தனது புழக்கடையாக தென் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா கருதிக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. மக்கள் நலக் கொள்கைகளுக்கு ஆதரவான அரசுகளை மக்கள் கொண்டு வந்துள்ளனர். மக்கள் நலக் கொள்கைகள் என்றாலே அமெரிக்காவிற்கு வேம்பாகக் கசக்கிறது. வெனிசுலாவில் கொட்டிக்கிடக்கும் அபரிமிதமான பெட்ரோலிய வளம் மக்கள் நலனுக்கு பயன் படட்டும் என்று அதில் கிடைக்கும் வருமானத்தை கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு போன்றவற்றிற்காக அந்நாட்டு சாவேஸ் தலைமையிலான அரசு பயன்படுத்தி வருகிறது. இத்தகைய கொள்கைகளைக் கடைப்பிடித்தாலே அது சர்வாதிகார ஆட்சி என்று அமெரிக்கா முத்திரை குத்தி விடுகிறது. வெனிசுலா அளவிற்கு இல்லையென்றாலும் மற்ற தென் அமெரிக்க நாடுகளில் முதலாளித்துவப் பாதையிலிருந்து பின்வாங்கியுள்ளார்கள் என்பது உண்மை. இவர்களை யார் மக்கள் நலனை கவனிக்கச் சொன்னது என்று ஆத்திரப்படும் அமெரிக்கா, தனது பிடியில் இருக்கும் கொலம்பியாவை இந்த நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது.

கொலம்பியாவில் உள்ள ஜனநாயக எண்ணம் கொண்டோர் மீது கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. பொதுவாக தென் அமெரிக்காவில் நிலவும் மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த அல்வரோ யூரிப் தலைமையிலான பொம்மை அரசாங்கம் தடை விதித்துள்ளது. தென் அமெரிக்கத் தலைவர்களை சில பாத்திரங்களாக சித்தரித்து கொலம்பியக் கலைஞர் ஜோர்ஜ் மென்டெஸ் நடத்திய கலை நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். மக்கள் நல இடதுசாரிக்கொள்கைகளுக்கு ஆதரவான எந்தவொரு கருத்தும் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவும், அதன் ஜால்ராவான கொலம்பிய பொம்மை அரசும் முனைப்பாக உள்ளன.

அவன நிறுத்தச்சொல்லு... நான் நிறுத்துறேன்...

உலகிலேயே கரியமிலவாயுவை அதிகமாக உமிழும் நாடுகளில் சீனா மீது குரோதம் கக்கும் செய்திகள் மேற்கத்திய ஊடகங்களை ஆக்கிரமித்து வருகிறது. சுற்றுச்சூழல் விஷயத்தில் வளர்ந்த நாடுகள் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை மறைக்கவே சீனாவை முன்னிறுத்தும் வேலை நடக்கிறது. அவன நிறுத்தச்சொல்லு, நான் நிறுத்துறேன் என்ற திரைப்பட வசனம் போல்தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பேசுகின்றன.

ஆனால் மக்கள் ஆதரவில்லாமல் எந்த அரசின் திட்டமும் வெற்றி பெறாது என்பதில் நம்பிக்கையுள்ள சீன அரசின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. 2007 ஆம் ஆண்டு புதிதாக தேசிய சுற்றுச்சூழல் மாற்றுத்திட்டத்தை அரசு கொண்டு வந்தது. பிளாஸ்டிக்குகளைத் தவிர்ப்பது குறித்த பிரச்சாரமும், மாற்று ஏற்பாடுகளும் அந்நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. அது மட்டுமல்லாமல், கடைகளுக்கு செல்லும் சீனர்கள் இந்தப்பொருளால் சுற்றுச்சூழலுக்கு என்ன பாதிப்பு என்று கேட்டு வாங்கும் அளவிற்கு நிலைமை மாறியது. இது சுற்றுச்சூழலுக்கு நல்லதுதான், ஆனா விலைதான் அதிகம் என்று கடைக்காரர் இழுத்தாலும், பரவாயில்லை என்று கூறுமளவுக்கு சீனர்கள் மாறிவிட்டார்கள். அடுத்தகட்டமாக, தலையைச் சொறிந்தபடி பேசிக்கொண்டிருக்கும் கடைக்காரர்களிடம் மாற்றம் ஏற்படும் வகையிலான பிரச்சாரம் நடக்கிறது.

சுற்றுச்சூழல் பிரச்சனையில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகள் எல்லாம் இவ்வளவு குழப்பமாக இருக்கிறதே என்று ஒரு ஆய்வைச் செய்தார்கள். ஆச்சரியப்படும் வகையில் சீனர்களிடம் பெரிய குழப்பங்கள் அதிகமாக இல்லை. சீன ஊடகங்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளதே பெரும் அளவு விழிப்புணர்வு ஏற்பட்டதற்குக் காரணமாகக் கூறுகிறார்கள். மின்சாரத்தை சேமிக்கக்கூடிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை வாங்குவீர்களா அல்லது விலைதான் உங்கள் வாங்கும் பொருட்களின் பட்டியலைத் தீர்மானிக்கிறதா என்று லெக் என்ற ஆய்வு நிறுவனம் சீன மக்களிடம் கேட்டது. கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேர் விலையை ஒரு பொருட்டாக தாங்கள் மதிக்கவில்லை என்று கூறிவிட்டார்கள். ஆனால், விலை குறைவது அவசியம் என்பதையும் 75 சதவிகிதம் பேர் வலியுறுத்தினார்கள்.

திரைப்படமொன்றில் பேருந்து ஒன்று ரோட்டில் நின்றுவிடும். எல்லோரும் இறங்கித் தள்ளுங்கள் என்பார் நடத்துநர் வடிவேலு. அனைவரும் தள்ளிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் மட்டும் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு, தள்ளு... தள்ளு... தள்ளு... என்று வெறுமனே கையை ஆட்டிக் கொண்டிருப்பார். இதுபோன்றுதான் வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றன. வளர்ச்சியையும், சுற்றுச்சூழலையும் இணைத்துச் செல்ல வளரும் நாடுகள் முயற்சிக்கின்றன.

சத்தமில்லாமல் சாதனை

சத்தமில்லாமல் பெரிய வேலை ஒன்றை வியட்நாம் சாதித்துள்ளது. கணினித்துறையில் பல்வேறு நாடுகள் முன்னணியில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால் உலகத் தகவல்தொழில்நுட்ப அமைப்பின் நான்காவது சர்வதேச மாநாட்டை வெற்றிகரமாக வியட்நாம் நடத்தி முடித்திருக்கிறது. கணினித்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது பற்றி நாடுகளுக்கிடையே இருக்க வேண்டிய ஒருங்கிணைப்பு பற்றி அந்த மாநாட்டில் பேசியுள்ளார்கள். மக்களின் வாழ்க்கை முறையில் கணினித்துறை ஏற்படுத்தியுள்ள தாக்கம், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கிடையேயுள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும் முயற்சியில் அத்துறையின் பங்கு ஆகியவை குறித்து அம்மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் பேசினர். உள்நாட்டில் ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்வதில் கணினித்துறையின் பங்கு பற்றியும் அதில் விவாதித்துள்ளனர். லாபம் பற்றி மட்டுமே பேசி வந்த கடந்த மூன்று மாநாடுகளையும் விட சமூகத்திற்கு கணினித்துறை ஆற்றப்போகும் பங்கு பற்றி பேசிய இந்த மாநாடு சிறப்பாக இருந்தது என்று பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

ஹார்டுவேர் துறையில் சீனாவும், சாஃப்ட்வேர் துறையில் இந்தியாவும் உலகின் மற்ற நாடுகளுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்தாலும், இந்த மாநாடு ஆசியாவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். அதற்கு வியட்நாம் எடுத்துக் கொண்ட முயற்சியே காரணமாக இருந்தது. அதோடு, கணினித்துறையில் வியட்நாம் எத்தகைய வளர்ச்சியடைந்துள்ளது, வருங்காலத்திற்கு எத்தகைய திட்டங்களை வைத்திருக்கிறது என்பதையும் வெளியுலகுக்கு இந்த மாநாடு வெளிச்சம் போட்டுக்ம்காட்டியுள்ளது.

Pin It