உலாவும் சிறு வெளிச்சம்
பூமியில் அமரத் தெரியும்தான் எனினும்
அதிக நேரமும்
வெட்ட வெளியினை
அளாவிக் கொண்டாடும்
பேரின்பக் கிறக்கம்.
ஒளியைத் தேடுவதென்பதோ
இருளை அகற்றுவதென்பதோ
தேவையற்றுத்
தானே ஒளியானவன்.
வேளை பார்த்து
என் அறைக்குள் வந்து
வெகுநேரம்
தன் கலை நிகழ்த்திவிட்டுச் சென்றவன்
என்னைப் பேறுடையவனாக்க
இயற்கைப் பெருவெளியினின்றும்
என் இல்லம் புக்க விருந்தினன்.
ஒளிரும் ஜன்னல் வழியே
நீ உள் நுழையக் கண்டதும்
எத்தனை வேகத்துடன்
தயாராகிக் கொண்டது என் அறை
இரவெல்லாம்
என் விழிப்பிலும் நீங்காதுலவும் ஒளி