இன்றைய நவீன உலகம் பிரம்மாண்ட தொழற்சாலைகளாலும், பிரம்மிப்பூட்டும் பொருள் உற்பத்தியாலும் அடையாளப்படுத்தப்படுகிறது. தொழிற் சாலைகளின் விரிவாக்கமும், சந்தை விரிவாக்கமும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. உலகின் ஏதோ ஓர் மூலையில் உற்பத்தி செய்யப் படும் பொருள் உலகத்தின் எந்த பகுதியில் வேண்டு மானாலும் கிடைக்கும் என்ற அளவுக்கு சந்தை விரிவடைந்துள்ளது. இந்த அபரிமிதமான பொருள் உற்பத்தி, தொழிற்புரட்சிக்குப் பின்னால் உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றமே (இயந்திரத்தை பயன் படுத்தி உற்பத்தி செய்தல்) காரணம். இயந்திர உற்பத்தி முறை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையாக இருக்கிறது. உலகில் உள்ள பல நாடுகள் பொருளாதாரத்தை மேம்படுத்த வளர்ச்சி என்ற கோட்பாட்டை பின்பற்றுகின்றன.

வளர்ச்சிக் கோட்பாட்டின்படி தொழிற் சாலைகளின் விரிவாக்கமும் புதிய தொழற் சாலைகளின் உருவாக்கமும் உலகம் முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதேநேரம் தொழிற் சாலைகளின் உருவாக்கமும், விரிவாக்கமும் அதிகரிக்க அதிகரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலும்மேலும் கேள்விக்குள்ளாகி வருகிறது. தொழிற்சாலைகளின் பெருக்கம் புதியபுதிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. நீர், நிலம், காற்று மாசுபடுதல், பருவகாலநிலை மாற்றம், ஓசோன் மண்டலம் மெலிவு, புவி வெப்பமடைதல், காடுகளின் பரப்பு குறைதல், பனியாறுகள் உருகுதல், கடல்மட்டம் உயர்தல், அரிய விலங்கு, தாவர இனங்கள் அழிதல் என அடுக்கிக் கொண்டே போகலாம். தொழற்சாலைகளின் பெருக்கம் சுற்றுச்சூழலுக்கும் மனித இனத்துக்கும், பெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் மாறி வருகிறது. இந்த சூழ்நிலை சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புவாதிகள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வளர்ச்சிக் கோட்பாட்டுக்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் இடையிலான விவாதம் உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை, தமிழகத்தின் தென்கோடி துறைமுக நகரமான தூத்துக்குடியில் நிறுவப்பட்டுள்ள ஸ்டெர்லைட் (செம்பு உருக்கு) தொழிற்சாலையை முன்வைத்து இக்கட்டுரை கூற முயற்சிக்கிறது.

மூலதன ஆதிக்கமும் தொழிற்சாலைகளின் உருவாக்கமும்

இன்றைய உலகமயமாக்கல் சூழ்நிலையில் முத லாளித்துவ சமுதாயத்தில், மூலதனம் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் என ஏற்ற இறக்கமான படிநிலைவரிசை இருக்கிறது. வளர்ந்த நாடுகள் செல்வத்தின் (இந்த நாடுகளின் செல்வம் காலனி நாடுகளில் இருந்து சுரண்டப்பட்ட ஒன்றுதான்) அதிபதியாக இருக்கின்றன. மேலும் புதிய தொழில் நுட்பத்துக்கும் அதிபதியாக இருக்கின்றன. வளரும் நாடுகளில் தொழிற்சாலைகளும் தொழில் நுட்பமும் இருக்கின்றன. ஆனால் வளர்ந்த நாடுகளை விட அவை பின்தங்கியே இருக்கின்றன. வளர்ச்சியடையாத நாடுகளிலோ தொழில்நுட்பம் மிகமிக பின்தங்கி இருக்கிறது.

வளர்ச்சி என்பதை நோக்கி முன்னேறும்போது வளரும் நாடுகளுக்கும் வளர்ச்சியடையாத நாடு களுக்கும் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இந்த நாடுகள் தொழில்நுட்பத்துக்காக வளர்ந்த நாடு களை சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்படி தொழில்நுட்பத்தை கொடுக்க வேண்டு மென்றால் வளரும், வளர்ச்சியடையாத நாடுகளின் சந்தைகளை திறந்துவிட வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் நிர்பந்திக்கின்றன. இப்படியாக வளர்ந்த நாடுகள் தங்களுடைய மூலதனத்தை வளரும், வளர்ச்சியடையாத நாடுகளில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கின்றன. வளர்ந்த நாடு களுக்கு மூலப்பொருள்கள், குறைந்த கூலிக்கு தொழி லாளர்களை வழங்கும் நாடுகளாக வளரும், வளர்ச்சி யடையாத நாடுகள் மாற்றப்படுகின்றன.

முதலாளித்துவ சமுதாயத்தின் நோக்கம் “லாபம், லாபம், மேலும் லாபம் மட்டுமே”. முதலாளித்துவ சமுதாயம் லாபத்தை தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை. இந்த பின்னணியில்தான் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டு விடுதலைக்குப் பிறகு பல தொழிற்சாலைகள் இந்தியா முழுவதும் நிறுவப்பட்டன. குறிப்பாக, 1991க்கு பிறகு இந்திய அரசின் புதிய பொருளாதார கொள்கை காரணமாக இந்தியச் சந்தை திறந்து விடப்பட்டது. பல நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதன் ஒரு பகுதியாக ஸ்டெர் லைட் தொழிற்சாலை நிறுவப்பட்டது. இந்த தொழிற்சாலை இங்கிலாந்தில் உள்ள வேதாந்தா கும்பணிக்கு சொந்தமானது. தொழிற்சாலையில் வரும் லாபம் வேதாந்தா கும்பணிக்கே செல்கின்றது. இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இதில் நம் நாட்டு மக்கள் பயன் பெறுவதைவிட வெளிநாட்டு முதலாளிகள் பயன் பெறுவதுதான் அதிகம்.

அதேநேரம், தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவு கள் ஏற்படுத்தும் மாசுபாடோ மிகமிக அதிகம். அந்த வகையிலே லாபம் அவர்களுக்கும் சுற்றுச் சூழல் மாசுபாடு நமக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது. வளரும், வளர்ச்சியடையாத நாடுகளை பணக்கார நாடுகள் குப்பை கொட்டும் இடங்களாகவே பார்க் கின்றன.

செம்பு - உற்பத்தி முறை - கழிவுகளின் தன்மை:

செம்பு ஓர் உலோகம். ஆதிகாலத்தில் மனித சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு இரும்பு எப்படி முக்கிய பங்காற்றியதோ, அதே அளவுக்கு நவீன தொழில்நுட்ப உலகத்துக்கு செம்பு இன்றிய மை யாதது. நவீன உலகத்தின் அடிநாதமாக மின்சாரம் இருக்கிறது. மின்சாரத்தை சிறப்பாக கடத்தும் மின் கடத்தி என்ற முறையில் செம்பின் முக்கியத் துவம் அதிகரித்துள்ளது.

செம்பு, செம்புத் தாதுவிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. செம்பை உற்பத்தி செய்ய பாலி மெட்டலர்ஜிக்கல் முறை, ஹைட்ரோ மெட்டலர் ஜிக்கல் முறை பயன்படுத்தப்படுகிறது. உலக செம்பு உற்பத்தியில் ஹைட்ரோ மெட்டலர்ஜிக்கல் முறை குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு முறைகளும் சுற்றுச்சூழலை கடுமையாக மாசுப்படுத்துகின்றன. பழைமையான முறையில் செம்பு உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடு குறைவாக வெளியிடப்படுகிறது. ஆனால் பழைய உற்பத்தி முறைக்கு அதிக ஆற்றல் தேவைப் படுகிறது. நவீன உற்பத்தி முறையில் குறைந்த ஆற்றலே போதும். ஆனால் அதிக அளவில் சல்பர் டை ஆக்சைடு வெளிப்படுகிறது.

செம்பு உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 2000 கிலோ செம்பு உற்பத்தி செய்யப்படும் பொழுது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ செம்பு உற்பத்தி செய்யப்படும் 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுப்படுத்துகின்றன. செம்பு உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுப்படுத்துகின்றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை செம்பு உள்ளது, ஒரு டன் செம்பு உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.

ஸ்டெர்லைட் தொழிற்சாலை - விதிமீறல்கள் - சுற்றுச் சூழல் மாசுபாடு:

இந்திய செம்பு உற்பத்தியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை முக்கிய பங்கு வகிக்கிறது. 1994ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கினார். அப்போது எந்த மக்கள் விவாதமும் நடத்தப் படாமல் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஸ்டெர்லைட் தொழிற் சாலை தொடங்கப்பட்ட நாளிலிருந்து, அதன் தொழிற் சாலை நிர்வாகம் அனைத்து சட்டங் களையும் மீறியுள்ளது.

ஸ்டெர்லைட் தொழிற்சாலை சம்பந்தமான சில நிகழ்வுகள்:

1. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடை இல்லா சான்றிதழை இரு கட்டுப்பாடுகளோடு 1.8.1994ல் கொடுத்தது. அவை:

அ) மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவபட வேண்டும்.

ஆ) தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் உருவாக்க வேண்டும். ஆனால் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மன்னர் வளைகுடா விலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப் பட்டுள்ளது.

2. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடை யில்லாச் சான்று இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

3. 14.10.1996ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற் சாலையில் 1,70,000 டன் செம்பு உற்பத்தி செய்யப் படுகிறது.

4. 21.9.2004 உச்ச நீதிமன்ற குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அப்போது அனைத்து விதிகளும் மீறப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

இவ்வாறாக அனைத்து விதிகளையும் மீறி, சுற்றுச் சூழல் பாதிப்புகளை கருத்தில் கொள்ளாமல் செம்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர்ந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சுற்றி உள்ள பகுதிகள் மாசுபட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் மாசுப்பட்டால் கடல் உயிரினங்கள் அழிந்து வருகின்றன. மேலும் இப் பகுதி மக்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலை சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காகவும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருவதற்காகவும் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் 1998ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று உத்தர விட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவையும் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து உற்பத்தி நடைபெற்று வருகிறது. மத்திய அரசும் தமிழக அரசும் ஸ்டெர் லைட் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுப் பாட்டை அறிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகின்றன.

வளர்ச்சிக் கோட்பாடும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும்

தொழிற்சாலைகள் இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சிக்கு தேவையாக இருந்தபோதிலும் தொழிற் சாலைகள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு மனித சமுதாயத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறது. இந்த பின்னணியில் தொழற் சாலைகள், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றுக்கு இடையிலான விவாதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஸ்டெர்லைட் தொழிற்சாலை சமுதாய வளர்ச்சியை உற்பத்தி செய்வதாக அல்லாமல், லாப நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் லாப நோக்கத்தில் உற்பத்தி நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் சுற்றுச் சூழல் பெரிதும் மாசுப்படுத்தப்படுகிறது. அதே போல் சுற்றுச்சூழல் சட்டங்கள் முறையாக அமல் படுத்தாததும் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு முக்கிய காரணம்.

வளர்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் தொழிற் சாலைகள் உருவாக்கப்படும்போது, அது நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுமா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் வளர்ச்சி என்று வரும்போது சுற்றுச்சூழல் மாசுபாடு பெரிதாகும் சூழ்நிலையில் மக்கள் நலன் அடிப்படையில் அது நிறுத்தப்படும், இறுதியில் மக்கள் நலனே எதிலும் முக்கியத்துவம் உடையதாக இருக்கும். ஸ்டெர்லைட் தொழிற்சாலை நம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படாதது மிகவும் வருத்தத்திற்குரியதே. ஏனெனில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் செம்பு ஏற்றுமதி செய்யப்படுகிறதே தவிர, நம் நாட்டிற்கு எந்த வகையிலும் பயன்படவில்லை. இந்த இடத்தில் இந்தியாவில் இன்னும் மின் வசதி எட்டாத பல்லாயிரக்கணக்கான கிராமங்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அதே வேளையில் பெரிய அளவில் வேலைவாய்ப்பும் இத்தொழிற்சாலையால் உருவாக்கப்படவில்லை.

தொழிற்சாலைகள் இன்றைய சமூக வளர்ச்சிக்கு தேவைதான். அதே வேளையில் சுற்றுச்சூழல் மாசு படுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. இந்த அடிப்படையில் சில முக்கிய முடிவுகளுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது.

1. சுற்றுச்சூழல் சட்டங்கள் தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும்.

2. தொழிற்சாலை கழிவுகள் மறுசுழற்சிக்கு உட் படுத்தப்பட வேண்டும்.

3. பொருள் உற்பத்தி லாப நோக்கில் அல்லாமல் சமுதாய வளர்ச்சி நோக்கில் இருக்க வேண்டும்.

இதுவே சமுதாய வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் வழிவகுக்கும்.

ஆதாரங்கள்

1) www.miga.org/documents/coppersmelting.pdf

2) www.outlook.com/articleasp?211512

3) business.mapsofindia.com/india/s/sterliteindustry.hml.

4) kalpaviksh environmental groups, a case study-compliance and monitoring of environmental clearance conditions of sterlite industries india limited tutucorin.newdelhi

(ஆசிரியர், ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப் படுவதற்கு முன்பிருந்து தொடர்ச்சியாக மக்கள் இயக்கங் களைத் திரட்டி அந்த ஆலைக்கு எதிராக போராடி வருபவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்)