அன்புசால் ஆசிரியர்குழுத் தோழர்களுக்கு, வணக்கம்.

இளைஞர் முழுக்கம் தோன்றிய நாள் தொட்டு அதனை வாசித்துப்பயன் பெற்று வரும் ஆயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாகவும், அதற்குப் பின்னரும் “கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே! மக்களின் நல்வாழ்வுக்கே!’’ எனும் கொள்கையில் ஊன்றி நின்று, தமிழகத்தில் ஒர் முற்போக்கு எழுத்தாளனாகவும், மூத்த பத்திரிகையாளனாகவும், கலை இலக்கியத் துறையில், 65 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டாற்றி வருபவன் நான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம், போரற்ற பொன்னுலகம் எனும் உன்னதக் குறிக்கோளுக்காக இளைஞர் முழக்கம் இடையறாது போராடிவருகிறது. மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், லத்தீன் அமெரிக்க புரட்சிக்கவி பாப்லோ நெருடா, மாபெரும் ருஷ்யப் புரட்சிப் படைப்பாளி மாக்சிம் கார்க்கி ஆகியோரின் பாதையில், இந்திய வரலாறு, தமிழக வரலாறு, ஆட்சியாளரின் அதிகார வர்க்கத்தின் போக்கு, மக்களின் மனநிலை, இளைஞர்களின் ஆர்வ விருப்பங்கள், அவர்களின் நிகழ்கால, எதிர்கால முன்னேற்றம் மற்றும் பல அரசியல், பொருளாதார, சமுதாய , கல்வி கலாசாரச் சமூகநிலை இவற்றைநன்கு கணக்கில் எடுத்துக் கொண்டு ஊடகத்துறையில் இயங்கவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அச்சு ஊடகத்துறையிலும், (மின்னனு) காட்சி ஊடகத்துறையிலும் நாட்டு மக்களுக்குச் சாதகமாகவும், பாதகமாகவும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இவைகளெல்லாம் பெரு முதலாளிகளின் பிடியிலேயே உள்ளன, அவை முற்போக்கு இயக்கங்கள் மீதும் அவர்களை ஆதரிக்கும் சக்திகள் மீதும் தங்களுக்குச் சாதகமான உளவியல் போரை கடந்த பல ஆண்டுகளாக நடத்துகின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் தனியார்மயம், நவீன தாராளமயம், உலகமயம் எனும் கேடுகெட்ட கொள்கையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு நாட்டின் உள்துறையிலும், அயல் துறையிலும் அதனை விடாப்பிடியாகச் செயல்படுத்தி வருகின்றது. சுருங்கச் சென்னால், இந்திய குடியரசு என்பது சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் ஆகிய அதன் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று உலகப் பெரு முதலாளிகளின் தலைவனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாக நாடு விடுதலை பெற்று 64 ஆண்டுகளாகியும் ஏறத்தாழ 110 கோடி மக்கள் வாழும் இந்தியத் திருநாட்டில் வறுமை, பசி, பிணி, வேலையில்லாத் திண்டாட்டம், அடிமைத் தனம், பூசல்கள், பிளவுகள், கொள்ளைகள் முதலியவை பேயாட்டம் போடுகின்றன லஞ்சமும், ஊழலும், சுரண்டலும், அடக்குமுறையும் வாழ்வின் எல்லாத்துறைகளிலும் தலைவிரித்து ஆடுகின்றன.

தமிழக மக்கள் தொகையில் பெரும்பாலோர் இளைஞர்கள் தாம் எனினும், அவர்களது நிகழ்காலமும் எதிர்காலமும் இருண்டு கிடக்கும் அவல நிலையில் உள்ளது. இந்த இழிநிலையை மாற்றுவதற்கும் தமிழக மக்களின் வாழ்வில் சுதந்திரம், ஜனநாயம், சோசலிசம் எனும் மாபெரும் லட்சியங்கள் வெற்றி பெற்றுப் புதிய ஒளி பாய்ச்சவும் இளைஞர் முழக்கம் ஏடு புதிய புதிய உத்திகளையும், அணுகுமுறையையும் இதழியல் துறையில் கையாண்டு தமிழக இளைஞர்களிடையே விடுதலை வேகத்தையும், ஜனநாயகத்தைப் பேணி வளர்ப்பதற்கான போர்க்குணத்தையும் தமிழக மக்களின் வாழ்வில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் எனும் உத்வேகத்தையும், ஒற்றுமை உணர்வையும் மேன்மேலும் வளர்க்குமாக! ஆம்! ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட இரண்டாவது சுதந்திரப் போராட்ட இளைஞர்கள் சோசலிசக் கொள்கையுள்ள புதிய இந்தியாவை உருவாக்காமல் இளைப்பாறப் போவதில்லை! இளைஞர் முழுக்கம் இதழுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்களுடன்..