். 

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக உள்ளான்கள், ஆலாக்கள் பருந்துகளை கண்டதாக எந்தப் பதிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேடந்தாங்கலில் கூழைக்கடாக்கள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. சில பறவைகளின் வரத்து நின்றுவிடுவதும், சில பறவைகளின் வரவு அதிகரிப்பதற்குண்டான ஆய்வுகள் அவசியம்.ஆண்டுதோறும் 1200 மி.மீ மழை பெய்யும் வேடந்தாங்கல் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் பார்வையாளர்கள் வந்து செல்ல ஏற்ற நாட்களாகும். தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

தமிழகத்தில் பறவைகள் சரணாலயங்கள் தவிர. ஆயிரக்கணக்கான குளங்கள், ஏரிகள், நீர்நிலைகள் காணப்படுகின்றன. அவையாவற்றிலும் நீர்ப்பறவைகளும், கொக்குகள், நாரைகள் என பறவை இனங்கள் அதிகளவில் வாழ்கின்றன. நமது வாழ்வாதரத்திற்கு நீர் எவ்வாறு அவசியமோ? அதுபோல பறவைகளின் வாழ்விற்கும் நீர்நிலைகள் அவசியம். உயிரினங்களின் அச்சாணியாக விளங்கும் நீர்நிலைகளை பாதுகாப்போம்! பறவைகளை காப்போம்!! 

துணைநின்ற நூல்கள் 

1. தமிழ்நாடு வனத்துறை இணையதளம்

2. பறவைகளும் வேடந்தாங்கலும் - மா. கிருஷ்ணன்/பாலு. பெருமாள் முருகன். காலச்சுவடு வெளியீடு

3. தமிழ்நாட்டுப் பறவைகள் - முனைவர். க. ரத்னம் -மெய்யப்பன்