17.08.2010 செவ்வாய்க்கிழமை அன்று சென்னை சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர் அசோக் குமார் செங்கல்பட்டு அருகே உள்ள திருக்கழுக்குன்றம் என்ற ஊரில் உள்ள காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மாணவர் 'தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின்' காஞ்சிபுர மாவட்டப் பொறுப்பாளர் என்பதும் அவர் காவல் துறையின் அத்துமீறல்களை பலமுறை கண்டித்திருக்கிறார் என்பதும் காவல்துறை அந்த மாணவரை பலி வாங்க்க் காத்திருந்தது என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. காவல் துறையினர் அடித்த அடியில் மேல்தாடையில் பல் உடைந்திருக்கிறது, உதடு கிழிந்திருக்கிறது, பாதத்தில் தோல் உரிந்திருக்கிறது. தலை, தொடை, கழுத்து என உடம்பில் பல பாகங்களில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி உள்ளனர்.

law_student_ashokkumarசட்டக்கல்லுரி மாணவர்கள் கொதிப்பு

மாணவர் காவல் துறையினரால் தாக்கப்பட்ட சம்பவமானது சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களைக் கொதித்தெழ வைத்தது. அவர்கள் அந்தச் செய்தியைக் கேட்டவுடன் தன்னெழுச்சியாக திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அதுவும் பாரிஸ் கார்னரில் இரண்டு இடங்களில் சாலையை மறித்ததால் வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என்று அனைத்துப் பகுதியிலும் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் சுமார் ஆறு மணி நேரம் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய காவல் துறை

 சென்னையில் மிகவும் வாகன நெருக்கடி மிகுந்த இடம் பாரிஸ் கார்னர். இதில் உயர்நீதி மன்றம், பிராட்வே என்ற இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் உட்பட்ட இரண்டு சாலைகளும் மறிக்கப்பட்டதால் ஒட்டுமொத்தமாக போக்குவரத்து சேவையே ஸ்தம்பிதது. பொதுமக்கள் அவதிக்கு உள்ளானபோதும் காவல் துறை அம்மாணவர்களைக் கைது செய்யவோ, கலைந்து போகச்செய்யவோ இல்லை. தேர்தல் நெருங்குவதால் இது மீண்டும் வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் போராட்டமாக மாறி விடுமோ என்ற பயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டு விட்டதைத் தான் இது காட்டுகிறது.

காவல் துறையின் மாறாத்தன்மை

இன்றைய காவல் துறையானது பிரிட்டிஷ் காவல்துறை எப்படி இருந்ததோ அப்படியே இம்மியும் மாறாமல் இன்றும் இருக்கிறது. பிரிட்டிஷ் காலத்திலாவது காவல்துறையில் லஞ்சம் என்பது இன்று உள்ளதைப்போல இல்லை. ஆனால் ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக வைத்து போற்றப்படும் தமிழக காவல் துறை குற்ற வழக்குகளைக் கண்டுபிடிப்பதில் முதன்மை வகிக்கின்றதோ இல்லையோ, அதிகமாக லஞ்சம் வாங்குவதில் துறைரீதியாக முதன்மை வகிக்கின்றது.

சட்டத்தை மதிக்காதவர்கள் யார்?

அமைச்சர்கள், சில பணக்கார பத்திரிகையாளர்கள் அடிக்கடி ஒரு வாசகத்தைக் கூறுவதுண்டு ‘வழக்கறிஞர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக்கூடாது, அவர்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்களே’ என்று சொல்வார்கள். இது எவ்வாறு முழுக்க முழுக்க பொய்யோ, அதைப் போலவே காவல் துறை சட்டப்படி தனது கடமையை ஆற்றுகிறது என்பதும். காவல் துறை மட்டுமல்ல நமது ஆட்சியாளர்களும் சட்டத்தையும், நீதிமன்றங்களையும் மதிப்பதில்லை என்பதே உண்மை ஆகும். உண்மையிலேயே அவர்கள் தான் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். எந்த சட்டம் ஊழல் செய்யவும், கையாடல் மற்றும் இன்ன பிற முறைகேடுகளையும் செய்யச்சொல்கிறது என்று தெரியவில்லை. அது அவர்களுக்கே வெளிச்சம்.

மனித உரிமைகளை காவு கொடுக்கும் காவல்துறை

காவல்துறைக்கு பல சட்ட வழிகாட்டுதல்கள் உண்டு. மனித உரிமை ஆணையம் வகுத்திருக்கும் வழிமுறைகள் மற்றும் ‘டி.கே.பாசு - எதிர் - மேற்கு வங்காள அரசு’ என்ற வழக்கில் தெளிவாக வரையறுத்துள்ள வழிமுறைகளையோ காவல்துறை அதிகாரிகள் மதிப்பதும் இல்லை, கிஞ்சித்தும் பின்பற்றுவதும் இல்லை. அவர்களுக்குத் தைரியம் கொடுப்பவர்கள் எல்லாம் அரசியல் கட்சியினர் தான். ஏனெனில் எந்த அரசுமே ஆட்சியை தங்கள் சுயலாபத்திற்குப் பயன்படுத்த முழுக்க, முழுக்க நம்பி இருப்பது காவல் துறையைத்தான்.

கள்ளக்கூட்டு போடும் காவல்துறை

அரசு என்பது ஒடுக்குமுறைக் கருவி எனும்போது அது அதன் பிரதிநிதியாக வைத்திருப்பது காவல் துறையைத்தான். இந்த சம்பவத்திற்கு எந்த அரசியல் கட்சியுமே காவல்துறையைக் கண்டிக்கவில்லை. ஏன் என்றால் இவர்களோடு கூட்டு சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து செய்து காசு பார்ப்பதே இவர்களின் இப்போதைய முக்கியமான தொழில். அத்தோடு இவர்கள் செய்யும் அனைத்து குற்றவியல் வேலைகளுக்கும் காவல் துறையின் ஆசியும், பங்கும் அவசியம் தேவை. இதை பொது மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டார்களானால் இவர்கள் தேர்தலின்போது ஓட்டு கேட்டு மக்களிடம் செல்லவே முடியாது. மக்களை இவர்கள் பல வழிகளிலும் ‘தாங்கள் தான் மக்களுக்கு உண்மையான எதிரி’ என்பது தெரியாமல் திசை திருப்பி வைத்துள்ளனர்.

law_college_students_strike

வழக்கறிஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!

 வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே காவல் துறையினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர்; நீதிமன்ற வளாகங்களும், வாகனங்களும், கண்முடித்தனமாக அடித்து நொறுக்கப்பட்டது. நீதிபதிகளும் தாக்கப்பட்ட ஒரு மிகக் கேவலமான சம்பவம் நடைபெற்றது. ஆனாலும் ஆட்சியாளர்கள் ஒருபோதும் அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட வேலைநீக்கப் பரிந்துரையையும், அரசு செய்யாமல் உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்து காவல் துறையினரைப் பாதுகாக்கும் பணியைச் செய்துள்ளது. இது போலவே அரசு தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நீதிமன்ற உத்தரவுகளை கிள்ளுக்கீரையாக மதிக்கும் நிலை வேறு எந்த நாட்டிலும் இல்லை எனலாம்.

காவல்துறை யாருக்கு நண்பன்?

இன்றைய காவல் நிலையங்கள் பெரும்பான்மையானவை பணம் காட்சி மரங்களாகவே இருக்கின்றன. புகார் கொடுப்பவரிடம் இருந்தும், யார் மீது புகார் அளிக்கப்பட்டதோ அவர்களிடம் இருந்தும், பணத்தைக் கறந்து கொண்டு இருவரையும் மிரட்டி அனுப்பும் வேலையைத்தான் இன்றைய காவல்துறை செய்து கொண்டு இருக்கிறது. காவல் துறை மக்களின் நண்பன் என்று சொல்வது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும். இது எப்போதும் நியாயமான போராட்டங்களை ஒடுக்கும் வேலையைத்தான் செய்து வருகிறது. மனித உரிமை, அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமை என்று எந்த உரிமையையும் சாதாரண மக்களுக்கு வழங்காமல் தங்களிடம் சிக்குபவர்களை சிதறு தேங்காய் போடும் வேலையை கணகச்சிதமாக செய்து வருகிறது நமது காவல் துறை.

நமது ஆட்சியாளர்களுக்கு அது ஒரு ஏவல் துறை ஆகும். தாங்கள் வைத்தது தான் சட்டம், எங்களால் எதையும் செய்ய முடியும், நிரபராதியை குற்றவாளியாக்க முடியும், குற்றம் செய்தவனை காக்கவும் முடியும், ஒருவனை ரவுடி என்று என்கவுண்டர் செய்யவும் முடியும், கொலைக் குற்றம் செய்தவனுக்கு பாதுகாவல் வேலையும் செய்ய முடியும் என்று தலை கொழுத்து காவல் துறை ஆடுகிறது. கஸ்டடி மரணங்கள் பல நடந்தும் அவற்றில் பல மறைக்கப்பட்டும், சில ஆர்.டி.ஒ விசாரணையில் தூங்குவதும், நமது நாட்டில் வழக்கமான ஒன்றாகி விட்டது என்றே சொல்லலாம். அதை எதிர்த்துக் கேட்பதும், நியாயம் கிடைக்கப் போராடுவதும், அந்தப் போராட்டங்கள் சட்ட விரோதமாக நசுக்கப்படுவதும் தான் இன்று நடைபெற்று வருகிறது. நமது சட்டக் கல்லூரி மாணவர்கள் அந்த நடைமுறைக்கு தங்களின் நேர்மையான போராட்டம் மூலம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து உள்ளனர்.

கருத்துரிமையை கொலை செய்யும் காவல்துறை!

 இன்று அரங்கக் கூட்டங்களுக்கே காவல் தூறையின் அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வந்து எந்த ஒரு கருத்தும் அரசுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ எதிராகத் திரும்பக் கூடாது என்பதில் காவல்துறை கவனமாக கருத்துரிமை பறிக்கும் வேலையைச் செய்து வருகின்றது. போராட்டம் நடத்த வேண்டும் என்றால் மனிதர்களே இல்லாத இடமாகப் பார்த்து கண்டன ஆர்பாட்டம் நடத்த அதுவும் பலகட்டப் போரட்டங்களுக்கு பிறகே அனுமதி கிடைக்கின்றது.

கிளர்ந்தெழுந்த மாணவர்கள்!

 அந்த நிலையில் தான் மாணவர்கள் போராட்டம் யாரையும் சார்ந்திராமல் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. இது சட்டக் கல்லுரி வரலாற்றிலே பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டிய செய்தி ஆகும். சட்டக் கல்லுரி மாணவர்கள் 2008 ஆண்டில் மாணவர்களுக்குள்ளேயே இரு பிரிவாக பிரிந்து அடித்துக் கொண்டது பொது மக்களுக்கு அவர்கள் மீது இருந்த மரியாதையை இழக்கும் விதமாக இருந்தது. அத்தோடு இரு வருடங்களாக எந்தவிதப் போராட்டமும் செய்யாமல் மாணவர்கள் முடங்கிக் கிடந்தனர் என்றே சொல்லலாம். இந்தப் போராட்டத்தின் மூலம் சக மாணவன் காவல் துறையைச் சேர்ந்தவர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டபோது கொதித்தெழுந்து ஆளும் அரசுக்கு எதிராக அந்த சட்ட விரோத காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வைத்திருப்பது என்பது சாதாரண செய்தி அல்ல. ஏன் என்றால் இது போலவே பல முறை மாணவர்கள் காவல் துறையின் அத்துமீறலுக்கு எதிராக களம் இறங்கிப் போராடி எந்த விதமான தீர்வும் கிடைக்காமல் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டி இருந்தது.

நீதிமன்ற உத்தரவு

road_rokoஇந்தப் போராட்டத்தில் இறுதியாக சட்டக் கல்லூரி மாணவர்கள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டவுடன் அந்நீதிமன்றம் உடனே காஞ்சிபுர மாவட்ட காவல் துறை உயர் அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்தது. அத்தோடு திருக்கழுக்குன்றம் காவல் நிலைய அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது. மேலும் அம்மாணவரை உடனடியாக பெற்றோர் பார்க்கவும், அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டது.

துருவ நட்சத்திரங்கள்

 மாணவர்கள் என்பவர்கள் வருங்காலத்தை தீர்மானிக்கப் போகும் பாரதத்தின் விலை மதிக்க முடியாத வைரங்கள். இன்று அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி என்பது அவர்கள் தேர்விலே வெற்றி பெற மட்டுமே உதவக்கூடியதாகவும், வாழ்க்கைத் தேர்வில் தேரமுடியாதவர்களாகவும் ஆக்குகிறது. அகத்தேர்வு முறையானது மாணவர்கள் முதுகெலும்பை முறிப்பதாகவும், அவர்களின் போராட்ட குணத்திற்கு சவால் விடுவதாக்கவுமே உள்ளது. அந்த நிலையைத் தகர்த்து இலங்கைத் தமிழர் பிரச்சனையாகட்டும், நாட்டில் நடக்கும் அநீதியைத் தட்டி கேட்பதாகட்டும், காவல் துறையின் அராஜகப் போக்கை கண்டிப்பதாகட்டும் எதிலுமே எப்போதும் முதல் இடத்தில் இருப்பவர்களும், முதலில் குரல் கொடுப்பவர்களாக இருப்பவர்களும் சட்டக் கல்லுரி மாணவர்களே.

புறக்கணித்த செய்தி நிறுவனங்கள்

 சட்டக் கல்லுரி மாணவர்கள் இந்த ஆளும் சந்தர்ப்பவாத, அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கும் மக்கள் விரோத அரசுக்கு எதிராக 6 மணி நேர மறியல் போராட்டம் நடத்துவது என்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஓன்று. அத்தோடு மற்ற சட்டக் கல்லூரிகளான சேலம், மதுரை, திருச்சி, செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களையும் திரண்டெழுந்து போராட வைத்தது. அதைப் போலவே ஒவ்வொரு கல்லூரியிலும் போராட்டம் பரவி விடும் என்ற நோக்கத்தில் தான் எந்த மீடியாவும் இந்தச் செய்தியை முக்கிய செய்தியாக வெளிவிடவில்லை. அதுவும் சில மீடியாக்கள் அந்த உண்மையைத் திரித்தும், புரட்டியுமே அரைகுறை செய்தியை வெளியிட்டன. இதில் இருந்தே அனைத்து செய்தி நிறுவனங்களும் அரசாங்கத்தின் விரல் அசைப்பில் ஆடுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது. மாணவர்களின் நேர்மையான போராட்டமானது எந்த அடக்குமுறைக் கருவிக்கும் கட்டுப்பட்டதல்ல என்பதே வரலாறு காட்டும் உண்மை. ஆகவே தான் அரசின் அடக்குமுறையை உடைத்து எறிந்து மாணவர் சக்தி எழுந்தால் அது எந்த அரசையும் ஆட்டுவிக்கும் சக்தி கொண்டது என்பதும், மாணவர்கள் அச்சமற்றவர்கள் என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

மாணவர்கள் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும்

போராட்டம் என்பது நாமே வலிந்து ஏற்பதல்ல, அது நம் மீது வன்முறையாகத் திணிக்கப்படுகிறது. அதைப் போலவே போராட்ட வடிவமும் சந்தர்ப்பத்தைப் பொறுத்து மாறுகிறது. அதுவும் இளம் மாணவர்கள் போராட்டமானது எந்த வலிமை மிக்க அரசாங்கத்தையும் ஆட்டுவிக்கும் வல்லமை கொண்டது. ஜெயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தைப் போலவே இதுவும் காவல்துறை அத்துமீறல்களுக்கு எதிராக வலிமையான மாணவர்கள் போராட்டமாக மாற வேண்டும். அப்போது தான் காவல் துறை லத்தியை ஓங்கும்முன் கொஞ்சம் புத்தியையும் உபயோகிக்கும். எந்த சமூகத்தில் மாணவர்கள் எழுச்சி மிக்கவர்களாக, அநீதி எங்கு நடந்தாலும் தட்டி கேட்கின்றனரோ, அந்த சமூகமே நல்ல ஒரு விழிப்புணர்வு நிரம்பிய சமூகமாக இருக்கும். நமது மாணவர்கள் அதைப் போராட்டங்கள் மூலம் கண்டிப்பாக சாதிப்பார்கள்.

- கு.கதிரேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

செல்பேசி: 9843464246