bird-watching

ஆயிரம் பக்கம் எழுதினாலும் புரியவைக்க முடியாத செய்தியினை ஒரே ஒரு புகைப்படம் ஆயிரம் அர்த்தங்களைப் புரிய வைத்துவிடும். அதிலும் காட்டுயிர் புகைப்படக் கலைஞர்களின் பணி சவாலானது. இயற்கையான வெளிச்சத்தில் எடுக்க வேண்டும். மனிதர்களைப்போல் விலங்குகளை ‘போஸ்’ கொடுக்கச் சொல்லி எடுக்க முடியாது. உணவு, தண்ணீர் இல்லா மல் நீண்ட நேரம் பொறுமையுடன் இருக்கவேண்டும். நாலாபுறமும் பார்வையைச் செலுத்தியபடி இருக்க வேண்டும். இன்னும் பற்பல சவால்கள்.

 டிஜிட்டல் கேமராவின் வரவும் நேசனல் ஜியாக்கிரபி, டிஸ்கவரி, அனிமல் பிளானெட் சேனல்களும், முகநூல், டுவிட்டர் கணக்குகளும் காட்டுயிர் புகைப்படக்கலையை உச்சத்திற்குக் கொண்டுபோய் இருக்கிறது என்பது உண்மை தான். காட்டுயிர் ஆவணப்பட இயக்குநர்கள் அல்போன்ஸ்ராய், சேகர் தத்தாத்ரி போன்றவர்களின் பேட்டியும் பல வண்ணத்தாளில் வெளிவரும் காட்டுயிர் புத்தகங்களும் அவ்வப்போது வார இதழ்களில் வரும் புகைப்பட பக்கங்களும் நிறையப் பேரை உசுப்பேற்றி கையில் காமிராவுடன் காட்டுக்குள்ளும் குளக்கரை களிலும் சுற்ற வைத்துள்ளதைக் கண்கூடாய்ப் பார்க்க முடிகிறது. முன்பு இதே போல் கென்னத் ஆண்டர்சன், ஜிம் கார்பெட் ஆகியோரின் வேட்டைக் கதைகளைப் படித்துவிட்டு துப்பாக்கியுடன் திரிந்ததாய் படித்தி ருக்கிறேன். தற்போது துப்பாக்கியால் சுடமுடியாததால் கேமிராவினால் சுடுகிறார்கள்.

 காட்டுயிர் மேல் காதல் வந்தவுடன் பலரும் முதலில் வாங்க நினைப்பது கேமிரா தான். வசதி படைத்தவர்கள், டாக்டர்கள், தகவல் தொழில் நுட்பப் பணிபுரிகிறவர்கள், கை நிறைய சம்பளம் வாங்குபவர்களுக்குத் தரமான கேமரா வாங்குவது ஒன்றும் பெரிய விசயமல்ல. மேலும் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை இந்தத் துறையில் கால் பதித்துள்ளது மகிழ்ச்சியைத் தந்தாலும் சில போட்டோகிராபர்கள் நடந்துகொள்ளும் விதம் வேட்டைக்காரர்களுக்கு இவர்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்றே எண்ணத் தோன்றுகிறது.

 காட்டுயிர்களைப் புகைப்படம் எடுக்க அவற்றைப் படுத்தும்பாடு இருக்கிறதே அப்பப்பா! அவை அடிக்கடி தென்படும் இடங்களில் சூழலோடு ஒன்றிணையும் ஆடைகளை அணிந்துகொண்டு பதுங்கியிருந்து ஓசையில்லாமலும் சில வேளைகளில் ஒரு விலங்கைப் போல் ஓசையிட்டும் அதை அருகில் வரவைத்தும் புகைப்படம் எடுப்பதைப் பார்த்தால் வேட்டைக்காரர்கள் கையில் துப்பாக்கி இவர்கள் கையில் கேமரா அவ்வளவு தான் வேறுபாடு என்று தோன்றுகிறது.

 சந்தேகமே வேண்டாம் மனிதர்களின் வாடையைக் கண்டாலே விலங்குகள் விலகியே செல்லும். இந்த நவீன புகைப்படக்காரர்களோ கையில் கோக் புட்டியுடன். நல்ல கோடைக்காலத்தில் நீர் நிலைகள் பக்கம் காட்டுயிர்கள் தண்ணீர் அருந்தவரும் இடங்களில் கையில் கேமிராவுடன் உட்கார்ந்துவிடுகின்றனர். அவர்களைக் கண்டு அஞ்சி விலங்குகள் அரை குறை யாகத் தண்ணீரை வாரிக்குடித்துச் சென்றுவிடுகின்றன. இவர்களுக்கோ நல்ல படம் கிடைத்துவிடுகிறது. ஆனால் அவற்றின் தாகம் தீராத தாகமாகவே போய்விடுகிறது.

 போதாக்குறைக்கு நாங்கள் சூழல் சுற்றுலா நடத்துகிறோமாக்கும் என்று கூறிக்கொண்டு சுற்றுலா விடுதிகளுக்கு அருகே தண்ணீர்க் குட்டையைச் செயற்கையாக உருவாக்கி அதை நாடி வரும் விலங்கினங்களை புகைப்படக்காரர்களுக்குக் காட்டி சுற்றுலா விடுதிகளும் காசு பார்த்து வருகின்றன.

 தண்ணீர், உணவு, உப்பு இருந்தால் விலங்குகள் நாடி வரத்தான் செய்யும். இதை செயற்கையாகச் செய்யும் போது காட்டு விலங்குகளை, மனிதர்களைச் சார்ந்து வாழக் கட்டாயப்படுத்துகிறோம். இவற்றை நாடி வரும்போது அவை வண்டி வாகனங்களில் அடிபடவும் நாமே காரணமாய் அமைகிறோம்.

 இது மட்டுமா! இரவு நேரத்தில் திரியும் ஊர்வனவற்றையும், சிறு பூச்சிகளையும் பறவைகளையும் படம் எடுக்க ஒட்டுப்பசை ஒன்றை அவை செல்லும் பாதை யில் தடவிவிடுகிறார்கள். அவ்விலங்குகள் அதிலிருந்து விடுபடமுடியாமல் ஒட்டிக்கொள்ள இவர்களோ அலுங்காமல் அடுத்த நாள் வெளிச்சத்தில் வந்து படம் எடுகிறார்கள். இதில் மாட்டிக்கொள்ளும் சிறிய கொறி விலங்குகளும் பூச்சிகளும் சந்தேகமே இல்லாமல் சாகடிக்கப்படுகின்றன.

 தேவாங்கைப் படம் எடுக்க வேண்டுமா? அவற்றை ஒரு சிறு கயிற்றால் கட்டிப்போட்டு அவை மிரட்சியுடன் அலைபாய அதைப் படம் பிடிக்கிறார்கள். அவற்றின் சிறிய இதயம் என்னமாய்த் துடிக்கும். இரக்கமுள்ள சிலரோ கட்டிப்போட்டால் நன்றாய் இருக்காது. அது தொழிலுக்கு அழகாகாது. எனவே இந்த மரத்தில் தேவாங்கைக் கொண்டு வந்து விட்டுவிடுங்கள் சுற்றிலும் உள்ள மரங்களையும் புதர்களையும் அகற்றி விடுங்கள். அது போதும். அது எங்கும் செல்ல முடியாமல் சிக்கிக்கொள்ள இவர்கள் இயற்கையான பின்னணியுடன் தத்ரூபமாக வளைத்து வளைத்து போட்டோ எடுத்துத்தள்ளுகிறார்கள். “சுமைல் பிளீஸ்” என்று சொல்லாததுதான் ஒரே குறை.

 மேலும் சிலர் மயிர்க்கூச்செரியும் காட்சிகளை எடுப்பதற்காக பாதுகாப் பாய் காரில் அமர்ந்து கொண்டு விலங்குகளைச் சீண்டி அவை துரத்தி வரும் காட்சியினையும் கோரப்பல்லைக் காட்டும் காட்சியை யும் தான் பதிவு செய்கிறார்கள். அப்போது தானே அக்காட்சிகளை முகநூலில் படரவிட்டு அதிகம் பேர் விருப்பம் தெரிவிக்க முடியும்.

 எல்லா விலங்குகளுக்கும் தீடீரெனப் பரவும் ஒளி வெள்ளம் (ஃபிளாஸ்) கண்களைக் கூசச் செய்வதோடு ஒருவித படபடப்பையும் மிரட்சியையும் ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் புகைப்படம் எடுப்பவர்கள் கல்யாணக்காட்சியை எடுப்பது போல ஒளிவெள்ளத்தை விளாசுகிறார்கள்.

 சில ஆண்டுகளுக்குமுன் புகழ்மிக்க காட்டுயிர் இதழ் ஒன்று காட்டுயிர் புகைப்படப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. அப்போது ஒரு புகைப்படக்கலைஞர் ஓர் அரிய பறவை ஒன்று கூட்டிலிருந்த குஞ்சுக்கு இரையூட்டும் கவின்மிகு காட்சியினை பதிவு செய்து அனுப்பியிருந்தார். அவரைத் தொடர்ந்து அங்கு பறவை ஆர்வமுடையவர் சென்றபோது அங்கு கூடு எல்லாம் பிய்த்துப் போடப்பட்டுக் கிடந்தது. அப்போது வினவியபோது, தான் எடுத்த காட்சி வேறு யாருக்கும் கிட்டி விடக்கூடாது என்பதற்காக படம் எடுத்தவரே கூட்டையும் கலைத்துப் போட்டு விட்டுச் சென்றிருக்கிறார் என்று தெரிய வந்தது. இப்படியெல்லாம் கூட செய்வார்களா என்று நீங்கள் கேட்பது எங்களுக்கும் கேட்கிறது. இந்தக் கொலைவெறி காரணமாக தற்போது கூட்டிலிருக்கும் பறவை போட்டோவே இருக்கக் கூடாது என்பதை விதியாகவே புகைப்படப் போட்டியில் கொண்டு வந்துவிட்டனர்.

 பறவைகளின் படங்களை குளோசப் ஷாட் எடுப்ப தற்காக அவற்றுக்குத் தீனி போட்டும் அப்பறவை எழுப்பும் ஒலியையும் இணைத்துக் ‘கவர்’ செய்வதற்காக அவை எழுப்பும் ஒலியையும் பதிவு செய்து மீட்டியும் அப்பறவையினை அருகில் வரவைத்துப் படம் எடுக்கிறார்கள். இது மட்டுமின்றி வேட்டையாடிப் பறவையான வல்லூறு போன்ற பறவையின் ஒலியினை மீட்டி மறைந்து இருக்கும் பறவையினை கலவரமூட்டி திக்கு முக்காடச் செய்து பறக்க வைத்தும் பதிவுசெய் கிறார்கள். கூட்டமாகப் பறவைகள் பறக்கும் காட்சி வேண்டுமா. அவை இருக்குமிடத்தில் ஒரு வேட்டு வெடித்தால் போகிறது. இதயம் துடிதுடிக்க அவை பறந்து செல்லும் காட்சியைக் கிளிக் செய்வார்கள். நாம் எவ்வளவு இரம்மியமான காட்சி என்று வாய் பிளந்து நிற்போம். உண்மையில் சொல்லப்போனால் வேடர்கள் ஒருமுறை தான் சாகடிக்கிறார்கள். இவர்களோ ஒவ்வொரு முறையும் விலங்குகளைச் சாகடிக்கிறார்கள்.

 இன்னும் சில கூத்துகளையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது. சாதுவான விலங்காய் இருந்தால் அவற்றைத் துரத்தியும் அச்சப்பட வைக்கும் விலங்காய் இருந்தால் அவை தாக்கத் தயாராகும் காட்சியினையும் கோரப்பல் தெரிய உறுமும் காட்சியையும் எடுக்கிறார்கள். பாம்பு சீறுவதைப் படம் எடுக்க அவற்றைச் சீண்டி தொல்லைப் படுத்தி படம் எடுக்கிறார்கள். அப்போது தானே அவரையும் படத்தையும் ஆச்சரியமுடன் பார்ப்போம். முகநூலிலும் விருப்பம் அதிகரிக்கும். நமது விருப்பத்தை அறிந்துகொண்ட சேனல்களும் பாம்பு, புலி, முதலை போன்றவற்றையும் அதை அனாயசமாகக் கையாளும் சாகசப்பிரியர்களையும்தான் அதி கம் காண்பிக்க ஆரம்பித்துவிட்டன. இதை ஆராய்ச்சி செய்பவர்கள் தான் ஆராய்ச்சியாளர்கள் மற்றவர்கள் எல்லாம் வெத்து வேட்டு என்று எண்ணும் மனோ பாவமும் ஊறிக்கிடக்கிறது. இன்னும் காட்டப்படாத விலங்குகளும் பதிவு செய்யப்படாத உயிரினங்களும் கணக்கற்று இருக்கின்றன. ஆனால் பெரும்பாலோனோர் அதன் பக்கம் பார்வையைத் திருப்புவதே இல்லை. இக்குறையினை புகைப்படக்கலைஞர்கள் கல்யாண் வர்மா, சண்முகானந்தம், ஜெகந்நாதன் போன்றவர்கள் போக்கி வருகின்றனர். இந்தப் பட்டியலில் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். அனைவர் பெயரையும் சொல்ல இயலாது. பொறுத்தருள்க) சிலர் ஆவணப்படுத்துகிறேன் பேர்வழி என்று மீன்களையும் தவளைகளையும் சிறு உயிரினங்களையும் பிடித்து கண்ணாடிக்குடுவையில் போட்டும் ஒலி & ஒளி அமைப்பு செய்தும் படம் எடுக்கிறார்கள். கேட்டால் ‘வரலாறு முக்கியம் அமைச்சரே’ என்கிறார்கள். இவர்கள் ஒரு தவளையை எடுப்பதற்குள் ஒன்பது தவளையைக் கொன்று விடுகிறார்கள். இந்த அவலம் நேராமல் படம் எடுப்பதுதான் தற்போதைய சவால்.

 சிலர் ஒரு விலங்கின் படத்தை எடுத்துக் கணிணி மென்பொருள் துணையுடன் சித்து வேலைகள் செய்தும் காண்பிக்கிறார்கள். இன்னும் சிலர் விலங்கின் காதையும் மூக்கையும் இழுத்து நீட்டி விட்டு இதுவரையிலும் யாரும் கண்டிராத புதிய உயிரினமாகவே இடம் பெறச்செய்து விடுகிறார்கள். அந்தக் காட்சிக்குப் பின் ஒளிந்திருக்கும் சூட்சுமம் தெரியாமல் வாய் பிளந்து நிற்போம். (தான் எடுத்த படத்தை மாறுபாடு செய்தால் அதைக் குறிப்பிடவேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதுதான் கலைஞர்களுக்கான அடையாளம். ஆனால் அதைப் பெரும்பாலோனோர் செய்வதில்லை). இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது, காட்டுயிர் புகைப்படக் கலை.

 சரி எப்படித்தான் படம் எடுப்பது என்று தானே கேட்கிறீர்கள்.

 இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லிவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். நான் ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞன் இல்லை.

ஏன் புகைப்படக் கலைஞனாக ஆகவில்லை என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? கல்லூரி முதலாம் ஆண்டு. வகுப்பு முடியப்போகும் முன்பு வகுப்பிற்கு ஒரு சுற்றறிக்கை வந்தது. அதில் இன்று மாலை புகைப்படக்கலை மன்றம் தொடக்கவிழா இருப்பதாகவும் அதில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது. நானும் ஆர்வமிகுதியால் அங்கு சென்றிருந்தேன். அப்போது டிஜிட்டல் கேமிரா வராத காலம்.

 கேமிராவின் விலையும் அதிகம். இன்னும் சொல்லப் போனால் நான் கேமிராவைத் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. ஆங்கிலப் பேராசிரியர் அந்த மன்றத் திற்குத் தலைமை தாங்கினார். அவர் தொடக்கவுரை யாற்றும்போது, இது செலவு பிடிக்கும் ஒரு கலை. கேமரா வேண்டும். புகைப்படச் சுருள் வாங்க வேண்டும்.

கழுவி அதை பிரதியெடுக்க வேண்டும். அப்போதைய கணக்குப் படி குறைந்தது 300 ரூபாயாவது ஆகும் என்றார். அப் போது முடிவு செய்தேன். இது பணக்காரர்களுக்கானது நமக்கல்ல என்று அந்த சம்பவம் என்னுள் ஆழமாகப் பதிந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதன் பின் கேமரா வாங்கிய போதும், அருமையான கேமராவை எனது கல்லூரித் தோழன் பாரதி பரிசளித்தபோதும் எனக்கு படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தது இல்லை.

 ஆயினும் காட்டுயிர் புகைப்படக் கண்காட்சியினை திண்டுக்கல், கோயமுத்தூர், திருச்சியில் முதன்முதலாக நடத்திய அனுபவம் உண்டு. அந்த அனுபவத்திலும் காட்டுயிர் புகைப்படக்கலைஞர் மருத்துவர் டால்ஸ்டாய் போன்றவர்களோடு உரையாடும்போதும் ஒன்று புரிந்தது. விலங்குகளைப் பதிவு செய்வதோடு நில்லாமல் அதைப் பாதுகாக்கும் நோக்கோடு எடுக்கப்படும் கன்சர்வேசன் போட்டோகிராபி தான் முதன்மையாகப்படுகிறது. இன்று விலங்குகள் எதிர்கொள்ளும் சிக்கலை படம் எடுத்துக்காட்ட வேண்டியது அவசியம். வெறும் அழகியலை மட்டுமே காட்டிக்கொண்டிருக்க முடியாது அல்லவா?

 காட்டுயிர் காப்பிடங்களில் நடக்கும் முறைகேடான நடவடிக்கைகளான விலங்கு வேட்டை, மரம் கடத்தல், வாழிட தகர்ப்பு, தேவையற்ற கட்டுமானம், மனித அத்துமீறல், ஆக்கிர மிப்பு, மட்டுமீறிய மேய்ச்சல், காட்டுத்தீ, காட்டுப்பகுதியில் புதிதாகச் சாலை அமைத்தல், கண்ணியில் மாட்டி அல்லல் படும் விலங்குகள் போன்றவற்றையும் பதிவு செய்யலாம். விலங்குகளைப் பிடிக்க கண்ணியோ வலையோ விரித்திருந்தாலோ, சிதறிய தோட்டாக்கள் ஏதேனும் இருந்தாலோ அதனையும் பதிவு செய்யலாம். இதனைக் குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அனுப்பலாம்.

 மேலும், மின்வேலிகளிலும் சாலையிலும் அடிபட்டுச் சாகும் உயிரினங்கள் படும் அவலங்களைப் பதிவு செய்யலாம். காட்டு விலங்குகளை யாரேனும் சட்டத்திற்குப் புறம்பாக வளர்த்தாலோ அதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு ஆதாரத்துடன் தகவல் தரலாம். சுற்றுலாவினால் நேரும் தீங்குகள், காட்டுத்தீ, உணவு தேடி அல்லாடும் விலங்குகளையும் பதிவுசெய்யலாம்.

 அண்மையில் மின்சாரக் கம்பங்களில் மாட்டி மாண்டு தொங்கியபடி இருந்த தேவாங்கு படம் ஒன்றை எடுத்திருந்தேன். இச்செய்தி தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா இதழ்களில் வந்தது. இப்படம் மின்வடக்கம்பி களுக்கு அருகில் செல்லும் புதர்களைப் பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தது. இது போன்று படங் களையும் பதிவு செய்யலாம்.

 அழகான இயற்கை கொஞ்சும் காட்சிகளும் அவசி யம் தான். ஆனால் அந்த காட்சிகள் காலத்திற்கு நிலைத்து நிற்க வேண்டுமாயின் சுற்றுச்சூழல் சீர்கேடு, நதிகளும் நீர்நிலைகளும் தொழிற்சாலைக்கழிவுகளால் நாசமாய்ப் போவது போன்ற படங்களும் அவசியம். பெரும்பாலான கேமிராக்கள் இதைப் பதிவு செய்வது இல்லை. அதில் உள்ள அழுக்கும் மாசும் கேமராவுக்குள் வந்து விடும் எனப்பயம் போலும்.

 மேலும் ஒரு வாழிடம் காலப்போக்கில் எப்படி எல்லாம் உருமாறி வருகின்றன என்பதைத் தொடர்ந்து ஆவணப்படுத்துவதும் அவசியம். குறிப்பாக ஒரு மலைச் சுரங்கம் தோண்ட ஆரம்பிக்கும்போது எப்படி இருந்தது. தொழிற்சாலை வருவதற்கு முன் எப்படி இருந்தது தற்போது எப்படி உருமாற்றம் அடைந்து வருகிறது என்பதையும் பதிவுசெய்ய வேண்டும் அப் போது தான் “எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்” என்று காண்பித்துச் சுற்றுச்சூழல் பேராபத்திற்கு எதிராக மக்களை ஒருங்கிணைக்க முடியும்.

 இறுதியாக ஒரு வார்த்தை.

 ‘‘இங்கு இருந்து ஏதாவது எடுத்துச்செல்ல விரும் பினால் அதைப் புகைப்படமாக உங்கள் கேமராவுக்குள் எடுத்துச் செல்லுங்கள்.

இங்கு ஏதேனும் விட்டுச்செல்வதாய் இருந்தால் அது உங்கள் காலடித்தடமாக மட்டும் இருக்கட்டும்”.

இந்த வாசகம் ஒரு காட்டுயிர் காப்பிடத்தின் முன் எழுதப்பட்டிருந்தது. முதலில் உங்களைப் போலவே மேலெழுந்தவாரியாக வாசித்துப் பார்த்தபோது அருமையான வாசகமாகத்தான் எனக்கும் பட்டது. தற்போது இதை மாற்றி எழுத வேண்டும்போல் தெரிகிறது. என்ன சொல்கிறீர்கள்?