தமிழகத்தின் வாழ்வதாரமான காவிரி நதியின் முக்கியமான துணையாறு நொய்யல். பண்டைய தமிழ் இலக்கியங்களில் காஞ்சிமா நதி என வர்ணிக்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தின் வளமைக்கும் பசுமைக்கும் வழி சேர்க்கும் நொய்யலாறு, கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில் வெள்ளிங்கிரி, பூண்டி மலைகளில் உருவாகி கிழக்கு நோக்கி பாய்ந்து கரூர் மாவட்டம் நொய்யல் கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது.

கோயமுத்தூர், திருப்பூர், அவினாசி, பல்லடம், தாராபுரம், ஈரோடு, கரூர் தாலுகாவை கடந்து செல்லும் நொய்யலின் நீளம் 172 கி.மீ. நொய்யலுக்கு கொடுவாய்புடி ஓடை, முள்ளரம்பு ஓடை, முடந்துறை ஓடை, இருட்டுப்பள்ளம் ஓடை, சுந்தரம் ஓடை, பாச்சான் வாய்க்கால் மற்றும் காஞ்சிமா நதி என 7 துணை ஓடைகளும், சங்கனூர் பள்ளம், நல்லாறு என துணை ஆறுகளையும் கொண்டுள்ளது. நொய்யலாற்று படுகையின் பரப்பளவு 3,510 சதுர கி.மீ. இதில் 178 சதுர கி.மீ. பரப்பளவில் காடுகளும் வனத்துறையின் மரப்பண்ணைகளும் உள்ளன. விவசாயம் செய்ய இயலாத நிலங்கள், பாறை நிலப்பகுதிகள், மேய்ச்சல் நிலங்கள் போக மீதி 1,752 சதுர கி.மீ. விவசாய நிலங்களாகும்.

நொய்யல் ஆறு 23 சிறு அணைக்கட்டுகள் மற்றும் 30 குளங்களையும் கொண்ட நீர்ப்பாசன அமைப்பு. இதில் கோவை மாவட்டத்திலுள்ள சித்திரைச்சாவடி அணைக்கட்டு மட்டும் 3,858 ஏக்கர் பாசனப் பரப்புடையது. நொய்யலின் சராசாரி மழையளவு 628.5 மி.மீ. இது மிகவும் குறைந்த மழைப்பொழிவுதான். எனவேதான் நொய்யலை தடுப்பணைகளும் ஆறுகளும் கொண்ட ஒரு நீர்ப்பாசன அமைப்பாக சோழர் காலத்தில் மாற்றியமைத்து, செழுமையான பகுதியாக்கினார்கள். நொய்யல் நீர் தெளிவாகவும் சுவையாகவும் இருக்கும் என்பதெல்லாம் பழைய வரலாறு. அந்தச் சுவையும் தெளிவும் பாதிக்கப்பட்டு, நொய்யலின் நீர்வளம் பாதிக்கப்பட முக்கிய காரணம் சாயப்பட்டறைகளும் நகர்ப்புறக் கழிவுகளும் தான். நகரக் கழிவுகளால் மாசடைந்தபோதுகூட நொய்யல் நீர் நஞ்சாகவில்லை. ஆனால், சாயப்பட்டறைகளின் கழிவு நீர் நொய்யலை நஞ்சை சுமக்கும் நதியாக்கிவிட்டது.

கோவை மாவட்டத்தில் தெலுங்குபாளையம் பகுதியிலுள்ள சில சாயப்பட்டறைகள் கழிவுநீரை நொய்யலில் பாய்ச்சுகின்றன. திருப்பூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலுள்ள மங்களம் பஞ்சாயத்தை கடந்த பின் நொய்யல் கருமையான நிறம் கொண்ட சாக்கடையைப் போன்றதாகிறது. திருப்பூர் நகரைக் கடந்து நல்லூர் நகராட்சியை அடையும்போது வர்ணிக்க முடியாத கோரத்தை நதி நீர் பிரதிபலிக்கிறத ு. 1941 ஆம் ஆண்டு திருப்பூர் பகுதியில் வெறும் இரண்டு சாயப்பட்டறைகள்தான் இருந்தன. இதுவே 1986ல் 99 பட்டறைகளாக மாறின. இந்த எண்ணிக்கை 1989ல் 450 ஆகவும், 2001ல் 800 சாயப்பட்டறைகளாகவும் பகாசுர வளர்ச்சி அடைந்தன. குறைந்த அளவு சாயப்பட்டறைகள் இருந்தபோது ஆற்றின் நீரோட்டத்தால் நீர் பெரிய அளவு மாசுபடவில்லை. 70களில் சாதாரண பனியன், உள்ளாடை தயாரிக்கும் மையமாக இருந்த திருப்பூர், 80களில் பனியன் ஏற்றுமதி மையமாக மாறியது. ஏற்றுமதியின் தேவைக்கேற்ப பனியன் தொழிற்சாலைகள் பெருகின. பனியன் தொழிற்சாலைகளுக்கு சலவை செய்தல், நிறமும் சேர்ப்பதற்காக சாயப்பட்டறைகள் பல்கிப் பெருகின. இன்று மாதத்திற்கு 15,000 டன் ஆடைகள் சாயம் ஏற்றப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மாசுபாடின்றி சுவையும் தெளிவும் கொண்ட நொய்யலாற்றுக்கு, வெறும் 20 ஆண்டுகளில் உலகின் மிகவும் மாசுடைந்த ஆற்றுப்படுகை என்ற பட்டத்தை திருப்பூர் பனியன் தொழிற்சாலைகள் வாங்கித் தந்துள்ளன.

நொய்யலின் ஒட்டு மொத்த நீர்ப்பாசன வேளாண் நிலங்களின் பரப்பு 258,834 எக்டேர். 1992 ஆம் ஆண்டு நீர்ப்பாசனம் மூலம் வேளாண்மையை பெருக்க 616 மில்லியன் கன அடி நீரை சேமிக்க ஒரத்துப்பாளையம் அணையை தமிழக அரசு கட்டியது. நொய்யலின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் காய்கறிகள், கரும்பு, பாக்கு, மஞ்சள், தென்னை, வாழை, வெங்காயம், சோளம், நெல், திராட்சை, நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. நொய்யல் ஆற்றுப்படுகையின் நடுப்பகுதியில் கம்பு, சோளம், புகையிலை, மஞ்சள், பருத்தி, காய்கறிகள் பயிரிடப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் சோளம், புகையிலை, பருத்தி, கரும்பு பயிரிடப்பட்டன. ஒரத்துப்பாளையம் அணை கட்டப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் கரூர் மாவட்ட விவசாயிகள் பயிர் கருகியதை கண்டு, அணையிலிருந்து நீரை திறந்துவிடக் கூடாது என போராட்டம் நடத்தினார்கள். பொதுவாக அணையிலிருந்து நீரை திறந்துவிட வேண்டும், அப்பொழுதுதான் பயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று போராட்டம் நடத்துவதே விவசாயிகளின் வழக்கம். உலகிலேயே முதல்முறையாக அணைக்கட்டிலிருந்து நீரை திறந்து விடக்கூடாது என போராட்டம் நடத்தியவர்கள் நொய்யல் பாசன விவசாயிகளாகவே இருக்கும். அன்றைய மாநில அரசும் மாவட்ட நிர்வாகங்களும் இந்தப் போராட்டத்தையும் நொய்யலின் மாசுபாட்டையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலையையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்றே உரிய நடவடிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுத்திருந்தால் நொய்யலின் "நாற்ற வரலாறு" மாறியிருக்கும்.

1993ல் 385,000 மீன்கள் ஒரத்துப்பாளையம் அணையிலிருந்தன. இதுவே 199697ல் 801,000 ஆக உயர்ந்தது. 1997ல் சாயக்கழிவுகளின் அமிலத்தன்மையால் அனைத்து மீன்களும் ஒரே நாளில் இறந்து விட, நொய்யலின் மாசுபாடு தலைப்புச் செய்தியாக மாறியது. இறந்த மீன்களை நீக்குவதற்கு மட்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு பல வாரங்கள் பிடித்தன. நொய்யலின் மீன்பிடிப்பு தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால், நொய்யலின் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு பரவலானது. 1990களின் தொடக்கத்தில் நொய்யலாற்றின் மாசுபாடு குறித்து சுற்றுச்சூழல் போராளிகள் கவலையும் வருத்தத்தையும் தெரிவித்து மனு எழுதி குவிக்கத் தொடங்கியிருந்தார்கள். 1996 ஆம் ஆண்டு கரூர் விவசாயிகள் சங்கம், திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. அணையில் மீன்கள் இறந்த செய்தி நீதிபதிகளின் மனசாட்சியை உலுக்கியதன் விளைவாக, 1997ல் நொய்யல் நீரை திறந்து விடக்கூடாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2002ல் சூழலியல் இழப்பீடு ஆணையத்தை நிறுவ உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி பாஸ்கர் தலைமையிலான இந்த ஆணையம் 2002  2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இழப்புக்கு மட்டும், 68 கிராமங்களைச் சேர்ந்த 28,596 விவசாயிகளுக்கு ரூ. 24.8 கோடி இழப்பீடு வழங்க பாரிந்துரை செய்தது. இந்த இழப்பீடு மிகவும் குறைவானத் தொகை. மேலும் அது, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு மையம்தான் இழப்பீட்டை கணக்கிட்டது. இவர்களது குழு மேம்போக்காக ஆய்வு செய்தது என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். 2005 ஆம் ஆண்டு விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர் (இக்கட்டுரை ஆசிரியர்) தொடர்ந்த வழக்கில் முன் வைத்த ஆதாரங்களையும் வேண்டுகோளையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, மாசுபாட்டை கணக்கிட சிவராமன், மோகன் தலைமையில் இரு குழுக்களை நீதிமன்றம் ஏற்படுத்தியது.

2006 ஆம் ஆண்டு சிவராமன் கமிட்டி ஒரத்துப்பாளையம் அணையின் கீழ்ப்பகுதி வரை செடிகளை வெட்டி கல் நட்டது. அணையின் துருப்பிடித்த மதகுகளை சீரமைத்தது. மோகன் கமிட்டி "ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்" என்ற சாயக்கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையங்களை அமைக்க ஏற்பாடு செய்தது. இதற்கிடையே சாயக்கழிவுகளை சுத்திகாரிக்காமல் நேரடியாக கடலில் கலக்கும் குழாய் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டம் தீட்டி வருகிறது. இத்திட்டம் கண்டிப்பாக கடலிலுள்ள உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை விளைவிக்கும். மேலும் மீன் உள்ளிட்ட பல்வேறு கடல் உணவு வழியாக மீண்டும் மனிதர்களைத் தாக்கும் என்று கடல் உயிரியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

திருப்பூர் சாயப்பட்டறைகள் நாளன்றுக்கு 115.2 மில்லியன் லிட்டர் நீரை பயன்படுத்தி, 9000 மெட்ரிக் டன் சாயக் கழிவை நொய்யலில் நாளன்றுக்கு கொட்டி வருகின்றன. இந்நிலையில் நதியில் கலந்துள்ள வேதிப்பொருட்கள் நொய்யல் நீரை குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் பயன்படாத வண்ணம் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளன. நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. ஆற்று நீரிலுள்ள நண்மை செய்யும் நுண்ணுயிரிகள் முற்றிலும் சிதைவடைந்துவிட்டன. நொய்யலில் இருந்த பாரம்பாரியமான மீன் வகைகள் அழிந்துவிட்டன. நொய்யலாற்று நீர் மாசுபட ஆரம்பித்த வேளையில் பருகிய கால்நடைகள் மலட்டுத்தன்மை அடைந்தன. 7 அடி உயர சோளச் செடிகள் போன்சாய் செடி போல 2 அடி உயரமாக குறுகின. 1990 ஆம் ஆண்டு முதல் 97 ஆம் ஆண்டு வரை கிணத்தடி நீரை பயன்படுத்திய விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் பலருக்கு சுவாசம், குடல், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட்டன. பல ஆண்கள் மலட்டுத்தன்மையடைந்தார்கள். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு, கருத்தரித்தலில் பிரச்சினைகள் ஏற்பட்டன. கால்நடைகளுக்கு நீரும் உணவும் தர முடியாத சூழ்நிலையில், அவற்றின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் 75 சதவீதம் குறைந்து விட்டது.

ஒரத்துப்பாளையம் அணைக் கீழ்பகுதியில் ஆண்டுக்கு மூன்று போக வேளாண்மை என்பது மாறி கீழ் பவானி கால்வாய் நீரை நம்பி ஒரு போகமாக மாறிவிட்டது. தென்னை, பனை போன்ற மரங்கள் முற்றிலும் பயனற்றுப் போய், காய் பிடிக்காமல் கருகிவிட்டன. விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருந்த கால்நடைகள் தரும் வருமானம் குறைந்துவிட்டது. இன்றைக்கு நொய்யலை ஒட்டிய 68 கிராமங்களுக்கு குடிநீர் பவானி ஆற்றிலிருந்து கொண்டு வரப்படுகிறது. குடிநீர் வரி வசூலித்து செலுத்த முடியாமல் பஞ்சாயத்துக்கள் தடுமாறி வருகின்றன.

வாழ்வாதாரம் குறைந்து பொருளாதார வளம் இழந்துவிட்ட சூழலில் கிராமங்களின் மக்கள்தொகை பாதியாக குறைந்துவிட்டது. நொய்யலை ஒட்டிய கிராமங்களில் ஆண்கள் பலர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்களிடம் 5 முதல் 10 ஏக்கர் நிலமிருந்தாலும் யாரும் பெண்தர முன் வருவதில்லை. நீதிமன்ற தீர்ப்புகள் முழுமையாக நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் நொய்யலை மாசுபடுத்தும் விழுக்காடு 1985  95 காலக்கட்டத்தில் ஏற்பட்ட மாசுபாட்டை, 1995  2005 காலத்துடன் ஒப்பிடும் போது 200 விழுக்காடு அதிகரித்துள்ளது. நொய்யல் ஆற்று நீர் மாசு காவிரியில் கலந்து, கொள்ளிடத்தில் கலந்து வீராணம் நீர் மூலம் சென்னையையும் தொட்டுவிட்டது. நீரோட்டம் நஞ்சின் தீவிரத்தை குறைத்தாலும், முழுமையாக அழித்துவிடவில்லை. நொய்யலின் மாசுபாடு 1,46,389 ஏக்கர் விவசாய நிலத்தை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக 1,50,000 விவசாய கூலிகளின் வாழ்வாதரத்தை பறித்துள்ளது. கரூர் மாவட்டத்து காவிரி நீர் எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் மக்களை மெல்ல கொல்லும் நஞ்சாக நொய்யல் நீர் வியாபித்துள்ளது.

இதற்கான தீர்வு: திருப்பூரின் 800 சாயப்பட்டறைகளிலிருந்து கழிவுநீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு நன்னீராக நொய்யலில் கலக்க வேண்டும். கோவை, திருப்பூர் நகரங்களின் கழிவு நீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட வேண்டும். மழைநீரை பத்தாண்டுகளுக்கு அதிகமாக நிலத்தடி நீரோட்டத்தில் கலக்கச் செய்தால் நிலத்தடி நீரை மாற்றலாம். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் பாரபட்சமின்றி உரிய இழப்பீட்டுத் தொகையை மறுபாரிசீலனை செய்து வழங்க வேண்டும். இதுவொன்றும் சாத்தியப்படாத கோரிக்கைகள் அல்ல. நொய்யலை மாசுபடுத்தி பன்னாட்டு ஆடைகள் நிறுவனங்களும் உள்நாட்டு ஏற்றுமதியாளர்களும் கோடிக்கணக்கில் பணம் ஈட்டியுள்ளனர். மாநில, மத்திய அரசும் ஜவுளித் துறை மூலம் அந்நியச் செலவாணியை பலமடங்கு ஈட்டியுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்க, நொய்யலை புனரமைக்க எந்த விலை கொடுத்தாலும் தகும். தமிழகத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகளுடன் தொடர்ந்து போராடினால் நொய்யலை மீண்டும் உயிர்ப்பிக்கலாம். 

- சி.மா.பிரிதிவிராஜ், பூவுலகின் நண்பர்கள், கோவை

Pin It