ஜெயராமின் உளறல் குறித்தும், தமிழ்த் தேசியவாதிகளின் எதிர்வினை குறித்தும் "கீற்று.காமில்" அங்குலிமாலாவின் கட்டுரை அருமை. ஆனால் அதற்கு 'தமிழ் இனமான அறிவாளிகளின்' எதிர்வினை ஆபாசத்தின் உச்சம். தமிழர்கள் இவ்வளவு தூரம் பண்பாடற்றவர்களா என்கிற சந்தேகத்தை மற்றவர்கள் மத்தியில் எழுப்பக் கூடியது என்றே கூறலாம். அதாவது இந்தத் தமிழ் இனக்காவலர்கள் மட்டும்தான் தமிழர்கள் என்று வைத்துக் கொண்டால்.

ஜெயராம் வீட்டைத் தாக்கியவுடன் இப்படி எழுதும் அங்குலிமாலா ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது எங்கே போயிருந்தார் என்று ஒருவர் 'மிக நாகரீகமான' பாணியில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்புறம் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் என்ன செய்தீர்கள் என்கிற கேள்வியும் வேறு.

* இந்த இனமானக் காவலர்களைப் பார்த்தவுடன் நமக்கு எழும் முதல் கேள்வியே, தமிழ்நாட்டில் தலித் தமிழர்கள் மேல்சாதித் தமிழர்களால் அவமானப்படுத்தப்படும்போதெல்லாம் ஏன் இவர்களுக்கு ரத்தம் கொதிக்க மாட்டேன் என்பதுதான். தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழகத்தில் கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வாகிவிட்டது. சமீபத்தில் கூட திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைக்கு அருகில் ஒரு தலித் காலுக்கு செருப்பு போட்டிருந்த 'குற்றத்திற்காக' மேல்சாதித் தனிநபர்கள் சிலர் மலம் 'ஊட்டியிருக்கிறார்கள்'. (யார் கண்டது அவர்கள் அதைத்தான் உண்பார்கள் போல; அதனால்தான் திணித்தார்கள் என்கிற சொல்லுக்குப் பதிலாக ஊட்டினார்கள் என்கிற சொல்). ஆனால் அப்போது சீமான் தன் படையை அவர்களை ஒரு கை பார்த்துவர அனுப்பவில்லை. அட, ஒரு வார்த்தை முணுமுணுக்கக் கூட இல்லை.

* கல்வி என்கிற பெயரில் சீமான்களும், கோமான்களும், சமூக விரோதிகளும் தமிழர்களின் பணத்தை, உழைப்பை, வாழ்நாள் சேமிப்பை, பரம்பரைச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது கண்டு இவர்கள் ஏன் சீற மாட்டேன் என்கிறார்கள்? ஆங்கிலம் சரியாகத் தெரியாததால், தமிழ் நன்றாகத் தெரிந்தாலும் பொறியியல் படிக்க முடியாத காரணத்தால் கடந்த வருடம் ஒரு பொறியியல் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். (சிலர் சொல்லாமல் கொல்லாமல் கல்லூரியையே விட்டே ஓடி விடுகிறார்கள்). கட்டணம் என்கிற பெயரில் கொள்ளையடிக்காதே என்று இவர்கள் போராடவும் இல்லை; தமிழிலிலேயே உயர்கல்வி வழங்கு என்று இவர்கள் வற்புறுத்தவும் இல்லை. அதெல்லாம் மானமுள்ளவர்கள் செய்கிற வேலையில்லை போலும்.

* அரிசி கிலோ 40 ரூபாய்க்கு விற்கிறது. சர்க்கரை 45ஐத் தாண்டி பறந்து கொண்டிருக்கின்றது. வெளிச்சந்தையில் 90 ரூவிற்கு விற்கும் பருப்பு ரேஷன் கடையில் 40க்குக் கிடைக்கிறது. அதுவும் மாதம் ஒரு கிலோதான். அதையும் போலீஸ் பாதுகாப்புடன்தான் விநியோகிக்க வேண்டியிருக்கிறது. காய்கறிகளின் விலையைப் பற்றி சியாமளா என்பவர் தன்னுடைய எதிர்வினையில் குறிப்பிட்டுள்ளார். எல்லாம் விலை ஏறுகின்றது. ஆனால் கூலி மட்டும் உயரவே மாட்டேன் என்கிறது. மானமுள்ள தமிழன் இதைப் பற்றியெல்லாம் பேசக் கூடாது. வயிற்றில் ஈரத்துணியைப் போட்டுக் கொண்டு யாரோ ஜெயராம் என்கிற நடிகர் உளறியது பற்றி சூடாக வேண்டும் என்கிறார்கள். இதற்காக, 'இவர்களுக்கு எந்நேரமும் சோற்றைப் பற்றித்தான் கவலை, மானத்தைப் பற்றிக் கவலையில்லை' என்று நம்மை இவர்கள் ஏசக் கூடும். அவர்களுக்கு அமரர் ஜீவா சொன்ன பதில்தான். யார் யாருக்கு எது எது இல்லையோ அவர்கள் அது அதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்.

பொருளாதாரத்திற்கும் பண்பாட்டிற்கும் இடையில் பிரிக்க முடியாத தொடர்பு இருக்கின்றது. தமிழகத்திலுள்ள கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் முதலாளிகளிடம் வாங்கிய கடனுக்காக கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதும், கடனைத் தீர்க்க முடியாதவர்கள் வீட்டுப் பெண்கள் முதலாளிக ளால் வல்லாங்கு செய்யப்படுவதும், சிலர் வேறு வழியின்றி அதை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளும் அவல நிலையும் ஊரறிந்த கொடுமை. (மராத்வாடா பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதால் நிராதவராக விடப்பட்ட அவர்களது குடும்பங்கள் சிலவற்றின் பெண்கள் தங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக செய்திகள் கூறகின்றன). எங்கே போய்த் தொலைந்தார்கள் இந்த இனமானக் காவலர்கள்?

* தமிழ்நாட்டில் தமிழன் அடிபடுவது பற்றியும், தமிழ்ப் பெண்கள் வாழ்வு எண்ணற்ற காரணங்களால் தமிழர்களாலேயே சூறையாடப்படுவது பற்றியும் வாய் திறந்ததுண்டா? 'சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா' என்றெல்லாம் பாட்டெழுதி, கூலி வேலை பார்க்கும் தமிழ்ப் பெண்கள் கேவலப்படுத்துகிறவர்களுக்கு எதிராக இவர்கள் என்ன கிழித்து விட்டார்கள்? சுட்டு விரலையாவது அசைத்திருக்கிறார்களா? அல்லது நாக்கைப் போல் இவர்களது மீசையும் தொங்கி ஜொள்ளு விடுகின்றதோ?

* இந்த லட்சணத்தில் கருணாநிதி ஆட்சி பற்றி விமரிசனம் வேறு. உண்மையில், ஏறுகின்ற விலைவாசி, நாளும் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், சகஜமாகிக் கொண்டிருக்கும் படுகொலைகள் (காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பில்லை) போன்றவை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பி, மக்கள் இந்த ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுவதைத் தடுத்து கருணாநிதிக்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கின்றன நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாத இயக்கங்கள். தெரிந்தே செய்கிறார்கள் என்று நாம் சொல்லவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலையின் பலன் அதுதான். இல்லை என்றால் அவர்கள் இந்தப் பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடியிருக்க வேண்டும். வேலைநியமனத் தடைச் சட்டத்திற்கு எதிராகவும், இளைஞர்களின் வாழ்வை இருளச் செய்யும் 'ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் அரசுப் பணியில் அமர்த்தும்' கருணாநிதி ஆட்சிக்கு எதிராகவும் போராடியிருக்க வேண்டும். நரம்பு புடைக்க, கண் சிவக்க செந்தமிழன் முழங்கியிருக்க வேண்டும்.

* கொலை வெறியன் பால் தாக்கரேயை சீமான் புகழ்ந்ததற்குக் காரணம் இருக்கின்றது. விடுதலைப் புலிகள் சுமார் இரண்டு லட்சம் முஸ்லிம்களை விரட்டி அடித்ததற்கு அவர்களைத் தாக்கரே பாராட்டினார். தமிழர்களை அடித்து உதைத்தே கட்சி நடத்தியவர் ஆயுதத்தாங்கிய தமிழர் இயக்கம் ஒன்றை ஏன் பாராட்ட வேண்டும்? அவரது முஸ்லிம் வெறுப்பு அரசியல் நிலைப்பாட்டிலிருந்தே அதைச் செய்கிறார்.

* இந்தத் தமிழ்த் தேசியவாதிகளின் பார்ப்பனீய எதிர்ப்பும் ஒரு பாசாங்கே என்பதும் அம்பலமாகி மாதங்கள் பல ஆகின்றன. அது மட்டுமல்ல இந்துத்துவ எதிர்ப்பும் ஒரு கபட நாடகம்தான். கடந்த மக்களவைத் தேர்தலின்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கேட்டு காஞ்சி காமகோடி பீடத்திடம் தஞ்சம் அடைந்ததும், 1980களுக்குப் பின்னர் நாட்டில் நடந்த மதக்கலவரங்களுக்குக் காரணமான, சிறுபான்மையினரை நரவேட்டையாடிய விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவன் அசோக் சிங்காலிடம் நட்பு பாராட்டியதும் யாருக்கும் தெரியாது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்களா? இந்து மதவெறி பாசிச பாஜக ஆட்சிக்கு வந்தால் தனிஈழம் மலர்ந்து விடும் என்ற இனப்பற்றை என்ன வகையில் சேர்த்துவது? அப்பட்டமான பாசிச சந்தர்ப்பவாதம்.

* பால்தாக்கரேயின் பாசிச அரசியலுக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவை தேசிய இனவிடுதலைக்குச் சார்பான மனநிலை என்று ஒரு அரிய கருத்தை ராஜீவ் என்பவர் எழுதியிருக்கிறார். பால் தாக்கரே எப்போது சார் தேசிய இனவிடுதலை பற்றி பேசினார்? அவர் எப்போது டெல்லி ஏகாதிபத்தியம் என்று நீங்கள் கண்டுபிடித்த சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்? (தேசிய இனவிடுதலைப் பற்றி தனியாக விவாதித்துக் கொள்ளலாம்). பாபர் மசூதியை இடித்தது நாங்கள்தான் என்று மார்தட்டியவர் அவர். ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் விலைக்கு வாங்காதது தவறு என்று கூறிய ஷாருக்கானை தேசத் துரோகி எனறு வசைபாடிக் கொண்டிருப்பவர் அவர். தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் சிவசேனைக்குக் கிளைகள் இருக்கின்றன என்பது தெரியுமா தெரியாதா? முதலில் தமிழர்களுக்கு எதிராக அரசியல் நடத்தினார். இப்போது வட இந்தியர்களுக்கு எதிராக அரசியல் நடத்துகிறார். எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிராக இந்துத்துவ அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றார். இந்துத்துவத்திற்கும் தேசிய இனவிடுதலைக்கும் என்ன சம்பந்தம்?

அவர் நடத்தும் வன்முறை அரசியல் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளிகளுக்கும், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கும் எதிரானது மட்டுமே. அதுவும் தொழிலாளி வர்க்க ஒற்றுமையைச் சீர்குலைக்கும் அடிப்படை நோக்கம் கொண்டது. சிவசேனை தொழிலாளர்களின் உரிமைகளைத் தின்றுதான் வளர்ந்தது. தொழிலாளர்களைத் தின்றுதான் வளர்ந்தது. மும்பையில் தொழிற்சங்க இயக்கத்தை துண்டு துண்டாகச் சிதறடித்து முதலாளிகளுக்கு சேவை செய்ததே அதன் சாதனை. தமிழர்களே வெளியேறுங்கள், வடஇந்தியர்களே வெளியேறுங்கள் என்கிற சிவசேனை (இப்போது அதற்கும் நவ்நிர்மாண் சேனைக்கும் இடையில் இனவெறிப் போட்டி வேறு) பன்னாட்டு நிறுவனங்களே மராட்டியத்தை விட்டு வெளியேறுங்கள் என்று சொன்னதுண்டா? மைக்கேல் ஜாக்சனை அழைத்து வந்து மராத்தியக் கலாச்சாரத்தைக் காப்பாற்றிய பெருமை அவரையே சேரும்.

ஏதோ நேர்த்திக் கடன் போல் மராட்டியத்தில் விவசாயிகள் அன்றாடம் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அரசின் கொள்கைகளால் விவசாயத்தில் நட்டம், கடன் தொல்லை போன்றவை காரணங்கள். வேறு மாநில விவசாயிகள் மராட்டியத்தில் வந்து விவசாயம் செய்கிறார்கள் என்பது காரணமில்லை. ஏனெனில் அப்படி யாரும் இல்லை. ஆனால், மராத்திய சிங்கம் கொட்டாவி விடக் கூட வாய் திறக்கவில்லை. சரியாகச் சொன்னால் பழி சுமத்தி அரசியல் செய்வதற்கு யாரும் இல்லாததால்தான் தாக்கரே அதைக் கண்டு கொள்ளவில்லை.

தமிழ்த் தேசியவாதிகளும் அம்பானிக்கு எதிராக ஒரு முறை போராட்டம் நடத்தினார்கள். அவர்களது சில்லறை வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். முறை சரியில்லை என்றபோதும், நிலைப்பாடு சரிதான். ஆனால், எந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவாவது, குறிப்பாக சாமான்ய மக்களின், சிறு முதலாளிகளின் தொழிலைப் பாதித்த, வாழ்வாதாரத்தைப் பறித்த மென்பான நிறுவனங்களுக்கு எதிராக இவர்களது ஆவேசம் திரும்பியதே இல்லை. கண்ணை மூடிக் கொண்ட பூனைகள் போல் அமைதியாக இருக்கிறார்கள்.

* தாக்கரே அடித்தது ஏழைத் தமிழர்களை; ஏன் அந்த ஏழைத் தமிழர்கள் மராட்டியத்திற்குப் போனார்கள்? தமிழ்நாட்டில் வேறு தமிழர்கள் அவர்களது வயிற்றில் அடித்ததால் புலம் பெயர்ந்து மராட்டியம் போனார்கள். போனால் அங்கும் அடி விழுகிறது. தாக்கரேயின் செயல்களுக்கு மராத்திய இளைஞர்களின் ஆதரவு இருக்கின்றது. ஏன்? மராத்திய இளைஞர்களும் வேலையின்றித் தவிக்கிறார்கள். ஆனால், அதற்குக் காரணம் அரசின் கொள்கைகள். ஆனால் அதை அவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக, தெரிந்து கொண்டு எதிர்த்துப் போராடுவதைத் தவிர்ப்பதற்காக, அவர்களது வேலையின்மைக்குக் காரணம் வெளி மாநிலத்தவர்கள்தாம் என்று திசை திருப்புகிறார். அவருக்கு மராத்திய மக்கள் மத்தியில் இருக்கும் ஓரளவு ஆதரவிற்குக் காரணம் அவர் வேலையின்மையைப் பற்றிப் பேசுகிறார் என்பதுதான்.

*தமிழ்த் தேசியவாதிகள் என்றாவது தமிழ்நாட்டுப் பிரச்சனையை கையில் எடுத்ததுண்டா? மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்த விஷயங்கள் எதுவும் அவர்கள் அக்கறைக்கு உரியது அல்ல. அல்லது அப்படியே அவர்கள் ஏதாவது பிரச்சனையைக் கையில் எடுத்தாலும் அது வேறு மொழி மக்களுக்கு எதிரானாக இருக்கும். பகை மூட்டி, கலவரம் தூண்டுவதாக இருக்கும். முல்லைப் பெரியாறு என்பார்கள், காவிரி என்பார்கள், குஷ்பு என்பார்கள், ஜெயராம் என்பார்கள். கடந்த சில வருடங்களாக காவிரியில் தண்ணீர் நன்றாக வருவதால் அதை வைத்து ஒன்றும் சலம்பல் பண்ண முடியவில்லை. கிடைத்தது முல்லைப் பெரியாறு. அதன் நுணுக்கங்களுக்குள் நாம் இப்போது போக வேண்டாம். ஆனால் திருநெல்வேலியிலும், சிவகங்கையிலும் பன்னாட்டு நிறுவனங்கள் மக்களுக்குச் சேர வேண்டிய நீரை பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதை எதிர்த்து தமிழ் இனமானம் ஏன் துடிக்கவில்லை? அப்படி தண்ணீர் தாரை வார்க்கப்படுவதற்கு எதிராகப் போராடியவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தும்; பொய் வழக்கு போடும்; பன்னாட்டு முதலாளிகள் ரவுடிகளை ஏவிக் கொலையும் செய்வார்கள். ஆனால், இவர்கள் அதைக் கண்டு ஆவேசம் கொள்ள மாட்டார்கள். அதற்கு மௌன ஆதரவு தருவார்கள்.

போகிற போக்கில் ராஜீவ் என்பவர் தமிழகத்தில் அதிகமான நிலங்களை தொடர்ந்து மலையாளிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அள்ளிவிட்டுப் போகிறார். அதற்கு அவர் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. பாசிஸ்டுகள் எப்போதும் எதற்கும் ஆதாரம் தருவதில்லை. அது அவர்களது இயல்பும் அல்ல. பொய், மீண்டும் மீண்டும் பொய் பாசிசத்தின் குணம். ஆனால், நில உச்சவரம்புச் சட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்திருக்கும் வாண்டையார்கள், மூப்பனார்கள், வடபாதி மங்கலங்கள், செட்டிநாட்டு பெரும்புள்ளிகள், கொங்கு நாட்டுப் பண்ணையார்கள் போன்றோருக்கு எதிராக இவர்களும், இவர்களைப் போன்றவர்களும் (திராவிட அரசியல் செய்பவர்கள்) ஏன் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள்? அந்த நிலங்கள் எல்லாம் ஏழைத் தமிழ் விவசாயிகளுக்குச் சேர வேண்டியது அல்லவா? அந்த நில முதலைகள் எல்லாம் தமிழர்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவா? தமிழனைத் தமிழன் அடிக்கலாம், உதைக்கலாம், சொத்தைப் பறிக்கலாம், கேவலப்படுத்தலாம், ஈனப்பிறவிகள் போல் நடத்தலாம், தமிழச்சிகளை மானபங்கப்படுத்தலாம், துகிலுரிந்து ரசிக்கலாம். அதை இந்த இனமானக் காவலர்கள் 'ஆகா அருமை, அபாரம்' என்று பாராட்டுவார்கள் போலும்.

* சோறும் நீரும் விற்பனைக்கு உரியவை அல்ல என்பது தமிழர் பண்பாடு. சோறு விற்பனைப் பண்டமாகி நு£ற்றாண்டுகள் கடந்து விட்டன. ஆனால், நீர்? அதற்கும் விலை வைத்து விட்டது, மனிதாபிமானம் அற்ற முதலாளித்துவம். இந்தப் பண்பாட்டுக் காவலர்களோ அதைக் கண்டு கொள்ளவே இல்லை. அதாவது தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிரான ஒரு கொடுஞ்செயலைக் கண்டு கொள்ளவே இல்லை.

- அசோகன் முத்துசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)