ஏரியை காப்பாற்ற தொடரும் போராட்டத்தின் கதை

புதுச்சேரி மாநிலத்தின் மிகப்பெரிய பழம் பெருமை வாய்ந்த ஏரியாகத் திகழ்வது ‘ஊசுட்டேரி’. சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த ஏரிக்கு மதகுகளும், கால்வாய்களும் கட்டினான் என்று திருவக்கரைக் கோயில் கல்வெட்டுகள் பகர்கின்றன. கிருஷ்ண தேவராயர் ஒழுகரைக்கு வந்து இந்த ஏரியைப் பார்த்ததாக அறிய முடிகிறது. இந்த வரலாற்றுச் சான்றுகள் அந்த ஏரியின் பெருமையை காலகாலத்துக்கும் கூறி நிற்கின்றன.

முத்தரையர்பாளையத்தில் நீர் ஆதாரத்தைக் கண்டுபிடிக்க உதவிய தாசியான ஆயிக்கு புதுச்சேரியில் ஆயி மண்டபம் என்ற நினைவுச் சின்னம் கட்டப்பட்டுள்ளது. ஆயியின் தங்கை ஒல்லியாக இருந்ததால் ‘ஊசி’ என்று அழைக்கப்பட்டாள். அவள் முத்தரையர்பாளையத்துக்கு அருகில் பாழடைந்த நிலையில் இருந்த ஏரியை, மழைக்காலத்தில் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னுடைய உடலுழைப்பு, பொருள் அனைத்தையும் இட்டுச் சீர்படுத்தினாள். இதைப் பார்த்த ஊர் மக்களும் சேர்ந்து ஏரியைச் சீர்ப்படுத்தினர். இதனால் நீலக்கடல் போல் பரந்து விரிந்து காட்சி அளித்த ஏரியை ஊசியின் நினைவாக ‘ஊசியிட்ட ஏரி’ எனப் பெயரிட்டனர். நாளைடைவில் இது ‘ஊசுட்டேரி’ என மருவியது என்பர்.

நாட்குறிப்பு நாயகன் ஆனந்தரங்கம் பிள்ளை 18 ஆம் நூற்றாண்டு நாட்குறிப்பில் பல இடங்களில் இந்த ஏரியைப் புகசூடு ஏரி எனக் குறிப்பிட்டுள்ளார். பரியன் ஏரி, புகசூடு ஏரி, ஒழுகரை ஏரி என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் அழைக்கப்பட்டு வந்ததாக வரலாறு பகர்கிறது. புதுச்சேரியில் இருந்து மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஏரி. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி: 15.54 சதுர கி.மீ. ஏரிக் கரையின் மொத்த நீளம்: 7.275 கி.மீ. மொத்தக் கொள்ளளவு: 540 மில்லியன் கனஅடி. சுத்துக்கேணி கால்வாய் மூலம் செஞ்சியாற்றிலிருந்து ஏரிக்கு பெருமளவில் நீர் வருகிறது. பாசன வசதிபெறும் நிலங்கள் தோராயமாக 1500 எக்டேர். தெற்கில் ஊசுடு, கூடப்பாக்கம், மேற்கில் ராமநாதபுரம், தொண்டமாநத்தம், வடக்கில் துத்திப்பட்டு, கரசூர், சேதராப்பட்டு, கிழக்குப் பகுதியில் தமிழக எல்லைப் பகுதிகளான விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் புதுத்துறை, காசிப்பாளையம். மணவெளி, கடப்பேர்க்குப்பம், கொண்டிமேடு, நடுப்பாளையம், வாழப்பட்டான்பாளையம், பெரம்பை ஆகிய பகுதிகள் உள்ளன.

இயற்கை வளங்களாகத் திகழும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியன பல்லுயிர்கள் பெருகி பசுமையான சூழ்நிலையை உருவாக்கவும், நிலத்தடி நீரை அதிகாரிக்கவும், பாசனம், குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு மிக இன்றியமையாததாக விளங்குகின்றன. ஊசுட்டேரியின் சிறப்புகளாகத் திகழும் பல்லுயிர் வளத்தில் தாவரவியல் ஆய்வில் 60 வகை குடும்பங்களைச் சேர்ந்த 200 வகை சிறப்பினச் செடி, கொடி, மர இனங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் மருத்துவ குணமுள்ளவையும் அடங்கும். புறவையின வகையில் குறிப்பாக உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் என 105 சிறப்பினங்கள் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை வந்து செல்வதாகக் கணக்கிட்டுள்ளனர்.

ஊசுட்டேரியின் அமைதியான சூழ்நிலையால் பலவகை பறவைகள் தங்கிச் செல்கின்றன. கொக்கு, நாரை, மடையான், நீர்க்கோழி, சிரவி, உள்ளூர் வாத்தினங்கள், பூநாரை, வக்கா, அரிவாள் மூக்கன், செங்கால் நாரை, கூழைக்கடா, குருட்டுக்கொக்கு, வெண்கொக்கு, சாம்பல் நிறக் கூழைக்கடா, ஊசிவால் வாத்து, மஞ்சள்மூக்கு நாரை போன்றவை வந்து செல்கின்றன. ரசியாவின் வடபகுதியிலிருந்தும், மத்திய ஆசியா, இலங்கை, மியான்மர், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் சில அரிய இனப் பறவைகள் வருகின்றன. பாசிகள், புழுக்கள், மீன்கள், நத்தைகள், நண்டுகள், எலிகள், பாம்புகள் போன்றவற்றை உண்டு வாழும் இந்தப் பறவைகள், உணவுக்காக நீர்நிலைகளையும், சுற்றியுள்ள வயல்களையும் நம்பியுள்ளன. வயல்களும், நிலப்பகுதியும் குறுகி வருவதாலும், ஏரி சரியாகப் பாதுகாக்கப்படாமல் சுற்றுலாப் படகுகள் விடப்படுவதாலும், பறவைகள் வருகை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இப்போது சில கொக்குகள், நொ ள்ளை மடையன்கள், வாத்தின நீர்க்கோழிகள் மட்டுமே காணப்படுகின்றன.

சர்வதேச இயற்கை பாதுகாப்புக் கழகத்தால் (IUCN-International Union for Conservation of Nature) ஆசியாவின் முதன்மையான 93 நீர்நிலைகளுள் ஊசுட்டேரி ஒன்று என்றும், உலக சதுப்புநில அமைப்பு (Wetland International) ஊசுட்டேரியும் அதைச் சுற்றியுள்ள ஈரநிலப் பகுதிகளும், ஆசியாவில் முதன்மையானவை என்றும், பம்பாய் இயற்கை வரலாற்று கழகம் தென்னிந்தியாவின் முதன்மையான பறவை தங்குமிடம் என்றும் அறிவித்திருந்தன.

இப்படிப்பட்ட தொன்மையும், வரலாற்றுச் சிறப்பும், பல்லுயிர் வளமும், பறவைகள் வந்து செல்லும் இடமாகவும் உள்ள ஏரியை, அரசு பாதுகாக்கத் தவறி அழிவுக்கு கொண்டுச் செல்வதைத் தடுத்து நிறுத்த நடத்தப்பட்டு வரும் போராட்டம் மிக நீண்டது.

‘வளர்ச்சி’ என்ற பெயரில் ஊசுட்டேரியின் தென்கரைச் சாலைப் பகுதியில் லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியும், வேளாண் நிலங்கள் வீட்டு மனைப்பிரிவுகளாகவும், வடக்குக் கரைப் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதிகளாக கரசூர், துத்திப்பட்டு, சேதராப்பட்டு ஆகிய ஊர்களின் 700 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தியும், கிழக்கு மற்றும் தென்பகுதி தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டப் பகுதிகளான பூத்துறை, காசிப்பாளையம், மணவெளி, கடப்பேர்க்குப்பம், கொண்டிமேடு, நடுப்பாளையம், வாழப்பட்டான்பாளையம், பெரம்பை ஆகிய ஊர்களில் வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வருகின்றன.

ஊசுட்டேரி பகுதியில் மருத்துவக் கல்லூரி முற்றிலும் ஆபத்தானது. ஏனென்றால், மருத்துவக் கல்லூரி அமையும் இடத்தில் ஊசுட்டேரியின் 3 பாசன வாய்க்கால்கள் செல்கின்றன. இன்றும் இக்கால்வாய்களின் மூலம் பாசனம் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தை ஒட்டி உலந்தை, முருங்கப்பாக்கம் ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லும் பிள்ளையார்குப்பம் ஆற்று வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால்களில், மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியின் நச்சுக் கழிவுகள் கொட்டப்படுவதாலும், விடப்படுவதாலும் அதன் தாக்கம் நீர், நிலத்தின் மூலம் பரவி மக்களுக்கு புதிய நோய் தாக்குவதற்கு காரணமாக இருக்கிறது. கிருமாம்பாக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, தவளக்குப்பம் அருகில் உள்ள அறுபடைவீடு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றின் மருத்துவக் கழிவுகளைப் பாசன வாய்க்கால்களில் விடுவதால் இன்றும் அப்பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோன்ற ஒரு நிலை ஊசுட்டேரி பகுதியிலும் ஏற்படும் நாள் தொலைவில் இல்லை.

கல்லூரி, மருத்துவமனை முழமையாகச் செயல்பட ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படுவதாக தெரிகிறது. அங்குள்ள நிலத்தடி நீரை உறிஞ்சுவதன் மூலமே இத்தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இது அப்பகுதியில் வேளாண்மை செய்துவரும் உழவர்களுக்கு நீர்ப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதோடு, எதிர்காலத்தில் வேளாண்மை செய்யமுடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். பொதுச் சொத்தான நீரை மக்களுக்குத் தராமல், மருத்துவக் கல்லூரிக்கு தருவது எந்த வகையில் நியாயம்?

புதிய மருத்துவக் கல்லூரி, புதிய குடியிருப்புகள் உருவானால், அப்பகுதியில் பல முறையற்ற வளர்ச்சி நடவடிக்கைகள் உருவாகி, போக்குவரத்து அதிகரிக்கும். எனவே, சுற்றுச்சூழல் சிக்கல்களால் சென்னைக் கூவத்தைவிட மோசமான நிலையை அடைந்து ஊசுட்டேரி சீரழிந்துவிடலாம்.

இதோடு மட்டுமல்லாது சுற்றுலா வளர்ச்சியின் மூலம் உல்லாசப் படகுப் போக்குவரத்து, அப்பகுதியின் அமைதியையும் ஏரியின் நீரையும், உயிரினங்களையும், சுற்றுச்சூழலையும் சீர்குலைத்து வருகிறது. இதைப் பார்த்து மனம் புழுங்கி, இயற்கை அரண்களையும், வளங்களையும் அழிய விடக்கூடாது என்று புதுச்சேரியில் உள்ள 21-க்கும் மேலான அமைப்புகள், இயக்கங்கள் சேர்ந்து சூலை 2005-இல் ‘ஊசுட்டேரி பாதுகாப்புக் கூட்டியக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி தொடர்ந்து பல போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், நடத்தி வருகிறோம். இதன் காலவரிசைப்படியான நிகழ்வுகள்:

20.07.2005 - ஊசுட்டேரியை பாதுகாக்கக் கோரி புதுச்சேரி முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 24.07.2005 - ஏரியை சுற்றியுள்ள சிற்றூர்களில் விழிப்புணர்வு பரப்புரை நடத்தப்பட்டது. 02.09.2005 - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் எம்.எம். லகேராவிடம் கோரிக்கை மனு அளித்து, பிரச்சினை குறித்து விளக்கப்பட்டது. 14.09.2005 - ஏரிகள் மறுசீரமைப்புத் திட்ட இயக்குநர், பொதுப் பணித் துறை செயற்பொறியாளர்களிடம் ஊசுட்டேரியைப் பாதுகாக்க, உயிரியல் பூங்கா அமைக்க நடந்த கூட்டத்தில் ஏரியைப் பாதுகாப்பதற்கான கருத்துகள் கூறப்பட்டன. 11.11.2005 - நவீனா கார்டன் திருமண நிலையத்தில் நடத்தப்பட்ட ஊசுட்டேரி பாதுகாப்பு மாநாட்டில் சிறப்புரையாக கேரளா சுற்றுச்சுழல் வல்லுநர் சே.இரா. நீலகண்டனும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைத் தொடங்கிய மறைந்த நெடுஞ்செழியன் மற்றும் பலர் பேசினா;. 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசு அதிகாரிகளுக்கும், ஆளுநர், முதல்வருக்கும் அனுப்பப்பட்டது.

புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறை எதிர்கால நீர்த் தேவையைச் சமாளிக்க சூன் 2002ஆம் ஆண்டு திட்ட வரைவு ஒன்றை ஆய்வு செய்தது. அதில் நகர நீர் வழங்கலுக்கு ஊசுடு, பாகூர் ஏரிகளின் மேற்பரப்பு நீரைப் பயன்படுத்துவது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை அரசுக்கு அளித்தது.

அந்த அறிக்கையில், இவ்வளவு காலம் புதுச்சேரியின் நீர்த்தேவையை ஆழ்குழாய்க் கிணறு மூலம் எடுக்கப்பட்ட நிலத்தடி நீரைத்தான் மக்களுக்கு வழங்கி வருகிறோம். அதிகரித்து வரும் நீர் உறிஞ்சும் தன்மையால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. எதிர்காலத் நீர்த் தேவையைச் சமாளிக்க போட்ட திட்டத்திற்காகவாவது ஊசுட்டேரியை பாதுகாத்து நீர்ப்பிடிப்புத் திறனை மேம்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஊசுட்டேரியை அழிக்கும் வேலையில்தான் அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலை ஊசுட்டேரிக்கு மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் உள்ள பழவேற்காடு, செம்பரம்பாக்கம், முண்டியம்பாக்கம் ஆகிய ஏரிகள் அழிக்கப்படுவதையும், அரசு, தனியார் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்தும் வழக்குகள் நடந்து வருகின்றன. நீர்நிலைகள் குறித்து விரிவான சிக்கல்களை http://www.rainwaterharvesting.org  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவிலும், உலக அளவிலும் நீர்நிலைகளைக் காக்கவும், இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவும், எதிர்காலத் தலைமுறைக்கு நல்ல பூவுலகை விட்டுச்செல்ல இணைந்து செயல்பட வாருங்கள்!

உதவிய சான்றுகள்: 

1. புதுச்சேரி அரசு ஊசுட்டேரி கரை ஓரம் அமைத்துள்ள வனம் மற்றும் வனவிலங்குத் துறையின் அறிவிப்புப் பலகை.

2. ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் - கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் எதற்கு? - முனைவர் சிவ. இளங்கோ.

3. பொன்முட்டை இடும் வாத்து - சிவ.கணபதி.

4. ஊசுட்டேரி பாதுகாப்புக் கூட்டியக்கத்தின் கடிதங்கள், துண்டறிக்கைகள்.

இயக்கம், இயற்கைப் பாதுகாப்பு மையம் (பிள்ளைச்சாவடி), மண்டல சூழல் மற்றும் சுற்றுச்சூழல் கூட்டியக்கம், புதுச்சேரி மக்கள் பாதுகாப்புக் குழு. 

கி. இளங்கோவன், பூவுலகின் நண்பர்கள் (புதுச்சேரி) 

Pin It