இரண்டு பேருக்குள் யார் யோக்கியர் என்ற வாக்குவாதம் கிளம்பினால்தான் அவர்களின் உண்மையான முகம் வெளிப்படும் என்பதுதான் எதார்த்தம். இது குடிமக்களுக்கு மட்டுமல்ல, அரசியல் கட்சிகளுக்கும் இந்த நிலைமைதான். இப்படித்தான் காங்கிரசும் பிஜேபியும் மாற்றி மாற்றி தங்களது உண்மையான முகங்களை உரித்துக் காட்டிக் கொண்டு இருக்கின்றன. 1-2-3 அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக வெளியில் வேஷம் போட்ட பிஜேபியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம் என்று அமெரிக்க நாட்டு அதிகாரியுடன் பேசியதை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல், ஓட்டுக்கு பணம் என்ற விவகாரத்தை இந்த இணையதளம் வெளிப்படுத்தியதன் மூலம் ஆளும் காங்கிரஸ் கட்சியின் போலியான முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.இந்த விக்கிலீக்ஸ் உலக சர்வாதிகாரத்தின் உச்சமான அமெரிக்காவின் கண்களிலேயே விரலைவிட்டு ஆட்டி வருகிறது.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட தனது உறவு நாடுகள் இடையே நடத்திய உரையாடல்கள், கருத்து பரிமாற்றங்கள் குறித்த உண்மையான தகவல்களை லட்சக்கணக்கான பக்கங்களாக இந்த அமைப்பு வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இந்தஅமைப்பின் தகவலின்படி பார்க்கும் போது, ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு திட்டத்திலும் அமெரிக்கா உள்ளொன்று வைத்து , புறமொன்று பேசுவது அப்பட்டமாக தெரிய வருகிறது. மற்ற நாட்டு அதிபர்களின் பெயர்களைக் கூட அமெரிக்கா விட்டுவைக்கவில்லை. சூசகமான, மோசமான பெயரிட்டு மற்ற நாட்டு அதிபர்களை அழைத்து வந்ததையும் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. இப்படி விக்கிலீக்சின் புலனாய்வில் அமெரிக்கா மட்டுமல்ல இப்போது இந்திய அரசியல் கட்சிகளும் மாட்டியிருக்கின்றன.இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது நாடாளுமன்றத்தில்தான் என்ற சாமானிய மக்களின் நம்பிக்கை இப்போது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை காவு வாங்கியதை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. உலக ஜனநாயகத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்குமா என்பது அய்யமே. 2008ம் ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்கட்சி உறுப்பினர்களுக்குக் கட்டுக்கட்டாக பணம் கொடுத்து காங்கிரஸ் வளைத்தது இப்போது ஆதாரத்துடன் வெளிவந்திருக்கிறது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் பெரும்பாலான வேலை நாட்கள் அமளியிலேயே முடிகிறது. இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு காங்கிரசால் சரியான பதில் தர முடியவில்லை.ஆனால், காங்கிரசின் பிரதான மத்தியஸ்தரும், நிதித்துறை அமைச்சருமான பிரணாப்முகர்ஜி, அது நடந்தது 14வது மக்களவையில். இப்போது நடப்பது 15வது மக்களவை. இரண்டுக்கும் தொடர்பில்லை என்கிறார். விக்கிலீக்ஸ் வெளிப்படுத்திய தகவலை விட, இவர் நாடாளுமன்றத்தில் சொன்ன இந்த தகவல் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. தொடர்ந்து காங்கிரஸ்தான் ஆட்சி செய்து வருகிறது. ஏதோ 14வது மக்களவைக்கும், 15வது மக்களவைக்கும் தொடர்பில்லாதது போல் மத்திய நிதி அமைச்சர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் செய்த ஊழல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பணம் கொடுத்த விவகாரம் ஜனநாயகத்திற்கு வேட்டு வைத்திருக்கிறது. இது வெறும் துளிதான். இன்னும் கடலளவு தகவல்கள் இருப்பதாக விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 7வருடத்திற்கும் அதிகமாக  ஆட்சியை செய்து வரும் காங்கிரஸ் இன்னும் எது மாதிரியெல்லாம் ஜனநாயகத்தை விற்றிருக்கிறதோ தெரியவில்லை. ஒருவேளை, விக்கிலீக்ஸ் அமைப்பு அனைத்து தகவல்களையும் வெளியிட்டால், காங்கிரஸ், பிஜேபி தலைகள் காணாமல் போகும் அபாயம் ஏற்படலாம். ஆனால், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று ஊளையிடும் பிரதமரால், அந்த தகவல்களை மறுக்க முடியவில்லை. தனது அமைச்சரவை சகா செய்யும் குற்றத்தையே தனக்கு தெரியாது என்று ஓடி ஒளியும் மன்மோகன் சிங் இதைப்பற்றியா வெளிப்படையாக பேசப்போகிறார்.

காங்கிரஸ் எத்தனையோ பிரதமர்களை உருவாக்கியிருக்கிறது. அதில் மிக மிக மோசமான பிரதமர் இவராகத்தான் இருப்பார். மதவாதம் தவிர்த்து வெளிநாட்டு கொள்கைகளில் காங்கிரஸ், பிஜேபி கட்சிகளுக்கு பெரிய அளவில் வேறுபாடில்லை என்பது இப்போது ஆதாரப் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா உடனான அணு சக்தி ஒப்பந்தத்தை காங்கிரஸ் எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்று முழு மூச்சோடு முயன்ற போது இடதுசாரி இயக்கங்கள் அதை வன்மையாக எதிர்த்தன. அத்தோடு பிஜேபியும் எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டது. ஆனால், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணம், பிஜேபி நடத்திய நாடகத்தை அம்பலமாக்கியுள்ளது. இந்த இருகட்சிகளில் எது ஆட்சிக்கு வந்தாலும் அது முதலாளிகளின் ஆட்சியாகவே இருக்கும். பிரதமர் யார்? நிதியமைச்சர் யார்? உள்துறை அமைச்சர் யார்? என்பதை தாங்கள்தான் முடிவு செய்வதாக வாக்காளர்கள் கருதலாம். ஆனால், உண்மை படுபயங்கரமானது. தேர்தலுக்கு முன்பு நிதியாக கோடிக்கணக்கில் அரசியல் கட்சிகளுக்கு அள்ளித்தரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தலுக்கு பிறகு, அந்த பெருந்தொகையை லாபமாக ஈட்ட துடிக்கின்றன. ஒரு சில பெருமுதலாளிகள்தான் இந்தியாவில் பிரதமர். நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் போன்ற அதிமுக்கிய பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கிறார்கள். நீரா ராடியாவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், அப்படி அந்தப் பதவி நியமனங்களுக்கு நடக்கும் பேரத்தை வெளிக்கொண்டு வந்து சாமானிய மக்களும் அதைப்பற்றி பேச வைத்திருக்கிறார்.

பெரு முதலாளிகளுக்கு அதிகம் விசுவாசமாக இருப்பது யார் என்பதிலும் இரு கட்சிகளுக்கும் எப்போதுமே போட்டிதான். ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது வெளியுறவுக் கொள்கையில் மாற்றம், வரி விலக்கு அல்லது புதிய வரி இல்லாத பட்ஜெட் இவற்றைத்தான் இந்த அரசுகள் திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கின்றன. முற்றிலும் தொலைநோக்கற்ற திட்டங்களை தனியார் அமைப்புகளின் பயனுக்காக இந்த அரசுகள் செயல்படுத்தியதையும் நாம் கண்டிருக்கிறோம். இதற்கு சிறந்த உதாரணமாக காங்கிரஸ் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்ட வேண்டிய நிலுவை வரியை தள்ளுபடி செய்துள்ளது. இது ஒன்றும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் பிரச்சனை அல்ல. 3லட்சத்து 74ஆயிரத்து 937 கோடி ரூபாய் வரியை காங்கிரஸ் ரத்து செய்திருக்கிறது. ஒரு வகையில் தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வர  வேண்டிய வருமானத்தை காங்கிரஸ் தடுத்துள்ளது. அத்தோடு ஏற்கெனவே கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு மீண்டும் மீண்டும் வரிச்சலுகை கொடுத்து வருகிறது. இந்த வரிச்சலுகைகள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு நிகரானது என்றுதான் சொல்ல வேண்டும். அதை அவர் எடுத்துக் கொண்டார்.

ஆனால் இதில், இங்கு  வரிவிலக்கு என்ற போர்வையில் இவர்களாகவே கொடுத்திருக்கிறார்கள். இதுதான் வித்தியாசம்.தினசரி உணவுக்கு வழியில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் குமுறும் நாட்டின் அரசாங்கம் இதுபோல் செயல்படுவது காலத்தின் கோலமாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது. கடந்த வாரம் கூட ஐக்கிய நாடுகள் சபை உணவு பற்றாக்குறை மற்றும் சரிந்து வரும் விவசாய உற்பத்தி குறித்து அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருந்தது. அதில், அழிவின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் விவசாய துறையை அரசுகள் மீட்க பாடுபடவேண்டும் என்று சொல்லியிருந்தது. ஆனால், இந்தியாவை ஆளும் காங்கிரஸ், கட்சிக்கு கோடிகளை கொட்டிக் கொடுக்கும் பெரும் முதலாளிகளை வாழ வைப்பது முக்கியமா? அல்லது ஒருவேளை உணவுக்குத் திண்டாடும் விவசாய மக்களின் குறை தீர்ப்பது முக்கியமா? என்றால் அந்தக்கட்சி முதலாளிகளின் பக்கமே நிற்கும். இது காங்கிரசுக்கு மட்டுமல்ல பிஜேபிக்கும் சாலப் பொருந்தும். இந்த கட்சிகளுக்கிடையே இப்போது நடக்கும் ‘யோக்கியர்’ போட்டி ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதுதான். இந்த போட்டி இவர்களின் போலி முகத்திரையை இன்னும் கிழித்தெறியும் என்று நம்பலாம்.