பேருந்து பயணங்கள் பல சமயம் சுவாரசியமாக அமைந்து விடும். ஜன்னலோரம் அமர்ந்து சூழலை ரசிப்பது அல்லது வாழ்க்கையின் நகர்வுகளை புதிதாக அறிமுகமான இன்னொருவரின் வாசிப்பில் கேட்பது - இரண்டுமே குதூகலமான அனுபவம். எனக்கு நேரிட்டது இரண்டாவது.

ஒரு சிநேகமான புன்னகையே அவரிடம் என்னை பேசத் தூண்டியது. அவருக்கு வயது ஐம்பதுகளில் இருக்க வேண்டும் என்பதை மீசை நரையும் மூக்குக் கண்ணாடியின் தடிமனும் அடையாளம் காட்டின.

“சார், நான் சித்த மருத்துவர். நீங்க...?“

“நான் ஒரு எஞ்சினியர். அணு மின் நிலையத்தில்.“

அணு என்ற வார்த்தையை கேட்டதும், எனக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ள, “சார் நாட்டுல நிறைய அணு மின்நிலையங்கள் வரப் போகுது போல. ஒரு இன்சைடரா நீங்க என்ன சார் நினைக்கிறீங்க?“ என்று கேட்டேன்.

“ம்ம்...புதிய பொருளாதாரக் கொள்கைக்கு வேகம் கொடுக்க... நிறைய பவர் தேவையில் லையா? வர வேண்டியதுதான்“ என்றார்.

“ஆனால் சிலர் பயமுறுத்துறாங்களே...செர்னோபில்...அமெரிக்க 3 மைல் ஐலன்ட் விபத்து என்று...

நம்ம நிலைமை எப்படி சார்?“

“அதெல்லாம் ரொம்ப பாதுகாப்பு உண்டு. இப்ப அது பலமடங்கு கூடியிருக்கு.“

அப்ப விபத்து நடைபெற வாய்ப்பே இல்லையா? - அவர் வாயை கிளறினேன்.

“அதெப்படி சார் சொல்ல முடியும்? ஒரு வேளை நடக்கலாம்.“

இத இத இதத்தானே எதிர்பார்த்தேன்னு மனதுக்குள் நினைத்தபடி “அப்படி நடந்தா என்ன சார் ஆகும்?" இன்னும் கொஞ்சம் ஆர்வம் மேலிடக் கேட்டேன்.

“ஜப்பான்ல, பிரான்ஸ்ல அணு மின்சாரம் தான் அதிகமாக பயன்படுதுன்னு சொல்றாங்க. அங்க விபத்து நடந்தா...ஒரிரு மணி நேரத்தில குறிப்பிட்ட பகுதியையும் தேவைப்பட்டால் நாட்டையே காலி பண்ணி போய்விடும் வசதியும் உண்டு. மக்கள்தொகை செறிவு ரொம்ப குறைவு.

ஒரு சதுர கி.மீ.க்கு உள்ள மக்கள், நம்மில் 50இல் ஒரு பங்கு அளவாவது இருப்பாங்களாங்கறது சந்தேகம் தான். வேளாங்கண்ணிக்கு வந்த சுனாமி, ஃபுளோரிடா பீச்சுல வந்தா இவ்வளவு சாவு இருந்திருக்காதுல்ல.“

“அப்ப விபத்து நடக்காம இருக்க. அதிகபட்ச பாதுகாப்பு என்ன?

“நிறைய பண்றாங்க சார்! ஆனா. நான் ட்ரூ கிறிஸ்டியன். தினம் கர்த்தர்ட்ட மண்டிபோட்டு வேண்டிக்குவேன். என் சீனியர்கூட கணபதிய கும்பிட்டிட்டுதான் வொர்க் ஆரம்பிப்பார்.“ அவர் உரையாடலை முடித்துக் கொண்டார்.

“கடவுளே!“

 

இந்திய அணுஉலை விபத்துகள்

 மே 4, 1987: கல்பாக்கம் அணு மின்நிலையத்தின் அதிவேக அணு ஈணுலையில் எரிபொருள் நிரப்புதலில் ஏற்பட்ட விபத்தில் அணுஉலையின் மையப்பகுதி சிதைந்தது. இதனால் இந்த அணுஉலை இரண்டு ஆண்டுகள் மூடப்பட்டது. 

செப்டம்பர் 10, 1989: மகாராஷ்டிரத்தில் உள்ள தாராபூர் அணு மின் நிலையத்தில் அணு உலை வழக்கத்துக்கு மாறாக 700 மடங்கு அதிக கதிரியக்க அயோடினை கசிய விடுவது தெரிந்தது. இதைப் பழுது பார்க்க ஓராண்டு ஆனது.

மே 13, 1992: தாராபூர் அணு மின்நிலையத்தில் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 12 கியூரி கதிரியக்கம் வெளிப்பட்டது.

மார்ச் 31, 1993: உத்தரபிரதேசத்தில் உள்ள புலந்த்ஷாரில் உள்ள நரோரா அணு மின் நிலையத்தில் நீராவி விசையாழி (டர்பைன்) தகடுகள் தீப்பிடித்தன. இதனால் கனநீர் அணுஉலை சிதைந்து, உருகியது.

பிப்ரவரி 2, 1995: ராஜஸ்தானில் உள்ள கோடாவில் உள்ள ராஜஸ்தான் அணு மின்நிலையத்தில் இருந்து வெளியேறிய கதிரியக்க ஹீலியமும், கனநீரும் ராணா பிரதாப் சாகர் நதியில் கலந்தன. இதனால் அணுஉலை இரண்டு ஆண்டுகள் மூடப்பட்டது.

அக்டோபர் 22, 2002: கல்பாக்கம் அணு உலையில் அதிவேக அணு ஈனுலையில் 100 கிலோ கதிரியக்க சோடியம், தூய்மைப்படுத்துதல் பகுதியில் கசிந்தது. இதனால் செயல்பாட்டு அமைப்பு சீர்குலைந்தது.

நவம்பர் 24, 2009: கர்நாடகத்தில் கைகாவில் உள்ள கைகா அணு மின்நிலையத்தில் குடிநீரில் கதிரியக்க கனநீர் கலக்கப்பட்டதால் 45 ஊழியர்கள் கதிரியக்கத் தாக்குதலுக்கு ஆளாகினர்.

- - கடந்த ஓராண்டில் அணுஉலைகள் குடித்த உயிர்கள்

சூன் 8, 2009: கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ள கைகா அணு மின்நிலையத்தைச் சேர்ந்த முதுநிலை அறிவியல் அலுவலர் எல். மகாலிங்கம் (47) காலை நடைப்பயிற்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பவேயில்லை. ஐந்து நாட்களுக்குப் பின்னர் காளி நதியில் அழுகிய நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. மரபணு பரிசோதனை மூலமே அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.

நவம்பர் 24, 2009: கைகா அணு மின்நிலையத்தில் டிரைடியம் கலந்த குடிநீரைக் குடித்த 20 தற்காலிக ஊழியர்கள் உடல்நலமில்லாமல் போனது. இதே தண்ணீரைக் குடித்த 90 ஊழியர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

டிசம்பர் 30, 2009: மகாராஷ்டிர மாநிலம் டிராம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் கதிரியக்க, ஒளிவேதியியல் துறையின் அளவை ஆய்வகத்தில் இருந்த உமாங் சிங், பார்த்தா பிரதிம் பாக் ஆகிய இருவரும் மர்மமான முறையில் கருகி இறந்து கிடந்தனர். உயர்நிலை பாதுகாப்பு கொண்ட இந்த வளாகத்தின் மூன்றாவது தளத்தில் இந்த ஆய்வகம் அமைந்துள்ளது. மேலும் இது அணுஉலைக்கு ஒரு கி.மீ. தொலைவிலேயே உள்ளது. சிங், பாக் ஆகிய இருவரும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருளை கையாளாத நிலையில் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 22, 2010: பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் எதிர்வினை குழுவைச் சேர்ந்த பொறியாளர் மகாதேவன் பத்மநாபன் (48) தெற்கு மும்பையில் உள்ள ஆனந்த் பவன் ஊழியர் குடியிருப்பில் இறந்து கிடந்தார். முதலில் மாரடைப்பால் அவர் இறந்திருக்கலாம் என்றும், பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறையும் கருதியது. ஆனால் பிரேதப் பரிசோதனையில் அவர் கொல்லப்பட்டது தெரிந்தது.

ஏப்ரல் 8, 2010: தில்லி மாயபுரி கழிவுச் சந்தைக்கு கோபால்ட் 60 என்ற கதிரியக்கக் கருவி வந்தது. அதிலிருந்து வெளிப்பட்ட கதிரியக்கத்துக்கு ஒருவர் பலியானார், பலர் கடுமையாக காயமடைந்தனர். இந்தக் கருவி தில்லி பல்கலைக்கழக வேதியியல் துறை மூலம் எடைக்குப் போடப்பட்டிருந்தது பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

சூன் 28, 20010: அலிகர் இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறையில் கதிரியக்கப் பொருள் இருந்தது பெரும் பீதியை உருவாக்கியது. இது எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் நிபுணர்களை அனுப்பியது.