ஜனவரி 1: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் குண்டுவீச்சு தாக்குதல் 400 பேர் பலி. துயரத்தோடு தனது 2009யைத் துவக்கிய பாலஸ்தீனத்தில் பெரிய அளவில் நம்பிக்கை எதுவும் ஏற்பட்டு விடவில்லை. பயங்கரவாத அமைப்பு என்ற தோற்றத்துடன் உருவான ஹமாஸ் அமைப்பு பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. ஜனவரி 20 44வது அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவியேற்பு. இந்த நிகழ்வு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினாலும் முந்தைய அமெரிக்க அரசுகளின் ஏகாதிபத்திய நடவடிக்கைகள் எதற்குமே முற்றுப்புள்ளி வைக்கும் பணியை அவர் துவக்கவில்லை.

பிப்ரவரி 12: மும்பை தாக்குதலுக்கு எங்கள் நாட்டில் சதி என்று பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஒப்புக் கொண்டார். அதுவரை மும்பை சம்பவத்திற்கும் பாகிஸ்தானிற்கும் எந்த தொடர்புமில்லை என்று அடம் பிடித்து வந்த பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொண்டது.

மார்ச் 3: பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு. அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினார்கள். ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது. தங்கள் ஆட்டங்களில் பங்கேற்காமல் இலங்கை அணி நாடு திரும்பியது.

மார்ச்16: எல்சால்வடார் ஜனாதிபதி தேர்தல் இடதுசாரி வேட்பாளர் மாரிசியோ வெற்றி. லத ்தீன் அமெரிக்காவில் இடதுசாரிக் கொள்கைகளுக்கு ஆதரவாக மக்கள் அணிதிரண்டு வருவது நிற்கவில்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவு காட்டியது.

ஏப்ரல் 12: இலங்கையில் 48 மணி நேர சண்டை நிறுத்தம் என்று ஜனாதிபதி ராஜபக்சே அறிவித்தார். இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று சில நாட்கள் கழித்து ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தியது. 26 ஆம் தேதி எல்.டி.டி.இ போர் நிறுத்தம் செய்தவதாக அறிவித்தது. ஆனால் அதை இலங்கை அரசு நிராகரித்தது. ஏப்ரல் 26 ஈகுவடார் ஜனாதிபதியாக இடதுசாரி வேட்பாளர் ராபெல் கோரியா தேர்வு. கடந்த முறையும் இவர் ஜனாதிபதியாக இருந்தார். அவரது இடதுசாரி மக்கள் நலக் கொள்கைகள் பொருளாதாரம்,  கல்வி மற்றும் சுகாத ாரம் ஆகியவற்றில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது. மே 4 நேபாளத்தில் பிரதமர் பிரச்சந்தா பதவி விலகினார். ராணுவ தளபதி தொடர்பான விவகாரத்தில் மற்ற கட்சிகள் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. 25 ஆம் தேதி புதிய பிரதமராக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாதவ் குமார் நேபாள் பதவியேற்றார்.

மே 18: எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் மரணம். போர் முடிந்துவிட்டதாக பிரபாகரன் மரணத்திற்கு அடுத்த நாள் இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் இலங்கையில் அகதிகளாக இருக்கும் தமிழ் மக்களின் அவலம் நீடித்தது. 23 ஆம் தேதியன்று அகதிகளாக இருக்கும் மக்களை ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் நேரில் சென்று பார்த்தார்.

ஜூன் 13: ஈரான் அதிபர் தேர்தலில் அகமத் நிஜாத் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலை சிலர் ஏற்க முடியாது என்று கூறினாலும், தேர்தல் நியாயமான முறையில்தான் நடந்தது என்று பல பன்னாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறினர்.

ஜூன் 26: பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம். உலகின் பெரும்பாலானவர்களை ஆட வைத்த இசைப்புயலின் மரணம் பலரையும் துயரத்தில் ஆழ்த்தியது.

ஜூன் 28: ஹோண்டுராசில் இடதுசாரி ஜனாதிபதி ஜெலாயாவை பதவி நீக்கம் செய்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அமெரிக்காவின் ஆதரவு இந்த கவிழ்ப்புக்கு இருந்தது. தனது ஆட்சிக்காலத்தில் தென் அமெரிக்கா நாடுகளோடு நெருக்கமான உறவை ஜெலாயா ஏற்படுத்திக் கொண்டார்.

ஜூலை 31: ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான ஜப்பானிய ஜனநாயக கட்சி 308 இடங்களில் வெற்றி. 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஜப்பானில் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. கொள்கைகளில் பெரும் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்த்து மக்கள் இந்த மாற்றத்திற்காக வாக்களித்தார்கள்.

அக்டோபர் 9: பாகிஸ்தானில் துவங்கிய குண்டுவெடிப்புகள் மற்றும் தற்கொலைப்படைத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். மாதம் முழுவதும் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருந்தன.

நவம்பர் 20: சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சிறப்பு மாநாடு இந்திய தலைநகர் தில்லியில் துவங்கியது. முதலாளித்துவம் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் சோசலிசமே மாற்று என்று இந்த மாநாடு பிரகடனம் செய்தது.

நவம்பர் 29: உருகுவே நாட்டின் புதிய அதிபராக கொரில்லா தலைவர் ஜோமுஜிகா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் இடதுசாரிக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கப் போவதாக தனது நாட்டு மக்களுக்கு உறுதிமொழி அளித்துள்ளார்.

டிசம்பர் 7: கோபன்ஹேகனில் பருவநிலை மாற்ற மாநாடு துவங்கியது. 18 ஆம் தேதி நிறைவுற்ற இந்த மாநாட்டை தோல்வியுறச் செய்வதில் அமெரிக்கா முனைப்புக் காட்டியது. இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் ஒற்றுமை அமெரிக்காவின் முயற்சிகளை முறியடித்தன.

உலுக்கிய இரு பிரச்சனைகள்: பன்றிக்காய்ச்சலால் பாதிப்பு மற்றும் அமெரிக்க வங்கிகள் திவால் ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம். பன்றிக்காய்ச்சல் சுமார் 199 நாடுகளையும் தாக்கியுள்ளது. இதுவரை அதற்குப் பலியானவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொட்டுவிட்டது. 2009 ஆம் ஆண்டில் மட்டும் 140 அமெரிக்க வங்கிகள் திவாலாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை அமெரிக்க அரசு தன்வசம் எடுத்துக் கொண்டுள்ளது. மத்தியக் காப்பீட்டுக் கழகத்தின் மூலமாக இந்த திவால் வங்கிகள் மீட்கப்பட்டு வருகின்றன.  

- தொகுப்பு : ப.விஜயகுமார்

(தீக்கதிர், மதுரை) ஹரி

Pin It