இந்தியாவில் பஞ்சாப் ( 28.31 சதம்), ஹிமாச்சலப் பிரதேசம் (25.34 சதம்), மேற்கு வங்கம் (23.62 சதம்), உத்திர பிரதேசம் (21.05 சதம்), ஹரியான (19.75 சதம்) ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிக தலித் மக்கள் (19.18 சதம்) வாழ்கின்றனர். ஆனால் தமிழகத்தில் இவர்களது வாழ்வியல் சூழல் சொல்லொன்னா துயரத்துடன்தான் இருக்கிறது. பல்லாயிரம் கிராமங்களில் தீண்டாமைக்கொடுமை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்களது வாழ்வியல் ஆதாரமான நிலம் இன்றும் அவர்களுக்கு கானல் நீராகவே தொடர்கிறது. 80 சதமான தலித் மக்கள் இன்றும் கூலிவேலை செய்துதான் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

 * தமிழகத்தில் மொத்த நில உடைமையாளர்களாக உள்ள 78,98,932 நபர்களில் 9,03,548 பேர்கள் மட்டுமே அதாவது 11 சதமானம் மட்டுமே தலித்துகள். 11 சதமான பேரிடம் நிலம் உள்ளதா என அதிர்ச்சி அடைய வேண்டாம். இதில் 45 சதமானம் அதாவது கிட்டதட்ட 4 லட்சம் பேரிடம் உள்ள சராசரி நிலப்பரப்பு வெரும் 2 ஏக்கர் மட்டுமே. 10 ஏக்கருக்குமேல் நிலமுள்ளவர்களில் 1.5 சதம் மட்டுமே தலித் மக்கள். தமிழகத்தில் உள்ள மொத்த நில அளவில் 7 சதம் மட்டுமே இவர்களுக்கு சொந்தமானது.

* ஈரோடு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையில் தலித் மக்கள் 17 சதம். ஆனால் அவர்களிடம் உள்ள நிலம் கிட்டதட்ட 2 சதம் மட்டுமே. நீலகிரி மாவட்டத்தில் 30 சதம் உள்ள தலித் மக்களிடம் உள்ள நிலம் 0.90 சதம் மட்டுமே, கோவையின் மொத்த மக்கள் தொகையில் 16 சதத்திற்கு மேல் உள்ள தலித் மக்களிடம் உள்ள நில அளவு 1.38 சதம் மட்டுமே.

* இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழகத்தில் ஐந்து லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில் நான்கு லட்சம் ஏக்கர் நிலம் ஆதிக்க சாதியினர் சட்டத்திற்கு புறம்பாக ஆக்ரமித்துள்ளனர். மீதம் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே கண் துடைப்புக்கு ஏலம் விடப்படுகிறது. இந்த பின்னணியுடன்தான் தமிழக அரசின் தலித் மக்கள் மீதான அனுகுமுறையை புரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழகத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஒரு ஆற்றல் மிகு பாத்திரத்தை வரலாற்று தொடரில் நிகழ்த்தி இருப்பினும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தில் அதனால் ஒரு காத்திரமான பங்களிப்பை செய்ய இயலவில்லை. 1940களில் தமிழகத்தில் எழுச்சியுற்ற சுயமரியாதை இயக்கம், அதன்பின் தோன்றிய திராவிடர் கழகம் அறிவுப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதன்பின் தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் இடைநிலை சாதியின் பிடிப்பையும், ஆதரவையும் பெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தது. தி.மு.க வின் வரலாற்றில் அதனால் பொருளாதார பயன்பெற்றவர்கள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட மக்கள் உண்டு. ஆனால் தலித் மக்கள் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

1967 முதல் 42 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் மாறி மாறி ஆட்சிக் கட்டில் அமர்ந்துள்ளன. அவர்கள் பேசும் சமூக நீதி என்ற வார்த்தை உண்மையில் அர்த்தப்பட வேண்டுமெனில் தமிழக மக்கள் தொகையில் 20 சதமாக உள்ள தலித் மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் வரவேண்டும். ஆனால் ஆட்சிக்கட்டில் அமர்ந்த பின்பு தலித் மக்களுக்கு சமூக, பொருளாதார நலன்களுக்காக அவர்கள் நடத்திய போராட்டங்கள் விரல் விட்டு எண்ணக் கூடியதுதான். கையில் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலமற்ற மக்களுக்கு நிலங்களை கொடுக்க இன்றுவரை எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை. ஆனால் வக்கணையான வசனங்கள் மேடையில் முழங்கப்படுவதுடன் அவர்கள் பிரச்சனை மறக்கப்படும்.

தீண்டாமைக்கு எதிராக ஒரு போராட்டத்தையும் நடத்தாத, நிலச் சீர்திருத்தம் உள்ளிட்ட அம்மக்களின் வாழ்வியல் பிரச்சனையைத் தீர்க்காத திராவிட அரசியல் கட்சிகள் வெகுஜன செல்வாக்குடன் இருப்பினும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அவர்கள் செய்ய மறுப்பது ஏன் என்பதை வர்க்கப் பார்வையுடன் அணுகினால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும்.

1980 ஆம் ஆண்டு மத்திய அரசு தலித் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு என சிறப்புக் கூறு திட்டத்தை அறிமுகம் செய்தது. உண்மையில் இது சிறப்பான திட்டம்தான். தலித் மக்களுக்கு பொருளாதார தளத்தில் ஓரளவு உதவும் இந்த சிறப்புக் கூறு திட்டமும், அவர்களை சமூக புறக்கணிப்பு செய்வதைத் தடுக்க 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் அதன் முழு நோக்கத்துடன் அமலாக்கப்படாமல் கேலிப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

பல பத்தாண்டு திட்டங்கள் வந்து போயுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாடு என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் அவற்றின் பலன்கள் பெருமளவுக்கு அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையவில்லை. அவர்களின் சமூக, பொருளாதார தளத்தில் எந்த மாற்றதையும் உருவாக்கவில்லை. இந்த பின்னணி தான் இந்திய அரசு சிறப்புக் கூறு திட்டத்தை உருவாக்கக் காரணமானது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

1. மாநிலத்தின் தலித் மக்கள் எத்தனை சதவீதம் உள்ளனரோ அந்த சதவீத நிதி அவர்கள் நலத்திட்டப்பணிகளுக்கென மொத்தத்திட்ட வரைவிலிருந்து ஒதுக்கப்பட்ட வேண்டும்.

2. இந்த ஒதுக்கீட்டளவு தெளிவாக தெரியும் வண்ணம் வரவு - செலவு திட்ட இணைப்பு நூலில் கணக்குத் தலைப்புகள் தனித்தனியாக காட்டப்பட்ட வேண்டும்.

3. மத்திய, மாநில அரசின் ஒவ்வொரு துறையும் சிறப்புக் கூறு திட்டப்படி தனித்தனியாக நடைமுறைத் திட்டங்களை தீட்டிச் செயல்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

4. சிறப்புக்கூறு திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு துறையின் திட்டங்களும் அமுலாக்கப்பட்டு, உரிய நிதிகள் ஒதுக்கப்படவும், பலன்கள் மக்களை அடையவும், அரசாணைகள் இயற்றி உத்திரவாதம் அளிக்க வேண்டும்

இத்துனை சிறப்பான வழிகாட்டுதல்கள் இருப்பினும் நிதி ஒதுக்கீட்டில் ஒழுங்கீனம், அணுகுமுறையில் கோளாறு, துறைகளின் மெத்தனப் போக்கு போன்றவற்றால் இத்திட்டம் அம்மக்களுக்கு உரிய பலனை அளிக்கவில்லை.

ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1977 - 82) மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் துறையிலும் கட்டாயமாக இத்திட்டத்தை அமலாக்க வேண்டும் என்று சிறப்புக் கூறு திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் நமது நாட்டில் காலங்காலமாக வறுமையை ஒழிப்போம் என்று வீரவசனம் பேசி வறுமையை வளர்த்து விடுவது போல சிறப்புக் கூறு திட்டம் தலித் மக்களுக்கு எந்தவிதமான சிறப்பையும் உருவாக்கவே இல்லை.

2003 - -2004 ஆண்டில் சிறப்பு கூறு திட்டத்தின்படி தலித் மக்களுக்கு 1519 கோடி ரூபாய் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் 349 கோடி ரூபாய் மட்டுமே இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டான 2004-05 இல்...

1. வேளாண்மையும் அது தொடர்பான 10 பணிகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டது. அதில் ஆராய்ச்சி, கல்வி, உணவுபொருள் சேமிப்பு மற்றும் கிடங்கு வசதி, மண் வள, நீர் வள பாதுகாப்பு, பால் பண்னை வளர்ச்சி, மீன்வளம், காட்டுவளம், வேளாண்மை நிதி, கூட்டுறவு ஆகிய 8 மணிகளுக்கு சிறப்புக் கூறு திட்டப் பணம் ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. பயிர் வளர்ப்பு 8.49 கோடி, கால்நடை வளர்ப்பு 57 லட்சம் ஆக 124.60 கோடிக்கு 9.06 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

2. ஊரக வளர்ச்சி தொடர்பான மூன்று பணிகளில் நிலச் சீர்திருத்தம் சமுதாய வளர்ச்சித் துறைக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவிலை. ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டத்திற்கு 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 175 கோடி வந்திருக்க வேண்டும்

3.பாசனம் வெள்ளக் கட்டுப்பாடு தொடர்பான மூன்று பணிகளில் சிறு பாசனம், பாசனப் பகுதி மேம்பாடு, பெரும் பாசனமும் நடுத்தர பாசனமும் வெள்ளக்கட்டுபாடு என 105 கோடி தலித் மக்கள் பங்காக வந்திருக்கவேண்டும் ஆனால் ஒரு ரூபாய் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை

4. மின்விசை சம்மந்தமான மின் விசை சமன்பாடுக்கென 19.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நவீன எரிசக்தி வாயில்களின் கதவு திறக்கப்படவில்லை. ஆக 252 கோடி மூலப் பங்கில் 19.36 கோடி மட்டுமே அவர்களுக்கு கிடைத்துள்ளது.

5. கனிம தொழிலும், கனிமப்பொருள்கள் சம்மந்தமான நான்கு பணிகளில் நடுத்தர பெரும்தொழில்கள் எடைகள், அளவைகள் சுரங்கம் வெட்டுதல், உலோகவியல் தொழில்களுக்கு ஒதுக்கப்பட்ட 61.13 கோடியில் ஒரு ரூபாய் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

6. அறிவியல் பணிகள் ஆராய்ச்சி, உயிரின வாழ்க்கை சூழல், சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்காக ஒதுக்கிய 56 லட்சத்தில் ஒரு ரூபாய் கூட தலித் மக்களுக்காகச் செலவு செய்யப்படவில்லை. தலைமை செயலகம், பொருளாதாரப் பணிகள், சுற்றுலா, பொருளாதார ஆலோசனை, புள்ளி விவரம், நுகர்பொருள் வழங்கல் பணிகளுக்கு சிறப்புக்கூறு ஒதுக்கியி 13 கோடியின் நிலையும் அதுதான்.

7,பொதுக்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, கலை பண்பாடு, போட்டி விளையாட்டுகள், நலப்பணிகள் ஆகியவற்றிற்கு ஒதுக்கிய 50கோடியில் பொதுக்கல்விக்கு மட்டும் 17கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

8.மருத்துவம், பொதுசுகாதாரம் என்ற நல்வாழ்வு துறைக்கு ஒதுக்கப்பட்ட 200 கோடியில் 20சதமான தலித்மக்களுக்கு சேர வேண்டிய 40 கோடியில் ஒரு ரூபாய் கூட அவர்களுக்கு ஒதுக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளனர்,

9.குடிநீர் வழங்கல், துப்புரவு, வீட்டுவசதி, நகர்பகுதி வளர்ச்சிக்கு என சிறப்புக் கூறு தொகை 258 கோடியில் 137கோடி மட்டுமே செலவாக்கப்பட்டுள்ளது.

10,செய்தி விளம்பரத் துறையில் தலித் மக்களுக்கு உண்டான ஒரு கோடி ரூபாயில் ஒரு ரூபாய் கூட செலவாகவில்லை,

11.பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் துறையில் 176 கோடி செலவாக வேண்டும் ஆனால் 114 கோடி மட்டுமே செலவாகி உள்ளது.

12.தொழிலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறையில் 10கோடி செலவாகி இருக்க வேண்டும் ஆனால் ஒரு ரூபாய்கூட செலவாகவில்லை.

13.சமூகநலன் மற்றும் சத்துணவு துறையில் 108 கோடி செலவு செய்திருக்க வேண்டும் ஆனால் 21 கோடி மட்டுமே செலவானது.

14.ஏனைய சமூக, சமுதாய நலப்பணிகள் மற்றும் பொதுப்பணிகளில் 9 கோடி செலவாகியிருக்க வேண்டும் ஆனால் ஒரு ரூபாய் கூட செலவாக வில்லை.

15.எழுது பொருள், அச்சுத்துறை மற்றும் பொதுப்பணிகள் துறையில் 30 கோடியில் ஒரு ரூபாய் கூட செலவாகவில்லை.

ஆக 2004-2005 ஆண்டில் மொத்தம் திட்டஒதுக்கிடு 8000கோடி ரூபாயில் 1728 கோடிரூபாய் சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் தலித் மக்களுக்கு செலவாகியிருக்க வேண்டும் ஆனால் 354 கோடி மட்டுமே செலவாகி உள்ளது.

மேலே கண்டது இரண்டு ஆண்டுகளின் விபரம் மட்டுமே. 1980 துவங்கி 2009 வரை 29 ஆண்டுகளில் மலைக்க வைக்கும் பல ஆயிரம் கோடிகள் - தலித் மக்களுக்கான தொகை - தமிழகத்தில் மட்டும் ஏமாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக பட்ஜெட்டில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகைகள் 1999-98ல் ரூபாய் 588 கோடி, 1998-99 ல் 643 கோடி, 1999-00ல் ரூ 840 கோடி, 2000-01ல் 887 கோடி, 2004-2005ல் ரூ 1363 கோடி என்று கணக்கிட்டால் இந்த 8 ஆண்டுகளில் மட்டும் தலித்துகளுக்கு சட்டரீதியாக வந்து சேர வேண்டிய பணம் ரூ 7,143 கோடி பறிபோயுள்ளது. இது குறித்து எவ்வித நடவடிக்கையை ஆட்சியாளர்கள் மேற்கொண்டார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆக இன்றுவரை அமலாக்கத்தில் உள்ள இந்த திட்டத்தில் அம்மக்களுக்கான பணம் அம்மக்களிடம் சென்று சேரவேண்டும் என்ற கோரிக்கை மிக முக்கியமானது.

(சமூக கண்காணிப்பகம் - தமிழ்நாடு வெளியிட்ட ஆய்வு அறிக்கைகளும், தமிழகத்தில் நிலமும் சதியும் - தங்கராசு ஆகிய நூட்கள் துணையுடன் எழுதப்பட்டது.)

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு