இலங்கைத் தீவில் இன்று இருவேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்களும் தெற்கு தென்மேற்குப் பகுதிகளில் சிங்களரும் பரவியுள்ளனர்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கைத் தீவு முழுதும் தமிழ் இனத்திற்கே உரியதாக இருந்தது. ஆரிய இனத்தின் வழிவந்தவர்கள் வட இந்தியாவிலிருந்து இலங்கையில் சென்று குடியேறினர். காலப் போக்கில் பல்கிப் பெருகிய அந்தக் கூட்டத்தினர் சமஸ்கிருதம், பாலி, தமிழ் முதலிய மொழிகளின் கலவையாக உருவான சிங்கள மொழியைச் பேசத் தொடங்கினர்.அதனால் அவர்கள் சிங்களர் என்ற அடையாளத்தைப் பெற்றனர்.

இலங்கைத் தீவின் தொல்குடிகளான தமிழர்களுக்குப் பலவகையான இடையூறுகளைச் செய்தும் வஞ்சனை வலை வீசியும் ஏமாற்றியும் தமிழர்க்கு உரிய நிலத்தின் ஒருபகுதியை வல்வளைப்புச் செய்த சிங்களவர்கள், தெற்குப் பகுதியில் தங்களுக்கென ஓர் அரசை அமைத்துக் கொண்டனர். தமிழர்கள் தனியரசை நடத்தி வந்தனர்.

போர்த்துக்கீசியர் இலங்கைத் தீவில் வந்து இறங்கியபோது யாழ்ப்பாண அரசு, கண்டி அரசு, கோட்டை அரசு என மூன்று தனித்தனி அரசுகள் இலங்கைத்தீவில் இருந்தன. யாழ்ப்பாண அரசு தமிழர்க்கு உரியதாகவும், கோட்டை அரசு சிங்களர்க்கு உரியதாகவும் இருந்தன. கண்டி அரசு, தமிழர், சிங்களர் ஆகிய இரண்டு இனத்தவர்களிடமும் மாறி மாறி ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. ஆங்கிலேயர் இலங்கையின் ஆட்சி அதகாரத்தைக் கைப்பற்றிய பிறகுதான் இலங்கைத் தீவு முழுவதும் ஒற்றை ஆட்சியின் கீழ்க் கொண்டு வரப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கிறித்துவ மத அமைப்புகளால் மேலை நாட்டு முறையிலான கல்விக் கூடங்கள் பல நிறுவப்பட்டன. கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் தொடங்கப்பட்டன. கால மாற்றத்தையும் கல்விச் சிறப்பையும் அறிந்து தெளிந்த தமிழ் மக்கள் அந்தக் கல்வி நிலையங்களில் சேர்ந்தனர்; பல்கலைக் கழகங்களில் பயின்று பட்டங்களைப் பெற்றனர். கல்வியறிவு பெறாதவர் இல்லை என்று சொல்லு மளவிற்குத் தமிழர்கள் அனைவரும் கல்வியில் மேம்பட்டு விளங்கினர்.

மூடர்களாகவும் முரடர்களாகவும் இருந்த சிங்களர்கள் கல்வி பெறுவதில் அக்கறை காட்டவில்லை. மிகச் சிலர் மட்டுமே கல்வியறிவு பெற்றனர்.

இலங்கைத் தீவு முழுவதிலும் ஆசிரியர்களாகவும் பேராசிரியர்களாகவும் தமிழர்களே இருந்தனர். மருத்துவம், சட்டம், பொறியியல் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர்களாகத் தமிழர்களே இருந்தனர். சிறந்த அரசியல் அறிஞர்களாகவும் ஆட்சித் தலைவர்களாகவும் ஆங்கிலேயர்க்கு நிகராகத் தமிழர்களே சிறந்து விளங்கினர்.

1948இல் இலங்கைத் தீவிலிருந்து வெள்ளையர் வெளியேறியபோது இலங்கையின் ஆட்சி அதிகாரம் பெரும்பான்மைச் சிங்களர் கைக்கு வந்தது. அந்தக் காலக் கட்டத்திலும் தமிழர்களே கல்வியிற் சிறந்தவர்களாக விளங்கினர். தீவு முழுதும் பரவலாகப் பல்வேறு பணிகளில் தமிழர்களே பொறுப்பேற்றுக் கொண்டிருந்தனர். அந்த நிலை கண்டு சிங்களர், தமிழர் மீது அழுக்காறு கொண்டனர், ஆத்திரமடைந்தனர்; தமிழர்களைப் போல் கல்வியறிவைப் பெறவேண்டும் என்று சிங்களத் தலைவர்கள் சிங்கள மக்களிடையே பரப்புரை செய்தனர். சிங்களரே மக்கள் தொகையில் பெரும்பாலராக இருந்தும் சிறுபான்மைத் தமிழர்களே எல்லாத் துறைகளிலும் இடம் பெற்றிருப்பதைச் சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து சிங்கள மக்கள தம் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தொடங்கினர். உயர்கல்வி நிலையங்களிலும் சிங்களர்    பெருமளவில் சேர்ந்து பயிலத் தொடங்கினர். ஆனாலும் கல்வித் தேர்ச்சியில் தமிழரோடு போட்டியிட முடியவில்லை. தமிழ்ப் பிள்ளைகளே கூடுதல் மதிப்பெண் பெற்றுச் சிறந்த நிலையில் தேர்ச்சி பெற்றதால் அரசுப் பணியிடங்களிலும் பிற துறைகளிலும் தமிழர்களே தொடர்ந்து பெருமளவில் இடம் பெற்று வந்தனர்.

இந்த நிலைமை சிங்கள ஆட்சியாளர்களைச் சிந்திக்க வைத்தது. தமிழ்ப் பிள்ளைகளோடு போட்டியிட்டுச் சிங்களர்கள் உயர்தகுதியைப் பெற முடியாத நிலையில், தமிழர்களைத் தவிர்த்துச் சிங்களர்களைப் பல துறைகளிலும் கொண்டுவர என்ன செய்வது என்று எண்ணத் தொடங்கினர். அவ்வாறு எண்ணியதன் விளைவாகத்தான் 1970 -ஆம் ஆண்டில் ‘கல்வியில் தரப்படுத்தல்’’ என்ற சட்டத்தைச் சிங்கள ஆட்சியாளர்கள் கொண்டு வந்தனர்.

உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களைச் சேர்க்கும் போது, கூடுதல் மதிப்பெண் பெற்ற தமிழ் இளைஞர்களுக்கே கல்வி வாய்ப்புக் கிடைத்துக் கொண்டிருந்தது. சிங்கள இளைஞர்களுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இடம் கிடைத்தது. இந்த நிலைமையைத் ‘தரப்படுத்தல்’’ சட்டம் மாற்றியமைத்தது. தமிழ் இளைஞர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அந்தச் சட்டத்தின்படி அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது; சிங்களர்கள் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டது. தகுதியிற் கூடியிருந்தாலும் தமிழர்க்குக் கல்வி வாய்ப்புத் தரக் கூடாது, தகுதியில் குறைந்திருந்தாலும் சிங்களவர்களுக்குக் கல்வி வாய்ப்புத் தரப்பட வேண்டும் என்பதுதான் ‘தரப்படுத்தல்’ சட்டத்தின் அடிப்படையாக இருந்தது. அந்தச் சட்டத்தின் விளைவாகச் சிங்கள இளைஞர்கள் பெருமளவில் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்றனர். தமிழ் இளைஞர்கள் உயர் கல்வி வாய்ப்பை இழந்தனர். ‘சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி’ என்ற சட்டத்தின் விளைவாக அரசு அலுவலங்களில் வேலைவாய்ப்புகளை இழந்து நின்ற தமிழர்கள் ‘தரப்படுத்தல்’’ சட்டத்தினால் கல்வி வாய்ப்பையும் இழக்க நேர்ந்தது.

தமிழர்க்கான உரிமைகளைப் பெற வேண்டி, 1948 முதல் தந்தை செல்வா தலைமையில் தமிழர்கள் பலப்பல அறப் போராட்டங்களை நடத்தினர். அனைத்திலும் தோல்வி கண்டு துவண்டு நின்றனர். அந்த நிலையில் தந்தை செல்வா அவர்கள் 1976ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்கள் தனிநாடு தமிழீழம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்தார்.

“கூட்டாட்சிக் கொள்கையை நாங்கள் முற்றிலுமாகக் கைவிட்டு விட்டோம்; நாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறோம்; பிரிந்து செல்லா விட்டால், இழந்த எங்கள் உரிமைகளை ஒருக்காலும் மீண்டும் வென்றெடுக்க முடியாது. எந்த வழியிலாவது தனியரசை அமைக்க நாங்கள் முயல்வோம். சிறிலங்காவிற்கும் உலகத்திற்கும் இந்த அவையிலிருந்து இதனைச் சொல்கிறேன். இது எளிதான வேலையன்று என்பது எமக்குத் தெரியும். இந்த இலக்கை அடைவதற்கான வழி கரடுமுரடானது என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால்,சிங்களர் ஆட்சியிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் அல்லது அழிந்துபட வேண்டும். இதுவே எமது கொள்கை.””

(5.12.1976 அன்று சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தந்தை செல்வா பேசியது)

முப்பதாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அறவழிப் போராட்டங்களால் பயன் ஏதும் கிடைக்கவில்லை என்பதாலும் அறவழிப் போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்திய தந்தை செல்வா அவர்களே தமிழீழத் தனி நாட்டை அமைத்தால் மட்டுமே தமிழர்கள் உரிமைகளுடன் வாழ முடியும் என்பதைத் தெளிவுபடுத்தி விட்டதாலும் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கினர்.

ஆயுதக்குழுக்கள் பல தோற்றம் பெற்றன. அவற்றுள் பல இந்திய அரசின் உளவுப்பிரிவுகளின் பிடியில் சிக்கிச் சீரழிந்து விட்டன. வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் இயங்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமே தமிழீழத் தனியரசு என்ற குறிக்கோளிலிருந்து சிறிதும் பிறழாமல் களத்தில் நின்று சிங்களப் படையை எதிர்த்துப் போரிட்டுப் பல வெற்றிகளை ஈட்டியது.

நார்வே அரசின் துணையுடன் 2002ஆம் ஆண்டில் இலங்கைச் சிங்கள அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குமிடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் தமிழீழத் தாயகத்தின் எழுபது விழுக்காட்டு நிலப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. தலைவர் பிரபாகரன் அவர்களைத் தமிழீழத் தனியரசின் தேசியத் தலைவராகத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

தமிழீழ அரசியல்துறை, நிதித்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, பொருண்மிய மேம்பாட்டுத் துறை, தமிழீழப் போக்குவரத்துத் துறை, தமிழீழக் காவல்துறை, தமிழீழக் கல்விக் கழகம், தமிழீழ நுண்கலை வளர்ச்சித் துறை, கலைபண்பாட்டுத் துறை எனப் பல்வேறு துறைகள் தகுதி வாய்ந்த பொறுப்பாளர்களாற் சிறப்பாகச் செயற்படுத்தப்பட்டன.

தமிழீழத் தனியரசு அமைக்கப்பட்டிருந்தாலும் உலக நாடுகளின் ஏற்பிசைவு பெறாத நிலை இருந்ததால் இலங்கையரசின் ஆளுகையிலிருந்த அஞ்சலகங்களும், வங்கிகளும், கல்விக் கூடங்களும், தொலைத் தொடர்பு நிலையங்களும் தொடர்ந்து இயங்குவதற்குத் தமிழீழ அரசு இடம் கொடுத்திருந்தது. இலங்கையரசின் வங்கிகள் தமிழீழத்தில் இயங்கிய அதே வேளையில் ‘தமிழீழ வைப்பகம்’ என்னும் பெயரில் தமிழீழ அரசின் வங்கிகளும் மக்களின் பேராதரவுடன் செயற்பட்டு வந்தன. அவ்வாறே இலங்கையரசின் ஏற்பிசைவுடன் செயற்பட்ட கல்விக்கூடங்களில் தமிழ்ப்பிள்ளைகள் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தனர்.

பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் வித்தியாலயம் என்றும் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் மகா வித்தியாலயம் அல்லது கல்லூரி என்றும் சொல்லப்பட்டன. தமிழீழத் தனியரசின் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி நகரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் பத்துக்கு மேற்பட்ட பள்ளிகள் இயங்கின. ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டாயிரத்திற்குக் குறையாத அளவில் மாணவர்கள் பயின்றனர். ஆனால் ஆசிரியர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது.

ஆசிரியர்கள் பணிநிறைவு பெற்று வெளியேறிய பின்னர் உருவாகும் வெற்றிடங்களில் புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படவில்லை. ஆசிரியர்களிற் பெரும்பாலோர் யாழ் மாவட்டத்திலிருந்தே வந்து கொண்டிருந்தனர். அதனால் மேலும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது. அறுபதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் இருபதுக்கும் குறைவான ஆசிரியர்களே பணியிலிருந்தனர். ஆகவே பிள்ளைகளுக்கு உரிய வகையில் கற்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 2006 -ஆம் ஆண்டுத் தொடக்கத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வழியாகக் கொழும்பு வரை செல்லும் ஏ -9 - தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது; அதனால், யாழ் மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி வட்டாரப் பள்ளிகளுக்கு அன்றாடம் வந்து சென்ற ஆசிரியர்கள் தொடர்ந்து வரமுடியாத நிலை ஏற்பட்டது.

வரலாறு, தமிழ் ஆகிய பாட நூல்களில் சிங்களர் வரலாறே சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. தமிழ் இன வரலாறும் தமிழ் இலக்கியங்களின் சிறப்பும் மிகச் சுருங்கிய அளவிலேயே இடம் பெற்றிருந்தன. இலங்கைத் தமிழர்கள் அடிமைப்பட்டவர்கள் என்பதை எடுத்துரைப்பதாகவே கட்டுரைகளும் கவிதைகளும் பாடநூற்களில் இடம் பெற்றிருந்தன.

தமிழர் வீட்டுப் பிள்ளைகள், தங்கள் இன வரலாற்றையும் ஏற்றத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பைச் சிங்கள அரசு வெளியிட்ட பாடநூல்கள் தரவில்லை. அதனால் தமிழீழத் தனியரசின் ஒரு துறையாக இயங்கிய தமிழீழக் கல்விக் கழகத்தின் சார்பில் பாடநூல்கள் வெளியிடப்பட்டன. காலை 8 மணிக்குத் தொடங்கிப் பிற்பகல் இரண்டு மணியுடன் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுவிடும். அதன்பிறகு தமிழீழக் கல்விக் கழகம் வெளியிட்ட, தமிழர் வரலாற்றைச்  சிறப்பாக எடுத்துரைக்கின்ற நூல்களை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து வந்தனர்.

பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகள் உயர்தரம் (Advanced Level -AL) என்று குறிப்பிடப்பட்டன. அந்த வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்கள் மொழிப்பாடம், அறிவியல், சமூகவியல் முதலிய பாடங்களைப் படிப்பதுடன் இசை, நடனம், ஓவியம் ஆகிய மூன்று கலைப்பாடங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். உயர்தரத் தேர்வு எழுதும் மாணவர்கள் கலைப் பாடத்திலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசுத் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர். பெரும்பாலான பள்ளிகளில் கலைப் பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் அமர்த்தப் படவில்லை. அதனால் அந்தப் பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் அரசுத் தேர்வில் தோல்வியடையும் நிலை இருந்தது.

உயர்தரம்  - அரசுத் தேர்வில் மிகச் சில தமிழ்ப் பிள்ளைகளே வெற்றி பெற முடிந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பெறுவதற்கு இடம் கிடைப்பது அரிது. கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் மிக மிகக் குறைந்த அளவில் மட்டுமே தமிழ்ப் பிள்ளைகள் பல்கலைக் கழகத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வாய்ப்புக் கிடைத்துப் பல்கலைக் கழகத்திற்குப் படிக்கச் செல்லும் தமிழ் மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் எதுவும் நேரலாம் என்ற பாதுகாப்பற்ற நிலை யாழ்ப்பாணத்தில் உள்ளது.

2002 முதல் ஐந்தாண்டுகள் போர் நிறுத்த உடன்பாடு இருந்ததால் வன்னிப் பகுதியில் ஓரளவு அமைதி நிலவியது. ஆனால் அந்தக் காலக் கட்டத்திலும் யாழ்ப்பாணம் சிங்களப் படைக் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால், தமிழ் இளைஞர்கள் பலர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்ற ஐயத்தின் பேரில் ‘வெள்ளை வேன்‘ கும்பலால் கடத்திச் செல்லப்பட்டனர். அவ்வாறே பல்கலைக் கழகத்தில் படித்த தமிழ் மாணவர்களும் பலர் அவ்வப்போது கடத்திச் செல்லப்பட்டனர். கடத்திச் செல்லப்பட்டவர்கள் அனைவரும் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்பதே உண்மையாகும்.

வன்னிப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் யாழ்ப்பாணத்திலிருந்த பாதுகாப்பற்ற நிலைமையைக் கருதிப் பல பெற்றோர், தங்கள் பிள்ளைகளை யாழ்ப் பல்கலைக்கு அனுப்புவதைத் தவிர்த்து வந்தனர். அதனால் தமிழ் இளைஞர்கள், பட்டப் படிப்பும் தொழிற் கல்விப் படிப்பும் பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருந்தது. 1990களுக்குப் பிறகு பல்கலைக் கழகப் பட்டம் பெற்ற தமிழ் இளைஞர்களை விரல்விட்டு எண்ணி விட முடியும்.

தமிழ்நாட்டில் கல்வியாண்டு சூன் மாதம் தொடங்கி மே மாதம் முடிகிறது. ஆண்டு இறுதித் தேர்வுகயளல்லாம் மார்ச்சு, ஏப்பிரல் மாதங்களில் நடைபெறுகின்றன. தமிழ் ஈழத்தில்கல்வியாண்டு சனவரியில் தொடங்கி விடுகிறது. நவம்பர், திசம்பர்த் திங்களில் ஆண்டிறுதித் தேர்வுகள் நடைபெறுகின்றன. சனவரியில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

2009ஆம் ஆண்டு சனவரி 2ஆம் நாள் சிங்களப் படை கிளிநொச்சிக்குள் நுழைந்தது. தொடர்ந்து முரசுமோட்டை, விசுவமடு, வள்ளிபுனம், சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவிளை முதலிய ஊர்களுக்குள்ளும் படை நுழைந்தது. அதனால் அங்கிருந்த தமிழ் மக்கள் அனைவரும் இடம் பெயர்ந்து காடுகளுக்குள் சென்று விட்டனர். பள்ளி செல்ல வேண்டிய பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து காடுகளில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆசிரியர்களும் இடம் பெயர்ந்து காடுகளுக்குச் சென்று விட்டனர். அதனால் அரைகுறையாகக் கிடைத்து வந்த கல்வியும் கிடைக்க வாய்ப்பில்லாது போயிற்று.

இடப்பெயர்வுக்குப் பின் ஏழு மாதங்கள் கடந்து விட்டன. வன்னிப் பகுதியைச் சேர்ந்த மூன்று இலட்சம் தமிழர்கள் முகாம்களில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்த   புதிதாகப் பள்ளிகளில் சேர வேண்டிய பிள்ளைகயளல்லாம் சிங்களப் படையின் தடுப்பு முகாம்களில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளனர். ஆறுமாத காலத்திற்குள் முகாம்களிலுள்ள தமிழர்கள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று இலங்கை அதிபர் மகிந்த சொல்கிறார். அதே வேளையில் தமிழர்களின் வாழ்விடங்களில் சிங்களர்கள் குடியேற்றப்படு வதாகவும் தமிழ்ப் பள்ளிகள் எல்லாம் சிங்களப் பள்ளிகளாக மாற்றப்படுகின்றன என்றும் செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன.

இலங்கைத் தீவு முழுதும் சிங்களர்க்கே உரியது என்னும் கொள்கையுடன் அதற்கேற்ற வேலைத்திட்டங்களை முனைந்து மேற்கொண்டுள்ள மகிந்த இராசபக்சே, முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்துவார் என்று எதிர்பார்க்க முடியாது. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை வெளியே அனுப்பினாலும், அவர்கள் தாங்கள் முன்னர் வாழ்ந்த இடங்களில் வீடு வாசல் இல்லாமல் வீதிகளில் அலைய நேரிடலாம். அந்த நிலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியுமா? அனுப்பினாலும் சிங்களப் பள்ளிகளில் தமிழ்ப்பிள்ளைகள் படிக்க முடியுமா? என்னும் கேள்விக் குறிகளே இன்று எஞ்சியுள்ளன.

போர்நிறுத்த உடன்பாட்டால் அமைந்த அமைதி நிலை நீடிக்கும்; அல்லது மிக விரைவில் தமிழீழம் விடுதலை பெறும்; உலக நாடுகள் தமிழீழத் தனிநாட்டுக்கு ஏற்பிசைவு வழங்கும் நிலை ஏற்படும் எனப் போராளிகளும் ஈழத்துப் பொது மக்களும் நம்பினர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் கிளிநொச்சி நகரில் ஒரு பல்கலைக் கழகம் அமைப்பதற்கு வாய்ப்பாகப் பரந்து விரிந்த நிலப்பரப்பில் கட்டடங்கள் பலவற்றைக் கட்டி முடித்திருந்தனர். பல்வேறு துறைகளுக்கான வகுப்பறைகள், அலுவலகங்கள், நூலகம், கலையரங்கம், இருபால் மாணவர்கட்கான தங்கும் விடுதிகள், உணவுக் கூடங்கள் எனப் பலவும் கட்டி முடிக்கப்பட்டிருந்தன. அறிவியல் பல்கலைக்கழகம் எனப் பெயரும் சூட்டப்பட்டிருந்தது. அந்தப் பல்கலைக் கழக வளாகம் அமைக்கப்பட்டிருந்த வட்டாரம் அறிவியல் நகர் என அழைக்கப்பட்டது.

எல்லாம் பாழாகி விட்டது என்று சொல்லும் வகையில் இன்று கிளிநொச்சியை உள்ளடக்கிய வன்னிப்பகுதி சிங்களப் படையின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்கள் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் பலவும் அடைக்கப்பட்டு விட்டன. தமிழ் ஈழத்தைக் காரிருள் கவ்விக் கொண்டுள்ளது. கல்வியில்லாத களர் நிலமாக வன்னி நிலம் மாற்றப்பட்டுள்ளது. இனி என்ன ஆகும்?

இனி என்ன ஆகும்? என்னும் கேள்விக் குறியுடன் ஈழத்தமிழர்கள் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விடப் போவதில்லை. அடிப்படை உரிமைகளை இழந்து நிற்கும் அவலத்துடன் கல்வியை இழந்து நிற்கும் கவலையும் சேர்ந்ததால் அவர்கள் நெஞ்சம் கனன்று கொண்டிருக்கிறது. ‘அடக்கி விட்டேன்‘ என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் சிங்களர் ஆணவத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஈழத் தமிழர்கள் மீண்டும் கிளர்ந்து எழுவார்கள் என்பது உறுதி. காரிருள் விலகி ஈழத்தில் விடியல் தோன்றும்..... விடுதலை மலரும்.

ஈழத் தமிழர்கள் இந்தியத் தமிழர்கள் அல்லர்.