தமிழகத்தில் பழங்குடியினர் சுமார் 8லட்சம் மக்கள் வாழ்கின்றனர். 36 வகையான பிரிவுகளில் பழங்குடி மக்கள் தமிழகத்தில் பரந்து காணப்படுகின்றனர்.

இருளர், காட்டு நாயக்கர், மலையாளி, குருமன்ஸ், அதியன் கொண்டாரெட்டி, மலைவேடன், மலைமலகர், பனிகர், பலியன், காடான், தோடா, வேட்டைக்காரன் இப்படி வாழும் இம்மக்களில்  சரிபாதிக்கு மேல் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். மற்ற சிலர் மலை அடிவாரங்களில், ஏரிக்கரை ஓரங்களில், ஊருக்கு  ஒதுக்குப்புறமான பகுதிகளில் மின்விளக்கு, குடிநீர்வசதி ஏதுமில்லாத  குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்ற அவல நிலை இன்றைக்கும் நீடிக்கிறது.

அரசின் புள்ளி விவரப்படி, தமிழகத்தில் பழங்குடி மக்கள் 6,53,623 பேர் ஆவர். இவர்களில் மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு அரசின் திட்டங்களும், கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறாமல் இருப்பதற்கும் கல்வியறின்மை ஒரு முக்கிய காரணமாகும். இம்மக்களுக்கு கல்வியறிவு கிடைக்கச்செய்வதில் தமிழக அரசு பெரும் தோல்வியை அடைந்திருக்கிறது என்று தான் உண்மை நிலவரங்கள் எடுத்துரைக்கின்றன.

தமிழகத்தில் 71 சதமானவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்று புள்ளிவிவரம் கூறுகின்றது. அதே நேரத்தில், பழங்குடியின மக்களது கல்வியறிவு சராசரியாக ஒப்பிடும் போது 47 சதம் மட்டுமே. இந்த 47 சதத்திற்குள் தன் பெயரை மட்டும் பாதியாக எழுதத் தெரிந்த பழங்குடியின மக்களும்  கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இம்மக்களது கல்வியறிவு குறித்து கடந்த 10 ஆண்டுகளில் ஒப்பிடும்போது, சமீப காலமாக துவக்கப்பட்ட  ஏகலைவா பள்ளிகள்  தான் ஓரளவு பழங்குடியின மக்களுக்கு கல்வி கிடைக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

இன்றைக்கும் பல பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் கல்வித்தரம் உயர்த்துவதற்கான குறைந்தபட்ச கட்டமைப்புகள் கூட நமது நாட்டில் இல்லை என்பது துயரமானதாகும். ஆடு, மாடு, கோழி இவைகளின் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி ஊக்குவிக்கு திட்டங்களுக்காக தனித் துறையாக கால்நடைத்துறை உள்ளது.  மீன் வளம் பாதுகாக்க என்று தனித்துறை உருவாக்கப்பட்டு அமைச்சர் ஒருவர் இதற்காக பணியாற்றுகிறார். ஆனால், 8 லட்சம் பழங்குடி மக்களுக்காக, அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக தனி அமைச்சகம் இதுவரை உருவாக்கப்படாமல் இருப்பது அரசுகள் இம்மக்கள் மேம்பாட்டிற்கு கொடுத்த அக்கறையை எடுத்துக்காட்டுகிறது.  கடந்த திமுக ஆட்சி காலத்தில் வருடத்திற்கு 3 முதல் 5 பள்ளிகள், விடுதிகள் 3 அல்லது 4 என்ற அளவில் தான் புதிதாக துவங்கப்பட்டன. இதே நிலைமை தான் தமிழகத்தில் இதுவரை தொடர்ந்து இருந்து வந்துள்ளது. பழங்குடியின  மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்பவும்,  தேவைக்கு ஏற்பவும் கல்வி நிலையங்களை உருவாக்கி தரமான கல்வியை அனைவருக்கும் உத்தரவாதப்படுத்தும் வகையில் எந்த ஒரு  அரசும் முயற்சிக்கவில்லை.

ஆரம்பக் கல்வியை முடிப்பதற்கே பெரும்பாடு படவேண்டிய சூழலில் ஒரு மாணவன் அல்லது மாணவி உயர்கல்விக்கு அல்லது மேல்நிலை கல்விக்கு  என்று படிக்க நினைத்தால் அதற்கேற்ப மலைவாழ் மக்களுக்கென போதிய கல்வி நிலையங்கள் இல்லை. விடுதிகளில் போதிய இடம் இல்லாததால் அநேக மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் உயர்கல்விக்கு உரிய நேரத்தில் விண்ணப்பிக்க முடியாமலேயே படிப்பை இழந்த மாணவர்கள் மிக அதிகம். விண்ணப்பித்து 15 தினங்களில் வழங்கப்பட வேண்டிய எஸ்.டி இனச் சான்றிதழ் 15 வருடங்களாகக் கூட வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்ற அவலநிலை தமிழகத்தின் பல பழங்குடி கிராமங்களில் இன்றளவும் தொடர்வது வேதனைக்குரியதாகும்.

இனச் சான்றிதழ் மட்டும்தான் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கான முதல் தேவையாகும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசின் நலத் திட்டங்கள் மற்றும்  சலுகைகள் இவை அனைத்தையும்  இனச் சான்றிதழ் மூலம் மட்டுமே பெறமுடியும். ஆனால், இச்சான்றிதழ் பெறுவதற்கான கடும் வழிமுறைகளால் பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டும் பல நேரங்களில் பிரச்சனைகள் உருவான பின்னும் இன்றுவரை அவ்வழிமுறைகள் எளிதாக்கப்படவில்லை.  பெரும்பாலான மாவட்டங்களில் சில உயர் அதிகாரிகளே குறிப்பாக வருவாய் கோட்டாட்சியர், சாராட்சியர் ஆகியோர்களே திட்டமிட்டு பழங்குடி மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கிட மறுக்கின்றனர். உதாரணத்திற்கு வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் குருமன்ஸ் பழங்குடியினத்தை சார்ந்த  22  மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விழிக்கண்குடி (னுஏஊ) உறுதி செய்து ஒப்புதல் அளித்தும், இந்த குழந்தைகள் இவர்களுக்குத் தான் பிறந்ததா என்று சட்டமன்ற உறுப்பினர் முன்பே வினா எழுப்பி சான்று தர மறுத்துள்ளார். திருப்பத்தூர் சப் கலெக்டர். நந்த குமார்.

அதேபோன்று, மேட்டூர் பண்ணப்பாடி கிராமத்தில் கொண்டாரெட்டி இனத்தினர் இனச் சான்றிதழ் கேட்டபோது இங்கு யாரும் இல்லை என்று ஆர்.டி.ஒ பதில் அனுப்பியுள்ளார். ஆனால் அடுத்த 1 மாதத்தில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது 924 பழங்குடியின மக்கள் இங்கு இதே கொண்டாரெட்டி பழங்குடியினர் வாழ்கின்றனர் என்று மேட்டுர் ஆர்.டி.ஒ அவர்களின் பதில் தெரிவித்தது மிக அதிர்ச்சியளிக்கிறது. நாடு சுதந்திரமடைந்த  64 ஆண்டுகளில் பழங்குடி மக்களது கல்வித் தரம் பெருமளவில் உயர்த்தப்படவில்லை என்பதற்கு சில ஆதாரங்கள்:2010\-2011 ஆண்டு வரை தமிழ்நாடு முழுவதும் துவக்கப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகள்        விவரம். நடுநிலைப் பள்ளிகள் 60, உயர்நிலைப் பள்ளிகள் 19, மேல்நிலைப் பள்ளிகள் 14, ஏகலைவா பள்ளிகள் 3, ஐடிஐ 2 மட்டுமே. அதிலும் இதில் படிக்கும் மாணவர்களுக்கான விடுதிகள்  மாணவர் விடுதி 24, மாணவியர்கள் விடுதி 16 மட்டுமே.  அதாவது பெண்கள் விடுதியில் சேர்க்கை  எண்ணிகை வெறும் 800 மட்டுமே. ஆண்கள் 1220 மாணவர்கள் மட்டுமே. இவ்வளவு மோசமான நிலையுள்ளபோதும்  ஆட்சியாளர்கள் இவர்களுக்கென போதிய கல்வி நிலையங்கள் மற்றும் விடுதி வசதிகள் உருவாக்காமல் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று புதிய பள்ளிகள், விடுதிகள் துவக்கியது மிகவும் அவமானமாக உள்ளது.

ஏகலைவா பள்ளிகள் போன்றே தமிழக அரசு நடத்திடும்  இதர பழங்குடி மக்களுக்கான பள்ளிகளையும் அடிப்படை கட்டமைப்பிலிருந்து முழு மாற்றம் ஏற்படுத்திடவேண்டும். நிதி ஆதாரத்தை பொறுத்தவரையில்  மகாராஸ்டிரா, சத்திஸ்கர், பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநிலங்களில் பழங்குடி மக்களுக்கு உருவாக்கப்பட்ட பழங்குடியின துணைத்திட்டம் மூலம் தனியாக 10 சதமான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு வழங்கப்படுவது போன்றோ  அல்லது மக்கள் தொகையின் சதவீதத்திற்கு ஏற்பவோ வழங்கப்பட வேண்டும்.

குறிப்பாக கல்வி நிலையங்களில் போதிய இடவசதி மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கி, காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் முழுமையான ஆசிரியர்கள் இருப்பதில்லை. வாரத்தில் 5 நாட்கள் பள்ளிக்கு வருவது மிகச் சொற்பமே காணப்படுகிறது. இன்றும் பல பள்ளிகளில்  10ஆம் வகுப்பு படித்தவர்களே ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் அவல நிலை உள்ளதால், தற்போது உள்ள கல்வி நிலையங்களிலும் தரமான கல்வி கிடைக்கப்படுவதில்லை. பழங்குடி மக்களுக்கான மத்திய அரசின்  திட்டங்களின்  நிதி,  இதர எஸ்.சி, எஸ்.டி சிறப்பு கூர்நோக்குத் திட்டங்களின்  நிதி,  பொதுவான திட்டங்களில் பழங்குடி மக்களுக்கு என ஒதுக்கப்படும் குறிப்பிட்ட சதவீத நிதியையும் தமிழக அரசின் துணைத் திட்டங்களில் ஒதுக்கப்படும் நிதி ஆகிய அனைத்து நிதியையும் முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தி நல்ல நிர்வாகம்  மூலம் அரசு இதனை செயலாற்றினாலே ஒரளவு நல்ல கல்வி கிடைத்திருக்கும். ஆனால் கடந்த ஆண்டில் பல நூறு கோடி ரூபாய்கள் செலவிடப்படாமல் பழங்குடியின மக்களின்  தொகுப்பு நிதியாதாரமே திருப்பி அனுப்பப்பட்ட  வெட்கித் தலைகுனியக் கூடிய சம்பவங்களை தமிழகம் சந்தித்துள்ளது.

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின்  இத்துறையின் அமைச்சர் இத்தகைய குறைபாடுகளை உடன் அறிந்து களைந்திடுவதின் மூலம் சிறந்த கல்வியை அடித்தட்டு மக்களான பழங்குடி மக்களுக்கு அளித்திட இயலும்.  இத்துறையின் ஆணையரின் சீறிய முயற்சி நல்ல முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளது. இது முழுமைபெற அரசின் கூடுதல் கவனமும், அக்கரையும் மனிதநேயமும் தேவைப்படுகிறது.