சுற்றுச்சூழல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் எதுவென்றாலும் மக்கள் விழிப்புணர்வு, அதன் அடிப்படையில் பரவலான கூட்டுச் செயல்பாடுகள் மூலம் அரசுக்கு வலுவான எதிர்ப்பை தெரிவிக்கும் பட்சத்தில், அதற்கு நிச்சயம் பலன் இருக்கும் என்பது நிதர்சனம். சமீபகாலமாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் கணக்கு வழக்கற்று பெருகிவிட்டன. பெண்ணியம், தலித்தியம் போன்று சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து சூழலியலும் பெருமளவு சமூக அக்கறையை வெளிப்படுத்த வேண்டிய அவசரத் தேவை இன்று உருவாகி இருக்கிறது.

ஒரு காலத்தில் காலனி ஆதிக்கம் மூலமாகவும், பிறகு அரசியல் நெருக்கடி மூலமாகவும் மேற்கத்திய நாடுகள் கீழை நாடுகளை அடிமைப்படுத்தி வந்தன. கடந்த நூற்றாண்டில் பெரும்பாலான கீழை நாடுகள் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று சுயசார்பை நோக்கிய பயணத்தில் இறங்கிய நிலையில், உலக பொருளாதாரம் மீதான தங்கள் செல்வாக்கை மேற்கத்திய நாடுகள் எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இதற்கு அறிவியல்-தொழில்நுட்பத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு, மூன்றாம் உலக நாடுகளின் உணவுச் சந்தையை குறிவைத்து புதிய ஆயுதங்களுடன் களம் இறங்கி உள்ளனர். சூழலியல் எழுத்தாளர் மு. பாலசுப்ரமணியன் (பாமயன்) கூற்றுப்படி, கடந்த நூற்றாண்டில் கீழை நாடுகளை பேரழிவு சக்தியான அணுகுண்டுகளைக் காட்டி அச்சுறுத்தி வந்த மேற்கத்திய நாடுகள், இன்று தங்களது ஆயுதங்களை மாற்றிக் கொண்டு விட்டன. இன்று அவர்களுக்கு விதைகளே ஆயுதம்.

உலக வர்த்தக நிறுவனம், அதன் உலகமயமாக்கல்,-தாராளமயமாக்கல்-, தனியார்மயமாக்கல் கொள்கைகளின் அடிப்படையில் மூன்றாம் உலக நாடுகளின் உணவு, நீர் சந்தைகளை கைப்பற்ற விரிவான திட்டத்தை அவை தீட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக பூச்சிக்கொல்லி விற்றுக் கொண்டிருந்த அமெரிக்க பன்னாட்டு வேளாண் நிறுவனம் மான்சாண்டோ, இன்று அந்தப் பூச்சியையே ஒழிக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இன்று வரை அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட எந்த காய்கறியையும் மக்கள் நேரடியாக உட்கொள்வதில்லை. ஆனால் உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் கத்தரிக்காயில் மரபணு மாற்றம் செய்து அறிமுகப்படுத்த மான்சாண்டோ பாகீரத பிரயத்தனம் செய்தது.

அந்த கத்தரிக்காயை முறைப்படி ஆய்வு செய்ய வேண்டிய மத்திய மரபணு பொறியியல் அங்கீகாரக் குழு (ஜி.இ.ஏ.சி) மான்சாண்டோ அளித்த தரவுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு, “யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வராது” என்ற முத்திரையுடன் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து நாடு முழுவதும் எழுந்த பரவலான எதிர்ப்பால், பொது விசாரணை நடத்த முன்வந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அதற்கு இடைக்காலத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்தத் தடை எவ்வளவு காலம் நடைமுறையில் இருக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் விஞ்ஞானிகளின் உறுதியான ஆதாரம், மக்களின் சம்மதம் ஆகிய இரண்டின் அடிப்படையில் பி.டி. கத்தரி பின்னர் அனுமதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக பி.டி. கத்தரிக்கு அவசரஅவசரமாக வழங்கப்பட்ட அனுமதி, தற்போது இடைக்காலத் தடையில் வந்து நிற்கிறது. சூழலியலாளர்களுக்கும் மக்களின் கூட்டுச் செயல்பாட்டுக்கும் கிடைத்த முதல் வெற்றி இது. சுற்றுச்சூழல் போராட்டங்களில் பல நிலைகளில் நாம் பின்னடைவைச் சந்தித்து வந்தாலும், குரல் வலுவாக ஒலிக்கும்போது கதவுகள் திறந்துதான் ஆக வேண்டும். ஆனால் இந்த வெற்றியின் மிதப்பில் நமது பணிகளை மறந்துவிடலாகாது. முதலில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படும் வரை நமது போராட்டம் எந்த வகையிலும் ஓயப் போவதில்லை. இரண்டாவது, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சமூக அக்கறை மிகுந்த ஒவ்வொருவரும் இயன்ற அளவு உரத்து கொடுத்த குரலால் அரசு இந்த இடைக்காலத் தடையை அறிவித்திருக்கிறது. சூழலியல் ஆர்வலர் வந்தனா சிவா சொல்வதைப் போல அரசியல்வாதிகளுக்கு நமது வாக்குகள்தான் முக்கியம். நமது உணவு, நமது பாதுகாப்பு, நமது வாழ்க்கைக்கு அவர்கள் உத்தரவாதம் அளிக்காத நிலையில், நமது வாக்குகள் அவர்களுக்கு கிடைக்காது என்பதை தெளிவாக உணர்த்தினால், எந்த அரசும் நமது குரல்களுக்கு செவி சாய்த்துத்தான் ஆக வேண்டும். நமது கையில் அந்த ஆயுதம் இருக்கிறது என்பதையும், நமக்கான உரிமைகளை நாம் போராடாமல் பெற முடியாது என்பதையும் உணர வேண்டிய தருணம் இது.

பி.டி. கத்தரிக்காயை நம் உணவுப்பட்டியலில் திணிக்க மான்சாண்டோவும், அவற்றை முன்மொழியும் அரசுகளும் எத்தனை திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டன, எப்படி நடைமுறைகளை மீறின, ஆதாரமற்று பேசின என்பதை இதுவரை வெளியான நான்கு இதழ்களிலும் ஏற்கெனவே அலசியிருக்கிறோம்.

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் நிலத்தை பன்னாட்டு நிறுவனம் அபகரிப்பதற்குத் துணையாக அரசு இருப்பதை எதிர்த்து தமிழகத்தில் போராடிய சேலத்தைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் பியுஷ் சேத்தியா, மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிணையில் வெளிவந்துவிட்டாலும், சூழலியல்-சமூக அக்கறையை வெளிப்படுத்துவோரை நமது “ஜனநாயக” அரசுகள் எப்படி கௌரவப்படுத்துகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தச் சம்பவம். இந்த நாட்டில் உரிமைகளுக்குக் குரல் உயர்த்துபவர்களை நசுக்குவதற்கே அரசும் அதன் கையாட்களான காவல்துறையும் முயற்சிக்கின்றன. பன்னாட்டு - இந்நாட்டு முதலாளிகளோடு கைகோர்த்து மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசுகளுக்கு, நெருக்கடி கொடுக்க வேண்டியது சிவில் சமூகத்தின் பொறுப்பு. சிவில் சமூகத்தை நசுக்கும் எந்த சிறிய நடவடிக்கையும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியதே. பியுஷ் போன்றவர்களின் கைதுக்கு எதிராக நாம் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும்.