திருப்பரங்குன்றத்தை விளக்கும் பகுதியில்,

'இருஞ்சேற்று அகல்வயல் விரிந்து

வாய் அவிழ்ந்த

முள் தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்

கள் கமழ் நெய்தல் ஊதி, எல்படக்

கண்போல் மலர்ந்த காமரு சுனை மலர்

அம்சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும்

குன்று அமர்ந்து உறைதலும் உரியன்'

என்றுமுருகனைப் பற்றி நக்கீரர் குறிப்பிடுகிறார்.

தொட்டு உணருமாறு உள்ள சிறு, சிறு முள்ளுடைத் தண்டில் மலர்ந்த  தாமரையில் (அல்லித் தண்டு வளவளப்பாக இருக்கும்) பகல் நேரத்தில் தேன் உண்ண வந்த வண்டு, மயங்கி, இரவு நேரப் புறக் குளிருக்கு மாறாக வெதுவெதுப்பான வெப்பத்தைத் தன்னகத்தே பொதிந்து வைத்துள்ள தாமரையினுள் ''சொகுசாக மகிழ்வுடன் மயங்கி'' இரவு நேரத்தில் தங்கி இருந்துவிட்டு, மகிழ்வுடன் காலையில் 'தாமரை மலரும் போது' வண்டு பறந்து செல்கின்றது என்பதை இப்பாடல் விளக்குகிறது.

இப்பாடல் அடியில் புறச்சூழலில் எவ்வளவு குளிர்ச்சி உடையதாக இருந்தும் அகத்தில் அள வான, மிதமான, சிறு வெப்பத்தைத் தாமரை தாங்கி யிருக்கிறது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்து கிறது. இதன் காரணமாக வண்டினங்கள் கூடக் ''கதகதப்புடன் துயிலுவதற்கு'' ஏற்ற இடமாகத் தாமரை உட்பகுதியைத் தேர்ந்தெடுத்திருப்பது காட்டப்படுகிறது என உரை கூறுகிறார் உரையாசிரியர் திரு. சம்பத்.

இத்தகைய அருமைப்பாடு உடையதாலேயே, தாமரை

''பூவெனப் படுவது பொறிவாழ் பூவே''

இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிகின்றோம்.

அகநானூறு, மருதம் - 46,  அள்ளூர் நல் முல்லையார் பாடலில்,

சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்

ஊர் மடி கங்குலில்.......

..தாமரை வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர'!

என வருகிறது. பரத்தமை ஒழுகிய தலைமகனை வாயில் மறுத்துக் கடிகின்ற தோழி கூற்றாக அமைகின்ற இப்பாடலில், தலைவன் சிவந்த கண்ணுடைய கரிய பசுவிற்கு உவமையாக்கப் படுகின்றான். அப்பசுவானது ஊரே தூங்குகின்ற நள்ளிரவில் கட்டவிழ்ந்து வேலி நீக்கி வயலில் திரியும் மீன்கள் சிதைய, ''வண்டுகள் உறங்குகின்ற குளிர்ந்த தாமரையை அப்படியே உண்ணுகின்றன''. இதன் வாயிலாக வண்டினங்கள் இரவினுள் குளிர்ந்த புறச்சூழல்விட்டு மிதமான சிறு வெப்பத்தை உள்பொதிந்து வைத்துள்ள தாமரையில் சுகமாகத் தூங்குகின்றன எனக் காட்சிப் படுத்துவது புலவரின் நுண்மாண்நுழை புலத்தைப் புலப்படுத்துகின்றது.

ஐங்குறுநூறு வேழப்பத்து -பாடல் -20லும் விளக்கப் படும் விதம் அறிவியல் நுட்பமும் மென்மையும் நிறைந்தது.

''அறுசில் கால அஞ்சிறைத் தும்பி

நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்

காம்புகண் டன்ன தூம்புடை வேழத்து......'

என தங்கிச் செல்லும் வண்டுகளின் கால்களின், நுண்ணிய மயிர்க்கால்களில் மகரந்தத் துகள்களை ஒட்டிச் செல்லுவதும்,  பிற மலர்களுக்கு அவை எடுத்துச் செல்லப்பட்டு அங்கே  ஒட்டிவைக்கப்படுவதும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவை புலவரால் வெகு இயல்பாக, அதனினும் சிறப்பாகத் தற்குறிப் பேற்றமாகத் 'தலைவனுடைய பரத்தமை' ஒழுக்கத்திற்கு உவமை காட்டும் நோக்கில் 'வண்டுகள் மகரந்தத்தைத் துடைத்துக் கொண்டு செல்வதுபோல்'  என கோடிட்டுக் காட்டுவது ''அயல் மகரந்த சேர்க்கை''யின் நுட்பத்தைப் புலவர் அறிந்திருப்பதைப் புலப்படுத்துகின்றது.

அகநானூறு - 78ஆம் பாடலில் காணப்படும் செய்தி இன்னும் சுவையானது, நுட்பமானது, தாமரை ''வண்டுகள் துணையுடன்'' வந்து கூடி மகிழ்வதற்கு ஏற்ற பள்ளியறையாகத் ''தாமரையின் உள்ளகம்'' திகழ்கிறது எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

''பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை

இன் மலர் இமிர்பு ஊதும் துணை

புணர் இருந்தும்பி

உண்துறை உடைந்த பூப் புனல் சாய்ப்ப புலந்து

ஊடி பண்புடை நல் நாட்டுப் பகை

தலை வந்தன''

இங்கு இன்றைய நடைமுறையில் உதகை போன்ற குளிர்ந்த பகுதிக்குத் தேனிலவு செல்லும் தம்பதியினர் தங்கும் ''உள்ளகம்'' வெப்பமூட்டப் பெற்று கதகதப் பாக, மிதமான வெப்பமாக மாற்றப் பட்டு மகிழ்வூட்டுவது, ஒப்பு நோக்கத்தக்கது. மேலும் ''நுண்தாது பொதிந்த செங்கால் கொழுமுகை முண்டகம்''... என அகநானூறு 130, பாடலில் (நெய்தல்)   கூறப்படுவது இக்கருத்தோடு ஒப்பு நோக்கத்தக்கது.

மேலும், தாமரை மலர் விரிந்தபொழுது ஒளிப்பிழம்பிற்கும் மற்றும் குவிந்த நிலையில் சுடரின் வடிவத்திற்கும் உவமையாகக் காட்டுவது சங்கப் புலவர்களின் மரபாக அறியப்படுகிறது. இதன் வாயிலாகத் தாமரையின் உள்பொதிந்த வெப்பம்தான் புலவரால்  உணர்த்தப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

''விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்''  நற்றிணை பாடல் 310

'சுடர்ப்பூந்தாமரை' அகநாநூறு - 6 மருதம்

'எரி அனகந்தன்ன தாமரை'' 106, 116

'முட்டாள் சுடர்த்தாமரை' மதுரைக்காஞ்சி வரி - 249

'கடவுள் கயத்து அமன்ற சுடர்இதழ்த் தாமரைத் தாதுபடு பெரும்போது' 710

''முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது

கொங்குகவர் நீலச் செங்கட் செலவு

மதிசே ரரவின் மானத் தோன்றும்''

(பத்துப்பாட்டு, -சிறுபாணாற்றுப்படை 184&86)

தாமரை - 'தண்ணீர் ஒட்டா' - நேனோ தொழில் நுட்பம்  :

இயற்கையினின்று தொழில் நுட்பத்தைப் படிக்கும் முகமாக, தாமரையின் இலை மீது நீர் ஒட்டாமல் இருப்பதற்கான ஆராய்ச்சியும், அதன் பயன்பாடு களும், தாமரை தொடர்பான புரிதல்களை வேறு தளத்திற்கு இட்டுச் செல்கின்றன. தாமரை இலையில் நீர் ஒட்டாமல் இருப்பது ஏன்? இந்த இரகசியத்தைத் தாமரைமலர் இலைகளிடம்தான் கேட்க வேண்டும். ஆம், தாமரையிலையிலிருந்து இந்தத் தந்திரத்தை அறிவியல் எடுத்துக் கொண்டது. இயற்கையைப் படி எடுத்து அதைத் தொழில்நுட்பத்தில் புகுத்தும் புதிய முறையை உயிர் - படி எடு தொழில்நுட்பம் (ஙிவீஷீஸீவீநீs) என்கிறார்கள். இத்தொழில் நுட்ப உயிரினங் களிலிருந்து தந்திரங் களைக் கண்டறியும் ஆய்வில் இதற்கான  விடை தெரிகிறது.

வில்லியம் பர்த்லாட் என்பவருக்குத் 'தாமரை மலரையும் அதன் இலைகளையும்' பார்க்கும் போதெல்லாம் வியப்பு ஏற்படும். சேற்றிலிருந்து வெளிப்பட்டாலும் அதன் மீது துளி அழுக்குக் கூட இல்லாமல் எந்நேரமும் புத்தம் புதிதாக  இருப்பதன் மர்மம் என்னவாக இருக்கும் என்று யோசிப்பார். மின்னணு நுண்ணோக்கி மூலம் பார்த்தபொழுது, இலையினைக் கழுவாத நிலையிலும், அதன்மீது தூசி ஒன்றும் காணப்படவில்லை. உண்மையில் தூசி இல்லாமலிருப்பதற்கு மெழுகுப் படலம் அல்லாமல் இராணுவ அணிவகுப்புப் போல வரிசையாகக் குன்றுகள் போன்ற அமைப்பு அங்கே இருந்ததே காரணம். இந்த அமைப்புதான் தண்ணீரை உருண்டோடிக் கூடவே தூசிகளையும் அடித்துச் செல்வதற்குக் காரணம் என்பதும் தெரிந்தது.

பர்த்லாட், 'தாமரை இலைத் தத்துவத்தின்' அடிப்படையில் ஒரு சிலிக்கன் பூச்சு கொண்டு கண்ணாடிப்பரப்பைத் தயாரித்தார். அது 'நீர் எதிர்த்தன்மையைக்' கொண்டதாக இருந்தது. சிலிக்கன் பூச்சு கொண்ட தேக்கரண்டியில் தேன் ஒரு துளி கூட ஒட்டாமல் வழிந்தோடியது. மேலும் இந்நுட்பம் என்ற நீரெதிர் நூலிழைகள் உருவாக்கப் பயன்படுகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட 'தாமரைப் பூச்சு'  எனும் நேனோ தொழில் நுட்ப ஆய்வு, தண்ணீர் அழுக்கு ஒட்டாத ஆடைகளும், சுவரினைக் காக்கும் நீர் ஒட்டாத வண்ண பூச்சுக்களும் தயாரிக்கும் முறைகளுக்கு அடிப்படை நுட்பமாகப் பயன்படுகிறது.

மேலும், அமெரிக்காவின் 'நாசா' போன்ற உயர் விண்கலத்தொழில் நுட்ப நிறுவனங்கள் 'தாமரை மெய்யியலின்' படி தூசி மற்றும் நுண்ணுயிர்கள் படியாத விண்கலப் பரப்பினை உருவாக்க முனைகின்றனர்.

சங்க காலத் தாமரை-தண்ணீர் ஒட்டா - நுட்பம் :

'தாமரை இலைத் தண்ணீர் போல' என ஒட்டா மலும், உறவாடாமலும் இருக்கும் மனிதர்களின் தன்மை மருதநில மக்கள் வழக்காற்றில் பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. தாமரை மலர், இலைகளின் மீது காணப்படும் நீர் எதிர் நாட்டமுள்ள நுண்மை யான மேடு, பள்ளங்களை அறிந்தும், பாடியும் வந்துள்ளனர்.

இத்தகைய தொழில்நுட்ப 'இயற்கையை' இயல் பாக உள்ளறிந்துதான் தங்கள் பாடல்களில் சங்கப் புலவர்கள் பதிவு செய்திருப்பார்களோ என்று ஆராயத் தோன்றுகிறது.

குவளை நாறும் குவை இருங் கூந்தல்,

ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,

குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன

நுண் பல் தித்தி, மாஅயோயே!....

(குறுந்தொகை 300 குறிஞ்சி)

இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைக் கூடி மகிழ்ந்த தலைவன் நினைத்துக் கூறுவதாக அமைந்த இப்பாட்டில், தலைவியது மேனியின் நிறப் பொலிவிற்குத் தாமரையின் புள்ளிவட்டத்தின் பொதிந்துள்ள நுண்ணிய பலவாகத் (நுண் பல் தித்தி) திரண்டுள்ள மகரந்தம் போன்றுள்ளது என்று  உவமையாக்கப்பட்டுள்ளது.

இப்பாடலில் தலைவனைக் கூடி மகிழ்ந்த நேரத்தில் தலைவி மேனியின்கண் சிலிர்ப்பு அவளின் மயிர்க்கால்களின் திரள் அமைப்பினை நுட்பமாகப் புலப்படுத்திக் காட்டுகிறது. இப்புலப்பாடு தலைவன் பார்வையில் தலைவியின் பொன்னிறப் பொலிவாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. இங்கே புலப்படும் புலவரின் அறிவியல் பார்வை, தாமரை மலரில் நுட்பமான ''சிறு பள்ளமும் மேடும் நெருங்கியும், மிகுந்தும் அமைந்துள்ளன'' என்பதும், இதன் காரணமாகவே தாமரை மலரினில் தண்ணீர் தங்காமல் உருண்டோடுகிறது என்றும் காட்டுவதாகக் கொள்ளலாம். இதே அடிப்படையில்தான் தாமரை இலையிலும் தண்ணீர் தங்காது பாதரசம் போல் உருண்டோடுகிறது.

இதில் நிலவு தாமரைக்கு உவமையாக்கப்படுவது தாமரையின் மித வெப்பம் கருதியோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதேவேளையில் பெரும்பாலும் 'மிகுந்த வெப்பத்தை' வெளிப்படுத்தும் சூரியனுக்கு உவமையாகத் தாமரை எங்கும் சங்க புலவர்களால் குறிப்பிடப்படாதது அறியத்தக்கது.

தாமரை - தமிழர் பண்பாடு - மெய்யியல் :

தாமரையின் தனித்தன்மை, தானும் தூய்மையாக இருந்து தன்னோடு சேர்ந்தவற்றையும் தூய்மையாக்கும் பண்பாகும். எனவேதான் தெய்வங்கள் விரும்பித்தங்கும் இடமாகத் தாமரை காட்டப்படுகிறது. தமிழர் அறிவியல் பூர்வமான அடிப்படையிலேயே மெய்யியல் குறியீடாகத் தாமரையைப் பயன்படுத்தினார்கள் என்பதுப் புலனாகின்றது.

''தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்'', (அகநானூறு - 361)

''வரி நுதல் எழில் வேழம் பூ நீர்

மேல் சொரிதர.........................  திரு நயந்து இருந்தென்ன தேம் கமழ் வெற்ப',

(கலித்தொகை - 44)

மேற்சொன்ன சங்கப் பாடல்களின் அடிப்படையில், வழிபாட்டு இடங்களுக்கு முன்பு நீர்நிலைகளை அமைப்பது தமிழர் மரபாகத் தெரிகிறது. அந்நீர் பல்வேறு பயன்பாட்டு நிலையிலும் தூய்மையாக இருக்க வேண்டும் என்றெண்ணியே குறிப்பாகத் தாமரை மலர்களைக் கோயிற் குளங்களில் வளர்த்துப் பேணியதாக எண்ண இடம் இருக்கின்றது. (சான்று பொற்றாமரைக்குளம், சித்தண்ண வாசல் பொய்கை ஓவியங்கள்)

மேலும் இன்றைய அறிவியல் ஆய்வு முடிவுகளின்படி இக்குளங்களில் தாமரைக்கிழங்கு, தண்டு முதலியன கிருமி நாசினித் தன்மை பெற்றிருப்பதாகக் கூறப்படுவதும் இவ்வாய்மையுடன் தொடர்புபடுத்தி, ஆய்வுக்குட் படுத்தப்பட வேண்டியதாகும்.

அன்னப் பறவை தூய்மையைக் குறிக்கும் ஒரு குறியீடு என்பது தமிழ் இலக்கியங்களில் காணப்படும் மரபாகும். 'நற்றாமரைக் குளத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்" எனக கூறப்படும் ஒளவையார் உவமை, அன்னங்கள் தாமரைக்குளத்தை அதன் தூய்மைகருதியே நாடி வருகின்றனவோ? என எண்ணத் தூண்டுகிறது.

மேலும், தென்பாண்டி நாட்டு மக்கள் வழக்காற்றில் ''தாமரை போல் ஆயிரமாயிரம்  ஆண்டுகள் வாழ்க'' என்று வாழ்த்துவது மரபாக உள்ளது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் என்று சொல்லப்பட்ட நுட்பம் இன்றைய அறிவியற் கண்டுபிடிப்புடன் ஒருங்கிணைந்து பொருத்துவது வியப்புக்கு உரியது. அண்மைக் காலங்களில் சீனாவில் தாவர அறிவியலாளர் 1500 ஆண்டுக்கு முந்தைய தாமரை விதையின் முளைப்புத் திறனை பரிசோதித்து, தாமரையின் முளைப்பு உயிர்ப்பை உறுதி செய்துள்ளனர், இதில் தமிழ் மக்கள் வழக்காறும், புலவர்களின் பதிவுகளும், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பும், ஒருங்கிணைந்து ஒரே நேர்கோட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாகத் தொடர்ந்து பயணிப்பது பெரிதும் வியந்து போற்றுதற்குரியது.

அஸ்கோ பர்போலாவின் அண்மைக்கால ஆய்வின்படி கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரீகத்தில் தொல் தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளார். இந்நிலையில் சிந்து வெளி அகழ்வாய்வின்போது கிடைத்த தூண்களின் மேற் பகுதியில் தாமரைச் சின்னங்கள் பொறிக்கப் பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பண்பாட்டு ஆய்வில் உற்று நோக்கி ஆராயக் கூடியது. ஷே. கார்டினர் என்ற ஐரோப்பிய அறிஞர் கூற்றுப்படி தெற்காசியாவின் தென்பகுதியே தாமரையின் பிறப்பிடம். தெற்காசிய பிறப்பிடம், சிந்துவெளிப் பயன்பாடு ஆகியன கொண்டு இதனை தமிழர் பண்பாட்டில் இணைந்தது என ஆராய்வதற்கு மிகுந்த வாய்ப்புள்ளது.

தொல்காப்பியத்தின்படி, தொல்காப்பியர் ஐந்திரம் அறிந்தவர். ஐந்திரம் என்பது இந்திய மெய்யியல் களின் மூல ஊற்று.  ஐந்திரத்தில்  'யோகம்' ஓர் உட்பிரிவு என்பதும், இன்றைய யோகா முறையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது என்பதும் நாம் அறிந்த ஒன்று. இத்தகைய ''யோகத்தில்'' குண்டலினி எழுப்பல் என்பது மூலாதாரச் சூட்டை மேலெழுப்புவதாகவே குறிக்கப்படும். இத்தகைய ''வெம்மையுடைய மூலாதார சக்கரங்கள்'' தாமரை மலர் குறியுடன் 32 இதழ் தாமரை, 1008 இதழ் தாமரை என்று கூறப்படுகிறது. மேலும் தமிழ்ச் சித்தர் மெய்யறிவு நிலையை அடைவது என்பது 1008 இதழ் வெண்தாமரைக் குறியீடாகச¢ சித்தர் மெய்யியல் நூல்களில் குறிக்கப்படுவது உற்று நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இத்தகு பல்வேறு சிறப்புக்களோடு அறியப்பட்டதால் தான் தமிழர்கள்

''பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை''

என்பர். (கபிலர் 99 வகை பூக்களைக் குறிஞ்சிப்பாட்டில் கூறிய எத்தனையோ பாடியுள்ளமை கவனிக்கத்தக்கது) அத்தனை மலர்களிலும் அணிகலனாக, தமிழர் மலர்ப் பண்பாட்டின் மணி முடியாகத் தாமரை திகழ்வது சுட்டப்படுகிறது. இங்ஙனம் தமிழர்கள் இயற்கை மரபுகளுடன் அடையாளப்படுத்தப்பட்ட தமிழர் தாமரை மலர் பண்பாடுகளை, நிறுவனப்படுத்தப்பட்ட சமயங்கள் வைதிகம், ஆசிவகம், சைனம், பௌத்தம், மற்றும் பிற சமயங்கள் உள்வாங்கிக் கொண்டனவா என்பது ஆராயப்பட வேண்டியது.

தாமரை - தமிழர் மருத்துவம் :

தமிழர்கள் தாமரையைப் பொதுப் பெயராகக் கொண்டு 20 வகையான தாவரங்களை அழைத்து அதனை வகைப்படுத்துகின்றனர். தாமரை மலரின் தண்டு, கிழங்கு முதலியவற்றை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். தமிழ்ச் சித்தர் மெய்யில் அடிப்படையாகக் கொண்ட சீனம் உள்ளிட்ட பிற நாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்திய தமிழ்ச் சித்த மருத்துவத்தில்  இதயம் இயங்குவதற்குப் பித்தம் இன்றியமையாதது. பித்தம் வெப்பத்தை அடிப்படையாகக் கொண்டது, 'உடல்சூடு கேடுற்று மாரடைப்பு' முதலிய இதய நோய்கள் வருகையில் மருந்தாகத் தாமரைப் பூவினை கொடுக்கும் நுட்பமான மருத்துவமுறை தமிழ் மருத்துவத்தில் இன்றும் உள்ளது. இப்பழக்கமானது 'கேடுற்ற தடைப்பட்ட சூட்டைச் சரி செய்யும் தன்மை வெப்பக் குணமுடைய தாமரைக்கு உண்டு' என்பதாலேயே ஏற்பட்டது எனலாம். மேலும், வெண்தாமரை மனநல, மூளை தொடர்பான மருத்துவமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

சங்ககால மருத்துவத் தாவரப் பன்மயம் - சங்ககாலத் தமிழர் அறிவு :

இன்றைய தாவரவியல் உலகில், மருத்துவத் தாவரங்களின் பன்மயக் கோட்பாடுகளும் அதனைப் பற்றிய அறிவும் வளர்ந்து வருகின்ற ஒரு துறையாக உள்ளது.

சங்ககாலத் தமிழர் மருத்துவத் தாவரப் பன்மய அறிவியலை' இனம்பிரித்துப் பார்க்கும்போது, சங்க இலக்கியம் முழுவதும், மருத்துவத் தாவரச் செடி, கொடி, மலர், மரம் எனப் பரவி 'திணை' நிலத்திற்கேற்ற வகைப்பாட்டியல் ஒழுங்கமைவுடன் காணப்படுகின்றன. சுமார் 200க்கு மேற்பட்ட மருத்துவத் தாவர இனங்கள் சொல்லப்படுகின்றன. சங்க இலக்கியத்தை, ஒரு மருத்துவத்தாவரக் களஞ்சியமாகவே, குறிப்பாகக் குறிஞ்சிப்பாட்டில் கபிலரால் ஒரே பாடலில் 99 வகையான மலர்த் தாவரங்கள் காட்டப்பட்டு உள்ளதை அக்காலத் தாவரப் பன்மயத்திற்கு ஓர் உரைகல்லாகக் கருதலாம்.

இன்னும் நுட்பமாக ஆராயப்படின் சங்ககாலத் தமிழர்கள், இன்றைய நிலையில் உள்ள ஆல்பா, பீட்டா தாவரப் பன்மய குறியீடுகளுக்கு மேலான, நுண்ணிய நிலையில் தாவரம்,  அதன் தன்மை, மரபு பன்மயத்தின் அலகான நிறம், வாழ்விடம், இயைந்து வாழும் தன்மை இவற்றைத்  தொடர்புபடுத்திய ''முழுமையான  தாவரச்சூழல் பன்மயம்" பற்றி அறிந்திருந்தனர் எனக் கூறலாம்.

சங்ககால இலக்கியத்தில் 'தாவரங்களின் பன் மயத்தை' ஆராயும்போது அவை, தாவரத்தின் சூழல், அதன் சார் பிற உயிரினங்கள், அவற்றின் பண்புகள், மகரந்த சேர்க்கைக்கு உதவும்நிலை,  அதன் வாழ்விடம் என முழுமையான பரிணாமத்தை தொடர்புபடுத்திப் பா£ப்பதை அறிய முடிகிறது. இதன் மூலம் சங்ககாலத்தில் தாவரப் பன்மயம், ஒரு சூழல் பன்மயத்தின் பரிணாமமாகப் பார்க்கப்பட்டது என்பது புலனாகிறது.

மேலும், சங்க காலத்தில் இன்று உயர்வாக பேசப்படும் மருத்துவத் தாவரத்தின் வகைப்பாடு, மருததுவத் தாவரப் பாதுகாப்பு மற்றும் அதன் பயன்பாடுகளை தமிழர்கள் அறிந்திருந்தனரா? என்ற வினாவிற்கான விளக்கத்தை பின்வருமாறு காணலாம். சங்க காலத்தில் ''உணவே மருந்து'' என உணவை மருத்துவமாகப் பார்க்கும் தன்மையுள்ளது. நாம் அடிப்படை உணவுப் பயிராகக் கருதும் நெல்லின் வகைகளையே அதன் மருத்துவ குணங்களுக்கு ஏற்ப வகைப்படுத்தியுள்ளனர் (சுமார் 300 வகைகள்). இவ்வழியில் தமிழர்கள் எல்லாத் தாவரங்களையும், மருத்துவத் தாவரமாக, அதன் அளவு, தரம் அறிந்து பயன்படுத்தினர் எனக் கூறுவது சிறந்ததாக இருக்கும். மருத்துவத் தாவரப் பன்மைய அறிவியலில், ''சங்ககாலத் தமிழர்'' மிக உயர்ந்த அறிவு நிலையைக் கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக தாவரப் பன்மயத்தையும், அதன் நுட்பமான இனங்கள், அவற்றின் அழிவு ஆகியவற்றை தொலை நோக்கோடு உணர்ந்தவர்கள் மட்டுமே 'மருத்துவத் தாவரப் பாதுகாப்பு'  பற்றிப் பேச இயலும். மருத்துவத் தாவரப் பாது காப்பினைப் பற்றிப் பேசுபவர்கள், மருத்துவ தாவரப் பன்மயத்தின் கூறுகளை முற்றிலுமாக அறிந்திருப்பர் என்பது பொது இயல்பு.

சங்கப் புலவரான கணியன் பூங்குன்றனாரின் மருத்துவத் தாவரங்களின் மேலுள்ள புரிதல்,  அதுகாறும் தமிழர் கொண்டிருந்த ''மருத்துவத் தாவரச் சேகரிப்பு மற்றும் பயன்பாடு'' தொடர்பான விதியினை விளக்குவதாக அமைகிறது,

''மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர்

உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப்

பொன்னுங் கொள்ளார் மன்னர் நன்னுதல்''

(நற்றினை 226, பாலை)

''மரஞ்சா மருந்து'' என்ற சொற்களை ஆராயும்கால்,  தமிழர்கள் - மருத்துவத் தாவரச் சேகரிப்பின் போது, பொதுவாக தாவர அழிவினை உருவாக்கும் சேகரிப்பு முறைகளான, வேரினை முழுமையாகத் தோண்டி எடுத்தல், வேர், மரப்பட்டைகளை முழுமையாக உரித்தல், வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவக் கொடி மேல்பாகத்தை முழுமையாக ஒடித்தல், விதைகளை அடுத்த தலைமுறைக்கின்றி முழுமையாக எடுத்துக் கொள்ளுதல், பூங்கொத்துகளை அப்படியே கொய்துவிடுதல் என்பன போன்ற முழுத் தாவர மூலிகை அழிவிற்கு காரணமான சேகரிப்பு முறைகளைப் ஊக்குவிக்கவில்லை. மேலும், அவ்வாறு செய்யாத சமூகக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தனர் என்பதும் இவற்றால் விளங்குகிறது. மரம் சாகும்படியான, அழிவைத் தூண்டும் முறைகளை கொள்ளாமல், நுட்பமாக அந்தத் தாவரமும் மற்றும் அதன் பன்மயமும் அழியாமல் போற்றும் முறைகளைப் பயன்படுத்தும் போக்கைக் தெளிவாகக் கொண்டிருந்தனர் என்பதும் இதனை நெடுங்காலமாக வாழ்வியல் அறமாக கொண்டிருந்தனர் என்பதும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.

ஒருவன் உயிரைக் காக்கக் கொடுக்கப்படும் மருந்திலும் (ஞிக்ஷீuரீs), கொல்லாமை என்னும் மெய்யியல் இருக்க வேண்டும் என்ற அவர்களின் உயரிய எண்ணம், அதன் வழி நுட்பமும், அவர்கள் மருத்துவத் தாவரம், மற்றும் அதன் சூழல் பாதுகாப்பினை முற்றிலுமாக எங்ஙனம் அறிந்து சமூக நோக்கில் செயல்படுத்தினர் என்பதும் விளக்கும். இன்று அழிந்து வரும் மருத்துத் தாவரத்தைப் பாதுகாக்க, மருத்துவத்தாவர பாதுகாப்பு மீண்டும் விதைத்தல். மூலிகை சேகரிப்பை முறைப்படுத்தும் மற்றும் வணிகத்தடை என்ற கொள்கைகளையே இன்றைய உலகம் சிந்திக்கும் வேளையில், இம்மாதிரியாகத் தயாரிக்கப்பட்ட மருந்தை பயன்படுத்தார் / பயன்படுத்தவே கூடாது என்றே சமூகக் கட்டுப்பாட்டை கனியன் பூங்குன்றன் சுட்டுவது ஒரு மருத்துவ தாவரப் பாதுகாப்பு புரட்சியின் வித்தாக உள்ளது.

தமிழர்களின் இத்தகைய பண்பு, இன்றைய மருத்துவ உலகமும், மருத்துவத் தாவரப்பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டுக் கொள்கைகளை வகுக்கும் உலகத் தாவரப் பாதுகாப்பு, உலக சுகாதார நிறுவனம்  போன்ற உயரிய அமைப்புகளும் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒர் உயரிய நுட்பம் ஆகும்.

மேற்கண்ட ஆய்வுகளினால், பெறப்பட்ட முடிவு களைச் சுருங்கக் கூறிடின், புதித (நவீன) அறிவியல் ஆய்வுகளில் தாமரை தொடர்பான முடிவுகளைப் பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.

தாமரை தன் மலரினுள் எப்பொழுதும் வெது வெதுப்பான வெப்பத்தினை (860 - 950 பாரன்ஹீட்) உற்பத்தி செய்கின்றன. மலரின் உள் வெப்ப நிலை மிகு குளிர்ச்சியான, மிகு வெண்மையான புறச் சூழல்களிலும் மாற்றம் அடைவ தில்லை. ஒரு சுடரினை போல் ஒளிர்கிறது. இந்த வெதுவெதுப் பான சிறு வெப்பத்தன்மையால் வண்டினங்கள் கவரப்படுகின்றன, இவை மகரந்தச் சேர்க்கையிலும் உதவுகின்றன. தாமரை மலர், இலைகளில் நுண்ணிய நுட்பமான மேடு பள்ளங்கள் நெருக்கமான புள்ளிகள் போல் காணப்படுகின்றன. இது அதன் தண்ணீர் ஒட்டாத் தன்மைக்குக் காரணமாகின்றன.

தாமரை விதைகள் 1000 ஆண்டுகளுக்கு மேலான முளைப்புத் திறனைப் பெற்றுள்ளன. தாமரை தூய்மையாக உள்ளது, தாமரை கிழங்குகள் கிருமி  நாசினித் தன்மை பெற்று உள்ளன. மேற்கண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் சங்க இலக்கியங்களில் புலவர்களால், நுட்பமாக உணரப்பட்டு விளக்கப் பட்டுள்ளன. தாமரையைப் போன்று புறத்தில் குளிர்ச்சியும், அகத்தே ''சிறு வெப்பமும்'' கொண்ட வளாகத் தலைவி இருக்கிறாள்.

முள்தாள் தாமரையில் உண்டு உறங்கும் வண்டு தன் கால்களில் மகரந்தத்தைத் துடைத்துக் கொண்டு செல்வதும், அயல் மகரந்தச் சேர்க்கைச் செயல்பாடு தலைவனின் பரத்தமைக்கு உவமையாக்கப் பட்டுள்ளது. தாமரையின் உள்ளே துணையுடன் துயிலும் வண்டு பாடப்பட்டுள்ளது. குவிந்த மலர் சுடரின் வடிவத்திற்கும் விரிந்த மலர் சுடர் எரி வதற்கும் உவமையாக்கப்பட்டுள்ளது.

தாமரையின் மலரில் காணப்படும் நுண்ணிய துகள் மகரந்தப் பொடி போன்று நுண்மையான பொலிவான நிறத்தைத் தலைவனைக் கூடிய பின் தலைவி பெற்றதாக உணர்த்தப்படுகிறது.

தாமரையின் நுண்தாது பொதிந்த தன்மையும், கோயில் குளங்களில் வளர்க்கப்படும், தாமரை மலரின் தூய தன்மையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் வழக்காற்றில் தாமரையின் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான உயிர்ப்புத் தன்மை அறியப்படுகிறது.

''தாமரை மலரில்'' தமிழரின மெய்யியல் தொடர் பான செய்திகள் காணப்படுகின்றன.

மருத்துவ தாவரப் பன்மயம் மருத்துவ தாவரப்பாதுகாப்பு நிலைகளில் இன்றைய அறிவியலில் வழங்கப்படும் கோட் பாடுகளுக்கெல்லாம் முன்மாதிரியாக தமிழர்களின் நுண்மான நுழைபுலம் ''மரஞ்சா மருந்து கொள்ளார் மாந்தர்'' என்ற கோட்பாட்டில் புலப்படுகிறது என்பதும் ஆய்வின் மூலம் தெரிகிறது.

பண்டையத் தமிழர்கள் இன்றைய உலகின் மிக ஆழமான, முன்னேறிய நுட்பமான அறிவினை அன்றே தாமரை மற்றும் மருத்துவத் தாவரம் அதன் பன்மயம் பற்றிய செய்திகளின் மூலம் நிரம்ப பெற்றிருந்தனர் என்பது இக்கருத்துகோள்களின் மூலம் மெய்ப்படுகின்றன.

சங்க இலக்கியங்களில் தாவரத் தொழில் நுட்பங்கள் மற்றும் அதன் புரிதல்களை ஆய்வு முனைப்புடன் நோக்கிடின், இயற்கையைச் சார்ந்த பல அறிவியல் புரிதலுக்கு அவை வித்திடும் என் பதும் தமிழர் அறிவியல் நுண்மாண் நுழைபுலம் உலகினுக்குப் புலப்படும் என்பதும் இக்கட்டுரை மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளாகும்.