பல்கலைக் கழகம் என்பதன் அடிப்படைக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது..... அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டோம்..... அதன் சுய அதிகாரம் கரைந்துவிட்டது; பட்டக் கல்வி புதைக்கப்பட்டு விட்டது; அறிவுத் துறைகளிடையே இடைவெளி அதிகரித்து விட்டது; புற யதார்த்த உலகிலிருந்து அவை தனிமைப்பட்டு விட்டன ; பேரளவில் அவை வணிகமயமாகி விட்டன. இந்திய உயர் கல்வியின் குணத்தைக் காட்டும் பிரச்சினைகளுள் இவை சில. “ யஷ் பால் குழுவின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது. (ஃபிரண்ட்லைன் 2009,ஜுலை 4-17)

இந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் பத்திரிகையாளர் களுக்குப் பேட்டி தந்தார்: “இந்தியா இனியும் காத்திருக்க முடியாது..... செயல் படவேண்டிய தருணம் இது..... நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும், மூன்று மந்திரங்களோடு: விரிவு செய்தல், இணைத்துக் கொள்ளுதல், மேம்படுத்துதல்..... எல்லா மட்டத்திலும் தரமான கல்வியைத் தந்தாக வேண்டும்”.

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் தாழ்ந்த கல்வித் தரம், கொள்ளை லாபம், வணிகத் தன்மை பற்றி யஷ்பால் அறிக்கை கவலை தெரிவிக்கிறது. மூன்று ஆண்டுகளில் சரி செய்து கொள்ளாத நி.நி.ப. கழகங்களின் அனுமதி பறிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்கிறது.

நேரடியாகவோ சுற்றடியாகவோ உயர்கல்வியில் தொடர்பு கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் மத்தியில் இந்த அறிக்கை பெரும் புயலைக் கிளப்பி விட்டது.

அர்ஜுன் சிங் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, பிப்ரவரி-2008-இல், ‘பல்கலைக்கழக மானியக் குழுவையும் அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவையும் மறுபரிசீலனை செய்யும் குழு’ அமைக்கப்பட்டது. பிறகு, ‘இந்திய உயர்கல்வியைச் சீர்திருத்தவும் மேம்படுத்தவும் ஆலோசனை கூறும் குழு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 22 பேர் கொண்ட குழுவின் தலைவர் பேராசிரியர் யஷ்பால் ஆவார். (இவர் ஓர் இயற்பியல் விஞ்ஞானி-பல்கலைக் கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர்.) இக்குழு தனது அறிக்கையை 2009 ஜீன் 24ஆம் நாள் இன்றைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபிலிடம் சமர்ப்பித்தது.

இந்தியக் கல்வித் துறை

ஆரம்பக் கல்வியில் முதல் ஐந்தாண்டு முடிவதற்குள் 30% மாணவர்களும் எட்டாண்டு முடிவதற்குள் 50% மாணவர்களும் படிப்பைக் கைவிடுகின்றனர். உயர் கல்வியில் 11% மாணவர்கள்தாம் நுழைகின்றனர். உயர்கல்வியில் நுழையும் மாணவர் எண்ணிக்கை சீனாவில் 1977-இல் 3.125% ஆக இருந்தது... “டெங்சியா வோபிங், பல்கலைக்கழகக் கல்விமுறையை அறிமுகப்படுத்தினார். பெருமளவிலான கல்லூரிகள் பல்கலைக் கழகங்களாக மாற்றப்பட்டன. பல்கலைக் கழக வளாகங்கள் கட்டுவிக்கப்பட்டன... இதற்குக் கைமேல் பலன் கிடைத்தது.... 2003-இல் உயர்கல்வியை நாடும் மாணவர்களின் எண்ணிக்கை 13.2 சதவீதமாக அதிகரித்தது....” (இந்தியா டுடே-தமிழ், 2009 ஜுலை 29, ப.22)

சீனா 30 ஆண்டுகளில் சாதித்ததை இந்தியா 60 ஆண்டுகளில் சாதிக்க முடியவில்லையே. ஏன்? உயர்கல்வியில் நாம் மட்டும் பின்தங்கியிருப்பது ஏன்? கல்வித் தரம் தாழ்ந்திருப்பது ஏன்? அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகக் கூற்றின்படி, அண்மைக் காலத்தில் ஏராளமான (4,770) பொறியியல் மற்றும் அது சார்ந்த தொழிற்கல்வி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருந்தும் பலனில்லையே, ஏன்? பல்கலைக்கழக மானியக் குழு கட்டுப்பாடு களைத் தளர்த்தியது; அரசியல் முதலைகளும் பணமுதலைகளும் ஆட்டம் போட்டனர்; மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மேலும் மேலும் அகலத் திறந்து வழிவிட்டது. உயர்கல்வி ஊழல் கல்வியானது. எப்படி என்று பார்ப்போம். 

ஒரு பல்கலைக்கழகம் தொடங்க வேண்டுமானால் நாடாளுமன்றமோ சட்டப் பேரவையோ சட்டம் நிறைவேற்ற வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு (ப.மா.கு) 1956இல் உருவாக்கப்பட்டது. பின்னர் மாற்றம் வந்தது-சட்டம் இயற்றாமலும் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கலாம் என்றானது. 1980 முதல் 1990 வரை 10 ஆண்டுகளில் 18 கல்வி நிலையங்கள் கூடுதலாக தொடங்கப்பட்டன. கொள்கையில் மாற்றம் செய்ததால் இவை தோன்றின. ப.மா.கு. சட்டம் பிரிவு 3இன்படி மாநில அரசுகளை ஒதுக்கி விட்டு மைய அரசு நேரடியாக உயர்கல்வியைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைக் கண்டனர் அரசியல்வாதிகள். தனியார் தொழிற் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக உயர்த்தப்பட்ட பின்னர் சர்வ சுதந்திரமாகக் கல்விக் கட்டணம் நிர்ணயித்தன ; சேர்க்கைக் கட்டணம் தீர்மானித்தன ; இடஒதுக்கீடு செய்யாமல் அனைத்து இடங்களையும் விருப்பம்போல் விற்றுக் கொள்ளையடித்தன. ப.மா.கு. சட்டம் பிரிவு 3இன் மூலம் அரசியல் நிதி அன்பளிப்புகள் கொட்டும் என்பதை அரசியல்வாதிகள் கண்டுகொண்டனர்.

விளைவு: 1990 முதல் 2000 வரை 10 ஆண்டுகளில் 27 நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் அனுமதிக்கப்பட்டன. 2000 முதல் 2005 வரை  ஐந்தே ஆண்டுகளில்   40 நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் அனுமதிக்கப்பட்டன. அப்போது, வாஜ்பாயி தலைமையிலான அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக முரளி மனோகர் ஜோ´ இருந்தார். இவர் ஆண்டு 2000த்தில் விதிமுறைகளை மேலும் தளர்த்தி, டி நோவோ வகை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் உருவாக வாய்ப்பேற் படுத்தினார். விளைவு இன்னும் மோசமானது.

சட்டீஸ்கர் அரசு ஒரே ஒரு சட்டத்தின் மூலம் 112 தனியார் பல்கலைக் கழகங்களை உருவாக்கியது. 2005இல் பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த யஷ்பால் உச்ச நீதிமன்றத்தில் சட்டீஸ்கர் அரசின் மீது வழக்குத் தொடுத்தார் (வழக்கு -2005(5) றீ.ளீ.ளீ.420). ஏன் தெரியுமா? அந்தப் பல்கலைக் கழகங்கள் வெறும் ஏட்டில் மட்டுமே இருந்தன அல்லது அடுக்கு மாடிக் கட்டிடத்தின் அறைகளில் மட்டும் இயங்கின. இவற்றிற்குப் பிற மாநிலங்களில் கிளைகள் கூட உண்டு. உச்ச நீதிமன்றம் சட்டீஸ்கர் போட்ட சட்டத்தை நீக்கம் செய்தது. தீர்ப்பில்,

“கட்டிட வசதி இல்லாமல், எந்தவிதமான கற்பித்தல் வசதியும் இல்லாமல் பட்டங்கள் மட்டும் வழங்க முடியுமென்றால்.....இது நாடு முழுமைக்கும் பெருந்தீங்காக முடியும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து சம்மந்தப்பட்ட மனிதவள மேம்பாட்டு அமைச்சருக்கோ, அரசியல்வாதிக்கோ அவமானமோ குற்ற உணர்வோ ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

அர்ஜுன் சிங் (மே 2004  - பிப்ரவரி 2009) மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த காலத்திலும் நிறைய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் (தனியார்) அனுமதிக்கப்பட்டன. வந்த விண்ணப்பங்கள்: 2005இல் 26; 2007இல் 64; 2009இல் 99.

இருக்கின்ற நிலவரப்படி நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் -28. மகாராஷ்டிரம் -21. கர்நாடகம் -15. எந்த மாநிலத்தில் மைய அமைச்சர்கள் அதிகமோ அங்கே நி.நி.ப.க.களும் அதிகமாகத்தானே இருக்கும்! கல்வியில் காசு அறுவடை செய்யும் கனதனவான்கள் தமிழகத்தில்தான் அதிகம் போலும்!

சீனாவில் பல்கலைக்கழகத்தில் நுழையும் மாணவர்கள் 1977இல் 3.125%. 2003இல் 13.2%. நமது நாட்டில் 11% தான் ( இந்தியா டுடே, 2009 ஜுலை 29).

நம் நாட்டு மக்கள் தொகையின்படி ஆண்டுக்கு 45,000 பி.எச்.டிக்கள் உருவாகவேண்டும். உருவாவதோ 18,000தான். வளர்ந்த நாடான அமெரிக்கா மொத்த உள்நாட்டு ஆக்கத்தில் (GDP – Gross Domestic Product) கல்விக்காக 5.3% செலவிடுகிறது. ஆனால், வளரும் நாடான இந்தியா 3%தான் செலவிடுகிறது. 6% ஒதுக்கவேண்டும் என்பது நமது இலக்கு. ஆகையால்தான் யஷ்பால் குழு அறிக்கை உயர் கல்வியில் தனியார் நுழைவை ஆதரிக்கிறது போலும்.

இந்தியா போன்ற, கல்வியில் பின்தங்கிய நாட்டில் ஆழமான கல்வியைவிட அகலமான கல்வியே முக்கியத்துவம் பெற வேண்டும். இதிலும் நம் நிலைமை மோசமானதுதான். 2001இல் எழுத்தறிவு பெற்றோர் 65.38%. வறுமைதான் காரணமா எனில் இல்லை எனலாம்; கேரளம் முதலிடம் -90.86%. ஆனால் பணக்கார பஞ்சாப் மாநிலம் 16ஆவது இடம்  - 69.65%. இவற்றுடன் ஒப்பிட்டால் ஏழை வியட்நாம் முன்னேறியுள்ளது.

அரசுக்கும் அக்கறை வேண்டும் கல்வியில். இந்தியாவில் 75,000 பள்ளிகளுக்கு ஒரு வகுப்பறை கூடக் கிடையாது. 2000 கோடி செலவில் பூங்காவும் சிலையும் திறக்கும் உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியரே இல்லாத பள்ளிகள் 900.

இவற்றிற்கெல்லாம் கல்விச் சீர்திருத்தம் உடனடி அவசியம் என்பதால் யஷ்பால் குழுவை நியமித்து பரிந்துரைகளைக் கோரியது இந்திய அரசு.

யஷ்பால் கமிட்டி அறிக்கை  - முக்கிய அம்சங்கள்: -

*    கல்வியில் தனியார் துறையின் அபரிமித வளர்ச்சி முறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாகத் தனியார் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள். “அவை நிகர்நிலை பெற்றதே வணிக மற்றும் இலாப நோக்கத்தோடு பட்டம் வினியோகிக்கும் அதிகாரத்தைப் பெறுவதற்காகத் தான்” என்பதைக் கவலையோடு குறிப்பிட்டுள்ளது அறிக்கை.

*    “உயர்கல்வி பயில்வோர் அளவை இருமடங்காக்கும் லட்சியத்தை எட்டவேண்டித் தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டும்” என்பதை அறிக்கை ஏற்கிறது. “ஆனால் முழுவதும் தனியார் வசம் ஒப்படைத்துவிடக் கூடாது” என்கிறது.

*    வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை நம்நாட்டில் நுழைய விடுவது கூடாது. வெளிநாட்டு அறிஞர்களை நுழைய விடலாம். இதனால் வெளிநாட்டுக் கற்றல் அனுபவம் நமது மாணவர்கட்குக் கிடைக்கும்.

*    பல்லாண்டுகளாகவே பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் பாடமும் தேர்வும் நடத்தும் மையமாகக் குறுக்கப்பட்டு விட்டன. இன்னொரு பக்கம் மேதைகட்கும் மாணவர்கட்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாத வகையில் உயராய்வு மையங்கள் உருவாகியுள்ளன.

*    பல்கலைக்கழகத்தின் முக்கிய அம்சம் ஆராய்ச்சியாகும். எனவே, ஆய்வு மையங்கள், பாடங் கற்பிக்கும் பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப்பட வேண்டும். எல்லா பல்கலைக் கழகங்களும் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களாவது அவசியம்.

*    ப.மா.கு.விற்கு வரைமுறைகள் வரையறுக்கப் படாததால் பல்கலைக்கழகம் முக்கியத்துவம் இழந்து விட்டது. அதன் அதிகாரம் கரைந்து விட்டது.

*    பட்டக் கல்வி புதைக்கப்பட்டு விட்டது. அறிவுத் துறைகளின் இடைவெளி அதிகமாகி விட்டது. புறவுலகிலிருந்து பல்கலைக் கழகங்கள் தனிமைப்பட்டு விட்டன. வணிகமயமானது பெரும் சிக்கலை உண்டாக்கி விட்டது.

*    நிகர் நிலைத் தகுதி பெற விரும்பினால் அந்நிறுவனம் தன் சிறப்புத் தகுதிகளை நிறுவிக்காட்டவேண்டும்.

*    மூன்று ஆண்டுகள் அவகாசம் தந்தும் தகுதியை நிறுவத் தவறும் நிறுவனங்களின் உரிமத்தைப் பறித்துவிடலாம்.

*    எல்லா உயர் கல்வியையும் கண்காணிக்கும் உயர் அதிகாரம் கொண்ட ‘உயர்  கல்வி மற்றும் ஆராய்ச்சி தேசிய ஆணையம்’ (ஹிளீக்ஷிசியூ) அமைக்கப்பட வேண்டும்.

*    சட்டத் திருத்தத்தின் மூலம் இது அரசமைப்புச் சட்டப் படியான ஆணையம் ஆக்கப்பட வேண்டும். இது நாடாளுமன்றத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டது. நிதி அமைச்சகத்திடம் நிதி ஒதுக்கீடு பெறும்.

*    ஆணையம் ஏழு பேர்களைக் கொண்டிருக்கும். தலைவர் முழுநேரமும் பணிசெய்வார்.

எதலைவர், தலைமைத் தேர்தல் ஆணையர்க்கு நிகர். உறுப்பினர், தேர்தல் ஆணையர்க்கு நிகர்.

*    பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு கல்வி ஆணையத்தைத் தேர்வு செய்யும்.

*    இந்த ஆணையத்தின் முதற்பணி 1,500 சிறந்த கல்லூரிகளைத் தெரிவு செய்து அவற்றைப் பல்கலைக் கழகங்களாய் உயர்த்துவதாக இருக்க வேண்டும். நற்கல்லூரிகளைத் தொகுத்து ஒவ்வொரு தொகுப்பும் பல்கலைக் கழகமாக உயரும் வாய்ப்பை நல்க வேண்டும்.

இப்படிப் பற்பல ஆலோசனைகளை யஷ்பால் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த அறிக்கையைப் பெற்றவுடன் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் பத்திரிகையாளர் களை சந்தித்தார். அவரது கருத்துகளின் சுருக்கம் வருமாறு:

•      கல்வி உரிமை (rஷ்ஆஜுமி மிலி சிdற்உழிமிஷ்லிஐ) மசோதாவின் முக்கிய நோக்கம் கல்வியை இலவயமாக்குவதாகும். அதற்காகத் தரத்தை சமரசம் செய்துகொள்ள முடியாது.

•      வளர்ந்த நாட்டில் அரசுக்கு நிதிவசதி உள்ளது. வளரும் நாட்டில் போதிய நிதி ஆதாரம் கிடையாது. அதனால், தனியாரும் அரசும் கூட்டாகவோ தனியார் மட்டுமோ கல்வியில் நிதி முதலீடு செய்வதே நல்லது.

•      சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வியை சி.பி.எஸ்.இ.க்கு நிகரானதாக அமைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கட்கு வேலைவாய்ப்பு வசதி ஏற்படும்.

•      வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் நம் நாட்டிற்கு வர வேண்டும். அவை பணம் கறந்துவிடும் என்பது தவறு. அவற்றின் தரத்தையும் கட்டணத்தையும் நாம்தானே தீர்மானிக்கப் போகிறோம். அதேசமயம், அரசுப் பல்கலைக் கழகங்களை நாம் விட்டுவிட மாட்டோம்.

•      நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மூன்றாண்டுகளில் சரி செய்து கொள்ளா விட்டால் அனுமதி பறிக்கப்படும். அந்த நிறுவனத்தின் மாணவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

•      யஷ்பால் குழு, தேசிய அறிவுக்குழு இவற்றின் பரிந்துரைகள் கல்விச் சீர்திருத்தத்திற்கு ஆதாரமாக இருக்கும்.

•      ஆரம்ப மற்றும் இடைநிலைக்கல்வியும் முக்கியமானது.

•      10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் குறைவதற்காக இந்த ரத்து செய்யப்படவுள்ளது.

•      நவீன, துடிப்பான கல்விக்கு நான் அஸ்திவாரம் இட விரும்புகிறேன். ஆசியாவில் மட்டுமல்ல, உலகளவிலேயே கல்வியில் இந்தியா ஒரு அச்சாணியாகத் திகழவேண்டும் என விரும்புகிறேன்.

(ஆதாரம்: ஃபிரண்ட் லைன், 2009 ஜஓலை 4 -17)

எதிர்ப்புகள்

யஷ்பால் அறிக்கைக்கும் கபில் சிபல் கருத்துக்கும் ஆதரவு குறைவு; எதிர்ப்புகள் அதிகம். முதலில் எதிர்ப்புகளைப் பார்ப்போம்.

மேற்கு வங்கக் கல்வி அமைச்சர் பார்த் டேயி -யும் கேரளக் கல்வி அமைச்சர் எம்.ஏ. பேபி யும் எதிர்க்கின்றனர். தகுதிநிலையை மதிப்பீடு செய்யவும், எதிர்காலத்தில் எந்தப் பாடத்தைத் தொடர்வது என்பதை முடிவெடுக்கவும் 10 -ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அவசியம் என்கின்றனர்; மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் கபில் சிபல் இப்படி அறிவித்திருப்பது சரியல்ல என்கின்றனர்.

இருக்கின்ற கல்வி அமைப்பில் மாற்றம் செய்வதென்றால் மாநிலங்களைக் கலந்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரக் கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ண விக்கி பாட்டில் கூறுகிறார்:

“மனிதவள மேம்பாட்டு அமைச்சரின் அறிவிப்பு சர்வாதிகாரமானது..... சுருங்கச் சொன்னால் (வேறுவழியில்) கல்வியைத் தனியாருக்கு ஒப்படைக்கும் முயற்சிதான் இது.... இருக்கும் நிலைமையை இது மேலும் மோசமாக்குமே தவிர உதவி செய்யாது..... நான் பார்த்ததிலேயே இதுதான் மிக மோசமான சட்டமாக்கமாக  இருக்கும். இதன் விளைவாக கல்வி எட்டாக் கனி ஆகி விடும்.

“...ஏப்ரல் 2008இல் நடந்த திட்டக் கமி­ன் கூட்டத்தில் சில தொழிலதிபர்கள், கல்வியைத் தனியார் மயமாக்குவதற்கான பல திட்டங்களைத் தீட்டித் தந்தார்கள். போட்ட முதலுக்கான பலன் கிடைக்கும் என்று அப்போது அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. இந்த வழியில் கல்வி விற்கப்படவுள்ளது என்றால் இது அழிவுப் பாதைதான்.... இரண்டாம் தர வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள்தாம் இங்கே கடைகள் திறந்து பணக்கொலை செய்யப்போகின்றன..” இவ்வாறு தேசிய அறிவுக் கமி­னின் முன்னாள் துணைத் தலைவர் பி.எம். பார்கவா எதிர்ப்பு தெரிவிக்கிறார். (ஆதாரம்: சண்டே இண்டியன்(ஆங்) 12.7.09)

“பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடரவேண்டும், அதை எதுவும் ஈடுசெய்ய முடியாது” என்று பஞ்சாப் மாநிலக் கல்வி அமைச்சர் உப்பிந்திரஜித் கவுர் கூறுகிறார்.

வரவேற்புகள்

சிலர் இந்த முயற்சியை வரவேற்கவும் செய்கின்றனர். பா.ஜ.க தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மனிதவள மேம்பாட்டு அமைச்சருமான முரளி மனோகர் ஜோ´ தமது கட்சி கல்விச் சீர்திருத்தத்தை ஆதரிக்கிறது என்றும், ஆனால் அவசரப்படக் கூடாது என்றும் கூறுகிறார். பா.ஜ.க ஆளும் குஜராத்தும் சட்டீஸ்கரும் “10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நீக்கத்தை ஆதரிக்கின்றன. சி.பி.எஸ்.இ.யின் முன்னாள் தலைவர் அசோக் கங்குலி, 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்வதை சி.பி.எஸ்.இ. யுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும் நடைமுறைப்படுத்தினால் அம் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இத்திட்டத்தை நாடு முழுவதிலும் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தினால்தான் வெற்றியடையும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்.” (ஆதாரம்: வீக் 2009 ஜஓலை 12)

10 -பொதுத் தேர்வை விருப்பத் தேர்வாக்கினால் அது மாணவர்க்கா? பள்ளிக்கா? என்பதில் குழப்பம் நிலவுகிறது. 10 -பொதுத் தேர்வை நீக்கம் செய்வதை பி.எம். பார்கவா ஆதரிக்கிறார். நம் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பிறநாட்டு அறிஞர்கள் வந்து பணியாற்றுவதைத்தான் யஷ்பால் வரவேற்கிறார்; பிற நாட்டுப் பல்கலைக் கழகங்களை அல்ல.

இந்தியா முழுவதும் யஷ்பால் குழு அறிக்கை பற்றிப் புயல் வீசும் இத்தருணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் வாய்மூடிக் கிடக்கிறார்கள். அது ஏன்?

தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுடன் அரசியல்வாதிகள் இரண்டறக் கலந்திருக்கிறார்கள். கேபினட் அமைச்சர் கமல்நாத் உள்ளிட்ட ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினர்கள். அமைச்சர் சசி தரூர் வெளிப்படையாகவே அவரது சட்டக் கல்லூரியின் மேன்மை பற்றி விளம்பரம் செய்கிறார். அமைச்சர் இ. அகமது பல கல்வி நிலையங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் நா.ம.உ. விஜய் பகுகுணா கல்வி நிலையங்கள் பல நடத்துகிறார். சிறுபான்மையோர் துறை அமைச்சர் சல்மான் குர்´த் டெல்லியிலுள்ள பல பள்ளிகளில் தொடர்புடையவர். சமாஜ்வாதி கட்சியைச்  சேர்ந்த பிரிட்ஜ் பூ­ன் 15 கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நிர்வாகக் குழு உறுப்பினர். திரைமறைவில் ஏராளமான அரசியல்வாதிகள் பல கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார்கள். கல்விச் சீரமைப்பு நடைபெறுவதை இவர்கள் ஏற்பார்களா? சட்டத் திருத்தத்திற்கு சம்மதிப்பார்களா? அல்லது பரிந்துரைகளின் வீரியத்தைக் குறைத்து விடுவார்களா?

சில யோசனைகள்

‘இந்திய நாடு’ செப்புமொழி பதினெட்டுடையது. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டது. ஒரு மொழிபேசும் பிற நாடுகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. மாநில அரசுகளைக் கலந்துதான் முடிவெடுக்க வேண்டும்.

கல்வியில் முன்னேறிய கேரளமும், பின்தங்கிய பீகாரும் பெரிதும் மாறுபட்டு நிற்பவை.கல்வித்திட்டம் (Curriculam) ஒரே மாதிரி இருந்தாலும் பாடத்திட்டம் (Syllabus) ஒரே மாதிரி இருக்கவியலாது. ஒவ்வொரு மாநிலத்திலும் சமுதாயத்தில் முன்னேறிய, பின்தங்கிய பிரிவினர் உள்ளனர். இதுவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

ஒரு மாநில அமைச்சரவைக்கில்லாத அதிகாரம் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு இருப்பது நல்லதல்ல. கல்விக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், தேர்வு வைத்தல், மதிப்பிடுதல், இடஒதுக்கீடு, போதனை இப்படி எந்த அம்சத்திலும் தலையிட அரசுக்கோ கல்வி ஆணையத்திற்கோ அதிகாரம் இருக்க வேண்டும். அதற்கேற்ப சட்டத் திருத்தம் செய்தல் வேண்டும்.

“பள்ளிக் கல்வித் திட்டம் முழுவதுமே பல்கலைக் கழகத்தின் தேவைக்கேற்ப நறுக்கிச் சரி செய்யப்பட்டிருக்கிறது..... பள்ளி இறுதித் தேர்வோ அல்லது மதிப்பீடோ கல்லூரியின் சேர்க்கையோடு தொடர்புபடுத்தக் கூடாது” என்று அனிதா ராம்பால்  கூறுகிறார். இவர் 2005இல் தேசியக் கல்வித்திட்ட வரையறைக் குழுவில் உறுப்பினராக இருந்தவர். (சண்டே இண்டியன் 13.7.09)

கணினிக் கல்வியைப் பள்ளியளவிலேயே புகுத்த வேண்டும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பதில் பள்ளியளவுத் தேர்வு நடத்தலாம். இப்போது எட்டாம் வகுப்பு மாணவன் எப்படி இடைநிலைக் கல்விப் பள்ளியில் சேர்க்கப்படுகிறானோ அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவனை பதினோராம் வகுப்பில் சேர்க்கலாம்  வகுப்பு 10இல் பொதுத்தேர்வு மதிப்பீடு இல்லாமல்.

கல்விக்கு மொத்த  உள்நாட்டு ஆக்கத்தில் (ஜிடிபி)6% நிதி ஒதுக்குவதில் என்ன சங்கடம் அரசுக்கு? பல்லாயிரம்  லட்சம் கோடிகள் ஊழல் நடந்ததாகச் செய்தி அறிகிறோம். அதற்கெல்லாம் பணம் கிடைக்கும் போது கல்விக்கு மட்டும் பணம் இல்லை என்பது எப்படிச் சரியாகும்?

பள்ளி இறுதி வகுப்பாக 12ஆம் வகுப்பை வைக்கலாம்.

ஐ.ஐ.டி படித்தவர்கள், ஐ.ஐ.எம். படித்தவர்கள் பணியாற்ற வெளிநாடு செல்கிறார்கள். பத்து ஆண்டுகளாவது இந்தியாவில் பணியாற்ற வேண்டும் அல்லது அவர் படிப்புக்கு அரசு செலவழித்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தி விட்டு வெளிநாட்டில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று விதி செய்யலாம்.

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். அதில் கற்கும் மாணவர் எண்ணிக்கையை 50 %உயர்த்தலாம். 70 முதல் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நிறுவனங்களில் மாணவர் எண்ணிக்கை உயர்வது ஒன்றும் பாதித்து விடாது.

மெக்காலே கல்வி முறையைத் தூக்கி எறிந்து விட்டு தொழிற்கல்வி, வாழ்க்கைக் கல்வி, நடைமுறைக் கல்வி போன்ற மாணவனுக்கு சுயச்சார்பு கிட்டும் வகையிலான கல்வி முறையைப் பள்ளியளவில் நடைமுறைப்படுத்தலாம்.

பாடத் திட்டத்தில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தந்து பிறமொழிச் சுமையைக் குறைத்து மாணவன் அறிவியலில் நல்ல தேர்ச்சி பெற வழிசெய்யலாம். இன்னும் பல கூறலாம்.

யஷ்பால் பரிந்துரை நிறைவேறினால் அது உயர்கல்வியில் முன்னேற்றத்துக்குத் துணைசெய்யும்.